இந்தியத் துணைக் கண்டத்திலேயே முதன் முதலாக மே நாள் கொண்டாடியவர் சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் எனும் பெருந்தமிழர். மே நாளைப் போற்றித் தமிழிலே முதல் கவிதை இயற்றியவர் பெருங்கவிஞர் தமிழ்ஒளி!

“கோழிக்கு முன்னெழுந்து கொத்தடிமைப் போலுழைத்துக்

கண்ணீர் துடைக்க வந்த காலமே நீ வருக!”

என்று மே நாளை வாழ்த்தி வரவேற்றார்.

“மண்ணை இரும்பை மரத்தைப் பொருளாக்கி

 விண்ணில் மழையிறக்கி மேதினிக்கு நீர்ப்பாய்ச்சி

 வாழ்க்கைப் பயிரிட்டு வாழ்ந்த தொழிலாளி கையில் விலங்கிட்டுக்

காலமெலாம் கொள்ளையிட்ட

 பொய்யர் குலம் நடுங்கப் பொங்கி வந்த மே தினமே!”

 

“தாழ்வைத் தகர்க்கத் தலைநிமிர்ந்த மேதினியில்

 வாழ்வின் சமாதானம் வாய்ந்த நெடுந்திரையில்

 ஜீவியமாய் நின்றதொரு சித்திரம் நீ; வானமரர்

 காவியம் நீ; கற்பனை நீ; காணுமொரு காட்சியும் நீ!

 தீரா இருளொழிந்து திக்கு விளங்க

 இதோ வாராய் வளர்பொருளே

 மே தினமே வாராய் நீ!”

“பொந்தில் உயிர்வாழ்ந்தார்;

 போக்கற்றார்; இன்பமிலார்

 கந்தல் மனிதரவர் கையில் அதிகாரம்

 ஏற்றி வைத்த நின்பெருமை

 என்னுயிர்க்கும் மேலன்றோ!

 போற்றினேன் வையப் புரட்சியொடு நீ வருக!’

“தமிழ்ஒளிக்குக் கிடைத்த சடையப்ப வள்ளல்” என்று தி க. சிவசங்கரன் அவர்களால் பாராட்டப் பெற்ற செ.து. சஞ்சீவி அவர்கள்தான் இதை எழுதும் எனக்குத் தமிழ்ஒளியின் பெயரையும் படைப்புகளையும் அறிமுகம் செய்தவர். தமிழ்ஒளி எழுதியவையும், அவரைப் பற்றி மற்றவர்கள் எழுதியவையுமான சில படைப்புகளின் வெளியீட்டு விழாவை செ.து. சஞ்சீவி சென்னை பெரியார் திடலில் நடத்திய போது என்னை அழைத்துத் தமிழ்ஒளியின் கவிதைகள் பற்றிப் பேசச் செய்தார். எப்போது என்று நினைவில்லை. 1990 வாக்கில் இருக்கக் கூடும். அதன் பிறகுதான் அவரிடம் ஆர்வம் கொண்டு படிக்கலானேன்.

பாரதி வழி வந்தவர், பாரதிதாசனின் மாணவர் என்றெல்லாம் அவர் பலவாறு அறியத் தரப்பெற்ற போதிலும் தூய பொதுமைப் பாவலராக விளங்கியதுதான் அவரது தனித் தன்மை என மதிக்கிறேன்.

