லார்ட் வில்லிங்டன் பிரபு சென்ற மாதம் செம்ஸ்போர்ட் கிளப்பில் பேசியபோது இந்தியர்களுக்கு ஒரு எச்சரிக்கை செய்திருக்கிறார். அஃதென்னவென்றால்,

periyar 352“நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு நான் இருக்கிறேனே யொழிய ராஜியைக் காப்பாற்ற நான் (இங்கு வர) இல்லை” என்று பேசியிருக்கிறார். ஆகவே, சமாதானப் பங்கமேற்படும் என்று நான் அறிந்தேனே யானால் ராஜியைப்பற்றி சிறிதும் கவலைப்படாமல் சமாதானத்திற்காக எந்த முறையையும் அனுசரிக்க வேண்டி வரும்” என்று சூசனை காட்டி இருக்கிறார்.

அதோடு ராஜி விஷயத்தைப் பற்றியும் பேசும்போது காங்கிரசுக்காரர்கள் “ராஜியை ஒரு சமாதான அறிகுறியென்று கருதாமல் அடுத்த யுத்தத்திற்கு தயார் ஆவதற்கு ஏற்படுத்திக் கொண்ட சௌகரியமே என்பதாக காந்தி - இர்வின் ஒப்பந்தத்திற்கு வியாக்கியானம் கூறுகின்றார்கள்” என்றும், “இரண்டு பெரிய மனிதர்கள் என்பவர்கள் செய்து கொண்ட ஒப்பந்தம், அதாவது காந்தியும் - இர்வினும் செய்து கொண்ட ராஜி என்பதற்கு இந்த மாதிரி பொருள் கொள்வது சிறிதும் யோக்கியமான காரியமென்று நான் கருதவில்லை என்று தாராளமாய்ச் சொல்லுகிறேன்” என்றும் சொல்லி இருக்கிறார்.

இவ்வளவும் போறாமல் அவர் பேசியிருக்கும் மற்றொரு விஷயம் என்னவென்றால் திரு காந்தியவர்கள் தான் அரசாங்கத்தோடு ராஜி ஆவது என்னும் பேரால் எந்த நிபந்தனைக் கேட்டு முடியாமல் போயிற்றோ, அதாவது எந்தப் போலீஸ்காரர்களின் நடவடிக்கைகளை விசாரிக்க வேண்டும் என்று கேட்டாரோ அந்தப் போலீசுகாரர்களையே லார்ட் வில்லிங்டன் நன்றாய்ப் பாராட்டிப் பேசி இருப்பதுடன் அவர்கள் செய்த காரியங்கள் எல்லாம் மிகவும் சரியான காரியமென்றும் சொல்லி அவர்களைப் போற்றிப் புகழ்ந்து இருக்கிறார். அதோடு, இராணுவ சிப்பாய்களையும் போற்றி இருக்கின்றார்.

இதன் கருத்து “முன் எந்தப் போலீசாரின் அடிக்குப் பயந்து ராஜி செய்து கொள்ள வேண்டியதாயிற்றோ, அந்தப் போலீசும் மேல் கொண்டு இராணுவமும் இன்னமும் இருக்கின்றது”என்று சூசனை காட்டுவதேயாகும்.

இதன் யோக்கியதையும், உண்மையும் எப்படி இருந்த போதிலும் ராஜியின் நாணையம் எப்படி இருக்கின்றதென்பதையும் சர்க்காராரும் காங்கிரசும் ராஜியைக் காப்பாற்றுவதில் எவ்வளவு நாணையமாய் நடந்து கொள்ளுகின்றார்கள் என்பதையும், இந்த ராஜியின் பயனாய் இந்திய மக்களின் சுயமரியாதை எவ்வளவு என்பதை உலக மக்கள் அறிய ஒரு சந்தர்ப்பமும் ஏற்பட்டு விட்டது என்பது புலனாகும்.

கள்ளுக் கடை மறியலின் தத்துவத்தையும் இதில் சேர்த்துக் கொண்டால் நாணையத்தின் யோக்கியதை நன்றாய் விளங்கும்.

குடி அரசு - துணைத் தலையங்கம் - 05.07.1931