தலைவரவர்களே! நண்பர்களே!! மேல்நாட்டின் ஜோதியும், கீழ் நாட்டின் பீதியும் என்னும் விஷயமாய் இன்று மறுபடியும் நான் பேச வேண்டுமென்று குறிப்பிட்டிருக்கிறீர்கள். இந்த தலைப்பைக் குறிப்பிட்டவர்கள் என்ன கருத்தைக் கொண்டு - நான் இத்தலைப்பில் என்ன பேசவேண்டுமென்று கருதி ஏற்பாடு செய்தார்களென்பது எனக்குத் தெரியாது. ஒருசமயம் மேல் நாட்டின் பெருமையையும் கீழ்நாட்டின் சிறுமையையும் பற்றி நான் பேச வேண்டுமென்று கருதினார்களோ என்னமோ தெரியவில்லை. ஆன போதிலும் இந்தத் தலைப்பை நான் காலையில் பார்த்தவுடன் சில விஷயங்கள் சொல்லலாமென்பதாகக் கருதி சில குறிப்பு வைத்திருந்தேன். ஆனால் இப்போது எனக்கு முன் பேசிய மன்னார்குடி ஜனாப் யூசுப் பாவலர் அவர்கள் சமாதி வணக்கம், கொடி, பஞ்சா முதலிய உற்சவங்கள் இஸ்லாமார்க்க ஆதாரங்களில் கிடையாதென்றும், அவையெல்லாம் புரோகிதக் கூட்டத்தாரால் புகுத்தப்பட்டு மக்கள் மூட நம்பிக்கையால் பின்பற்றுவதாகுமென்றும் சொன்னபோது இங்கு கூட்டத்திலிருந்த இரண்டொருவர் ஏதோ பிரமாதமாய் முழுகிப் போய் விட்டது போல் கருதி கூக்குரலிட்டதையும், கோபத்துடன் ஆnக்ஷபித்ததையும் பார்த்தவுடன் நான் முன் குறிப்பிட்டு வைத்தவைகளையெல்லாம் தூரத் தள்ளிவிட்டு அவருக்கேற்பட்ட பீதியையும், இன்னும் அதுபோலவே இந்துக்களென்பவர்களுக்கு ஏற்பட்ட பீதியையும் பற்றியே பேச வேண்டியது அவசியம் என்று கருதி விட்டேன். அதாவது இம்மாதிரி கீழ் நாட்டின் பீதியை ஒழிக்க வேண்டியது நமது முதற்கடமை யென்பதைப் பற்றியே பேசுகிறேன்.

periyar 400நண்பர்களே! ஏதாவதொரு விஷயத்திற்கு ஆதாரமில்லை யென்றோ அது அறிவுக்குப் பொருத்தமில்லை யென்றோ, அதனால் பயனில்லை யென்றோ, அல்லது அதனால் இன்னின்ன கெடுதி என்றோ யாராவதொருவர் எடுத்துச் சொன்னால் அதற்கு மாறுபட்டவர்கள் அறிவுள்ளவர்களாயிருந்தால் அல்லது தங்கள் கருத்தில் உறுதியான நம்பிக்கையுள்ளவர்களாய் இருந்தால் அப்படிப்பட்டவர்கள் செய்ய வேண்டிய யோக்கியமான வேலை என்னவென்றால் தைரியமாய்த் தக்க சமாதானம் சொல்லி தங்கள் கொள்கைகளை - தாங்கள் நடந்து வருவதற்கேற்ற ஆதாரங்களைக் காட்டி அறிவு அனுபவம் ஆகியவைகளுக்கு பொருத்தி மெய்ப்பித்துக் காட்ட வேண்டியது யோக்கியமான கடமையாகும்.