விஜயரங்கம் எனும் இயற்பெயர் கொண்ட கவிஞர் தமிழ்ஒளி 1924 செப்டம்பர் 21ஆம் நாள் புதுவையில் பிறந்தார். சற்றொப்ப 41 ஆண்டு வாழ்ந்து 1965 மார்ச்சு 29ஆம் நாள் மறைந்தார். சற்றொப்ப 39 ஆண்டுகளே வாழ்ந்து மறைந்த பாரதியாரை விடவும், 72 ஆண்டுக்கு மேல் வாழ்ந்து மறைந்த பாரதிதாசனை விடவும் அரசியலில் தெளிவான முடிவுகளுக்கு வந்தவர் தமிழ்ஒளி என்பது என் துணிவு. யார் சிறந்த கவிஞர் என்பதன்று இந்த ஒப்பீடு. எல்லாவகையிலும் பாரதியார் மீது பாரதிதாசன் கொண்டிருந்த உயர் மதிப்பு சொல்லித் தெரிய வேண்டிய ஒன்றன்று. ஆனால் பாரதியார் அடிப்படையில் இந்தியத் தேசியப் பாவலராகவே விளங்கினார் எனபதும், பாரதிதாசன் தமிழ்த் தேசியத்தின் தலைப் பாவலர் என்பதும் மாற்றவொண்ணா வரலாற்று உண்மைகள். தமிழ்ஒளி தூயப் பொதுமைப் பாவலராக விளங்கினார் என்பது சொல்லால் மட்டுமன்று, செயலாலும் உறுதிப்படும்.

புதுவை முத்தியாலுப் பேட்டை நடுநிலைப் பள்ளியிலும் கலவைக் கல்லூரியிலும் படித்த தமிழ்ஒளி மாணவராய் இருந்த போதே பாரதியார், பாரதிதாசன் கவிதைகளில் ஈடுபாடு கொண்டார். நாள்தோறும் குயில் தோப்புக்குச் சென்று பாரதிதாசனிடம் தாம் எழுதிய கவிதைகளைப் படித்துக் காட்டிப் பாராட்டும் பெற்றார். திராவிடர் கழக மாணவர் மாநாட்டில் கலந்துகொண்டு பாரதிதாசன் கொடுத்தனுப்பிய வாழ்த்துக் கவிதையைப் படித்ததுதான் அவரது பொது வாழ்வின் தொடக்கமாக இருக்க வேண்டும்.

பாரதிதாசனின் பரிந்துரையின் அடிப்படையில் கரந்தைத் தமிழ்க் கல்லூரியில் மாணவராகச் சேர்ந்தார். திராவிடர் கழகத்தில் இருந்த போதே பொதுமைப் பாக்கள் புனையத் தொடங்கி விட்டார். மே நாள் வாழ்த்துப் பா குறித்துத் தொடக்கத்திலேயே பார்த்தோம்.

 1949ஆம் ஆண்டில் 'புதுவைத் தொழிலாளிக்கு கோவைத் தொழிலாளியின் கடிதம்' என்னும் கவிதை எழுதினார். நிலை பெற்ற சிலை, வீராயி, மே தின ரோஜா ஆகிய மூன்று காவியங்கள் படித்தார். பொதுமை இயக்கம் இன்று வரைக்கும் கூட சாதியச் சிக்கலுக்கு உரிய முகன்மை தரவில்லை என்ற குற்றாய்வு உண்டு. வகுப்பு (வர்க்கம்) அல்லாத குமுகக் கூறுகளை உரியவாறு அறிந்தேற்காத வகுப்புக் குறுக்கியத்தை (CLASS REDUCTIONISM) அப்போதே கடந்து நின்றார் தமிழ்ஒளி. வகுப்புச் சுரண்டலையும் சாதிய ஒடுக்குமுறையையும் இணைத்துச் சாடும் தெளிவு தமிழ்ஒளியின் எல்லாப் படைப்புகளிலும் காணக் கிடைக்கிறது. தலித்து என்ற சொல் அப்போதே புழக்கத்துக்கு வந்து விட்டதா என்று தெரியவில்லை. ஆனால் தாழ்த்தப்பட்ட மக்களைக் குறிக்க

தலித்து என்ற சொல்லை ஆள்வதில் பிழையில்லை என்றால், தமிழ்ஒளியைத் தலித்து இலக்கிய முன்னோடி என்று குறிப்பிடலாம்.

