90களுக்கு முந்தைய உலகம் போன்று இப்போது இல்லை. இன்றைய உலகம் மிகவும் போட்டி மிகுந்ததாகவும், கடுமையான நெருக்கடிகளைக் கொண்டதாகவும் மாறியுள்ளது. அன்றைய உலகத்தில் இருப்பதைக் கொண்டு நிறைவடைபவர்களாக நமது தந்தையரும் முன்னோரும் வாழ்ந்தனர். அடைய முடியாத இலக்குகள் அவர்களுக்கு ஏதுமில்லை. பேராசைகளும் இல்லை. அதனால் ஒப்பீட்டளவில் நடுத்தர வர்க்கத்தின் வாழ்க்கையில் அமைதி நிலவியது.

ஆடம்பர வாழ்க்கை

உலகமயமாக்கல் கொள்கைகள் அமல்படுத்தப்பட்ட பின்னர் அனைவரும் பணம் ஈட்டுவதற்கான கடுமையான போட்டியாளர்களாகவும் மாறினர். புதிய நுகர்வுப் பொருட்களை வாங்கிக் குவிக்கும் ஆசைகள் ஆக்கிரமித்தன. அடைய முடியாத இலக்குகளை வைத்துக் கொண்டு பொருள் தேடும் அவசர வாழ்க்கையைக் கைக்கொண்டார்கள். எதிர்காலம் குறித்த கனவுகள், மாபெரும் எதிர்பார்ப்புகள், அதே சமயத்தில் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றவே போராட வேண்டியுள்ள வாழ்க்கை ஆகியவற்றில் ஏற்படும் முரண் பாடுகள் ஏராளமான மனச்சிக்கல்களையும் உளவியல் வதைகளையும் உருவாக்கியுள்ளன. சாதாரணப் பதற்றத்தில் தொடங்கி பெரிய மன நோய்களான மனச்சிதைவு, ஆளுமைச் சிதைவு நோய்கள் எனப் பல மன நலப் பிரச்சினைகள் மக்களைப் பாதித்து வருகின்றன.

ஆண்டுதோறும் எட்டு லட்சம் தற்கொலைகள்

உலக சுகாதார அமைப்பின் மதிப்பீட்டின் படி, உலகம் முழுவதும் ஆண்டுதோறும் 300 மில்லியன் மக்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 23 மில்லியன் மக்கள் மனச்சிதைவு நோயாளிகளாகி வருகின்றனர். எட்டு லட்சம் பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர்.

lady in distressவளர்ச்சி அடைந்த நாடுகளான அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளில் உள்ள மக்களின் வாழ்நாள் குறைப்பில் இதயநோய்களுக்கு அடுத்தபடியாக மனநோய்களுக்கு முக்கியப் பங்கு உள்ளன. ஐரோப்பிய ஒன்றிய நாடு களில் உள்ள மக்களில் 18இல் இருந்து 65 வயது வரை உள்ளவர்களில் 27 விழுக்காட்டினர் மன நலத்துடன் இல்லை. 2014இல் இருந்தே உலக மக்களில் 16 வயதுக்கு மேற்பட்டவர்களில் 17.5 விழுக்காட்டினர் மன அழுத்தம் அல்லது பதற்றத்தினால் பாதிக்கப்பட்டவர்களாக உள்ளனர். இவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

13 விழுக்காடு மனநோயாளிகள்

இந்தியாவைப் பொறுத்தவரை சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வுகளின்படி மொத்த மக்கள் தொகையில் 13 விழுக்காட்டினர் ஏதோ ஒரு வகை மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 10 விழுக்காட்டினர் பதற்றம், மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மீதியுள்ளோர் மனச்சிதைவு, மது முதலான போதைப் பொருட்களுக்கு அடிமையாவது போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப் பட்ட நிலையில், மனித உரிமைகளும் மனித கண்ணியமும் மதிக்கப்படும் சமத்துவ சமுதாயத்தில் மன நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் குறைவு. எந்த ஒடுக்குமுறையும், பாகுபாடும் கடைப்பிடிக்கப்படாத சமூகத்தில் மனநலம் பூரணமாகச் சாத்தியப் படுவதற்கு வாய்ப்புண்டு எனப் பெரும்பாலான மனநோய் மருத்துவர்களும் உளவியலாளர்களும் சமூகவியலாளர்களும் கல்வியாளர்களும் ஏற்றுக் கொள்கின்றனர். இந்தப் புரிதலானது ஒரு நீண்ட வரலாற்றுக்குப் பின்னர்தான் ஏற்பட்டது. அதன் மிகச் சுருக்கமான வரலாற்றைப் பார்ப்போம்.

