periyar 296சிருங்கேரி மடாதிபதி உயர்திரு “ஸ்ரீ ஜகத்குரு சங்கராச்சாரிய சுவாமிகள்” அவர்களிடமிருந்து நமக்கு வந்த “ஸ்ரீமுக;” அழைப்பை, இவ் விதழில் வேறு ஒரு பக்கத்தில் பிரசுரித்திருக்கின்றோம்.

திரு. மடாதிபதி அவர்கள் அந்த “ஸ்ரீ முகம்” நமக்கு அனுப்பியதற்காகவும் மற்றும் அதில் நம்முடையவும் நமது மனைவியாருடையவும் ஒரு சிறு தொண்டை மிகுதியும் பாராட்டித் தங்களது மகிழ்ச்சியைத் தெரிவிப்பதற்காகவும் நாம் நம் சார்பாகவும் நமது மனைவியாரின் சார்பாகவும் நமது மனப் பூர்த்தியான நன்றியறிதலை தெரிவித்துக் கொள்ளக் கடமைப் பட்டிருக்கின்றோம்.

நிற்க அந்த “ஸ்ரீமுக”த்தில் “சனாதன தர்மத்தை கெடுக்காமல்;” “கரும காண்டத்தில் உள்ள அவரவர்கள் கடமைகளைச் செய்து” “சாஸ்திரங்கள் இடம் கொடுக்கும் வரையில்” என்கின்ற நிபந்தனைகள் கண்டு அதற்கு விரோதமில்லாமல் “சில சுதந்திரங்கள் அளிக்கப்படும்” என்கின்ற வாசகங்கள் காணப்படுகின்ற படியால், நாம் அங்கு செல்வதால் ஏதாவது பயன் ஏற்படுமா என்கின்ற விஷயம் நமக்கு சந்தேகமாகவே இருக்கின்றது.

ஆயினும் பொருப்புள்ள ஒரு பதவியை வகிப்பவரும் பல கொள்கைகளுக்கு “அபிப்பிராய கர்த்தாவாய்” இருப்பவரும் பல மக்களால் வணங்கிக் கொண்டாடி மதிக்கத்தக்கவராக இருப்பவருமான ஒரு பெரியாரின் அழைப்பை மதித்து அதற்கு இணங்கி அங்கு சென்று வரவேண்டியது மிக்க நியாயமாகுமென்றே நமக்குத் தோன்றுகின்றது, ஆயினும் நமது நண்பர்களின் விருப்பத்தை அறிந்து சென்று வரலாமென்றே கருதியிருக்கின்றோம்.

(குடி அரசு - துணைத் தலையங்கம் - 02.03.1930)