.
Covai agitation
நீதி நம் பக்கம் இருக்கும்போது, நாம் எப்படித் தோற்போம் என்று எனக்குப் புரியவில்லை. இந்தப் போராட்டம், எனக்கு மிகுந்த உற்சாகம் ஊட்டுவதாக இருக்கிறது. இந்தப் போராட்டம் முழுமையாக உளப்பூர்வமானது. அதில் துளி அளவும் சுயநலம் இல்லை. அது எந்த வகையிலும் விரக்தியூட்டக் கூடியதும் அல்ல. ஏனெனில், நமது போராட்டம் - சொத்துக்கானதோ, அதிகாரத்திற்கானதோ அன்று. நமது போராட்டம் விடுதலைக்கானது. இந்து சமூக அமைப்பினால் ஒடுக்கவும் சிதைக்கவும்பட்ட மனித மாண்பை மீட்டெடுப்பதற்கானப் போராட்டமே நம்முடையது. இப்போராட்டத்தில் இந்துக்கள் வென்று நாம் தோற்றால், மனித மாண்பு தொடர்ந்து ஒடுக்கவும் சிதைக்கவும் படும். உங்களுக்கான எனது இறுதி அறிவுரை இதுவே : கற்பி, போராடு, ஒன்றுசேர்.

- பாபாசாகேப் அம்பேத்கர்

கயர்லாஞ்சியில் சுரேகா நடத்திய போராட்டம், மனித மாண்பை மீட்டெடுப்பதற்கானதொரு போராட்டம்! ஆம். தானும் தன் குடும்பமும் மாண்புடனும் சுயமரியாதையுடனும் வாழ்வதற்காகவே அவர் இறுதி வரை போராடினார்.

மகாராட்டிர மாநிலத்தின் பண்டாரா மாவட்டத்தில் உள்ள சிறிய கிராமமான கயர்லாஞ்சியில் வாழ்ந்தவர் சுரேகா. ஆதிக்க சாதியினரை எதிர்த்து கேள்வி எழுப்பிய ஒரே காரணத்திற்காக சுரேகாவும், அவரது 19 வயது மகள் பிரியங்கா, 23 வயது மகன் ரோஷன், பார்வையற்ற 21 வயது மகன் சுதிர் ஆகிய நால்வரும், 29.9.2006 அன்று மிகக் கொடூரமான முறையில் கொல்லப்பட்டனர். ஆனால், செப்டம்பர் 30 அன்று பிரியங்காவின் உடல் கண்டெடுக்கப்பட்டது; அக்டோபர் 1 அன்றுதான் மற்றவர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் தலித் பவுத்த இயக்கங்களின் தொடர்ந்த போராட்டங்களுக்குப் பிறகு நவம்பர் 6, 7 நாட்களில்தான் காவல் துறையினர் 74 பேரை கைது செய்தனர்.

‘சுரேகா மற்றும் பிரியங்கா இருவரும் பாலியல் வன்புணர்வுக்கு ஆட்படவே இல்லை' என்ற அப்பட்டமான பொய்யை சொன்ன பண்டாரா மருத்துவமனை மருத்துவர் ராம்தேகே, இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இரண்டு முறை பிரேத பரிசோதனை செய்யப்பட்டும், இரண்டு முறையுமே பொய்யான அறிக்கையை கொடுத்திருந்தார் ராம்தேகே. மகாராட்டிர அரசின் சுகாதாரத் துறை, 5 மருத்துவர்கள் கொண்ட ஒரு குழுவை கயர்லாஞ்சிக்கு அனுப்பியது. நால்வரின் பிரேத பரிசோதனையும் முறையாக நடந்தனவா என்பதை அந்தக் குழு விசாரித்து அறிக்கை அளித்தது. அந்த அறிக்கையின் அடிப்படையிலேயே ராம்தேகே இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஒரு துணை உதவி ஆய்வாளர் இடைநீக்கமும், அய்ந்து காவலர்கள் பணி நீக்கமும் செய்யப்பட்டுள்ளனர். இருப்பினும், முக்கியக் குற்றவாளிகள் இன்னும் கைது செய்யப்படவில்லை.