 தமிழ்ஒளியின் மூன்று காவியங்களும் தலித்து மக்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளையும், தலித்து மக்களின் விடுதலையையும் முன்னேற்றத்தையும் பேசுகின்றன. வீராயி என்னும் காவியத்தில் கதைத் தலைவி வீராயி ஒரு தலித்துப் பெண்.

 ஐந்து தொகுதிகளாக வந்துள்ள தமிழ்ஒளியின் சிறுகதைகளில் வரும் கதைமாந்தர்களில் பெரும்பாலார் தலித்துகள், தொழிலாளர்கள், போராளிகள் என அடித்தட்டு மக்களே.

அக்காலத்தில் இடதுசாரி இயக்கப் படைப்புகளில் நேராகச் சாதியச் சிக்கல்களைப் பேசுவதில் தயக்கம் காணப்பட்டது. சாதியை வெறும் மேற்கட்டுமானம் என்றும், கிழாரியச் சுரண்டல் ஒழிந்தால் சாதிய ஒடுக்குமுறையும் ஒழிந்து போகும் என்பதே பொதுமை இயக்கத்தின் பொதுவான பார்வையாக இருந்தது. போராட்டப் பட்டறிவுகள் இந்தப் பார்வையில் மாற்றம் கொண்டுவந்த நேர்வுகளும் உண்டு

என்பதையும் மறுப்பதற்கில்லை. அக்காலத்திலேயே தமிழ்ஒளி பாட்டாளியக் கண்ணோட்டத்தில் சாதிய எதிர்ப்பையும் தலித்து விடுதலையையும் பாடினார். மாணவப் பருவத்தில் திராவிட நாடு, குடியரசு, புதுவாழ்வு ஆகிய திராவிட இதழ்களிலும் கவிதைகளை எழுதினார். தாமரை இலக்கிய இதழில் வனமலர் என்னும் தலைப்பில் சில உருவகக் கதைகள் எழுதினார். தமிழ்ஒளி, விஜய ரங்கம் விஜயன் சி.வி.ர என்பன அவருடைய புனைப்பெயர்கள் ஆகும். முன்னணி, புதுமை இலக்கியம், சாட்டை போன்ற இதழ்களில் பணியாற்றினார். சனயுகம் என்னும் திங்கள் இதழைத் தம் சொந்த முயற்சியில் நடத்தி மார்க்கியக் கருத்துகளைப் பரப்பினார். அகவை இருபது வரை புதுவையில் வாழ்ந்து பாரதிதாசன் இல்லத்திலேயே கிடையாய்க் கிடந்த தமிழ்ஒளி அக்காலத்தில் எழுதிய தம் கவிதைகள் அனைத்தையும் இரு தொகுதிகளாக்கி வெளியிடும் முயற்சியில் தோல்வி கண்ட பின் 1945இல் சென்னைக்குப் புறப்பட்டார்.

“கவிஞர் தமிழ்ஒளி தோற்றத்தில் எளியவர் ஆயினும் தெளிவானவர், மனத்திட்பம் மிக்கவர்” என்பார் சஞ்சீவி. திடசித்தம் உடையவர். சென்னை வந்து ஈராண்டுக்குப் பின் கருப்புச் சட்டையைக் களைந்து பொதுமைக் கட்சியில் இணைந்தார். தடை செய்யப்பட்டுத் தலைமறைவான பிறகும் கம்யூனிஸ்டுக் கட்சியில் முழுநேரப் பணியாளராகி முனைப்புடன் உழைத்தார்.

 தமிழ்ஒளியின் பொதுமை இயக்கச் செயல்பாட்டின் காலம் 1947­54 என்பார் ஷிகிழியிணிணிக்ஷிமிஹிசஞ்சீவி. அவர் பொதுமை இயக்க அனுதாபியாகவோ ஆதரவாளராகவோ அல்ல, ஒரு கம்யூனிஸ்டாகவே வாழ்ந்தார், உழைத்தார். 1947இல் தமிழ்ஒளி படைத்த மூன்று குறுங்காப்பியங்கள் வெளிவந்தன. அவற்றில் இரண்டு நூல்களின் அட்டைகளிலும் ‘சுத்தி அரிவாள்’ சின்னம் இடம் பெற்றிருந்தது.