மனநோய்கள் சமூக, பொருளாதார, அரசியல் அமைப்பினால் உருவாகின்றன என்ற விழிப்புணர்வு 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில்தான் உருவானது. அதற்கு முந்தைய காலம் வரை வளர்ச்சி அடைந்த நாடுகளில் மனநோய்களை உயிரியல் ரீதியான காரணங்களே தீர்மானிப்பதாகக் கருதப்பட்டது. மூளையிலுள்ள ரசாயனங்களின் சமனற்ற நிலை, செய்திகளைப் பரிமாறும் நீயூரோ டிரான்சிமிட்டர்கள் எனப்படும் நரம்புக் கோளாறுகள் போன்றவைதான் மனநோய்களை உருவாக்குவதாக அன்றைய கால கட்டத்தில் கருதப்பட்டது.

பின்னர் சிக்மண்ட் பிராய்டு இச்சிந்தனைகளில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தினார். பாலியல் சார்ந்த உளவியல் வளர்ச்சி என்ற கோட்பாட்டின் மூலம் நிறைவேறாத இச்சைகளும் பாலியல் உந்துதல்களும் மன நோய்களுக்கான காரணங்களில் அடங்குகின்றன என்று அவர் நிறுவினார். அதற்காக உளவியல் பகுப்பாய்வு என்ற புதிய முறையை உருவாக்கினார்.

உளவியல் பகுப்பாய்வு முறை

மன அமைப்பை முன் வைத்து இட் எனப்படும் இச்சை கொள்ளும் அமைப்பு, தன்முனைப்பு எனப்படும் ஈகோ எனப்படும் அமைப்பு, பொறுப்புகளை ஒழுக்க விழுமியங்களுடன் மனிதனுக்குச் சுட்டிக்காட்டும் சூப்பர் ஈகோ என்று மூன்றாகப் பகுத்துக் காட்டினார் சிக்மண்ட் ஃப்ராய்ட். இந்த மூன்று அமைப்புகளுக்குள் ஏற்படும் முரண்பாடுகளே மனநோய்களுக்குக் காரணம் என்று உளவியல் பகுப்பாய்வு முறைக் கோட்பாடு கூறியது.

ஃப்ராய்டின் ஆய்வுகள் உளவியல் துறையில் புதிய வெளிச்சங்களைக் காட்டினாலும் சமூக, பொருளாதார அரசியல் காரணிகளைக் காட்டாமல் தனிநபர் சார்ந்தே இருந்தன. இதன் போதாமையைச் சுட்டிக் காட்டிய எரிக் ஃப்ராம் சமூக அரசியல் பொருளாதார அமைப்பு முறையே குறிப்பாக முதலாளிய உற்பத்தி முறையை அடிப்படையாகக் கொண்ட சமூகமே மனநலத்தைப் பாதிக்கிறது என்று குறிப்பிட்டார். அவரின் ஆய்வு முறையானது மார்க்ஸின் அந்நியமாதலை அடிப்படையாகக் கொண்டிருந்தது.

அந்நியமாதல் என்றால் என்ன?

முதலாளிய உற்பத்தி முறையை ஆழமாக ஆய்வு செய்த மார்க்ஸ் மனிதர்களின் அந்நியமாதல் பிரச்சினையை விரிவாக எடுத்துரைத்தார்.