படுகொலைகளை நேரடியாகப் பார்த்த சாட்சியான ராஜன், அப்பகுதி பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் மதுக்கர் குக்காடே தான் இதற்குப் பின்னணியில் உள்ள முக்கியக் குற்றவாளி எனக் குற்றம் சாட்டியுள்ளார். ஆனால், மதுக்கரோ, கயர்லாஞ்சி கிராமத் தலைவரோ, டிசம்பர் 1 வரை கைது செய்யப்படவில்லை. முக்கியக் குற்றவாளிகள் உடடினயாக கைது செய்யப்படாவிட்டால், நாக்பூர் விதான் சபா முன்பு தான் தீக்குளிக்கப் போவதாக கடந்த நவம்பர் 29 அன்று ராஜன் அறிவித்தார். ராஜனின் இந்த அறிவிப்பினையும், பய்யாலால் மத்திய உள்துறை அமைச்சரிடம் அளித்த புகாரினையும் தொடர்ந்து டிசம்பர் 1 அன்று, கிராமத் தலைவரும் துணைத் தலைவரும் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட கிராமத் தலைவரான உபாஸ்ரோன் கண்டாதே, ‘கயர்லாஞ்சி படுகொலைகள் குறித்து தகவல் வெளியிடும் யாருக்கும் அதே கதிதான் நேரும்' என கிராம மக்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார்.

கயர்லாஞ்சி படுகொலையை வெளிக் கொணர்ந்த தலித் இயக்கங்களும், மனித உரிமை அமைப்புகளும் சி.பி.அய். விசாரணையை கோரியுள்ளனர். தொடர் போராட்டங்களுக்குப் பிறகு டிசம்பர் 1 அன்று சி.பி.அய். விசாரணை பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளது. சென்ற இதழில் நாம் குறிப்பிட்டிருந்ததைப் போல, இத்தனைக் கொடூரத்திற்குப் பிறகும் சலனமற்று இருந்த ஊடகங்களும், சமூகமும், அரசும் மெதுவாக தங்கள் மவுனம் கலைக்கத் தொடங்கி இருக்கின்றன. மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிருந்தா காரத், கயர்லாஞ்சிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். தனது விசாரணையின் முடிவை பிரதமர் மன்மோகன் சிங்கிடம் எடுத்துரைத்தார். இதன் தொடர்ச்சியாக, மன்மோகன் சிங் கயர்லாஞ்சி படுகொலையை வெளிப்படையாகக் கண்டிக்கும் நிலை உருவானது.

குறிப்பாக, தமிழ் நாடு மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி, பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தியது. சென்னையில் 23.11.2006 அன்று ‘சேரிஸ்தான்' என்ற அமைப்பும், கோவையில் 20.11.2006 அன்று ஆதித்தமிழர் பேரவையும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தின. முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களோ, தலித் இயக்கத் தலைவர்களோ, கயர்லாஞ்சிக்கு செல்லாத நிலையில், மத்தியத் திட்டக் குழு உறுப்பினரான பால்சந்திர முங்கேக்கர், கயர்லாஞ்சிக்கு நேரடியாகச் சென்று உண்மைகளைக் கண்டறிய முனைந்திருப்பது, ஆறுதலாகவும் முன்னுதாரணமாகவும் அமைந்துள்ளது. பவுத்தரான அவர், நாட்டின் முக்கிய பொருளாதார நிபுணரும் ஆவார்.

‘‘புலே மற்றும் அம்பேத்கரின் மண்ணில் எப்படி இத்தகையதொரு கொடூரம் நடைபெற முடியும்? மகாராட்டிரத்தில் உள்ள ஒட்டுமொத்த அரசு எந்திரமும், தலித் தலைவர்களும் விமர்சனமற்ற ஒரு சுய திருப்தியோடு, செய்தவரைப் போதுமென அமைதியாகிவிட்டதுதான் பெரிய வேதனை. இதற்கு ஒரு காரணம், அம்பேத்கர் நிறுவிய குடியரசுக் கட்சியில் இருக்கும் எண்ணற்ற பிளவுகள் என்றபோதும் அனைத்திற்குமான அடிப்படைக் காரணம் ஜாதி எனும் பூதமே'' என்கிறார் அவர். ‘‘கயர்லாஞ்சி படுகொலை நாடு முழுவதிலும் தலித்துகள் மீது பிற்படுத்தப்பட்டவர்கள் தொடர்ந்து வன்முறை மோதல்களில் ஈடுபட்டிருப்பதைத் தான் காட்டுகிறது என்றால், பிற்படுத்தப்பட்டோர் அல்லாதவர்களுக்கு தலித்துகளுடன் மோதல்கள் இல்லையென்றா சொல்கிறீர்கள்? பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் தலித்துகளைப் போல, ஓர் அரசியல் இயக்கம் தேவை. பிற்படுத்தப்பட்டவர்கள் அம்பேத்கர் இயக்கத்தில் இணைய வேண்டும்'' என்கிறார் முங்கேக்கர் (‘தெகல்கா').

