பண்டித மோதிலால் நேரு அவர்கள் இந்தியாவில் கீர்த்தி பெற்ற மனிதருள் ஒருவராவர். அதோடு பெருந்தியாகிகளுள் ஒருவராவர். அவர் ஐக்கிய மாகாணத்தில் ஒரு பேர் பெற்ற வக்கீலாயிருந்தவர். கல்கத்தாவுக்கு திரு. தாஸ் போலவும், பம்பாயிக்கு திரு. ஜெயக்கர் போலவும், மத்திய மாகாணத்திற்கு திரு.சாப்ரு போலவும், சென்னை மாகாணத்திற்கு திரு. சீனிவாச ஐயங்கார் போலவும், பெரும் பெரும் வரும்படியுள்ள வக்கீலாகவும் வக்கீல் தொழிலில் கெட்டிக்காரர் என்று பிரமாதிக்கும்படியாகவும் வாழ்க்கையில் எல்லோரைப் பார்க்கிலும் பெருமையாகவும் வாழ்ந்து வந்தவர். அவரது வீடும் வாழ்க்கைத் திட்டமும் அரண்மனை போலவே இருக்கும்.

Motilal Nehruஇந்திய பொதுவாழ்க்கையை என்றைய தினம் படித்தவர்கள் மூலமும் படித்தவர்களுக்குள்ளாகவுமே ஆரம்பிக்கப்பட்டதோ அன்று முதலே வக்கீல்களே பொது வாழ்வில் இறங்கி வேலை செய்யும் கீர்த்தி பெறவும் முடிந்து வந்தது. அந்த முறையில்தான் திரு. திலகர் முதல் திரு. சத்தியமூர்த்தி ஈராக அநேகர் அநேகமாக பொது வாழ்க்கையில் பிரசித்தி பெற்றவர்களாக நேர்ந்தது.

திரு. காந்தியவர்களும் இந்த முறையிலேயே பொதுவாழ்வுக்கு வர வேண்டியவரானாலும் அவர் பிரவேசித்த காலம் முதல்தான் அதற்கு முன் இருந்தது போன்ற அதாவது பொதுவாழ்வுப் பிரவேசம் சுயநல வாழ்வுக்குப் படிக்கட்டாயிருந்து வந்தது மாறி சிறிதாவது தியாகம் செய்து தன்னலத்தை மறுத்த பிறகேதான் பொது வாழ்வில் மக்கள் பிரவேசிக்க கூடியதாக மாறி விட்டதால் பொது வாழ்வுக்கு ஒரு கௌரவம் ஏற்பட்டு மக்களால் மரியாதை செய்ய வேண்டியதாயிற்று. அந்த நிலை நாட்டில் செல்வாக்குப் பெறவும் பொதுவாழ்க்கையை மதிக்கப்படவும் ஏற்பட்ட சம்பவங்களுக்கு திரு. காந்தியே முதன்மையான காரணஸ்தர் என்றாலும், தேசபந்து தாசும், பண்டித நேருவும் அதற்கு உயிர் கொடுத்தவர்களாவார்கள்.

தங்களுடைய அரச போகத்தையும், செல்வ வரும்படியையும் ஒரே அடியில் துறந்து வெளி வந்தவர்களில் இவ்விரு கனவான்களும் முதன்மையானவர்கள். ஆனால் தேசபந்துவை விட பண்டிதரின் தியாகம் சற்று மேம்பட்டதாகும். ஏனெனில் தேசபந்துவுக்குப் பெரும் வரும்படியும் உயர்ந்த போகமும், பண்டிதருக்கு இளைக்காததாக இருந்தாலும் தேசபந்துவுக்கு பணலக்ஷியமற்ற தன்மையும் எந்த நிலையையும் சரிப்படுத்திக் கொள்ளும் தன்மையும் ஏற்கனவே கொஞ்சம் இருந்து வந்ததால் அவரது தியாகமானது அவருக்கு அவ்வளவு கஷ்டத்தைக் கொடுக்கக் கூடியதாய்த் தோன்றுவதற்கில்லாமல் இருந்தது எனலாம். ஆனால் பண்டிதரின் தியாகமானது அந்த நிலைமைக்கு முன் சிறிதும் நினைத்திருக்காத மாதிரியில் ஒரு பெரிய அரசனை “வானப்பிரஸ்த ஆக்ஷிமத்தைக்”கைக்கொள்வதற்காக குடி படைகளோடு ஊர்வலத்துடன் வனத்தில் கொண்டு போய் விட்டு விட்டு வந்தால் அடுத்த நிமிஷம் அவனுக்கு எப்படியிருக்குமோ அதுபோல திடீரென மாறினவராவார்.

கஷ்டமறியாதவர் உலக இயற்கை தெரியாதவர். உலகமே தன்னைப்போல் செல்வமாகவும், போக போக்கியமாகவும் இருப்பதாகக் கருதியிருந்தவர், திடீரென்று சன்யாசியானார். குடும்பத்தோடு சன்யாசியானார். நாளை சாப்பாட்டுக்கு என் செய்வது என்ற விசாரமில்லாமல் உள்ளதை யெல்லாமிறைத்தார். சில சமயத்தில் நாளைச் சாப்பாட்டுச் செலவுக்கு வழி தேடுவது என்பது ஒரு பெரிய சிக்கலான பிரசினையாக இருந்ததுகூட நமக்குத் தெரியும். அவருக்கு மற்றவர்களைக் கேட்கவும் தெரியாது. யாராவது கொடுத்தால் அதை வாங்குவதும் பெரிய அவமானமென்றும் கருதுவார்.

