சிறைக்குள் இருப்பவர்கள் எல்லோருமே குற்றவாளிகள் என்று கூற முடியாது; எத்தனையோ நிரபராதிகளும் கைதிகளாக இருப்பார்கள். அதேபோல் சிறைக்கு வெளியே இருப்பவர்களெல்லோரும் பரம யோக்கியர்கள் என்று கூற முடியாது. சிறைக்குள் இருக்க வேண்டியவர்கள் எத்தனையோ பேர் வெளியில் உலவிக் கொண்டிருக்கிறார்கள்! பலர் மோட்டார்களிலும் விமானங்களிலும் கூட சவாரி செய்து கொண்டிருக்கிறார்கள்!

kuthoosi gurusamy 263கடவுள் பக்தி என்கிறார்களே! அதிலும் இப்படித்தான். தொழுகிறவர்கள், பஜனை பாடுகிறவர்கள், நெற்றியில் சித்திரம் போடுகிறவர்கள், தவறாமல் கோவிலுக்குப் போகிறவர்கள் - இவர்களெல்லோரும் பக்தர்கள் என்று கூறமுடியாது. தாங்கள் செய்யும் அயோக்கியத்தனத்தை மறைக்கும் கேடயங்களாகக்கூட இவைகளைப் பயன்படுத்துகிற பக்தர்கள் பலர் இருக்கின்றனர். இந்த மாதிரி வெளி வேஷம் எதுவுமேயில்லாமல் கடவுள் பக்தர்களாக இருப்பவர்களும் உண்டு.

ஆஸ்பத்திரிகளில் இருப்பவர்கள்தான் நோயாளிகள் என்று சொல்ல முடியுமா? நிரந்தரமாக ஆஸ்பத்திரியிலேயே இருக்க வேண்டிய ஆயிரக் கணக்கானவர்கள் வெளியில் திரிந்து கொண்டிருக்கிறார்கள். ஆஸ்பத்திரியில் இடமில்லாதபடியால் வெளியில் இருக்க வேண்டியவர்களே எத்தனையோ லட்சம்!

எத்தனையோ தொழில்களில் அவைகளுக்குச் சிறிதும் பொருத்தமில்லாதவர்கள் ஈடுபட்டிருப்பதில்லையா? அதுபோல.

நல்ல பாகவதராயிருக்க வேண்டியவர் ஹைகோர்ட் ஜட்ஜாக இருப்பார்! எருமை மேய்க்க வேண்டியவர் பள்ளி ஆசிரியராக இருப்பார்! பழக்கடை வைக்க வேண்டியவர் பத்திரிகாசிரியராக இருப்பார்! வைக்கோல் சுமை தூக்க வேண்டியவர் வக்கீலாக இருப்பார்! சிரார்த்தம் செய்யத் தகுதியுள்ளவர் சினிமா டைரெக்டராயிருப்பார்!

உலகத்தில் எல்லோருமே அவரவர் இருக்க வேண்டிய இடத்தில் இருக்கிறார் என்று கூற முடியாது! இது கடவுளின் திருவிளையாடல்களில் ஒன்று என ஆஸ்திகர் கூறலாம். அவரது அசட்டுத்தனங்களில் ஒன்று என்று நாஸ்திகர் கூறலாம். இரண்டில் எதையும் நான் கூற மாட்டேன். நான் ஆஸ்திகனுமல்ல; நாஸ்திகனுமல்ல! நேற்று ஒரு செய்தி படித்தேன். பாகிஸ்தானிலும் இந்தியாவிலும் உள்ள பைத்தியக்கார ஆஸ்பத்திரி நோயாளிகளை, அவரவர் பிரியப்படி இரண்டு நாடுகளும் மாற்றிக் கொள்ளப் போகிறார்களாம்!

பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் இருப்பவர்கள் மட்டுந்தானா பித்தர்கள்? வெளியிலுள்ளவர்களில் எத்தனையோ பேர் உள்ளே இருக்க வேண்டியவர்களாயிற்றே!