மகாராட்டிர மாநிலத்தில் கயர்லாஞ்சி படுகொலை பெரும் கொந்தளிப்பையே ஏற்படுத்தியுள்ளது. வேகமாகவும் நியாயமாகவும் விசாரணைகள் நடைபெற வேண்டி, தலித் மற்றும் பவுத்த இயக்கங்கள் மாநிலம் முழுவதும் பரவலாக தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். நாக்பூரில் நவம்பர் 14 அன்று நடைபெற்ற மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் காவல் துறை புகுந்து துப்பாக்கிச் சூடு நடத்தியது. அதில் தினேஷ் என்ற தலித் இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்நிகழ்வு மேலும் கொதிப்பையே ஏற்படுத்தியுள்ளது.

மும்பையை சேர்ந்த தலித் மனித உரிமை ஆர்வலர்கள், பெரும்பாலும் பெண்கள், மும்பை தலைமைச் செயலகத்தில் நுழைந்து கயர்லாஞ்சி படுகொலைக்கு நீதி கேட்டும் காவல் துறையையும் அரசையும் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பியுள்ளனர். கயர்லாஞ்சி கண்டனப் போராட்டங்கள் வெளிநாடுகளிலும் நடந்திருக்கின்றன. அமெரிக்காவில் அய்.நா. அலுவலகம் முன்பும், ஜெனிவாவிலும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. நவம்பர் 29 அன்று சைதன்ய பூமியிலிருந்து ஊர்வலமாகப் புறப்பட்ட 300 மனித உரிமை ஆர்வலர்கள் கைது செய்யப்பட்டனர். கயர்லாஞ்சி கண்டனப் போராட்டங்களில் தீவிரமாகப் பங்கேற்றதாக ஓஸ்மானாபாத்தைச் சேர்ந்த பவுத்த இளைஞர் ரங்கநாத் தாலேவார், சாதி வெறியர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார். கயர்லாஞ்சி படுகொலையைக் கண்டித்து பூனாவில் ஒரு பெண் தன்னைத்தானே எரியூட்டிக் கொண்டு, தனது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

முக்கியக் குற்றவாளிகளை இதுவரை கைது செய்யாத மகாராட்டிர மாநில அரசு, நீதி வேண்டி அற வழியில் போராடும் ஆயிரக்கணக்கான தலித் மற்றும் பவுத்த இயக்கத்தினரை நாள்தோறும் கைது செய்து வருகிறது; பொய் வழக்குகளைப் போடுகிறது. ஆஷீ சக்சேனா என்ற பெண், கயர்லாஞ்சி முதல் நாக்பூர் வரை நடைபயணம் மேற்கொள்ள காவல்துறையிடம் முறையாக அனுமதி கேட்டிருக்கிறார். ஆனால், அவர் நடைபயணம் தொடங்குவதாகத் திட்டமிட்டிருந்த நவம்பர் 14 ஆம் தேதிக்கும் முன்பே காவல் துறை அவரைக் கைது செய்தது. மேலும், அவர் மீது நக்சலைட் முத்திரையும் குத்தியிருக்கிறது. எதிர்ப்புப் போராட்டங்களை ஒருங்கிணைக்கும் பல இளைஞர்களும், தாங்களும் எந்நேரமும் இது போன்ற பொய் வழக்குகளில் கைது செய்யப்படலாம் என சந்தேகிக்கின்றனர்.

கயர்லாஞ்சி அங்கன்வாடி ஊழியரான பஞ்சஷீலா ஷென்டே, படுகொலைகள் நடந்த அன்று கதறல் குரல்களைக் கேட்டதாகக் கூறியுள்ளார். ஆனால், அவற்றில் பெண் குரல்கள் கேட்காததால் ஒருவேளை சுரேகா மற்றும் பிரியங்காவின் வாய்கள் கட்டப்பட்டிருக்கலாம் என்கிறார். ஒரு புறம் கிராமத்தினர், மறுபுறம் காவல் துறை. இவர்களின் அச்சுறுத்தலுக்கு நடுவே இன்று பஞ்சஷீலாவும் அவரது தம்பி துருவாசும் உயிருக்கு அஞ்சி வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். ‘‘இங்கு நிறைய காவலர்கள் இருக்கின்றனர். ஆனால், ஒருவரும் எங்கள் பாதுகாப்பிற்காக இல்லை'' என்கிறார்.

