bharathidasan periyarஉயர்திரு. சத்தியமூர்த்தி அய்யர் தென் இந்தியாவிலுள்ள பார்ப்பன அரசியல்வாதிகளை எல்லாம் விட மிகவும் நல்லவர் என்றே சொல்லுவோம் - அவருக்கு சூது வஞ்சகம் ஆகிய காரியங்கள் அவ்வளவு அதிகமாய் அதாவது பிறத்தியார் கண்டுபிடிக்க முடியாதபடி செய்தவற்குத் தகுந்த அளவு தெரியாது என்றே சொல்லுவோம். ஆதலால் இப்படிப்பட்டவர்களால் பார்ப்பனரல்லாதாருக்கு அதிகமான கெடுதி ஒன்றும் செய்துவிட முடியாது. அந்த முறையிலேயேதான் அவரை நல்லவர் என்று சொல்லுகின்றோம். அவருடைய பொதுநல சேவையின் ஆரம்பமானது மிகவும் பரிசுத்தமாகவே ஆரம்பிக்கப்பட்டது என்பதே நமது அபிப்ராயம். ஆனால் பிறகு அவரை அய்யங்கார் கூட்டப் பார்ப்பனர்கள் அய்யர் கூட்டப் பார்ப்பனர்களுக்கு விரோதமாய் உபயோகித்துக் கொள்ள நினைத்து திரு.சத்தியமூர்த்தியை மிகவும் தூக்கி வைத்துக் கெடுத்து விட்டார்கள். அவரும் இந்த அய்யங்கார் கூட்டத்தையும் அவர்களது அரசியலையுமே நம்பி தன்னைப் பற்றி அதிகக் கவலை எடுத்துக் கொள்ளாமல் போய் விட்டதினாலும் தனக்கு என்று ஒரு கொள்கையை பிடித்து வைத்துக் கொள்ளாமல் போனதினாலும் கிரமப்படி அவருக்கு இருந்திருக்க வேண்டிய மதிப்பு இல்லாமல் போய் விட்டது.

அவர் மிதவாதக் கூட்டத்திற்குள் இருந்திருப்பாரானால் இன்றைய தினம் அவரது சொந்த நிலை வேராகவே இருந்திருக்கும். திருவாளர்கள் கஸ்தூரி ரங்கய்யங்கார், எ.ரங்கசாமி அய்யங்கார், எஸ். ஸ்ரீனிவாசய்யங்கார் முதலிய அய்யங்கார்கள் தங்களது தகுதிக்குமேல் பெரிய மனிதர்களாவதற்கு திரு. சத்தியமூர்த்தி அய்யர் எவ்வளவோ காரணஸ்தராவார் என்பது நமக்கு தெரியும். அக்கூட்டம் இவருக்கு சிறிதும் நன்றியும் விசுவாசமும் காட்டாமல் போனது பெரிய குற்றமேயாகும். ஆனால் அரசியலில் பெரிய மனிதர்கள் என்பவர்களுக்கு நன்றியற்ற தன்மை இயற்கையேயாகும்.

நிற்க, திரு. சத்தியமூர்த்தி அய்யர் சமீபத்தில் சொன்ன ஒரு விஷயத்தில் அர்த்தம் இல்லாமல் இல்லை. அதாவது ‘தென்னாட்டில் உள்ள பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் சண்டை காரணமாக வட நாட்டில் உள்ள மூன்றாந்தர ஆசாமிகள் எல்லாம் பெரிய தலைவர்கள் ஆகி விடுகின்றார்கள்’ என்று சொன்னது அர்த்தமற்றதும் பொறாமையுடையதுமான வார்த்தை என்று நாம் ஒப்புக்கொள்ள முடியாது. வடநாட்டில் இருந்து தென்னாட்டுக்கு அழைத்து வரும் தலைவர்கள் எல்லோரும் தென்னாட்டு அரசியல்வாதிகள் விளம்பரம் செய்யும் அளவுக்கு - மரியாதை செய்துவரும் அளவுக்கு தகுதியுடையவர்கள் என்று சொல்ல முடியாதென்பதே நமது அபிப்பிராயமுமாகும். ஆனால் தென்னாட்டில் உள்ள பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் சண்டையும் காங்கிரசுக்கு விரோதமாக தென்னாட்டில் இருந்து வரும் உணர்ச்சியும் அதனால் தென்னாட்டில் உள்ள பார்ப்பனர் எவருக்கும் பார்ப்பனரல்லாத அரசியல்வாதிகளுக்கும் மரியாதை இல்லாமல் போன காரணமுமே வடநாட்டு ஆசாமிகளுக்கு தென்னாட்டில் பூரண கும்பம் எடுத்தாக வேண்டிய நிலையை கொண்டு வந்து விட்டுவிட்டது.