அந்தப் படியான காரியம் ஒன்றும் செய்யாமல் எடுத்ததற்கெல்லாம் கடவுள் போச்சு, மதம் போச்சு, மார்க்கம் போச்சு, ஆண்டவனின் நம்பிக்கை போச்சு, ஆண்டவன் வார்த்தைக்கு விரோதமாச்சு என்று வெறும் கூப்பாடு போடுவதானால் என்ன பயன் விளையக்கூடும். மக்கள் மூடர்களாயிருக்கும் வரை இம்மாதிரி கூப்பாடுகளை மதித்து அவர்களும் எதோ முழுகிப் போய் விட்டது போல் ஆத்திரப்படக்கூடும். பிறகு அவர்களுக்கும் விபரம் தெரிந்து விட்டால் இந்த மாதிரி கூப்பாடு போட்டவர்களை வட்டியோடு அவமானம் செய்து விடுவார்கள். விஷமப் பிரசாரமும் சுயநலப் பிரசாரமும் வெகு நாளைக்கு இருக்க முடியாது. எந்த மக்களுக்கும் பகுத்தறிவு செல்வாக்குப் பெறும் போது ஏமாற்றினவர்கள் மீதுதான் முதலில் அவர்களது ஆத்திரமெல்லாம் திரும்பும். பிறகு தான் தங்கள் தங்கள் முட்டாள்தனத்தைப் பற்றி வருந்துவார்கள். ஆகையால் தான் விஷம பிரசாரங்களைப்பற்றி நான் எப்போதுமே பயப்படுவதில்லை. ஆனால் சொல்லுபவர்கள் சொன்னால் கேட்பவர்களுக்கு மதி வேண்டாமா என்பது தான் எனது கேள்வி.

நண்பர்களே! என்னைப் போல் ஒரு சாதாரண மனிதன் பேசுவதினாலோ, தனக்குத் தோன்றியதை எழுதுவதினாலோ கடவுள் போய் விடும்- மார்க்கம் போய் விடும் - சமயம் போய்விடும் என்று நீங்கள் பீதி அடைவீர்களானால் உங்கள் கடவுளுக்கும் மார்க்கத்திற்கும் உள்ள யோக்கியதை எவ்வளவு என்பதை யோசித்துப் பாருங்கள். நீங்கள் உங்கள் கடவுளை உறுதியானவரல்ல, உண்மையானவரல்ல என்றும், உங்கள் சமயம் உறுதியானது அல்ல, உண்மையானது அல்ல என்றும், நீங்களே கருதியிருக்கின்றவர்களாகிறீர்கள். நாங்கள் உங்கள் கடவுளையோ, சமயத்தையோ இல்லையென்று சொல்லுவதற்காக இங்கு வரவில்லை யென்பதை உறுதியாய் நம்புங்கள்.

அவைகளைப் பற்றி உண்டு இல்லை என்று சொல்லிக்கொண்டு திரிவதல்ல எனது வேலை. நீங்கள் சொல்லுவதற்கு, நீங்கள் பின்பற்றுவதற்கு ஆதாரமென்ன? அது உங்கள் பகுத்தறிவிற்குப் பொருத்தமாயிருக்கின்றதா? அனுபவத்திற்கு ஒத்து வருகின்றதா? என்று யோசித்துப் பாருங்கள் என்று உங்களைக் கேட்டுக் கொள்வது தான் எனது வேலையாகும். அவைகளுக்கு இடம் கொடுப்பதாலேயே உங்கள் கடவுளோ, மதமோ, ஆதாரமோ போய்விடுமென்று நினைத்தீர்களானால் அவைகளைப் பற்றி மறுபடியும் வெளியில் பேசுவது வெட்கக்கேடான காரியமல்லவா வென்று கேட்கின்றேன்.

இந்தப்படி ஆராய்ச்சி செய்து பார்ப்பதாலேயே மறைந்து போகும் மார்க்கமும், ஆண்டவனும் பிறகு என்ன காரியத்திற்குத்தான் பயன்படக் கூடும் என்பதை நீங்களே ஆத்திரப்படாமல் யோசித்துப் பாருங்கள். “எங்கள் கடவுள் சர்வ சக்தி, சர்வ வியாபகமாயிருக்கக் கூடியவர்” என்று கருதிக் கொண்டு, “அவரால் ஏற்பட்டது எங்கள் மார்க்கம்” என்று சொல்லிக் கொண்டு இருக்கின்ற நீங்கள், “அப்படியானால் சற்று ஆராய்ச்சி செய்து அறிவிற்குப் பொருத்தமாயிருக்கின்றதா வென்று பார்க்கலாமா” என யாராவது கேட்டால் உடனே இந்த மாதிரி பயந்தால் அப்பொழுது இந்தப் பயப்படுகின்ற ஆட்களுக்கு கடவுள் சர்வ சக்தி உள்ளவர் என்கின்ற விஷயத்திலும், அவர் சர்வ வியாபகமுள்ளவர் என்கின்ற விஷயத்திலும் தங்களது மார்க்கம் அவரால் தான் ஏற்பட்டது என்கின்ற விஷயத்திலும் நம்பிக்கையிருக்கின்றதா வென்பதை சற்று யோசித்துப் பாருங்கள்.

