V
Budha

ஓர் இந்து துறவிக்கும் ஒரு பவுத்த பிக்குவுக்கும் - மாபெரும் வேறுபாடு உள்ளது. இந்து துறவிக்கும் இந்த உலகத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. உலகைப் பொறுத்தவரை, அவர் ஓர் இறந்துபோன மனிதர். ஆனால் ஒரு பிக்குவுக்கு எல்லாமே இந்த உலகம்தான். இந்நிலையில், பிக்கு சங்கத்தை புத்தர் என்ன நோக்கத்திற்காக நிறுவ நினைத்தார் என்ற கேள்வி எழுகிறது. பிக்குகளுக்கென தனியாக ஒரு சங்கம் உருவாக்க வேண்டிய தேவை என்ன? பவுத்த கொள்கைகளின் அடிப்படையில் ஒரு சங்கத்தை அமைத்து, சாதாரண மக்களுக்கு ஒரு முன்மாதிரியாகத் திகழ வேண்டும் என்பதே அதனுடைய நோக்கம்.

ஒரு சதாரண மனிதனால் பவுத்தக் கொள்கைகளைப் புரிந்து கொள்ள இயலாது என்பதை புத்தர் அறிந்திருந்தார். ஆனால், அதே நேரத்தில், ஒரு சாதாரண மனிதன் இக்கொள்கைகளை அறிந்து கொள்ள வேண்டும் என்றும் எண்ணினார். மேலும், புத்தரின் கொள்கைகளை நடைமுறைப்படுத்த ஒரு சங்கத்தையும் சாதாரண மக்கள் முன்பு முன்நிறுத்த எண்ணினார். அதனால்தான் அவர் ‘விநயா' விதிகளின்படி பிக்கு சங்கத்தை உருவாக்கினார். ஆனால், ஒரு சங்கத்தை நிறுவுவதற்கு வேறு சில நோக்கங்களும் இருந்தன. அதனுடைய ஒரு நோக்கம், அறிவாளிகள் அடங்கிய ஓர் அமைப்பை உருவாக்கி சாதாரண மக்களுக்கு உண்மையான, பாரபட்சமற்ற வழிகாட்டுதலை அளிப்பது.
பிக்குகள் சொத்துகள் வைத்திருக்கக் கூடாது என்று தடை போட்டதற்கான காரணம் அதுதான். சுதந்திரமாக சிந்திக்கவும், அவ்வாறு சிந்திக்க முனைவதற்கு மிகப்பெரிய தடையாக இருப்பதும் சொத்துகளே. பிக்கு சங்கத்தை நிறுவிய புத்தரின் மற்றொரு நோக்கம், சங்கத்து உறுப்பினர்கள் மக்களுக்கு எவ்விதக் கைமாறும் இன்றி தொண்டு செய்ய வேண்டும் என்பதுதான். அதனால்தான் பிக்குகள் திருமணம் செய்யக் கூடாது என்று கூறினார்.

இன்றைக்கு இருக்கின்ற பிக்கு சங்கம், இத்தகைய கொள்கைகளைக் கடைப்பிடிக்கின்றதா? இதற்கான பதில் எதிர்மறையாக இருக்கிறது. அது மக்களையும் வழிநடத்துவதில்லை; அவர்களுக்குத் தொண்டாற்றுவதும் இல்லை. எனவே, தற்போதைய நிலையில் பவுத்த சங்கம் பவுத்த கொள்கைகளைப் பரப்புவதில் பயன் இல்லை. முதலில், அளவுக்கதிகமான பிக்குகள் உள்ளனர். இதில் பெரும்பான்மையினர், சாதுக்களாகவும் சன்னியாசிகளாகவும் மட்டுமே இருந்து கொண்டு தங்கள் நேரத்தை தியானத்திலும் அல்லது ஒன்றும் செய்யாமலுமே கழிக்கின்றனர். அவர்கள் எதையும் கற்பதுமில்லை; அவர்களுக்குத் தொண்டு மனப்பான்மையும் இல்லை.

துன்புறும் மக்களுக்காகத் தொண்டு செய்வது பற்றிய சிந்தனை ஒருவருக்குத் தோன்றினால், அவர்கள் எல்லோருக்குமே ராமகிருஷ்ண மடம்தான் நினைவுக்கு வருகிறது. யாரும் பவுத்த சங்கத்தைப் பற்றி நினைப்பதில்லை. தொண்டை தங்களின் கடமையாக யார் கருத முடியும் - சங்கமா? மடமா? இதற்கான பதில் குறித்து யாருக்கும் சந்தேகம் இருக்க வேண்டியதில்லை. இருப்பினும், சங்கத்தில் வீணாக இருப்பவர்களே அதிகம் உள்ளனர். குறைந்த அளவு பிக்குகளே நமக்குத் தேவை. அதே நேரத்தில் அவர்கள் அதிகம் கற்றவர்களாகவும் இருக்க வேண்டும். பிக்கு சங்கம், கிறித்துவப் பாதிரியார்களிடமிருந்து குறிப்பாக ‘ஜெசுயிஸ்ட்' பாதிரியார்களிடமிருந்து சிலகூறுகளைக் கற்றுக் கொள்ள வேண்டும்.

