kuthoosi gurusamy 300“இந்தா, கமலு! நீ இந்தமாதிரி அடிக்கடி தொல்லை கொடுத்துக் கொண்டேயிருந்தால் நான் சந்நியாசியாகப் போய் விடுவேன்! உஷார்!” - என்று கணவன் தன் மனைவியை மிரட்டுகிறான்!

“என்னமோ விளையாட்டுக்குக் கேட்டா, உங்களுக்கு இந்த மாதிரிக் கோபம் வருதே! போங்கண்ணா! நீங்க எப்போதும் இப்படித்தான்!”, என்று கமலு உடலைத் தளர்த்திக் காட்டுகிறாள்!

“சரி! சரி என் மணிபர்சிலே ஒரு எட்டணாப் போடு; பஸ் சார்ஜுக் குப் பணமில்லை,” என்கிறான் கணவன்.

சந்நியாசி ஆவதென்றால் அவ்வளவு சுளுவானது! அதனால்தான் சோம்பேறிகளெல்லாம் சந்நியாசிகளாகி விடுகிறார்கள்! அதிலிருந்து கொஞ்சம் முற்றினால் ரிஷிகளாகவும் ஆகிவிடுகின்றனர்!

டாக்டர் அம்பேத்காருக்கு இந்த “ஹிந்து” மதத்தின் மீதும், பார்ப்பனர் மீதும், இருக்கின்ற கோபம் கொஞ்ச நஞ்சமல்ல! ஏனென்றால் ஹிந்துமத வண்டவாளங்களை நன்றாகப் படித்தறிந்தவரல்லவா?

“ஷெட்யூல் வகுப்பார் அத்தனை பேரும் முஸ்லிம்களாகிவிடுவோம்,” என்கிறார், ஒரு தடவை!

“நாங்கள் புத்த மதத்தைத் தழுவுவது தவிர வேறு வழியில்லை”, என்கிறார், இன்னொரு தடவை!

இவர் என்னதான் மிரட்டினாலும் “ஹிந்து” மதபக்தர்கள் (வெறியர்கள்) கல்லுப் பிள்ளையார் மாதிரியே இருக்கின்றனர்!

இந்தக் கல்லுப் பிள்ளையார்களுக்கு உயிர் இருந்திருந்தால் இந்த நாட்டில் முஸ்லிம்களோ, கிறிஸ்தவர்களோ ஒருவரைக் கூடக் காண முடியாதே! அத்தனை பேரும் ஆரியச் சூடு தாங்கமாட்டாமல் நிழலை நோக்கி ஓடியவர்கள்தானே? அம்பேத்காருக்கு இப்போது ஒரு புது மாதிரிக் கோபம் பிறந்திருக்கிறது!

நவம்பர் 7-ந் தேதியன்று பாட்னாவில் பி. டி. அய். க்குக் கொடுத்த பேட்டியில் பின் வருமாறு கூறியிருக்கிறார்:-

“என்னுடைய கட்சி எந்தக் காரணத்தைக் கொண்டும் கம்யூனிஸ்ட் கட்சியுடன் மட்டும் சேரவே சேராது. ஏனென்றால், எனக்குக் கம்யூனிசத்தில் நம்பிக்கை கிடையாது.”

அடுத்த நாள் (8-ந் தேதி) லட்சுமணபுரியில் பேசியிருக்கிறதைப் படித்துப் பாருங்கள்;-

“பிற்பட்ட வகுப்பார் தாங்கள் முன்னேற வேண்டுமென்ற இலட்சியத்தில் ஏமாற்றப்படுவார்களே யானால், ஷெட்யூல் வகுப்பார் கம்யூனிஸ்ட் கொள்கையைத் தான் ஆதரிக்க வேண்டியிருக்கும்; பிறகு இந்த நாட்டின் கதி அதோகதி தான்,”

- சுமார் 20-25 லட்ச ரூபாய்க்குச் சொத்து வைத்திருந்த ஜமீன்தார் ஒருவர் என்னிடம் சென்ற வாரம் பேசிக்கொண்டிருந்தார். பல அரசியல் விஷயங்களைப் பற்றிப் பேசிவிட்டு, திடீரென்று ஒரு வெடிகுண்டு போட்டார்!

ஏனய்யா! என்னையும் கம்யூனிஸ்டுக் கட்சியில் சேர்த்துக்கொள்ளச் சொல்லேன்! நானும் இந்தக் காங்கிரசை ஒழிப்பதற்காக எலெக்ஷனில் நிற்கிறேன்”, என்றார்.

“நீங்களா? கம்யூனிஸ்ட் கட்சியிலா எதற்காக?” என்று கேட்டேன்.