மனிதனுடைய அறிவிற்குப் பயப்படும் கடவுளும், அவனது ஆராய்ச்சிக்குப் பயப்படும் மார்க்கமும், உலகத்தில் யாருக்கென்ன பயனை அளிக்கக்கூடும்? அறிவையும் ஆராய்ச்சியையும் கண்டால் ஏன் இப்படிப் பயந்து ஓடுகின்றீர்கள்? ஆராய்ச்சிக்கு மதிப்புக் கொடுக்காத காரணமே இன்று இந்தியா, உலகிலுள்ள நாடுகளிளெல்லாம் அடிமையான நாடாகவும், இந்தியர்கள் உலகிலுள்ள மக்களிளெல்லாம் இழிவான மக்களாகவுமிருக்க வேண்டியதாகி விட்டது.

கடவுள் என்றால் குருட்டு நம்பிக்கை, மதம் என்றால் மூடநம்பிக்கை யென்கின்ற தீர்மானம் ஏற்பட்டு விட்டது. இந்த நிலையைத் தவிர கடவுளுக்கும் மதத்திற்கும் வேறு அவமானம் வேண்டியதேயில்லை. இந்த மாதிரி அறிவிற்கும் ஆராய்ச்சிக்கும் பயந்த கடவுளையும், மதத்தையும் வைத்திருக்கின்றவனை விட கடவுளையும், மதத்தையும் பற்றி கவலைப்படாதவனோ, இல்லையென்று கருதிக் கொண்டிருக்கின்றவனோ வீரனென்றே நான் சொல்லுவேன். ஏனெனில் கவலைப்பட்டுக் கொண்டு உண்டு என்று சொல்லிக் கொண்டு மெய்பிக்க திண்டாடிக் கொண்டும் நடுங்கிக் கொண்டும் திரிவது பயங்காளித் தனமென்றே சொல்லுவேன்.

சகோதரர்களே! நாங்கள் வேலையில்லா வெட்டி ஆள்களா? அல்லது ஏதாவது பூசாரி புரோகிதர் கூட்டத்தைச் சேர்ந்தவர்களா? அல்லது ஏதாவது பண்டித புராண காலாட்சேபக் கூட்டத்தார்களா? எங்களுக்கு இந்த வேலையில் ஏதாவது ஜீவனத்திற்கோ பெருமைக்கோ சிறிதாவது இதில் வழியுண்டா? நாங்கள் ஏன் எங்கள் சொந்த காசையும் நேரத்தையும் செலவு செய்து கொண்டு இந்த மாதிரி ஊர் ஊராய்ச் சுற்றிக்கொண்டு காசுக்குதவாத வெறும் ஆட்கள் எல்லாம் எங்களை வையும்படியாகவும் “சாபம்” கொடுக்கும்படியாகவும், வெட்டுகின்றேன், குத்துகின்றேன் என்று மிரட்டவும், அவ்வளவையும் லட்சியம் செய்யாமலும், வந்தது வரட்டும் நாம் செத்துப் போனால் நமக்குத் தானாகட்டும் மற்றும் யாருக்குத் தானாகட்டும் என்ன முழுகிப் போகும் என்கின்ற துணிவின் பேரில் வீட்டிலுள்ளவர்களிடம் கடைசிப் பயணம் சொல்லிக் கொண்டு வந்து, இந்த மாதிரி அலைவதற்குக் காரணம் என்ன? என்பதை யோசித்துப் பாருங்கள்.