இப்படிப்பட்ட பெருமானுக்கு இந்தப் பாக்கியங்கள் கிடைத்ததானது அவரது முயற்சியைக் காட்டிலும் அவரது ஒரே குமாரரான திரு. ஜவர்லாலுவின் முயற்சியே அதிகமானது என்று சொல்லுவது முழுதும் தவறுதலாகாது. அதாவது, அவரது குடும்பமே அந்த நிலையை அடைவதில் சிறிதும் தயங்கவில்லை என்பதாகும். பண்டிதர் திரு. காந்தியின் பழைய கொள்கைகளில் முழுகொள்கைகளையும் ஒப்புக்கொள்ள முடியாதவராயிருந்தாலும் திரு. காந்திக்கு ஆதியில் சிறிதும் இடையூறு செய்யாதவராகவே இருந்தார். இதன் பயனாகவே திரு. காந்தியும் தனது வசத்திற்கு இழுக்கப்பட்டார். இந்த நிலையே அவருக்கு இந்திய அரசியல் வாழ்வில் திரு. காந்திக்கு அடுத்த ஸ்தானம் கிடைக்கச் செய்தது. இதனினும் விசேஷமென்னவென்றால் இதற்கு அடுத்த ஸ்தானமும் திரு. ஜவார்லால் அவர்களுக்கே கிடைத்திருப்பதாகும். ஆகவே இன்று உலகமுறையில் ஒரு பெருமை வாய்ந்த, தியாகம் வாய்ந்த, கீர்த்தி வாய்ந்த பெரியார் திரு. பண்டித மோதிலால் நேரு என்பதில் யாருக்கும் ஆட்சேபணை இருக்காது.

மனிதர்களுக்கு வரும் பெருமையும், மேன்மையும், கீர்த்தியும் எல்லாம் அவரவர்களது கொள்கைகளினாலேயே தான் ஏற்படக்கூடியது என்று சொல்லிவிட முடியாது. மற்றபடி தியாகமும், சுயநலமின்மையுமே கொள்கை வித்தியாசத்தையும் மறைத்துவிடும். ஆகவே அந்த குணம் இந்தியாவியில் தேசபந்துவுக்கும் நமது பண்டிதருக்கும் கிடைத்தது. பண்டிதர் 70 வது வயதில் முடிவெய்தியது அற்ப ஆயுள் என்றோ, குறைந்த ஆயுள் என்றோ சொல்லிவிட முடியாது. ஆனாலும் பொது வாழ்வுக்கு தியாகம் வேண்டும் என்ற ஒரு உணர்ச்சிக்கு அறிகுறியாய் இருந்த பெரியார் தன் ஸ்தானத்திற்கு ஒருவர் ஏற்படும் முன் முடிவெய்தினது மிகவும் வருந்தத்தக்கதே யாகும்.

இந்திய சராசரி வயது 23, இங்கிலாந்து சராசரி வயது 46. பண்டிதர் அவர்கள் இரண்டு சராசரி வயதையும் எப்படி தாண்டிவிட்டாரோ அதுபோலவே இந்தியாவிலும் மற்றும் உலகத்திலும் உள்ள சராசரி மக்களின் தன்மையில் இருந்து எத்தனையோ பங்கு மீறினவர் என்பதில் ஆட்சேபணையில்லை. ஆகவே அவர் முடிவெய்தும் போது எவ்வித குறைவுமில்லாமல் தனது முயற்சியின் - லக்ஷியத்தின் பயனை ஒருவாறு எய்தினார் என்றே சொல்லக்கூடும்.

ஒரு சமயம் கொஞ்சம் நஞ்சம் மீதி இருப்பதாக அவர் கருதி இருந்தாலும் அதைப் பற்றி சிறிதும் கவலைப்படாமலே தான் தனது கடைசி மூச்சையும் விட்டு இருப்பார் என்பது நமது உறுதி. ஏன் எனில் அவரது அருமைப் புதல்வர் திரு. ஜவர்லால் நேரு தந்தையின் பாக்கி வேலையையும் அதற்கு மேற்பட்ட புதிய வேலைகள் பலதையும் செய்து முடிப்பார் என்பதில் தந்தைக்கு சிறிதும் சந்தேகமிருந்திருக்காது என்பதுதான். ஆகவே அது போலவே பெரிய நேரு மறைந்தபோது அவர் நமக்கும் எவ்வித குறைவையும் வைத்து விட்டுப்போகவில்லை. எப்படி எனில் சின்ன நேரு இருக்கின்றார். அவரால் தந்தையின் ஸ்தானம் அடையப்பட்டு தந்தையின் பாக்கி வேலைகள் ஏதாவது இருந்தாலும் அவை நடத்தி வைக்கப்பட்டு அதைவிட முக்கியமான உண்மை விடுதலையாகிய சமதர்ம வேலைகளையும் நடத்திக் கொடுக்க வல்லவரான ஒரு அருங்குழந்தையை நமக்கு அளித்திருப்பதால் இதைக் கொண்டு நாம் சாந்தியடைவோமாக.

(குடி அரசு - துணைத் தலையங்கம் - 15.02.1931)