இவை தவிர அவர் படைத்த தனிக் கவிதைகளின் திரட்டாக, ‘நீ எந்தக் கட்சியில்?’- ‘மே தினமே வருக!’ என்ற தலைப்புகளில் இரண்டு சிறு நூல்களும் வெளிவந்தன. மேற்கூறிய இரு காவியங்களும், இரு கவிதைத் திரட்டுகளும் கம்யூனிஸ்டுக் கட்சித் தோழர்களுக்கு அவர் செலுத்திய காணிக்கை என்றே கூறலாம்.

தமிழ்ஒளியின் புரட்சியமான வகுப்புப் போராட்ட (வர்க்கப் போராட்ட)க் கவிதைகள் உலகில் வகுப்புப் போராட்டம் உள்ளளவும் பொருந்தக் கூடியவை.

 பாட்டாளியாகவும் தமிழனாகவும் இருப்பதில் தமிழ்ஒளியின் ஓர்மைக்கு எவ்விதச் சிக்கலும் முளைக்கவில்லை. அவர் தான் யார் என்பதை ஓங்கிச் சொன்னார்:

“தமிழனே நான் உலகின் சொந்தக்காரன்

தனிமுறையில் நான் உனக்குப் புதிய சொத்து!

அமிழ்தான கவிதைபல அளிக்க வந்தேன்!

அவ்வழியில் உனைத்திருத்த ஓடி வந்தேன்!"

பன்னாட்டுலகியத்தில் (சர்வதேசியம்) ஊன்றிப் பாடும் போது தமிழ்ஒளியிடம் மற்றொரு பாவேந்தர் பாரதிதாசனைப் பார்க்கிறோம்:

"இமை திறந்து பார்! விழியை அகலமாக்கு!

என் கவிதைப் பிரகடனம் உலகமெங்கும்

திமுதிமென எழுகின்ற புரட்சி காட்டும்!

சிந்தனைக்கு விருந்தாகும் உண்ண வா நீ!"

1948 இறுதியில் ‘கம்யூனிஸ்ட் கட்சி’ இந்திய அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட போது, கட்சியின் பரப்புரைப் பொறிகள் அனைத்தும் முடக்கப்பட்டன. அந்தச் சூழலில் ‘முன்னணி’ ஏடு மலர்ந்தது; கவிஞர் குயிலனும், தமிழ்ஒளியும் இணைந்து செயல்பட்டனர்.

அந்த ஏடு தமிழ்ஒளிக்கு நல் வாய்ப்பாய் அமைந்தது. உணர்ச்சிமயமான கவிதைகள், கதைகள், ஓரங்க நாடகங்கள் என இதழ்கள் தோறும் அவருடைய எண்ணங்கள் பதிவாகி வந்தன.

குறிப்பாக, சீனாவில் நடை பெற்று வந்த மக்கள் யுத்தம், மாசேதுங் தலைமையில் வெற்றி வாகை சூடியதை வரவேற்று அவர் படைத்த கவிதைகள் நான்கு. அத்துடன், உலகத் தொழிலாளி வர்க்கம் எட்டு மணி நேர வேலைத் திட்டத்தை வென்றெடுத்த வீர வரலாற்றை -மே தினச் செய்தியை - வீர காவியமாகப் படைத்துள்ளார் தமிழ்ஒளி.