இக் கூட்டத்திற்கு தலைமை வகித்திருக்கும் தலைவர் ஜனாப் தாவுத்ஷா பி.ஏ. அவர்கள் இஸ்லாம் மதத்திற்கு எவ்வளவோ பாடுபடுகின்றவர். அவர் சப் மேஜிஸ் திரேட் உத்தியோகத்தை ராஜிநாமா கொடுத்தவர். ராஜிநாமாக் கொடுக்காமல் இப்போது அவர் உத்தியோகத்திலேயே இருந்திருப்பாரேயானால் இன்றைய தினம் ஏதாவது ஒரு பெரிய பதவியில் இருப்பார். மாதம் 4000, 5000 சம்பளமுள்ள உத்தியோகத்தில் இல்லாவிட்டாலும் மாதம் 900, 1000 ரூ. உத்தியோகத்திலாவது இருந்திருப்பார். அப்படிப்பட்டவர் ஏன் இந்த மாதிரி பாடுபடுகிறார் என்பதை யோசித்துப்பாருங்கள்.

இன்று உலகம் போகின்ற போக்கில் உலக மக்கள் அடைந்திருக்கின்ற முற்போக்கில் - நாகரீகத்தில் நாம் எந்த நிலையிலிருக்கின்றோம் என்பதை யோசித்துப் பாருங்கள்.

நம் “அறிவாளிகள்” இன்று சாமி போச்சு, சமயம் போச்சு, சைவம் போச்சு, சாமியும் சைவமும் நெருக்கடியான நிலையில் இருக்கின்றது என்பதாக சிறிதும் வெட்கமில்லாமல் பேசிக் கொண்டிருக்கின்றார்கள். நம்மைக் காப்பாற்ற ஏற்பட்ட சர்வ சக்தியுள்ள கடவுளை, நம்மை வாழ்விக்க ஏற்பட்ட பரிசுத்த சமயத்தை, நாம் காப்பாற்ற வேண்டிய அளவு நெருக்கடியான சமயம் ஏற்பட்டுவிட்டது என்று சொல்ல ஆரம்பித்தால், அது கடவுளுடையவும், சமயத்தினுடையவும் பலக்குறைவா? அல்லது அந்த மாதிரி சொல்லுகின்ற மக்களின் அறிவுக்குறைவா என்பதை நீங்களே யோசித்துப் பாருங்கள். மனிதனுக்கு எப்படிச் சுயமரியாதை பிரதானமோ, அப்படியே கடவுளுக்கும், மார்க்கத்திற்கும்கூட சுயமரியாதை அவசியம் என்பதை நீங்கள் உணருங்கள். அப்படியானால் தங்களைக் காப்பாற்ற இந்த மாதிரி இத்தனை வக்காலத்து கொடுத்திருக்கும் அவைகளுக்கு சுயமரியாதை இருக்கின்றதா என்று யோசித்துப் பாருங்கள்.

சகோதரர்களே! ஐரோப்பாவின் “நோயாளியான” துருக்கியானது, ஆண்டவனுக்கும் மார்க்கத்திற்கும் வந்த நெருக்கடியைக் காப்பாற்றுகின்ற வேலையில் ஈடுபட்டிருந்திருக்குமானால் இன்று அது இன்றைய மாதிரியில் இருந்திருக்க முடியுமா என்பதை யோசித்துப் பாருங்கள். கொடுங்கோல் மன்னன் ஆட்சியில் இருந்த ருஷியா இன்று ஆண்டவனையும், மார்க்கத்தையும், ஆதாரத்தையும் காப்பாற்றுகின்ற வேலையில் ஈடுபட்டிருந்தால் அது இன்றைய நிலையை எந்தக் காலத்திற்காவது அடைய முடியுமா வென்பதை யோசித்துப் பாருங்கள்.

அதுபோலவே, சீனாவையும், ஜப்பானையும், பிரஞ்சையும், இங்கிலாந்தையும், அமெரிக்காவையும் நினைத்துப் பாருங்கள். எந்த நாட்டுக்காரனாவது அவனுடைய வாழ்நாளையும், சொத்தையும், நேரத்தையும், இந்த மாதிரிக் கடவுளையும், மதத்தையும் காப்பாற்றுகின்ற முட்டாள்தனமானதும், பயனற்றதும், நாச வேலையானதுமான வேலையில் ஈடுபடுத்தியிருக்கின்றார்களா வென்பதை நடுநிலையிலிருந்து யோசித்துப் பாருங்கள்.

