kuthoosi gurusamy 268கொளுத்துகிற வேலை அவ்வளவு நல்லதல்ல. அந்நிய நாட்டுத் துணிக்கோ, எதிர்க்கட்சி மாநாட்டுப் பந்தலுக்கோ, போலீஸ் ஸ்டேஷனுக்கோ - எதற்குக் கொள்ளி வைப்பதானாலும், அதற்கென்று ஒரு தனிக் கட்சி இந்த நாட்டிலிருக்கிறது!

கொள்ளி வைப்பவனுக்குத் தான் சொத்துரிமையுண்டு - என்பது “ஹிந்து” மதக்காரர்களிடையே உள்ள ஒரு பழக்கம். அதையொட்டியோ என்னவோ, கொள்ளி வைத்தவர்களுக்கு 5 ஏக்கர் நன்செய் அல்லது 10 ஏக்கர் புன்செய் சொத்துக் கிடைத்திருக்கிறது!

இந்தச் சந்தர்ப்பத்தில் ஒரு சங்கதியைப் பற்றிக் கூறாமலிருக்க முடியவில்லை. கொள்ளி வைத்தவர்களிலேயே பலருக்கு நிலம் கிடைக்காமல் இடையிலிருப்பவர்கள் தட்டிப் பறித்துக் கொண்டு விட்டதனால் உண்மையாகவே கொள்ளி வைத்தவர்கள் ஆத்திரமடைந்திருக்கின்றனர்.

அதாவது “போலி ஆகஸ்ட் தியாகிகள்” பலர் தியாக மான்யம் பெற்றிருக்கின்றனர். இது மட்டுமா? லட்சாதிபதிகளான மந்திரிகளுக்குத் தியாக மான்யம் கிடைத்திருக்கிறது; ஏழைத் தியாகிகளில் பலருக்குக் கட்டை விரலைக் காட்டிவிட்டார்கள்!

ஆதலால், “வரட்டும் தேர்தலுக்கு! பழிக்குப் பழி வாங்குகிறேன்” என்று ஆகஸ்ட் தியாகிகளிலேயே பலர் வரிந்துகட்டி நிற்ககிறார்களாம்! இது இப்படியே நிற்க!

கொளுத்துகிற விஷயத்தை எடுத்துக் கொள்வோம்.

டில்லியில் நேரு முன்னிலையில் நடந்த ராமலீலா விழாவில் இராவணன், இரண்யன், இந்திரஜித் போன்ற உருவங்களுக்குக் கொள்ளி வைத்து மகிழ்ந்தார்களாம், வட நாட்டார்.

“அதைப்போலவே நாமும் ஏன் இராமன் - கிருஷ்ணன் போன்ற கொலை கார கோட்சேக்களின் உருவங்களுக்குக் கொள்ளிவைத்துக் கொண்டாடக் கூடாது?” - என்று மதுரை திராவிட கழகச் செயலாளர் எனக்கு எழுதிக் கேட்டிருக்கிறார்.

வடநாட்டார், அந்த நாட்டு மன்னனாகிய இராமனின் எதிரியை (உருவத்தை)க் கொளுத்தும் போது, தென்னாட்டாராகிய நாம் இந்த நாட்டு மன்னனான இராவணனின் எதிரியான இராமனைக் கொளுத்துவதில் தப்பில்லை என்று தான் தோன்றுகிறது. ஆனால் அப்படிச் செய்யு முன்பு பொதுக் கூட்டத்தில் அதன் அவசியத்தை விளக்கிக் கூறவேண்டும். பிறகு கூட்டத்தாரின் பிரியத்தையும் கேட்டுக் கொள்ள வேண்டும்.

பெரியாரை வகுப்பு துவேஷ குற்றத்திற்காக திருச்சியில் சிறைப் படுத்தியவுடனே “ஹிந்து” - “சுதேசமித்திரன்”, -போன்ற ஆரியப் பத்திரிகைகளைப் பொது மேடையில் கொளுத்தினார்களே, தெரியுமா? சென்னையில், கும்பகோணத்தில், பட்டுக்கோட்டையில் - இன்னும் பல ஊர்களில்? அப்போது கூட்டத்தாரின் விருப்பத்தைக் கேட்டுக் கொண்டு, அவர்கள் ஒருமனதாக, “கொளுத்தலாம்” என்று கூறிக் கை தூக்கிய பிறகுதான் கொளுத்தினார்கள்!

ஆட்சியாளரின் அதிகாரிகள் பார்த்துக் கொண்டு தானே இருந்தார்கள்? கொளுத்தியவர்களை என்ன செய்ய முடிந்தது? இது மட்டுமா? பட்டப் பகலில், அதுவும் மாலை நேரத்தில், மவுண்ட் ரோட்டில் “ஆனந்த விகடன்” நிலையத்துக்கு முன்பு அந்தப் பத்திரிகை நடுத்தெருவில் போட்டுக் கொளுத்தப்பட்டதே! என்ன செய்து விட்டார்கள்?

தென்னாட்டில் இராமனுக்கு மரியாதை கிடையாது. இங்கு இராவணன் உருவம் கொளுத்தப் பட்டால் என்னவாகும் என்பதைப் பற்றி நம்மைவிட நன்றாக அக்கிரகாரத்துக்குத் தெரியும்.

இங்கு ராமாயண காலட்சேபம் நடக்கின்ற இடம், ஆரியர் சேரிகளில்; அல்லது அவர்களது அடிமைகளின் வீடுகளில்தான்! இராமாயணப் பிரசாரஞ் செய்கிறவர்களும் ஆரியர் அல்லது அவரது கால்வருடிகள்தானே? மான முள்ள தமிழன், மறைமலையடிகளின் ஆராய்ச்சி நூல்களைப் படித்துணர்ந்த தமிழன், பூர்ணலிங்கம் பிள்ளையின் “இராவணப் பெரியார்” என்ற நூலைப் படித்த தமிழன், வரலாறு உணர்ந்த தமிழன், மூளைக்கு வேலை கொடுக்கின்ற தமிழன், ஆரியத்துக்கு அடிமைப்படாத தமிழன் - எவனாவது இராமனைப் போற்றுகின்றானா?

“அயோக்கிய இராமன்” என்ற பெயரால் யாராவது அயோத்தி ராமனைப் பற்றி ஓர் ஆராய்ச்சி நூல் எழுதினால், இன்று ஆயிரக் கணக்கில் விற்கும்! அவ்வளவு தூரத்துக்கு இராமன் சங்கதி தமிழகத்தில் நாறிப் போயிருக்கிறது!

- குத்தூசி குருசாமி (30-10-51)

நன்றி: வாலாசா வல்லவன்