kuthoosi gurusamy 263கும்பகோணம் காவிரியாற்றுக்குள்ளே மணலிலும் தண்ணீரிலும் சேர்ந்து பெருந் தீ பிடித்துக் கொண்டு விட்டதாக நேருவுக்குத் தந்தி கொடுத்துவிட்டார்களாம்!

ஆரிய ரட்சகா! அக்கிரகாரப் பாதுகாவலா! அபயக்குரல் கேட்டு ஆவன செய்வாயா?

கும்பகோணம் கவர்ன்மெண்ட் காலேஜ் இண்டர்மெடியட் வகுப்பில் 260 ரிஷி சந்ததிகளில் 90 பேருக்கத்தான் இடம் கிடைத்திருக்கிறதாம்.

240 அசுரர்களில் 22 பேருக்கு இடம் கிடைத்திருக்கிறதாம். 100க்கு 50க்கு மேல் மார்க் வாங்கிய 130 கோட்சே குஞ்சுகளுக்கு இடம் மறுக்கப் பட்டிருக்கிறதாம்! அட்மிஷன் சம்பந்தமான “ரிகார்டுகளை” வரவழைத்துப் பார்த்து நீதி வழங்க வேண்டுமாம் - அவசரத் தந்தி சென்றிருக்கிறது, டில்லி நோக்கி!

நேரு என்ன செய்யப் போகிறாரோ? தெரியாது!

ஆனால் மகாவிஷ்ணு மட்டும் இன்று உயிருடனிருப்பாரேயானால் ஓடோடியும் வந்திருப்பார்! இதற்காகவே ஒரு அவதாரமும் எடுத்திருப்பார்!

“ஹ! அப்படியா? மீண்டும் இந்த அசுரர்கள் தொல்லையா? “மார்க்” யாகத்தைக் கலைக்கிறார்களா? அரும்பாடுபட்டுப் பெற்ற “மார்க்” கையா அலட்சியப்படுத்துகிறார்கள், இந்தச் சூத்திரர்கள்? இவர்கள் தவம் செய்வதே தவறு என்று முன்னரே எச்சரித்து, ராமாவதாரத்தில் ஒரு சூத்திரப் பயலை இதற்காகவே ‘கோட்சே வேலை’ செய்து புது டில்லி ராஜகாட்டில் எரிக்கச் செய்தேனே! இன்னமுமா இவன்களுக்குப் புத்தி வரவில்லை? 260 பேர்களில் 90 பேரைத்தானா எடுத்தார்கள்?

100க்கு 35 பேர்தானா? சுத்த அக்கிரமம்! இதோ என் பழைய சங்கு-சக்கரத்துடனும், புதிய துப்பாக்கி - ரிவால்வருடனும், புறப்பட்டு விட்டேன்! கருட வாகனத்தில் புறப்பட்டு, சூப்பர் கோட்டை விமானத்தில் மாறி, சென்னை விமான நிலையத்திலிருந்து ரோல்ஸ்ராய்ஸ் காரில் ஏறி கும்பகோணம் ஆற்றங்கரைக்கு வருகிறேன்!”- -என்று கூறி இந்நேரம் வந்திருப்பார், உயிருடன் இருந்திருந்தால்! அவரை அழைத்துப் பயனில்லை என்பதை உணர்ந்து தான் வைகுண்டத்துக்கு அனுப்ப வேண்டிய அவசரத் தந்தியை புது டில்லிக்கு அனுப்பியிருக்கிறார்கள்!

“100க்கு 3 பேராயுள்ள நமக்கு 100க்கு 35 ஆவது கிடைத்ததே! நம் ஜாதி மூலஸ்தானங்களில் (விவேகானந்தா காலேஜ் - நேஷனல் காலேஜ் - போன்றவை) அவன்களுக்கு 100க்கு ஒன்று கூட நாம் கொடுப்பதில்லையே! அவன்கள் எந்த “எமனுக்குத்” தந்தி கொடுக்கிறான்கள்? அவன்கள் காலேஜ்களிலும் நம்மவாளையே பிரின்ஸ்பால்களாக வைத்திருக்கிறான்களே!

இதற்காக எந்த இராவணனுக்குத் தந்தி கொடுக்கிறான்கள்? ஏதோ, நம்ப காங்கிரஸ் இருக்கிறதனாலேயாச்சும் 100க்கு 35 ஆவது கிடைச்சிருக்கு! இனி, அவன்களே ஆட்சிக்கு வந்துவிட்டால் 100க்கு 2க்கு மேல் மருந்துக்குக் கூட கிடைக்காதே!! நமக்கெதற்குப் பேராசை?-”

- என்றல்லவா நினைத்துத் திருப்திப்பட வேண்டும், புத்திசாலிகளாய் இருந்தால்! அதை விட்டுவிட்டுத் தந்தியாம் தந்தி!