கடவுள் போய் விடும் என்று பயந்த மக்களால் வேறு என்ன வேலையாகும் என்று நினைக்கிறீர்கள். அவர்களை விட பயங்காளிகள், அறிவிலிகள் வேறு யார் இருக்கக்கூடும்? என்று எண்ணுகின்றீர்கள். கடவுளுக்கும், சமயத்திற்கும் அடிமையான நாடு ஒரு நாளும் சுதந்திரத்திற்கு அருகதையுடையதாகவே ஆகாது.

ஆகவே நீங்கள் முதலில் அந்த பயத்தை ஒழியுங்கள். “சமாதை வணங்க வேண்டாம்” அதற்கு “பூசை செய்ய வேண்டாம்” என்றால் உங்கள் மார்க்கம் போய்விடுமா? அப்படியானால், இந்து மதத்திற்கும், இஸ்லாம் மதத்திற்கும் வித்தியாசமென்ன? இந்து மத சம்மந்தமான கோவில்களெல்லாம் பெரிதும் சமாதுதான். அந்தக் கடவுள்களெல்லாம் அநேகமாய் அந்த செத்துப் போன ஆள்களேதான் என்பதே எங்கள் ஆராய்ச்சிக்காரர்கள் துணிபு. அதனால்தான் பல புண்ணிய ஸ்தலங்களும் பல கடவுள்களும் ஏற்பட வேண்டியதாயிற்று. அதையொழிப்பதற்கு தோன்றியதுதான் இஸ்லாம் மார்க்கமாகும்.

இஸ்லாம் மார்க்கத்தில்தான் ஒரே ஒரு கடவுள் என்பதும், அதற்கும் உருவமில்லை என்பதும், அதைத் தவிர வேறொன்றையும் வணங்கக் கூடாதென்பதுமான கொள்கைகள் சொல்லப்படுகிறது. அதற்கு நேர் விரோதமாக நீங்கள் சமாதுகளை யெல்லாம் வணங்கவும் பூசிக்கவும், ஆரம்பித்து விட்டீர்களானால் நீங்கள் எப்படி மற்றவர்களை குற்றம் சொல்ல யோக்கியதை யுடையவர்களாவீர்கள்? அதுமாத்திரமல்லாமல், அல்லாசாமி பண்டிகையிலும், கூண்டு முதலிய திருவிழாக்களிலும் இஸ்லாமானவர்கள் சிலர் நடந்து கொள்வது மிகவும் வெறுக்கத் தகுந்ததாகும். இப்படிப்பட்டவர்களைக் கொண்ட மார்க்கம் எப்படி பகுத்தறிவு மார்க்கமென்றும், இயற்கை மார்க்கமென்றும் சொல்லிக் கொள்ளக்கூடும்? என்பதை யோசித்துப் பாருங்கள். இவைகளையெல்லாம் ஒரு மார்க்கக் கட்டளை என்று சொல்லுவதானால் அந்த மார்க்கம் ஒரு நாளும் அறிவு மார்க்கமாகவோ உண்மையில் நன்மை பயக்கும் மார்க்கமாகவோ இருக்க முடியவே முடியாது. அதோடு மாத்திரமல்லாமல் மார்க்கத் தலைவருக்கும், மார்க்க வழிகாட்டியாருக்கும் கூட இது அவமானமும் வசைச் சொல்லுமாகும் என்றே சொல்லுவேன்.