“ஆமய்யா! ஆமாம்! என் சொத்துக்களைத்தான் சர்க்காரும் என் பசங்களும் எடுத்துக்கொண்டு என்னை ஓட்டாண்டியாக விட்டு விட்டார்களே! இனி நான் கம்யூனிஸ்ட் கட்சிதானே?”, என்றார்.

“ஓஹோ! அப்படியா? அது சரி! கருப்புச் சட்டைக் கட்சியில் கூட நீங்கள் சேரலாம். அதுவும் அதே சங்கதிதான்,” என்று சொன்னேன்!

விரக்தி வந்தவுடனே சந்நியாசி யாவதாகச் சொல்வது போல இப்போது பலர் கம்யூனிஸத்தைப் பற்றிச் சொல்கிறார்கள்!

கம்யூனிஸ்ட் ஆவதென்றால் ஏதோ, கதர்ச் சட்டையை மாட்டிக்கொண்டு, காங்கிரஸ்காரர் என்பதுபோல அவ்வளவு சுளுவான காரியம் என்று பலர் தவறாகக் கருதுகிறார்கள்!

தியாகம் என்ற தீச்சட்டியில் போட்டு, பல தடவை தோல் கருப்பாகிற வரையில், வறுக்கப்பட்டவன் தான் உண்மையான கம்யூனிஸ்ட்!

ஆகையால்தான் டாக்டர் அம்பேத்கார் “எனக்கு கம்யூனிசத்தில் நம்பிக்கையில்லை”, என்று சொல்கிறார் போலும்! சுகவாசி அம்பேத்காருக்கு எப்படி நம்பிக்கையிருக்கும்?

உலக விநோதங்களில் இதுவுமொன்று? ஷெட்யூல் வகுப்பர் அத்தனை பேரும் உழைப்பாளிகள். ஒருவர் கூட சோம்பேறி கிடையாது. உழைப்பவர்களுக்கு உடைமையில் உரிமை வேண்டும் என்பதே கம்யூனிசத்தின் அடிப்படை. ஆனாலும் ஷெட்யூல் வகுப்புத் தலைவர், “தமக்கு கம்யூனிசத்தில் நம்பிக்கையில்லை,” என்கிறார்!

வடநாட்டுச் சுரண்டல் தடுப்பு மறியல் நடந்துகொண்டிருந்தபோது இந்த நாட்டிலேயே ஒரு பெரிய கொந்தளிப்பு ஏற்பட்டிருந்ததல்லவா? அச்சமயம் “தமிழ்நாடு வர்த்தகர் சம்மேளனம்” என்ன தீர்மானம் செய்தது தெரியுமா?
“இந்தக் கிளர்ச்சியினால் தென்னாட்டு வியாபாரமே பாதிக்கப்பட்டு விடுமாதலால் கிளர்ச்சிக் காரர்களைக் கண்டிக்கிறோம்” -என்று!

எப்படியிருக்கிறது, சங்கதி, பார்த்தீர்களா?

அம்பேத்கார் சங்கதியைப் போலவே இருக்கிறதல்லவா?

“பெண்களுக்குத் திருமணரத்து உரிமை வேண்டும்” என்று 1925ஆம் ஆண்டில் நடந்த செங்கற்பட்டு சுயமரியாதை மாநாட்டில் தீர்மானித்தோம்.

அடுத்த மாதத்தில் சென்னையில் நடந்த அகில இந்திய மாதர் சங்க மாநாட்டில் என்ன செய்தார்கள் தெரியுமா? செங்கற்பட்டுத் தீர்மானத்தைக் கண்டித்து மாதர்கள் தீர்மானம் நிறைவேற்றினார்கள்!

குழந்தையைக் கடிக்க வந்த பாம்பைக் கடித்துக் கொன்றுவிட்டு ஓடி வந்த வளர்ப்புக் கீரியை அடித்துக் கொன்றாளே, குழந்தையின் தாயார்!

அதே! கதைதான்! இத்தனையும் பொறுத்துக் கொண்டுதான் பொதுத் தொண்டு செய்யவேண்டியிருக்கிறது!

இல்லாவிட்டால் சொகுசாக ஏதாவ தொரு உத்யோகமோ, வியாபாரமோ பார்த்துக்கொண்டு ஓய்ந்த நேரத்தில் பொதுத்தொண்டு செய்யலாமே! இதனால் “பெரிய மனுஷன்” என்ற பெயர் கூடக் கிடைக்குமே!

- குத்தூசி குருசாமி (10-11-51)

நன்றி: வாலாசா வல்லவன்