அக்கிரகாரத்தவர்களில் சிலர் அதிக மார்க் வாங்கியது பற்றி மகிழ்ச்சி தான்! அதற்காக என்ன செய்யச் சொல்கிறார்கள்? தேவைக்கு மேல் அதிக மார்க் வாங்கியவர்களுக்குத்தான் காலேஜில் இடம் கிடைக்கும் என்று எந்தச் சட்டத்திலுமில்லையே!

சைக்கிள் ஓட்டத் தெரிந்தவர்களெல்லாம் ப்யூன் வேலைக்கு வரலாம் என்று ஓர் ஆஃபீசில் விளம்பரம் செய்கிறார்கள். அதன்படியே விண்ணப்பதார்கள் சைக்கிள் ஓட்டியும் காட்டுகிறார்கள்! அவரவர் வயது, நாணம் உல் வலிமை, சுறுசுறுப்பு, முதலியவைகளைச் சோதித்துப் பொறுக்கிக்கொண்டிருக்கிறார், ஆஃபீசர்!

இந்தச் சமயத்தில் குள்ளமான, மெலிந்த, நோயாளி போன்ற, அய்யங்கார் பையன் ஒருவன் ஓடி வருகிறான்!

“சார்! சார்! நான் எம். ஏ. பாஸ் செய்திருக்கிறேன், சார்! முதல் கிளாசில் சார்! சைக்கிளிலே பல வித்தைகள் கூடச் செய்வேன் சார்! கம்பி மீது கூட சைக்கிள் விடத்தெரியும், சார்!”, - என்கிறான்!

இதற்காக அவனுக்கு முதலில் ப்யூன் வேலை கொடுக்க வேண்டுமா? கொடுக்காவிட்டால் நேருவுக்குத் தந்தியடிப்பான்! ஆச்சாரியாருக்கு டெலிஃபோன் செய்வான்! ஆஃபீஸ் ப்யூன் வேலைக்கு எம். ஏ. படிப்புத் தேவையில்லை! சைக்கிளையும் தரை மீது தான் ஓட்டவேண்டுமே தவிர, கம்பி மீது ஓட்டவேண்டியதில்லை! தெருவிலுள்ள கம்பி மீது ஓட்டவும் அனுமதிக்க மாட்டார்கள்!

இவன் திறமையைக் காட்ட வேண்டுமானால் ஏதோ ஒரு சர்க்கஸ் கம்பெனியில் சேர்ந்து கொள்ளலாம்! பலர் கைதட்டுவார்கள்! கும்பகோணமய்யங்கர், எம். ஏ. கம்பிமீது சைக்கிள் விடுவார்!”- என்று விளம்பரமுஞ் செய்வார்கள்!

ஆனர்ஸ் படித்துவிட்டு சிலர் பாட்டுக் கச்சேரி நடத்தும் போது எம். ஏ. படித்துவிட்டு சர்க்கஸ் கம்பெனியில் சைக்கிள் வித்தை காட்டுவதில் தவறெதுவுமில்லையே!

ஆகவே, அதிக மார்க் வாங்குகிற அக்கிரகார நிபுணர்கள் (விவேகானந்தா கல்லூரியில் இடமில்லாவிட்டால்) ‘மார்க் சர்க்கஸ்’ கம்பெனியில் சேர்ந்து கொள்ளலாம்! கல்லூரிகள் யாவும் பிரம்மாவின் காலில் பிறந்தவர்களுக்குத்தான்! அதாவது சரஸ்வதி கடாட்சம் பெறாதவர்களுக்கு - அதாவது அசுரர்களுக்கு!

தேவர்களுக்குப் படிப்பு எதற்கு? காலேஜ் எதற்கு?

ப்ரம்மத்தில் லயப்பட்டவர்களுக்கு உத்யோகந்தான் எதற்கு? காயத்ரி கூறி கடவுளைக் காண்பவர்களுக்குக் காஃபி கிளப் எதற்கு? மோட்டார் கம்பெனி எதற்கு? பத்திரிகை எதற்கு? மந்திரி வேலை எதற்கு?

இவைகளை யெல்லாம் கேட்டால், பொல்லாதவன்! “கொண்டா 10, 000 ரூபாய், காங்கிரஸ் கருமாதி நிதிக்கு!” என்று கேட்கிறார்கள்.

என்ன தான் செய்யச் சொல்கிறீர்கள்?

- குத்தூசி குருசாமி (6-7-51)

நன்றி: வாலாசா வல்லவன்