periyar 450பாமர மக்களை ஏமாற்றப் படித்த மக்கள் பல புரட்டுகள் செய்வதுண்டு. அவ்வக் காலங்களில் மக்கள் மனதைப் பற்றி நிற்கும் வார்த்தைகளை வாயால் சொல்லி மக்கள் நன்மதிப்பைப் பெற முயல்வது வழக்கமாகி விட்டது.

கதர் எப்படியிருக்குமென்று அறியாதவர்களும் பல கூட்டங்களில் கதர் உடுத்த வேண்டுமென்று சொல்வதுண்டு நாட்டில் செய்யப்படும் வஸ்துக்களில் ஒன்றையேனும் பார்த்தறியாதவர்கள் சுதேசியத்தைப் பற்றி வானளாவப் பேசுவதுண்டு.

அவ்வாறாகவே “பஞ்சமர்கள்” என்போர் யார்? அவர்கள் துயரென்ன? அவற்றைப் போக்கும் வழியென்னவென்று ஒரு நாளேனும் சிந்தித்துப் பார்த்து ஒரு சிறிய காரியத்தையேனும் அவர்களுக்காகச் செய்தறியாத தலைவர்களும் கூட்டங்களும் தீண்டாமை விலக்குத் தீர்மானத்தை நிறைவேற்றி வருகின்றன.

இத்தகைய புரட்டுத் தீர்மானமொன்று கடந்த வாரம் திருப்பூரில் நடைபெற்ற அரசியல் மகாநாட்டில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இத்தீர்மானப் புரட்டை ஆண்மையோடு எதிர்த்த வீரர் திரு. அய்யாமுத்து அவர்களை நாம் மனமாரப் போற்றுகிறோம்.

தீர்மானத்தை சபையின் முன் வற்புறுத்திய தலைவர் திரு. ராஜன், அரசியல் சுதந்திரம் பெற்ற பின்னர் தீண்டாமை ஒரே நொடியில் பறந்து விடும் என்ற புரட்டுச் சொல்லை வழக்கம் போலச் சொல்லிவிட்டார்.

மானமிழந்து, உரிமையிழந்து, அடிமை வாழ்வு பெற்று நிற்கும் காலத்தில் தோன்றாத சுயமரியாதை உணர்ச்சியும், காரியத்தில் பற்றும் ஊக்கமும் அரசியல் சுதந்திரம் பெற்று அரசாங்க மாளிகையில் (வர்ணாச்சிரமிகள்) வீற்றிருக்கும் போது ஏற்படுமா? என்ற உண்மையை நண்பர்கள் ஆராய வேண்டுகிறோம்.

“கஷ்டமுற்ற காலத்தில் கடவுளை நினையாத மக்கள் சுகப்படும் காலத்தில் நினைப்பதில்லை” என்பதுபோல அந்நிய ஆதிக்கத்தால் நசுக் குண்டு கிடக்கும் காலத்திலே சாதி சமய வேற்றுமை களைந்து ஒற்றுமைய டைய மனதில்லாத மக்களா சுயராஜ்யப் போரை நடத்தப் போகிறார்கள்?

(குடி அரசு - துணைத் தலையங்கம் - 11.05.1930)