periyar with kidsஉலகத்தில் விவாகம் செய்து கொள்ளுவதில் ஒவ்வொரு மதத்திற்கு ஒவ்வொரு விதமான முறைகள் பார்த்து விவாகம் செய்து கொள்ளுவது வழக்கமாய் இருந்து வருகின்றதே ஒழிய எல்லா நாட்டிலும் எல்லா மதத்திலும் ஒரே விதமான சொந்தங்களை கையாளுவதில்லை என்பது யாவரும் அறிந்ததாகும்.

உதாரணமாக மகமதியர்களுக்குள்ளும் ஐரோப்பிய கிரிஸ்தவர் களுக்குள்ளும் தங்கள் தகப்பனுடன் பிறந்த சகோதரர்களான சிறிய தகப் பனார் பெரிய தகப்பனார் பெண்களை விவாகம் செய்து கொள்ளுகின்ற வழக்கம் உண்டு.

இந்துக்கள் என்பவர்களில் தகப்பனுடன் பிறந்த சகோதரிகளான அத்தை பெண்களையும், தனது சகோதரி பெண்களையும், தனது தாயுடன் பிறந்த மாமன் சிறிய தாயார் பெரிய தாயார் பெண்களையும் விவாகம் செய்து கொள்ளுகின்ற வழக்கம் உண்டு. சையாம் தேசத்தில் தன்னுடன் கூடப் பிறந்த சொந்த தங்கையை விவாகம் செய்து கொள்ளும் வழக்கம் உண்டு.

அந்த தேசத்தில் வேறு யார் செய்து கொண்டலும் செய்து கொள்ளா விட்டாலும் அந்த நாட்டு அரசன் கண்டிப்பாய் தனது தங்கையைத் தான் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும்.

இது ஆரிய முறைப்படி அரசானாயிருப்பவன் அவசியம் செய்து கொள்ளவேண்டும் என்கின்ற பழக்கம் இன்றும் அங்கு இருந்து வருகின்றது. சையாம் நாட்டு அரசர்களுக்கு அநேகமாய் முதலாவது ராமன் இரண்டாவது ராமன் என்றே பெயர் இடுவது வழக்கம். இப்போதய ராஜாவுக்கு நாலாவது ராமன் என்று பெயர்.

சையாம் நாட்டு பௌத்த ராமாயணத்தில் ராமன் தனது தங்கையாகிய சீதையை கல்யாணம் செய்து கொண்டான் என்றே கண்டிருக்கின்றது. திரு.சீனிவாசய்யங்கார் எழுதி இருக்கும் பால ராமாயணம் என்றும் புத்தகத்தில் இந்த சரித்திரம் காணலாம்.

ஆனால் இந்தியாவில் அதிலும் தமிழ் நாட்டில் இவ்விஷயம் மிகவும் தோஷமாய் கருதப்பட்டு வரும் விஷயம் யாவரும் அறிந்ததாகும். என்றாலும் பார்ப்பன ஆதிக்கம் தலைவிரித்தாடும் மலையாளத்தில் இந்துக்கள் என்பவர்களுக்குள்ளும் சிறிய தகப்பனார் பெண்களை பெரிய தகப்பனார் குமாரர்கள் கட்டிக் கொள்ளுகின்ற வழக்கம் உண்டு என்பது சமீபத்தில் நடந்த ஒரு நாயர் சமூக விவாகத்தில தெரிய வருகின்றது.

அதாவது :- சென்னை அரசாங்க நிர்வாக சபை லா மெம்பர் உயர்திரு திவான்பகதூர் எம்.கிருஷ்ணன் நாயர் அவர்களின் குமாரர் திரு. பி. அச்சுத மேனன் ஐ.சி.எஸ். அவர்கள் தனது சிறிய தகப்பனாரான தஞ்சை ஜில்லா போலீசு சூப்பிரண்டெண்டு திருவாளர்யம். கோவிந்த நாயர் அவர்கள் குமாரத்தி திருமதி பத்மினி அம்மாளை விவாகம் செய்து கொண்டிருக்கிறார். அவர்களின் உருவப் படமும் பிரசுரித்திருக்கின்றோம்.

ஆகவே சொந்தம், முறை, பந்துத்துவம் என்பவைகள் எல்லாம் அந்தந்த நாட்டுப் பழக்க வழக்க மென்பதைப் பொருத்தே அல்லாமல் கடவுள் கட்டளை என்றோ அல்லது வேதகட்டளை சாஸ்திரக் கட்டளை என்றோ சொல்வதெல்லாம் அறியாமை அல்லது புரட்டு என்கின்ற இரண்டில் ஒன்றே தவிர வேறில்லை.

இது இப்படி இருக்க அத்தை பிள்ளையையும் அக்காள் பிள்ளையையும் சிறிய தாயார் பிள்ளையையும் கட்டிக் கொள்ளுகின்ற இந்துக் களைப் பார்த்து கிருஸ்தவர்களும் மகமதியர்களும் பரிகாசம் செய்வதும் சித்தப்பன் பிள்ளையையும் சொந்தச் சகோதரியையும் கலியாணம் செய்து கொள்ளும் கிருஸ்தவர் மகமதியர் சையாம் அரசர் ஆகியவர்களை இந்துக்கள் பார்த்து பரிகாசம் செய்வதும் கிணத்துத் தவளை குணமே யொழிய வேறில்லை என்பதே நமது அபிப்பிராயம்.

(குடி அரசு - கட்டுரை - 27.04.1930)