“நாடகமும் சினிமாவும்,” - என்று பெரியார் எழுதியதைத் தழுவி, “குத்தூசி” யில் குறிப்பிட்டிருப்பதையும் வரவேற்கிறேன். ஒவ்வொரு வாரமும் கலைஞர்களைப் பற்றி எழுதுவீர்களானால் அவர்களின் ஆட்பர வாழ்க்கையும், அறியாமை கலந்த ஆணவமும் அகலும் - பயன் ஏற்படுமென்று நம்புகிறேன்.” என்று நாடக - சினிமாத்துறை நண்பரான எம். எஸ். முத்துகிருஷ்ணன், 31-ந் தேதியன்று எனக்கு ஒரு கார்டு எழுதியிருக்கிறார்.

நாடகமும் சினிமாவும் நாட்டைத் திருத்தி நல்வழிப் படுத்துவதற்காகப் பயன்படுமானால் நல்லதுதான். மனிதனுக்கு மருந்து போன்றவை இந்த இரண்டும்! வேதனை நோய் ஏற்பட்டபோது எப்போதாவது ஒரு மாத்திரை போட்டுக் கொண்டால் நல்லதுதான், நோய் தீரும்! ஆனால் வேளை தோறும் தொடர்ந்து சாப்பாட்டிலேயே கலந்து சாப்பிடுவதும், தண்ணீரிலும் பாலிலும் காஃபியிலும் கலந்து குடிப்பதுமாக இருந்தால், எவ்வளவு நல்ல மருந்து கூட ஆளைக் கொன்று விடாதா?

kuthoosi gurusamy 263கலைஞர்களைப் பற்றி எழுதச் சொல்கிறார், இவர்! அவர்கள் எப்படியோ போகட்டும்! பிழைப்பதற்கு எத்தனையோ துறைகள்! அவைகளில் அதுவுமொன்று! அவர்கள் பெரும் பணந்திரட்டுவதும், வாழ்க்கையில் பிரியம்போல் நடப்பதும் வேறு சங்கதி! (நாடக உலகில் பெரும் புகழ்பெற்ற இளைஞர் ஒருவரும், சினிமா உலகில் பெரும் புகழ்பெற்ற இளைஞர் ஒருவரும் இன்று வரையில் உயர்ந்த நல்லொழுக்கத்தின் சின்னமாக விளங்குவதாகக் கேள்வி! அதாவது நான் கேள்விபட்டவரையில் இந்த இரண்டே இரண்டுபேர் தான்!)

சினிமாவும் நாடகமும் தனித்தொழிலாகவோ, கலையாகவோ இருப்பது பற்றி அப்புறம் பேசலாம், எழுதலாம்! ஆனால் இந்த இரண்டையும் பொது வாழ்க்கையிலுள்ளவர்கள் கையாளுவது சரியா?

நண்பரே! பாகிஸ்தான் வகுத்த ஜின்னா சினிமாக் கதை எழுதி, லியாகத் அலிகானும், நாஜீமுதீனும் அதில் நடித்திருந்தால் உலகம் அவர்களைப் பற்றி என்ன நினைத்திருக்கும்?

காந்தியார் நாடகக் கதை எழுதி, நேருவும், பட்டேலும், நேதாஜியும், ராஜாஜியும், வ. உ. சி. யும் வரதராஜுலுவும், ஆசாதும், சரோஜினி தேவியும் அந்நாடகத்தில் நடித்திருந்தால், நாமெல்லாம் காங்கிரசைப் பற்றி என்ன நினைப்போம்?

இராமமூர்த்தி சினிமாக் கதை எழுதி, அதில் அஜாய் கோஷும், டாங்கேயும், ஜீவாவும், தங்கமணியும், ஏ.எஸ்.கே.யும் மணலியும் நடித்திருந்தால் பொதுமக்கள் அவர்கள் கட்சியைப் பற்றி என்ன கருதுவார்கள்?

