2 பிள்ளைகளுக்குத் தாய். இரண்டாவது பிள்ளைக்கு வயது வெறும் 7 மாதங்கள், தாய்ப்பால் குடிக்கும் பருவம்.

ஹாஸ்பிடலுக்கு அவள் அழைத்து வரப்பட்ட பொழுது அவளின் நிலை, சவத்திற்கு இணையானது. மூன்று வார்த்தைக் கூட தொடர்ந்துப் பேச முடியாத படியான நிலை. காரணம், ஒரு வாரமாக காய்ச்சல். குழந்தைக்கு பாலூட்டுவதால் இயற்கை வைத்தியம் செய்யலாமே என்று அவளது பக்கத்து வீட்டினர் சொன்னதால் வந்த வினை. அம் மருத்துவரின் மருந்தை உட்கொண்டப் பின் சில முறை Coffee யின் நிறத்திற்கு இணையான வாந்தி. கேட்டால் மருந்து வேலை செய்வதின் அறிகுறி என்று சொல்லப்பட்டது.

ஆக, இரத்த வாந்தி மருந்து வேலை செய்வதின் அறிகுறி என்று நம்ப வைக்கப்பட்டு குடும்பமும் சிகிச்சையை அவரிடமே தொடர்ந்தது. பின் நிகழ்ந்தது தான் சவத்திற்கு இணையான நிலை. அவள் ஹாஸ்பிடலுக்கு வரும் போது, இரத்தத்தில் இருந்த platelets இன் அளவு வெறும் 5000. ஆனால் ஆரோக்கியமான அளவோ 150,000 - 450,000.

இரத்தத்தில் உள்ள இந்த பிளேட்டிலெட்ஸ் (platelets) இரத்தம் உறைவதற்கான மிக முக்கிய காரணி. ஆக, இது சடாரென குறைந்தால் டெங்கு ஷாக் சின்ரோம் (Dengue Shock Syndrome) என்ற நிலை உருவாகும். பின், மிகவும் பிரயத்தனப்பட்டுத் தான் அவள் மீண்டாள். டெங்கு காய்ச்சலுக்கு பப்பாளி இலையின் சாறினைத் தரலாமா என்று கேட்கப்படும் பொழுது, என்ன சொல்வதென்று தெரியவில்லை. பப்பாளி இலைச் சாற்றில் டெங்கு காய்ச்சல் உருவாக்கும் சில நிலைகளை கட்டுக்குள் வைக்க சில மூலக்கூறுகள் (molecules) இருக்கலாம். ஆனால் அது நோயினைத் தீர்க்கும் சிகிச்சை கிடையாது என்பதனை நினைவில் கொள்ளவேண்டும். அது சிகிச்சைக்கு உதவி புரியும் ஒரு இணை சிகிச்சையாகவே கொள்ள முடியும். மேலும் கஷாயமோ அல்லது சாறோ செய்யப்படும் பொழுது, இலையில் இருக்கும் உதவிகரமான மூலக்கூறுகள் சரியான முறையினால் வெளிக்கொணரப்பட முடியுமா என்பது மில்லியன் டாலர் கேள்வி.

டெங்கு ஜுரம் பொறுத்த வரை நோய்த் தடுப்பு மூன்று வகையில் செயல்படுத்தப்படுகிறது.

  1. முதன்மைத் தடுப்பு

டெங்கு ஜுரத்தின் எச்சரிக்கை அறிகுறிகள் பற்றி மக்களிடம் விளக்கிச் சொல்லுதல், கொசுக்களின் உற்பத்தி இடங்களை கண்டு அதனை அழித்தல், முக்கியமாக கொசுக்கள் இனப்பெருக்கம் செய்யும் இடங்களை இலக்கு வைத்து அதனை அழித்தல், நீர் தேங்குவதனைத் தவிர்த்தல், கொசு வலைகள், கொசு விரட்டிகளைப் பயன்படுத்துதல். முதன்மைத் தடுப்பு நடவடிக்கைகள் என்பது வருடம் முழுமைக்கும் தொடர்ந்து நிகழ்ந்தாகவேண்டிய செயல்பாடு.

  1. இரண்டாம் நிலை தடுப்பு

2-3 நாட்களுக்கு மேற்பட்ட ஜுரமோ அல்லது டெங்கு ஜுரத்திற்கான அறிகுறிகளில் ஏதேனும் ஒன்று கண்டால் உடனடியாக மருத்துவமனைக்கு காலம் தாழ்த்தாமல் விரைதல். இது நிகழாமல் வீடு வைத்தியம் செய்து கொண்டோ அல்லது ஜுரத்தினைத் தணிக்கும் மாத்திரைகளை எடுத்துக்கொண்டோ காலம் தாழ்த்தும் போது, அவ்வேளையில் நோய்த் தொற்றினால் ஏற்பட்ட பாதிப்புகள் தீவிரமடைந்து, இரத்தக்கசிவு ஏற்பட்ட பின் தான் மருத்துவமனைக்கு விரைதல் என்பது நடக்கும். காலம் தாழ்த்தினால் இறப்பு கூட ஏற்பட சாத்தியம் உள்ள ஜுரம் இந்த டெங்கு ஜுரம்.

  1. மூன்றாம் நிலை தடுப்பு

டெங்கு ஜுரம் என்று மருத்துவரால் உறுதிப்படுத்தப்பட்ட பின் மேலும் சிக்கல்களை தவிர்க்க நீர் அவ்வப்பொழுது குடித்துக்கொண்டு இருப்பது முக்கியம். அதோடு தீவிரத்தின் அறிகுறிகளான இரத்தக்கசிவு இருக்கிறதா என்றும் அதிர்ச்சிக்கான அறிகுறிகள் ஏதும் தென்படுகிறதா என்றும் கவனிப்பது மிகவும் அவசியம்.

மலேரியாவிற்கான ஒரு மருந்தின் மூலக்கூறே, ஒரு வித செடியின் இலையிலிருந்து தான் எடுக்கப்படுகின்றது.ஆனால் அம்மூலக்கூறினை வெளிக்கொணர மிகத் துல்லியமான முறைகள் உள்ளன என்பதையும் நினைவில் நிறுத்த வேண்டும். தயவு செய்து குணமாக்கப்படக்கூடிய ஒரு நோய்த்தொற்றினை சரியான சிகிச்சையைச் சரியான நேரத்தில் எடுக்காமல் உயிரினைக் குடிக்கும் நோயாக மாற்றிவிடாதீர்கள்.

நிலவேம்பு கசாயமோ, பப்பாளி இலை சாறோ. அதனை மாத்திரமே நம்பி உயிரை இழக்காதீர்கள்.