குழந்தைகள் பிறக்கும்போதே மதச் சின்னத்தோடு பிறப்பதில்லை, ஜாதிகூட அவைகளுக்குக் கிடையாது. ஆறுமாதக் குழந்தைகளில் ஆயிரங் குழந்தைகளை வைத்து, எது எந்த ஜாதி, எந்த மதம் என்று பொறுக்கியெடுக்கச் சொன்னால் எப்பேர்ப்பட்ட மத குருவினாலும் கடவுள் பக்தனாலும் முடியாது! இந்த மாதிரிப் பிறக்கும் குழந்தைகள்தான் பிறகு வெறி ஏறி ஏறி, காந்தியாரையே சுட்டுக் கொல்கிற அளவுக்கு “ஸ்குரூ லூசாகி”ப் போகின்றன! மத சம்பந்தமான பெயர்! நெற்றிக்குறி! மயிர் வைப்பதிலும் எடுப்பதிலும் மாற்றம்! நீ தாழ்ந்தவன்! நான் உயர்ந்தவன் என்ற இறுமாப்பு! இத்தனையும்!

அதாவது மனிதன் வளர வளரப் பைத்தியமாகி விடுகிறான். ஆமாம்! அசல் பைத்தியந்தான்! ஆனால் பெயர் மட்டும் வேறு எதையோ சொல்லிக் கொள்கிறான்! பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் இருக்கும் நோயாளிகூடச் செய்யாத காரியங்களைச் செய்து விடுகிறான்! வடநாட்டில் நடந்த கொலை, சூறையாடுதல், தீ வைத்தல், கற்பழிப்பு ஆகியவைகளெல்லாம் பூகம்பம், இடி, வெள்ளம், கொள்ளை நோய் முதலிய இயற்கை நிகழ்ச்சிகளாலா ஏற்பட்டன? எல்லாம் மனிதனால் தானே? எந்த மனிதனால் தெரியுமா? பரம பக்தனாயிருக்கும் மனிதனால்தான்!

இந்தப் பித்து இந்த நாட்டைவிட்டுப் போகுமா? போகாதா? போக வேண்டுந்தான். ஆனால் எப்படிப் போகும்?

பித்தந் தெளிய மருந் தொன்றிருக்குது பேரின்ப மன்றுள்ளே! மற்று மருந்தகள் எத்தனை கொண்டாலும் பயன் இல்லை, இல்லை அய்யே! (மதப் பித்தம்)

மனித சமுதாயத்தைப் பிடித்திருக்கும் இந்தப் பித்தம் தெளிய வேண்டுமானால் ஒரே ஒரு மருந்துதான் உண்டு!

ஒருவன் மற்றவனைப் பார்த்ததும் அவன் இன்ன ஜாதி-இன்ன மதம்-என்று தெரியவே கூடாது.

எந்த மதத்தை, எந்த ஜாதியை, யார் திட்டினாலும் தூற்றினாலும், மனிதனாய்ப் பிறந்தவன் சட்டை செய்யக் கூடாது. புன்சிரிப்புடன் வரவேற்க வேண்டும்.

அதாவது, தான் இன்ன ஜாதி - இன்ன மதம் என்பதை அடியோடு மறந்தவன் எவனோ அவன்தான் பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்குச் செல்லத் தேவையில்லாதவன்.

அந்தமாதிரி ஒருவன்கூட இருக்க மாட்டானே, என்று கூறப்படுமே யானால் அப்போது “உலகமே ஒரு பைத்தியக்கார ஆஸ்பத்திரி” என்ற பெரியவர் வாக்கை மெய்ப்பித்தவர்கள் ஆக மாட்டோமா?

மனிதனால் முடியாதது ஒன்றுமேயில்லை என்கிறார்களே! அணுக்குண்டு மூலம் உலகத்தையே ஒரே நாளில் (பரமசிவனைப் போல!) அழித்துச் சாம்பலாக்க முடியும் என்கிறார்களே!

மனிதனுக்கு மனிதன் துவேஷ மூட்டும் மத வெறியையும் ஜாதி வெறியையும் அழிப்பதற்கு மட்டும் ஓர் அணுக்குண்டு அகப்படவில்லையா?

தேவை! உடனே தேவை! இவை இரண்டையும் நாசமாக்கும் அணுக்குண்டு ஒன்று உடனே தேவை!

- குத்தூசி குருசாமி (01-02-1949)

நன்றி: வாலாசா வல்லவன்