இவை வரலாற்றுக் கருவூலங்கள். குடந்தையில் (1948) நகர் சுத்தித் தொழிலாளர்கள் கூலி உயர்வு கேட்டு நடத்திய போராட்டத்தில், காவலர்கள் கடுமையாக நடந்து கொண்டதைக் கண்டித்து கவிஞர் படைத்த கவிதை, அதே ஆண்டில், ஈரோடு நகர சுத்தித் தொழிலாளர் நடத்திய போராட்டத்தின் போதும் அச்சிட்டுப் பரப்பப்பட்டது. இந்தக் காலகட்டத்தில், தலைமறைவு வாழ்க்கையை மேற்கொண்ட ஒரு தோழரைப் பற்றிக் கவிஞர் தமிழ்ஒளி படைத்த கவிதை ‘தாய் செய்த குற்றம்’ என்ற தலைப்பில் ‘அமுதசுரபி’ ஏட்டில் வெளி வந்தது. (1949). தலைமறைவாக இருந்துவந்த தோழர் ஒருநாள் தாயைக் காண வீட்டிற்கு வருகிறார். இரு தினங்கள் இருந்து விட்டுச் செல்கிறார். இந்தச் செய்தி காவலர்களுக்கு எட்டி விடுகிறது. விரைந்து வந்த அவர்கள் வீட்டைச் சோதனையிட்டனர். தோழர் இல்லாததால் தாயிடம் வாக்குவாதத்தில் இறங்கினர். இதோ கவிஞர் தமிழ்ஒளியின் எழுத்தில்: காவலர்: இங்குன் மகனும் ஒளிந்திருந்தான், எமை ஏமாற்றி நீயிங்கொளித்து வைத்தாய்; அந்தப் பயலுக்குச் சோறுமிட்டாய், மிக ஆபத்தான குற்றம் செய்துவிட்டாய்! தாய் சீறுகிறாள்: மூச்சும் பேச்சும் அவன் எய்து முனம், ஒரு முந்நூறு நாளாக நான் அவனைப் பத்திரமாக ஒளித்து வைத்தேன், மண்ணைப் பார்க்க அவன் ஒருநாள் பிறந்தான்!

“பாம்புக்குப் பாலிடும் மாந்தரையும் இங்குப்

பாதகர் என்பவர் யாரு மில்லை!

பாம்பல்ல, என்னுடை அன்பு மகன்; அவன் பாயும் விலங்கல்ல, ஆசை மகன்!”

“பெற்று வளர்த்திட்ட என்மகனை, இங்குப்

பேணி வளர்ப்பது குற்றமென்றால்

தாய்க்குலம் மாண்டு மடிவதுவோ? அன்றி

தர்மம் தலைசாய்ந்து வீழ்வதுவோ?

என்னுடைப் பிள்ளைக்குச் சோறிடவும், அவன்

இளைப்பாறி நிற்க இடம் தரவும்

அன்னை யெனக்கிங் குரிமை யுண்டாம், இதை

ஆண்டவன் வந்தாலும் விட்டுக் கொடேன்!”

-தாயின் கோபம் அடங்கவில்லை, ‘தாய் தன் மகனை அரவணைப்பது நீண்ட நெடுங்காலமாக இருந்துவரும் உறவு முறை. இதைக் குற்றமெனக் கூறுவது மனிதத் தன்மையற்ற செயல். இதுதான் சட்டம் என்றால் அதனை எதிர்ப்போம்’ என்றும் கூறுகிறாள். காவலர்கள் மறு மொழி கூறாமல் சென்று விடுகின்றனர்.

பாட்டாளி மக்களின் வாழ்க்கை அவலங்களைக் கவிஞர் தமிழ்ஒளி உயிர்ச் சித்திரமாக வரைந்து காட்டினார்.

‘உழவனின்’ பொங்கல் கனவு, ‘நெசவாளி’ விரும்பாத தீபாவளி, துயரச் சுமை தூக்கும் ‘துறைமுகத் தொழிலாளி’ கடலைப்பார்த்து கண்ணீர் சிந்தும் ‘மீனவர்’, மீளாத் துயரில் ஆழ்ந்திருக்கும் ‘சலவைத் தொழிலாளி’, எப்போதும் ஏக்கப் பெருமூச்சுவிடும் ‘அரிசன மக்கள்’, வீதியில் நின்று கையேந்தும் ‘கழைக்கூத்தாடி’, விதியை நொந்து விடிவு காணாத விதவையர் பற்றிய கவிதைகள் அனைத்துமே தமிழ்ஒளியின் புரட்சிப் பாடல்கள்தாம். ஆனாலும் உவமைகள் ஒளி வீச, அணி நலன்கள் அலை புரள, கலை ஓவியமாகத் திகழும் கவிதை வடிவங்கள்.