இன்று இந்துவும், கிருஸ்தவரும் பகுத்தறிவைக் கண்டால் பயப்படுகின்றார்கள். இஸ்லாம் மார்க்கத்தில் தான் தங்கள் மார்க்கம் பகுத்தறிவுக்கு ஏற்றது என்று ரூபிக்க பந்தயம் கட்ட வருகிறார்கள். ஆனால் இப்படிப்பட்ட அதாவது சமாது வணக்கமும், பஞ்சா வணக்கமும், கொடி வணக்கமும், கூண்டு உற்சவமும், அல்லாசாமி பண்டிகையும் கொண்ட மக்களை ஏராளமாய் வைதுக் கொண்டு அவற்றையும் மார்க்கக் கொள்கைகளோடு சேர்த்துக் கொண்டிருக்கின்றவர்களையும் வைத்துக் கொண்டு இஸ்லாம் மார்க்கம், பகுத்தறிவு மார்க்கம் என்று எப்படி சொல்லிக் கொள்வதென்பது எனக்குத் தெரியவில்லை. நீங்களே சொல்லுங்கள், இவைகளைக் கொண்ட இஸ்லாம் மார்க்கம் பகுத்தறிவு மார்க்கமாகுமா? கோபிப்பதில் பயனில்லை.

இந்து மதம் என்பதை விட, கிருஸ்து மதம் என்பதை விட இஸ்லாம் மதம் என்பது மேலானது என்பது எனதபிப்பிராயம் என்று எங்கும் சொல்லுவேன். ஆனால் அதில் இனி சிறிது கூட சீர்திருத்தம் செய்ய வேண்டிய அவசியமில்லை என்பவர்களுடன் நான் சிறிது பலமாக முரண்பட்டவனே யாவேன். ஏனெனில் நான் கண்களில் பார்ப்பதைக் கொண்டுதான் சொல்லுகின்றேன். அதுவும் இன்று இஸ்லாம் மார்க்கத்தார் என்பவர்களில் பெரும்பான்மையான மக்கள் அனுஷ்டித்து வரும்- நடந்து வரும் கொள்கைகள் இஸ்லாம் மார்க்க கொள்கைகள் என்றால் ஆண் பெண் இரு துறையிலும் சீர்திருத்தம் செய்ய வேண்டிய சங்கதி பல இருக்கின்றதென்று தைரியமாய்ச் சொல்லுவேன். நீங்களும் அவற்றை சீர்திருத்த வழி தேடுங்கள். அவற்றை நிலைக்க வைக்க ஆதாரத்தை தேடாதேயுங்கள்.

மனிதனின் நன்மைக்கும் சௌகரியத்திற்கும் மார்க்கம் ஏற்பட்டதென்று கருதி தற்கால அறிவுக்கும், நிலைமைக்கும் ஒத்திட்டுப் பாருங்கள். எக்காலத்திற்கும் ஏற்ற மதமென்றால் காலத்திற்கு ஏற்றபடி தானாகவே மாறவோ, மாற்றிக் கொள்ளவோ சௌகரியமிருக்கும் என்பதில் பயமோ, அவநம்பிக்கையோ கொள்ளாதீர்கள். இருட்டானால் விளக்கைப் பற்ற வைத்துக் கொள்ளுங்கள், பகலானால் விளக்கை அணைத்து விடுங்கள் என்றுதான் பகுத்தறிவுள்ள மார்க்கம் சொல்லி இருக்கும். எப்போதும் விளக்கு வைத்திருங்கள் என்றோ, எப்போதும் விளக்கு வைத்திருக்காதீர்கள் என்றோ, சொல்லி இருக்க முடியாது. ஆகவே, காலப் போக்குடன் கலந்து கொள்ள பயப்படாதீர்கள்.

இந்தியாவுக்கு இரண்டு மதம் சொந்தமாய்விட்டது. அதாவது இந்துமதம் இஸ்லாமிய மதம் இரண்டும் ஒன்றுபட்டாலொழிய இந்தியாவுக்கு விடுதலை இல்லை. ஒருவர் மதத்திற்கு ஒருவர் வர வேண்டுமென்றால் ஒரு நாளும் முடிவு பெறாது. இருவரும் பகுத்தறிவுப்படி நடந்து கொள்ளலாம் என்றால், யாருக்கும் ஆட்சேபனை இருக்க வழியிருக்காது. தங்கள் மதம் பகுத்தறிவுக்கு ஏற்றதாய்தான் இருக்கும் என்ற நம்பிக்கையுள்ளவர்கள் கண்டிப்பாய் இந்த ராஜிக்கு ஒப்புக்கொள்ளலாம். அப்படிக்கு நம்பிக்கை இல்லாதவர்கள் எடக்குப் பேசித்தான் தீருவார்கள். அவர்கள் அதன் பயனை அடைந்துதான் தீருவார்கள். இந்த நிலையில் என்ன சுயராஜ்யம் வந்தாலும், பூரண விடுதலை வந்தாலும் அவை நமக்குள் உதை போட்டுக் கொள்ளத்தான் உதவும்.