உண்மையைப் பேசப் போனால் திரு. காந்திக் கும் கூட இவ்வளவு மரியாதை ஏற்பட்டதற்கு காரணமும் தென்னாட்டில் பார்ப்பனர், பார்ப்பனரல்லாதார் சண்டையே தவிர வேரல்ல. எப்படியெனில் தென்னாட்டு பார்ப்பனரல்லாதார் தலையில் கையை வைக்க திரு. காந்தியை மகாத்மா ஆக்க வேண்டிய நிர்பந்தம் நமது பார்ப்பனருக்கு ஏற்பட்டு விட்டது. தென்னாட்டுப் பார்ப்பனர்கள் மாத்திரம் சாதாரணமாக தீண்டாமை என்னும் விஷயத்தில் உண்மையில் (சூது புரட்டு இல்லாமல்) மனப்பூர்வமாய் விட்டுக் கொடுத்திருப்பார்களேயேனால் திரு. காந்தியை விட பெரிய யோக்கியதையை உடையவர்களாக ஆவதற்கு பலர் இந்நாட்டுப் பார்ப்பனரிலும் இருக்கின்றார்கள் என்பது நமக்குத் தெரியும். என்ன செய்வது அவர்கள் நிலைமை அப்படி ஏற்பட்டு விட்டதால் அவர்களுக்கு இருக்க வேண்டிய கிரமமான மரியாதை இல்லாமல் போய்விட்டதுடன் மரியாதைக்கு லாயக்கில்லாதவர்களுக்கும் இவர்கள் மரியாதை செய்ய வேண்டியவர்களாகி விட்டார்கள்.

நமது நாட்டுப் பார்ப்பனர்களில் கல்வி, செல்வம், சக்தி முதலிய குணங்கள் படைத்தவர்கள் பலர் இருந்தும் அவர்களுக்குள் ஒருவருக்காவது தேசத்தைப் பற்றியோ மக்களைப் பற்றியோ உண்மையாய் கவனிக்க முடியாமல் தங்கள் உயர்வை நிலைநிறுத்திக் கொள்வதற்கே பாடுபட வேண்டிய கவலையை முக்கியமாய்க் கொள்ள வேண்டிய நிலைமை ஏற்பட்டு விட்டதால் அவர்களது மற்ற பெருமை பிரகாசிக்க இடமில்லாமல் போய் விட்டது. மற்றும் பார்ப்பனரல்லாதார்களுக்குள்ளும் எத்தனையோ பட்டேல்களுக்கும் எத்தனை டஜன்கணக்கான சென்குப்தாக்களுக்கும், நரிமேன்களுக்கும் சமமான தனிமனிதர்கள் எத்தனையோ பேர்கள் அரசியலிலேயே இருக்கின்றார்கள். ஆனால் அவர்கள் தலையெடுக்கக் கூடாது என்பதாக பார்ப்பனர்களே சூஷி செய்து வந்ததால் வெளிநாட்டு வேஷக்காரர்களுக்கு நமது நாட்டில் மதிப்பு ஏற்பட வேண்டியது அவசியமாகி விட்டது. அதிகம் பேசுவானேன் வெள்ளைக்கார ராஜியம் இந்தியாவில் இருப்பதற்கு என்ன காரணமோ அதே காரணம்தான் வெளிமாகாணகாரர்கள் நமது மாகாணத்தில் மகாத்மாக்களாவதற்கும் மற்றும் பெரிய தலைவர்கள் தேசபக்தர்கள் முதலாகியவர்கள் ஆவதற்கும் காரணமாகி இருக்கின்றது.