தமிழ்ஒளி இயற்கை நிகழ்வுகளை வண்ணிக்கும் போதும் மக்கள் புரட்சிக்குத்தான் உவமையாக்குகின்றார் ‘இயற்கை அன்னையின் கோபம்’ என்ற தலைப்பில் அவர் பாடக் கேளுங்கள். பேய்க்காற்றும் பெருமழையும் இணைந்து இடியோசை எழுப்பி இப் புவியினை அதிர வைக்கிறது. இதனைக் காணும் நம் கவிஞருக்கு எண்ணம் எங்கே செல்கிறது தெரியுமா? கொடுங்கோலாட்சியை எதிர்த்து மக்கள் தொடுத்த யுத்தம் வெற்றி கொள்ளுவதையே நினைவூட்டுகிறது.

“கொட்டி கொட்டி எழுந்தாள் - அன்னை

கோபத்திலே மின்னல் தீயை யுமிழ்ந்தாள்!

கட்டிக் கிடந்திடும் மேகம் - எனும்

கார்மலை யாம்குடம் எற்றிப் புரட்டிக்

கொட்டினாள் கால வெள்ளத்தை - அவள்

கொக்கரித்தாள் திசை எட்டும் நடுங்க

தட்டி எழுப்பினள் காற்றை - அது

தாவி யுருட்டுது மாமரக் காட்டை!”

முடிவில்,

“மக்கள் தொடுத்திடும் யுத்தம் - என

வானமும் மண்ணும் இருண்டு நடுங்க

செக்கென ஆட்டுது காற்று - பெருஞ்

செல்வர், மணிமுடி, சட்டம், சிறைகள்

பொக்கென வீழ்வது போலே - யாவும்

போயின பொட்டென்று விட்டது காற்று!

செக்கச் சிவந்தது வானம்-அன்னை

சேல்விழி காட்டினள் வந்தது காலை!"

புயல் போன்றது மக்கள் புரட்சி! புரட்சியின் முடிவில் விடியல்! போதுமா?

தனிக் கவிதைகள் தவிர ‘தமிழ்ஒளி’ படைத்த காவியங்கள் ஒன்பது. அவற்றுள் ‘மாதவி காவியம்’ தவிர்த்த ஏனைய எட்டும் குறுங்காப்பியங்கள். இவற்றில் ‘புத்தர் பிறந்தார்’ துறவுக் காப்பியம்.

கவிஞர், புத்தர் வரலாற்றை முழுக்காவியமாகப் படைக்கவே விரும்பினார். எதிர்பாராத இடர்ப்பாடுகள் அடிக்கடி எழுந்து முயற்சியைத் தடைப்படுத்தி வந்தன. இதன் விளைவாக, புத்தர் ஜனனம் என்ற அளவில் காவிய முயற்சி நின்று போனது.

‘புத்தர் பிறந்தார்’ என்ற காவியப் பகுதியை “தமிழ்ஒளியின் கவிதைகள்” தொகுப்பில் கண்ட மு. வரதராசனார் “புத்தர் பிறந்தார்” என்ற அருமையான காவியம் முடிக்கப்படாமலே குறையாக நின்று விட்டது, தமிழிலக்கியத்தின் குறையாகவே ஆகி விட்டது’ என்றார்.

‘நிலைபெற்ற சிலை’, ‘வீராயி’, ‘மே தின ரோஜா’ ஆகிய மூன்றும் புரட்சியமான தலித் இலக்கியங்கள் எனலாம்.