ஆசியாவில் கிறித்துவம், கல்வி மற்றும் மருத்துவத் தொண்டின் மூலமே பரவியிருக்கிறது. இது எப்படி சாத்தியமாயிற்று எனில், கிறித்துவப் பாதிரியார்கள் வெறும் மதத் சடங்குகளில் மட்டுமே திறன் பெற்று விளங்கவில்லை; அவர்கள் கலை மற்றும் அறிவியலிலும் தேர்ந்து விளங்கினார்கள். ஆதிகாலத்தில் திகழ்ந்த பிக்குகளின் உண்மையான நோக்கம் இதுவாகத்தான் இருந்தது. நாலந்தா மற்றும் தட்சசீலப் பல்கலைக் கழகங்களை பிக்குகள்தான் நிர்வகித்து நடத்தி வந்தனர் என்பது அனைவரும் அறிந்ததே. அவர்கள் கல்விமான்களாக இருந்தார்கள். தங்களின் நம்பிக்கைகளை சமூகத் தொண்டின் மூலமே பரப்ப முடியும் என்பதை அவர்கள் அறிந்திருந்தனர். இன்று பிக்குகளும் பழைய கொள்கை நிலைக்குத் திரும்ப வேண்டும்.

தற்பொழுதுள்ள சங்கம் எளிய மனிதனுக்கு தொண்டாற்ற முடியாது. அந்த வகையில் மக்களைத் தங்கள் பால் ஈர்க்கவும் முடியாது. தொண்டறமின்றி பவுத்தத்தைப் பரப்ப இயலாது. கல்வி எவ்வாறு அளிக்கப்பட வேண்டுமோ, அதே போல் மதப் பிரச்சாரமும் மேற்கொள்ளப்பட வேண்டும். மனித ஆற்றலும் பணமும் இன்றி பிரச்சாரத்தை மேற்கொள்ள முடியாது. இதை யார் தர முடியும்? பவுத்தம் எந்தெந்த நாடுகளில் ஒரு வாழும் மதமாக இருக்கிறதோ, அவர்கள்தான் கண்டிப்பாக இதைச் செய்ய முடியும். குறைந்தது தொடக்க காலங்களிலாவது, இத்தகைய நாடுகள்தான் மனித ஆற்றலையும் பணத்தையும் தர வேண்டியிருக்கும். அதை அவை செய்யுமா? பவுத்தத்தைப் பரப்புவதில் இத்தகைய நாடுகள் அதிகளவு ஆர்வம் காட்டுவதாகத் தெரியவில்லை.

மற்றொரு புறத்தில், பவுத்தத்தைப் பரப்புவதற்கான ஒளிமயமான தருணம் நிலவுகிறது. மதம் ஒருவருடைய உளத் தேவைகளுக்கான ஒன்றாக ஒரு காலத்தில் விளங்கியது. ஒரு காலத்தில், ஒரு சிறுவனோ, பெண்ணோ, தங்கள் பெற்றோர்களின் மதத்தை அவர்களுடைய சொத்துகளை வாரிசு முறையில் பெற்றுக் கொள்வதைப் போல பெற்றுக் கொண்டனர். அந்த மதத்தின் தகுதியையோ, ஆற்றலையோ சீர்தூக்கிப் பார்ப்பதற்கான கேள்வியே எழவில்லை. சில நேரங்களில், பெற்றோர்களின் சொத்து மதிப்பு போதுமானதா என்றுகூட கேள்விகள் எழுப்பப்பட்டன. ஆனால், தங்களுடைய பெற்றோரின் மதம் மதிப்புமிக்கதா என்று கேட்க, எந்த வாரிசும் தயாராக இல்லை.

தற்பொழுது காலம் மாறிவிட்டது. உலகெங்கும் உள்ள பலர் தங்களுடைய மதத்தைத் தீர்மானிக்க, சில துணிவான முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். பலர் அறிவியல் கண்டுபிடிப்புகள் மூலம், மதம் பிழையுடையது எனவே அதைக் கைவிட வேண்டும் என்ற முடிவுக்கு வந்தனர். மற்றும் சிலர், மார்க்சிய கொள்கைகளின் அடிப்படையில், மதம் ஒரு போதை; அது பணக்காரர்களின் ஆதிக்கத்திற்கு ஏழைகளை இரையாக்குகிறது. எனவே, மதத்தை விட்டொழிக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தனர். என்ன காரணமாக இருப்பினும், மதத்தைப் பொறுத்தவரை, மக்கள் கேள்வி கேட்கத் தொடங்கியுள்ளனர்.

இந்த மதப் பிரச்சினை குறித்து சிந்திக்க முற்பட்டவர்கள், மதத்தை ஏற்பது தேவையானதா? ஆம் எனில், எந்த மதத்தை ஏற்பது என்ற கேள்விதான் அதிகளவு முக்கியத்துவம் பெற்றதாக இருக்கின்றது. அதற்கான தருணம் வந்துவிட்டது. நமக்குத் தேவை உறுதியான சிந்தனையே. பவுத்த நாடுகள் பவுத்தத்தைப் பரப்ப உறுதி ஏற்றால், அதில் சிரமம் இருக்காது. ஒரு பவுத்தனின் கடமை, ஒரு நல்ல பவுத்தராக இருப்பது அல்ல என்பதை அவர்கள் உணர வேண்டும். ஒரு நல்ல பவுத்தனின் கடமை, அதைப் பரப்புவதே. பவுத்தத்தைப் பரப்புவது என்பது, மனித இனத்திற்குத் தொண்டாற்றுவதே என்பதை அவர்கள் உணர வேண்டும்.

தமிழில் : புலேந்திரன்

- வளரும்
1950 ஆண்டு ‘மகாபோதி' இதழில் அம்பேத்கர் எழுதிய கட்டுரை. டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு : 17 பகுதி 2 : பக். 97108
Pin It