நியாயமாய் பேசுவோமானால் தென்னாட்டுப் பார்ப்பனரல்லாதார் என்ன காரியத்திற்காக திரு. காந்தியை மகாத்மா என்று கூப்பிட வேண்டும் என்பதே நமக்கு விளங்கவில்லை.

திரு. காந்தியின் அரசியல் அபிப்பிராயமாகட்டும், சமுதாய அபிப்பிராயமாகட்டும், ஏழைத் தொழிலாளிகளைப் பற்றிய அபிப்பிராயமாகட்டும், மற்றும் அவரது பகுத்தறிவு, நிலையான கொள்கை முதலியவைகளைப் பற்றிய அபிப்பிராயமாகட்டும் ஏதாவது ஒன்று இந்த நாட்டு பார்ப்பனரல்லாத மக்களில் யாராவது ஒருவர் ஒப்புக் கொள்ளத் தக்கதாக இருக்கின்றதா - யாராவது ஒப்புக் கொள்ளுகின்றார்களா? என்று கேட்கின்றோம்.

அரசியல் உலகில் அரசியல் பிரசாரத்தை தொழிலாக கொண்டவர்களும் அரசியல் பத்திரிகையை நடத்துவதை தொழிலாக கொண்டவர்களும் அரசியலின் பேரால் பெரிய பதவி பட்டம் பெற்று பெரிய மனிதர் ஆனவர்களும் ஆக வேண்டி எதிர்பார்த்துக் கொண்டிருப்பவர்களும் ஆகிய கூட்டத்தில் உள்ள பார்ப்பனரல்லாதார்களில் ஏதாவது ஒருவர் திரு. காந்தியின் கொள்கைகளை உண்மையில் ஒப்புக் கொள்ளுகின்றார்களா என்று கேட்கின்றோம். ஆனால் இங்கு ஒருவருக்கு ஒருவர் ஏற்பட்ட பொறாமை, அசூயை, பேராசை, போட்டி ஆகிய காரியங்களால் திரு. காந்தி மகாத்மாவாகவும் மற்ற மூன்றாந்தர ஆள்கள் பூரண கும்பமெடுக்க வேண்டிய தலைவர்களாகவும் விளங்க வேண்டியவர்களாகி விட்டார்கள். அதுபோலவேதான் இனியும் அநேக காரியங்கள் நடைபெறுகின்றன.

இவை நடக்காமல் இருக்க வேண்டுமானால் அதற்குத் தகுந்த வழி திரு. சத்தியமூர்த்தி அய்யருக்கு இல்லாமலில்லை. அதென்னவென்றால் அரசியல் புரட்டை தாராளமாய் வெளியாக்க வேண்டும். எப்படியாவது தங்கள் சமூக ஆதிக்கம் நிலைத்திருந்தால் போதும் என்கின்ற எண்ணத்தை விட்டுவிட வேண்டும். ஜாதி வித்தியாசத்தையும் தீண்டாமையையும் ஒழிப்பது தான் நமது முக்கிய வேலை என்றும் அதுவேதான் இந்த நாட்டில் இருந்து வெள்ளைக்கார ஆதிக்கத்தை ஒழிக்கும் வேலை என்றும் கருத வேண்டும். இந்த ஒரு காரியம் ஒப்புக்கொண்டால் மற்ற காரியத்தில் எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் விட்டுக்கொடுத்து ராஜிசெய்து கொண்டு எல்லோருமே ஒத்துழைக்க ஏற்பாடு செய்ய முடியும். இந்தக் காரியத்தில் திரு. சத்தியமூர்த்தி போன்றவர்கள் இரங்கி வேலை செய்தால் அவர் வடநாட்டுத் தலைவர்களுக்கு மேலானவர் என்பதாக ஆவார் என்பது மாத்திரமல்லாமல் தென்னாட்டிற்கும் ஒரு மாபெருந் தலைவராய் விளங்கக் கூடியவராவார் என்கின்ற நம்பிக்கை நமக்கு உண்டு.

(குடி அரசு - துணைத்தலையங்கம் - 24.05.1931)