இவற்றுள் ‘வீராயி’ காவியத்திற்கும், பாரதியார் பாடிய ‘கரும்புத் தோட்டத்திலே’ என்ற பாடலே அடித்தளம். விவசாயக் கூலித் தொழிலாளர்கள் வாழும் பகுதிகளில் ‘செங்கொடி’ ஏற்ற வேண்டும் என்ற கருத்தினை வலியுறுத்தி எழுந்த நூல் ‘மே தின ரோஜா’. கம்யூனிஸ்ட் கட்சியில் காலூன்றாத காலத்தில் எழுதப்பட்ட ‘நிலை பெற்ற சிலை’ பொதுவுடைமைப் பூங்காவாகிய சோவியத்து ஒன்றியத்தின் பெருமை பேசப்படுகிறது.

பேராசிரியர் ராகுல சாங்கிருத்தியாயன் படைத்துள்ள புகழ் பெற்ற நூல் ‘வால்காவிலிருந்து கங்கை வரை’. அதில் இடம் பெற்றுள்ள ‘பிரபா’ என்ற கதையினை அடிப்படையாக வைத்து புனைந்த புரட்சிகரமான குறுங்காப்பியம் ‘கோசலக்குமரி’.

தமிழ்ஒளி மக்களிடையே புகழ் பெறாத போதும் அறிஞர்களிடையே மதிக்கப்பெற்றார். மு. வரதராசனார், எழுத்தாளர்கள் பூவண்ணன், விந்தன், செயகாந்தன் போன்றோர் தமிழ்ஒளியைப் பாராட்டினார்கள்.  மா.சு. சம்பந்தம் தமிழ்ஒளியின் கவிதைகளை வெளியிட்டார். செ.து.சஞ்சீவி தமிழ்ஒளியின் கவிதைகளையும், காவியங்களையும் திரட்டித் தொகுத்து வெளியிட்டார்.

நெய்வேலியில் பழுப்பு நிலக்கரிச் சுரங்கம் தொடங்கி மின் உற்பத்தி நிலையம் அமைத்த போதும், சோவியத்து ஒன்றியம் ஸ்புட்னிக் என்னும் விண் கலத்தை ஏவிய போதும வரவேற்றுக் கவிதைகள் படைத்தார் தமிழ்ஒளி. அணுகுண்டு அச்சுறுத்தலை எதிர்த்தும் பாடினார்.

மக்கள் வாழ்வு உயர இலக்கியங்கள் பயன்படவேண்டும் என்பதுதான் அவர் கொள்கை. 'ஒரு கவிஞன் வாழ்ந்ததற்கு அடையாளமே அவனுடைய படைப்புகள்தாம்' என்று எழுதினார்.

தமிழ்ஒளியின் கவிதைகள் தமிழ்நாட்டு மக்களிடையே போதிய புகழ் பெறவில்லை என்ற குறை நமக்குண்டு. ஆனால் அவர் விதைத்து கீரையன்று உடனே முளைத்து உடனே பயன் தருவதற்கு. பனை நட்டுள்ளார், வளரக் காலமெடுக்கும், வளர்ந்த பின் நின்று பயன் தரும். மக்கள் வாழ்வு உயர இலக்கியங்கள் பயன்பட வேண்டும் என்பதுதான் தமிழ்ஒளியின் இலக்கியக் கொள்கையாம்! வாழ்வு உயருதல் என்பதைப் பொதுமை நோக்கில் புரிந்து கொண்டால் அது சட்டென்று தோன்றி சட்டென்று மறையும் உயர்வன்று என்பது தமிழ்ஒளிக்குத் தெரியாதா, என்ன?

“கவிஞன் வாழ்ந்ததற்கு அடையாளமே அவனுடைய படைப்புகள்தாம்!” சொன்னவர் தமிழ்ஒளி! அவர்தம் படைப்புகள் புதிய தமிழகத்தைப் படைக்கும் பணிக்குக் கருவியாகும் காலம் விரைவில் வரும். அப்போது தமிழ்ஒளியின் படைப்புகள் தமிழின வைப்பகத்திலிருந்து வெளிவந்து ஒளிவீசும்!

- தியாகு