இதற்கிடையே, மும்பையை சேர்ந்த ஊடகங்களில் இருக்கும் பெண்களுக்கான அமைப்பு, நவம்பர் 24 அன்று பய்யாலாலை அழைத்து ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தியது. எழுத்தாளர் ஆனந்த் தெல்தும்டே, மூத்த ஊடகவியலாளர் ரக்ஷித் சோனாவானே ஆகியோரும் இப்பத்திரிகையாளர் சந்திப்பில் பங்கேற்றனர். ‘இந்து' நாளிதழில் கயர்லாஞ்சி குறித்து தொடர்ந்து எழுதி வரும் மீனா மேனன், இந்த சந்திப்பிற்கு ஏற்பாடு செய்திருந்தார்.

‘‘எனக்கு உங்கள் பணமோ, வேலையோ தேவையில்லை. நான் கேட்பதெல்லாம் நடந்த கொடுமைக்கு விரைவான நீதி'' என்று அந்தப் பத்திரிகையாளர் சந்திப்பில் பய்யாலால் தெரிவித்திருப்பது, அம்பேத்கர் கூறியதைப் போல, இந்தப் போராட்டம் சுயநலத்திற்கானப் போராட்டம் அல்ல என்பதை உறுதிப்படுத்துவதாகவே இருக்கிறது.

ஓர் அங்கன்வாடி ஊழியராக, கயர்லாஞ்சி கிராம மக்களுக்கு நடுவே வாழும் சூழலில் இருந்தபோதும், அவர்களுக்கு எதிராக சாட்சியம் சொன்ன பிறகும் தொடர்ந்து கயர்லாஞ்சியிலேயே வாழும் பஞ்சஷீலா ஷென்டே - குற்றவாளிகள் சமூகத்தில் எந்த உயரத்தில் இருந்தாலும் அவர்களை அடையாளம் காட்டுவதில் உறுதியோடு நின்று, அவர்களுக்கும் அவர்களுக்கு ஆதரவாக இருக்கும் அரசுக்கும் எதிராக தீக்குளிக்கவும் தயார் என அறிவித்த ராஜன் - ஊடகங்கள், அரசு அதிகாரிகள், காவல் துறையினர் ஆகியோரால் தொடர்ந்த மன அழுத்தங்களுக்கு ஆளான நிலையிலும், அரசு இழப்பீடாக அளிக்க முன் வந்த பல லட்சம் ரூபாய்களையும், அரசு வேலையையும் ஏற்றுக்கொள்ள மறுத்திருக்கும் பய்யாலால் - தன் குடும்பம் அச்சுறுத்தப்பட்டபோதும், தொல்லைகளுக்கு ஆளானபோதும், தன் குழந்தைகள் தன் கண் முன்பாகவே கொடூரமாகத் துன்புறுத்தப்பட்டு கொல்லப்பட்டபோதும், இறுதியாகத் தானே அந்த துன்புறுத்தல்களுக்கும் பலியாக நேர்ந்த அந்த இறுதி நொடிவரையிலும்கூட, தனது எதிர்ப்பையும் தன்மானப் போராட்டத்தையும் விடாது, மிகுந்த துணிச்சலுடன் அதை சந்தித்த சுரேகா -

இவர்கள் அனைவரும் பொருளாதார ரீதியாகவோ, சமூக ரீதியாகவோ எந்தவிதப் பாதுகாப்பும் அற்ற நிலையிலும் அவர்கள் வெளிப்படுத்தும் இந்தத் துணிவு, சாதி ஒழிப்புப் போரில் நாம் அதிக உறுதியுடன் முன் செல்ல ஊக்கம் அளிப்பதாகவே இருக்கிறது.

அம்பேத்கர் கூறியது போல, ஒவ்வொரு தலித்தின் போராட்டமும் எதிர்ப்புணர்வுக்கான, தன்மான மீட்புக்கானப் போராட்டமே. ஒவ்வொரு முறையும் ஒடுக்கப்பட்ட மக்கள் தங்கள் சுயமரியாதையை மீட்டெடுக்க எழும்போதெல்லாம், அதைக் காணப் பொறுக்காத ஆதிக்கவாதிகளால் என்றென்றும் மறக்க இயலாதவாறு மிகக் கொடூரமாக எச்சரிக்கப்படுகின்றனர். அதனையும் மீறி எழுந்து நிற்கும் மக்களுக்கு வழிகாட்டுவது அம்பேத்கரின் வார்த்தைகள் மட்டுமே-

‘‘நமது போராட்டம் விடுதலைக்கானது. உங்கள் மீது நம்பிக்கை இழக்காதீர்கள். நான் என்றும் உங்களுடன் இருப்பேன். ஏனெனில், நீங்கள் என்றும் என்னுடன் இருப்பீர்கள் என்பதை நான் அறிவேன்.''

 

Pin It