இதுவரை பொதுவாகப் பேசினேன், கடைசியாக இந்துகளுக்கென்று சில வார்த்தை பேசுகின்றேன். ஏனெனில் நானும் சில நண்பர்களும் சாப்பிட்டதற்குப் பிறகு ஒரு நண்பர் இந்த ஊர் கோவில் தேரையும், கோபுரத்தையும் வந்து பார்க்கும்படி கூப்பிட்டார். நாங்கள் பார்ப்பதற்காக அங்கு சென்றோம். பிறகு அங்கு பார்த்த ஆபாசங்களை அப்படியே சொல்ல வெட்கப்பட வேண்டியதாகவே இருக்கின்றது. காட்டுமிராண்டிகள் காலத்தில்தான் சாமிகளும் கோவில்களும் ஏற்பட்டதென்று சொன்னால் யாராலும் மறுக்க முடியாதபடி அவைகள் அமைக்கப் பட்டிருக்கின்றன.

முதலாவது நாங்கள் இந்த ஊர்த் தேரைப் பார்த்தோம். அதில் சித்தரித்து வைக்கப்பட்டிருக்கும் உருவங்கள் மிகமிக ஆபாசமானவையாய் காணப்பட்டன. அவைகளுக்கு என்னதான் தத்துவார்த்தம் சொல்லுவதானாலும், மனிதப் பெண்ணை கழுதை சம்போகம் பண்ணுவது போலும் இது போன்ற மற்றும் பல உருவங்களை சித்தரித்து வைத்திருப்பதை எப்படி ஒப்புக் கொள்வது என்பது எனக்கு விளங்கவில்லை. கோபுரங்களைப் பார்த்ததைப் பற்றிச் சொல்லலாம் என்றாலோ அவற்றைப்பற்றி இன்னும் ஒரு தடவை நினைப்பதற்குக்கூட கஷ்டமாய் இருக்கின்றது. பெண்களை அதில் படுத்துகின்ற பாடும், காம விகாரங்களை அதில் எடுத்துக்காட்டி இருக்கும் முறையும் அநியாயம், அநியாயம். இவைகளையெல்லாம் நெருப்பு வைத்துக் கொளுத்தி இடித்து எறிந்து, இவற்றிற்கு ஆதாரமான சாத்திரங்களையெல்லாம் பொசுக்கி சமுத்திரத்தில் கரைத்து விட்டாலொழிய இதைச் சேர்ந்த மனிதர்கள் மனிதர்களாகக் கருதப்பட முடியவே முடியாது.

“சுயமரியாதைகாரர்கள் புராணக் குப்பைகளைக் கிளறிக் கிளறி வெறும் ஆபாசங்களைப் பேசுகின்றார்கள், எழுதுகின்றார்கள்” என்று பேசுகின்றீர்கள். எங்கள் மீது சில சமயத்தில் வெறுப்பும் கொள்ளுகின்றீர்கள்.

ஆனால் இந்த கோவில்களுக்குப் போய், தேங்காய் பழம் உடைத்து வைத்து காசும் கொடுத்து இந்த உருவங்களைப் பார்க்க வந்து கொண்டிருப்பவர்கள் மனிதர்களா? என்பதைப் பற்றி நீங்கள் சிறிதுகூட சிந்திப்பதில்லை. நாங்கள் எழுதுவதையும் பேசுவதையும் பார்த்து வெறுப்புக் கொண்டு என்ன செய்வது? இவ்வளவு பேசியும், எழுதியும் இந்த நடவடிக்கைகள் நின்றதா? நிறுத்த யாராவது பாடுபட்டீர்களா? காரமடைத் தேரில் இதைவிட அசிங்கமாகப் பார்த்தேன். திருவொற்றியூரில் வெகு ஆபாசமாய்ப் பார்த்தேன். மதுரை முதலிய இடம் சொல்லவே வேண்டியதில்லை. ஆனால் இந்த ஊர் கோபுரம் எல்லாவற்றையும் மீறி விட்டது. இதுவரை நாங்கள் எழுதாத, பேசாத நினைக்கவே முடியாத விஷயங்கள் எல்லாம் இதில் இருக்கின்றன. எல்லாம் சாமிகளாகவும் ரிஷிகளாகவும், முனிவர்களாகவுமே காணப்படுவது இன்னும் மோசமாய் இருக்கின்றன.