மனிதனின் சாரமே அவனுடைய உழைப் பும் அதில் வெளிப்படும் ஆக்கபூர்வத் தன்மையும்தான். அவன் தன்னைப் பரிபூரணமாக வெளிப்படுத்திக் கொள்வது தனது உழைப்பின் மூலமாகத்தான். ஆக்கபூர்வத் தன்மையை அழகியலாக வெளிப்படுத்தி ஒரு பொருளை உருவாக்குவதுதான்.

முதலாளிய சமூகத்துக்கு முந்தைய சமூகத்தில் ஒரு படைப்பை அல்லது ஒரு பொருளை முழுமையாக அவ னால் உருவாக்க முடிந்தது. உதாரணமாக கலையம்சத்துடன் கூடிய நாற்காலியை ஒரு தச்சரே உருவாக்கினார். ஆனால், முதலாளிய உற்பத்தி முறை யில் தொழில்நுட்ப வேலைப் பிரிவினையானது ஒரே பொருளைப் பல நாடுகளில் உற்பத்தி செய்வதாக மாற்றியது. உதாரணமாக ஒரு காலணியின் ஒரு பட்டனை மட்டுமே இந்தியா தயாரிப்பதாக வைத்துக்கொள்வோம். பட்டனை மட்டும் உற்பத்தி செய்பவராகத் தொழிலாளி மாறுகிறார். சார்லி சாப்ளின் மாடர்ன் டைம்ஸ் திரைப்படத்தில் இதை அழகாகக் காட்டியிருப்பார். அவர் ஒரு ஆணியை இறுக்கும் வேலையை மட்டும் செய்வார். அதையும் எந்திரத்தனமாகச் செய்வார். ஒரு கட்டத்தில் அவர் அந்த எந்திரத்தின் ஒரு பகுதியாக மாறிவிடுவார். இவ்வகையான தொழில்நுட்ப வேலைப் பிரிவினையை அடிப்படையாகக் கொண்ட முதலாளிய உற்பத்தியில் அவருக்கு எந்த திறமையும் வளராது. அவர் சக்கையாகப் பிழியப்பட்டு எந்திரமாக மாறிவிடுவதால் அவருடைய உழைப்பும் அது உருவாக்கிய உற்பத்திப் பொருளும் சரக்காகி அவரிடமி ருந்த பிரிக்கப்பட்டு அந்நியமாகி விடுகிறது.

எந்திரமாக மாறும் தொழிலாளர்

ஒரு பொருளைத் தயாரிக்கும் 1,000 நபர்களில் ஒருவராக இருப்பதால் உழைப்பி லிருந்து அவருடைய கலைபூர்வத் தன்மையான ஆக்கமும் அந்நியமாகி விடுகிறது. இதன் அடுத்த கட்டமாக அந்த உற்பத்திப் பொருளானது யாருக்குப் போய்ச் சேருகிறது என்பதே தெரியாமல் உற்பத்தி செய்யப்படுவதால் மற்ற மனிதர்களிடமிருந்தும் சமூகத்திடமிருந்தும் அந்நியப்பட்டுப் போகிறார். இதனால் ஏற்படும் விரக்தியும் பதற்றமும் அவர் எதிலும் திருப்தி அடையாத நிலையை ஏற்படுத்துகின்றன. உறவுகளிலிருந்து அந்நியமாகி மன உளைச்சலுக்கு ஆளாகிறார் என மார்க்ஸின் ஆய்வு செல்கிறது. இந்த உற்பத்தி முறையில் அவனுடைய அறிவும் ஆற்றல்களும் உணர்வுகளும் மழுங்கடிக்கப் படுகின்றன.

எரிக் ஃப்ராமின் ஆய்வானது முதலாளிய உற்பத்தியானது ஒருவருடைய மனநலத்துக்கு இவ்வகையில் பாதிப்பு ஏற்படுத்துகிறது என்கிறார். ஒருவரின் மனநலத்துக்கு ஐந்து முக்கியக் காரணிகள் அடிப்படையாக உள்ளன. முதலாவதாக அவன் மற்றவர்களுடன் உறவு கொள்ளும் தன்மை. இரண்டாவது இயற்கையைப் பயன்படுத்திக் கொண்டு தனது தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வது. மூன்றாவதாக, சமூகத்தில் ஆழமாக வேர் விட்டிருப்பதும் தனது உணர்வுகளுக்கு வடிகாலாக யாரையாவது சார்ந்திருப்பதும். நான்காவதாகத் தன்னை எதனுடனாவது அடையாளப்படுத்திக் கொள்வதும். இறுதியாக, தன் பார்வையின் மூலமாக உலகைப் புரிந்து கொள்வதும் அதன் மூலமாக அனுபவங்களைத் தொகுத்துக் கொள்வதும் மனநலத்துக்கு அடிப்படையானவை.