சன்யாட்சென் நாடகம் எழுதி, அதில் அவரும் மாசேதுங்கும் மற்ற சீனத் தலைவர்களும் நடித்திருந்தால் அவர்கள் திறமைப் போக்கைப் பற்றி உலகம் என்ன சொல்லும்?

லெனின் ஒரு நாடகம் எழுதி, அதில் ஸ்டாலினும், ட்ராட்ஸ்கியும் நடித்துக் கொண்டிருந்தார்களானால், ரஷ்ய மக்கள் நிலைமை என்னவாகி யிருக்கும்?

ஒரு மார்டின் லூதரோ, ஒரு கமால் பாட்சாவோ, ஒரு அமானுல்லாவோ, ஒரு ராம்மோகன் ராயோ - தங்கள் மக்களைத் திருத்துவதற்கு என்ன செய்தார்கள்? நாடக மேடையிலா ஏறினார்கள்?

நாடு எப்படிப் போகிறதோ அந்தப் போக்கில் திரும்பிக் கொள்வார்கள், கலைஞர்கள்! அது அவர்கள் கொள்கையைச் சேர்ந்ததல்ல; வயிற்றுப் பிழைப்பைச் சேர்ந்தது! வசதியைச் சேர்ந்தது! (இதிலும் எம்.ஆர்.ராதாவைப் போல், நவாப் ராஜமாணிக்கத்தைப் போல், இரு துறைகளிலும் பிடிவாதமா யிருப்பவர்களும் உண்டு!)

ஆனால் பொதுநலத் தொண்டர்களும், இயக்கத் தலைவர்களுமே இந்த இரு துறைகளிலும் இறங்கி விட்டால், நாடு என்னவாகும்?

ஆச்சாரியாரும்! காமராசரும் அரிச்சந்திரா நாடகத்தில் நடித்தாக வேண்டும்!

பெரியாரும், வேதாசலமும் இரணியன் நாடகத்தில் நடித்தாக வேண்டும்!

என்னைப் போன்ற சாதாரணங்கள் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை! ஆனால் இயக்கத் தலைவர்கள், ஆர்வங்கொண்ட வழிகாட்டிகள், படிப்பும் பட்டமும் பெற்ற செயல் வீரர்கள், இக்கால பர்னாட்ஷாக்கள், வருங்கால மார்டின்லூதர்கள், தென்னாட்டு கமால் பாட்சாக்கள் - இந்தத் துறைகளில் மூழ்கிக் கிடப்பது சரிதானா? “நாடகமே உலகம்,” என்றும், “சினிமாவே இனிமை” என்று ஒரே மூச்சாகச் சொக்கிக் கிடப்பது அழகாகுமா?

விருப்பு - வெறுப்பின்றி சிந்தித்துப் பார்க்கச் சொல்லுங்கள்! கலைஞர்களைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம்! அது ஒரு தொழில்! ஆனால் தலைவர்களைப் பற்றிக் கேட்கிறேன்! மற்றத் தலைவர்களிடம் குறை காண்பவர்களைப் பற்றிக் கேட்கிறேன்! 100க்கு 100 நல்ல எண்ணத் தோடுதான் கேட்கிறேன்.

புரட்சிப் பாதையில் செல்ல வேண்டிய தமிழனைச் சினிமாக் கொட்ட கைப் பக்கம் கைதட்டிக் கூப்பிடலாமா? பொதுநலவாதிகள் கூப்பிடலாமா? மேடைப் பேச்சாளர் கூப்பிடலாமா? புரட்சி எழுத்தாளர் கூப்பிடலாமா? நாட்டைத் திருத்துவோர் கூப்பிடலாமா? கலைஞர்கள் கூப்பிடலாம்; அது அவர்கள் கடமை! பிழைப்புங்கூட; அதில் தவறுமில்லை - உலக இயற்கை தான்!

குத்தூசி குருசாமி (4-2-1953)

நன்றி: வாலாசா வல்லவன்