இதையெல்லாம் பற்றி அன்னிய மதக்காரர்கள் பரிகாசம் பண்ண மாட்டார்களா? கேவலமாய் நினைக்க மாட்டார்களா? என்கின்ற மான அவமானமே இல்லாமல் போய் விட்டது. இதை நிறுத்த வேண்டுமா, வேண்டாமா? நிறுத்த வேண்டுமானால் என்ன செய்வது? இதுவரை சமயதிருத்தக்காரரும் சமூக திருத்தக்காரரும் இந்த ஆபாசங்களின் பக்கம் திரும்பியாவது பார்த்தார்களா? போதாக் குறைக்கு பணம் படைத்த மூடர்களும் யோக்கியப் பொறுப்பற்றவர்களும் இந்த சித்திரங்களுக்கு சாயம் அடித்து ரிப்பேர் செய்கின்றார்களே. அவர்களை என்னவென்றுதான் சொல்லுவது என்பது விளங்கவில்லை.

சிறிதும் ஈவு இரக்கமில்லாமல் ஊரார் பணத்தை ஏழைகள் பணத்தை கொள்ளை அடித்து அவர்களைப் பட்டினி போட்டுவிட்டு இந்த மாதிரி மிருக மனிதப் புணர்ச்சிகளுக்கு பொம்மைகள் செய்து சாயம் அடித்து பூசை செய்வது என்பது எவ்வளவு இழிவானதும், திமிர் பிடித்ததுமான காரியமாகும் என்பதை யோசித்துப் பாருங்கள். இந்த லக்ஷணத்தில் நாங்கள் இந்த கோவிலுக்குள் புகுந்து விடுவோமென்று இப்போது போலீசு காவல் போடப்பட்டிருக்கின்றதாம். நாங்கள் எந்த ஊருக்குப் போனாலும் அங்குள்ள கோவில்காரர்கள் எல்லாம் இப்படியேதான் செய்கின்றார்கள். ஆகவே இந்துக்கள், சமயவாதிகள், சைவர்கள், வைணவர்கள் என்பவர்கள் இவற்றிற்கெல்லாம் என்ன பதில் சொல்லுகின்றார்கள் என்று கேட்கின்றேன் - இந்த இந்து மதத்தை இன்னமும் எத்தனை நாளைக்குத்தான் காப்பாற்றப் போகின்றீர்கள்? என்று கேட்கின்றேன்.

மதம், சாமி, கோவில் என்றால் முட்டாள்தனம், அயோக்கியத்தனம், ஆபாசம் என்றுதான் சொல்ல வேண்டியிருக்கின்றது. வருத்தப்பட்டுப் பயனில்லை, வெட்கப்பட வேண்டும். அப்போதுதான் அறிவு, ஒழுக்கம், நாகரீகம் விளங்கும். ஆகவே சகோதரர்களே! இவ்விஷயங்களை நன்றாய் ஆலோசித்துப்பார்த்து ஒரு முடிவுக்கு வாருங்கள். பொருளற்ற கூப்பாடு போடுவதால் பயன் விளையாது. இனியும் இந்த மாதிரி குஷ்டவியாதி வந்த சரீரமாதிரி இந்த சமுகம் நாறி அழுந்திக் கொண்டிருப்பதில் பயனில்லை என்பதை வணக்கமாய் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

(குறிப்பு : திருநெல்வேலி மாவட்ட களக்காட்டில் நடைபெற்ற ஐக்கிய முஸ்லீம் சங்க மாநாட்டின் இரண்டாம் நாளில் ஆற்றிய உரை.

குடி அரசு - சொற்பொழிவு - 01.02.1931)