ஆனால், லாபத்துக்கு நடைபெறும் சரக்கு உற்பத்தி முறை இந்த ஐந்தையும் சிதைத்து விடுவதால் அதன் தவிர்க்க முடியாத விளைவாக மனநோய்கள் உருவாகின்றன.

நுகர்வுப் பொருட்களின் உற்பத்தி

இன்னொருபுறம் முதலாளிய உற்பத்தியில் நுகர்வுப் பொருட்களும் ஆடம்பரப் பொருட்களும் குவிக்கப்படுகின்றன. இவற்றை வாங்குவது சமூக அந்தஸ்துக்கு அடையாளமாகக் கருதப்படுகிறது. ஒருபுறம் அடிப்படைத் தேவைகளையே நிறைவேற்றிக் கொள்ளப் போராடும்போது இன்னொரு பக்கம், நுகர்வுப் பொருட்களையும் ஆடம்பரப் பொருட்களையும் வாங்க வேண்டிய நிர்பந்தங்கள் ஏற்படும்போது ஏற்படும் முரண்பாடுகள் மனதின் சமநிலையைக் குலைக்கின்றன.

மன்த்லி ரிவ்யூ என்ற சர்வதேச ஆய்வு இதழின் ஆசிரியர்களான பால் சுவிசி, பால் பாரன் ஆகியோர் நுகர்வுப் பொருட்களின் உற்பத்தி சமூகத்தில் தொடர்ந்து திருப்தியின்மையை ஏற்படுத்தி வருவதாகத் தெரிவிக்கின்றனர். இந்த நுகர்வுப் பொருட்களை வாங்கி வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்வது என்பது அடைய முடியாத இலக்காக மாறி விடுகிறது. இதனால் பதற்றம், மன அழுத்தம் மற்றும் கடுமையான மனநோய்களான மனச்சிதைவு, குற்றங்களைக் குற்ற உணர்வின்றிப் புரியும் ஆளுமைச் சிதைவு என மனநோய்கள் தொடர்ந்து உருவாகுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

மன உளைச்சல்களும் திருப்தியின்மையும்

உலகமயமாக்கல் கொள்கைகள் அமல்படுத்தப்பட்ட பின்னர் அனைவரும் போட்டி போட்டுக்கொண்டு பணம் ஈட்டுவதிலும் ஆடம்பரப் பொருட்களை வாங்கிக் குவிப்பதிலும் ஈடுபடுவது மன உளைச்சலையே அதிகரிக்கும். தன்னுடைய அந்தஸ்தை உயர்த்துவது என்ற பெயரில் எப்போதும் திருப்தியின்றி இருப்பது அதிகரித்து வருவதைப் பார்க்க முடியும். எனவே மனநோய்களை முதலாளிய உற்பத்தி முறையே உற்பத்தி செய்கிறது என்று சொல்லலாம். எந்த சக்திகள் மனநோய்களை உற்பத்தி செய்கின்றனவோ அவற்றிடமே அதற்கான சிகிச்சையையும் ஒப்படைப்பது எந்த வகையில் தீர்வளிக்கும்?

துணை நின்றவை:

1. MoU Signed with BANYAN AND HANS FOUNDATION and health secretary of Tamilnadu Govt
2. Statement of psychiatrists forum for people
3. The Commodification of Indias Healthcare Services, (chapter 3)Healters or Predators by Keshav Desiraju edited by samiran Nundy
4. Age of Monopoly Capitalism by paul sweezy and paul baran , published by Monthly Review , Newyork
5. Capitalism and Mental Health by David Matthews (The Guardian, October 12, 2016).

- அழகு