உலகத்தின் நாலா பக்கங்களிலும் உள்ள மக்கள் அறிவு வளர்ச்சியும், முன்னேற்றமும் பெற்று, பூரண விடுதலை மார்க்கத்தில் விரைந்து சென்று கொண்டிருக்கும் காலத்தில் நமது தேசத்தில் சிறப்பாக நமது நாட்டில் உள்ள மக்கள் மாத்திரம் இன்னமும் மிருகப் பிராயத்திலேயே இருந்து வர பலமான முயற்சிகள் செய்யப்பட்டு வருவதானது மிகவும் கேலிக்கும் இழிவுக்கும் இடமானது என்பதில் யாருக்கும் அபிப்பிராய பேதமிருக்காதென்றே எண்ணுகின்றோம். சுமார் இரண்டு மூன்று மாதத்திற்குள்ளாக தமிழ் நாட்டில் சோழ மண்டலத்தில் 2 மகாநாடுகள் பிராமண மகாநாடு என்னும் பேரால் நடைபெற்றிருக்கின்றன.

periyar 28இம்மகாநாட்டில் வெறும் அன்னக்காவடிகளான அல்லது வயிற்றுப் பிழைப்பு பஞ்சாங்கப் பிச்சை ஜீவனக்காரர்களான, பொறுப்பற்ற சில பார்ப்பனர்கள் கூடி மகாநாட்டை நடத்தினார்கள் என்று சுலபத்தில் சொல்லி விட முடியாது.

படித்தவர்கள் என்றும் பொறுப்புள்ளவர்கள் என்றும் நாட்டின் முக்கிய பகுதியார் என்றும் சொல்லிக் கொள்ளும்படியான உத்தியோகஸ்தர்களும், உபாத்தியாயர்களும், வக்கீல்களும், மிராசுதாரர்களும் மற்றும் பல பொறுப்புள்ளவர்கள் என்று சொல்லிக் கொள்ளும்படியான பார்ப்பனர்களே பெரிதும் பங்கெடுத்துக் கொண்டிருக்கின்றார்கள் என்பதைப் பார்க்கும் போதே நமது நாட்டின் முன்னேற்றத்திற்கும், மக்களின் விடுதலைக்கும் எதிரிகள், விரோதிகள் நமது நாட்டிலேயே இருந்து கொண்டு பெரும்பான்மையான மக்களை கொடுமைப்படுத்தி வதைத்து வருபவர்களாக இருக்கின்றார்கள் என்பதும், அரசாங்கத்தாரோ அல்லது வேறு மதக்காரர்களோ நமக்கு விரோதிகள் அல்ல என்பதும் நன்றாய் விளங்குகின்றது.

எப்படியெனில், நமது நாட்டு சுயமரியாதைக்கும், சமத்துவத்திற்கும், விடுதலைக்கும் என்னென்ன கொள்கைகளும் ஆதாரங்களும் விரோதமாய் இருக்கின்றனவென்று நாம் கருதுகின்றோமோ, நாம் மாத்திரமல்லாமல் நமது நாட்டிலுள்ள அறிஞர்களும், வெளிநாட்டிலுள்ள அறிஞர்களும், கருதுகின்றார்களோ அவர்கள் எவ்வெவற்றை ஒழிக்க வேண்டுமென்று முனைந்து நிற்கின்றார்களோ அவைகளையே நிலைநிறுத்த இந்தப் பார்ப்பன மகாநாடுகள் தீவிர முயற்சிகள் செய்து வருகின்றன.

உதாரணமாக மதத்தின் பேராலும், வேத சாஸ்திர ஸ்மிருதிகளின் பேராலும் மக்கள் சுயமரியாதைக்கும், சமத்துவத்திற்கும், விடுதலைக்கும் பகுத்தறிவிற்கும் விரோதமானவைகளை அழிக்க வேண்டுமென்பது நமது கவலையும் முயற்சியும் என்றால் இவைகளைக் காப்பாற்ற வேண்டும் என்பது இந்தப் பார்ப்பன மகாநாட்டின் கவலையும் முயற்சியும் என்று அவர்களாலேயே வெளிப்படையாய் சொல்லப்பட்டிருக்கின்றது.

அதாவது, சென்ற வாரம் திருச்சியில் கூடிய பார்ப்பன மகாநாட்டுப் பிரதிநிதிகளுக்கு ஏற்படுத்தப்பட்ட நிபந்தனைகளில், “எவனொருவன் சுருதி ஸ்மிருதிகளான சாஸ்திரங்களை ஒப்புக் கொள்ளுகின்றானோ அவன்தான் மகாநாட்டுப் பிரதிநிதியாகலாம்” என்பதாக நிபந்தனை ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது. அம்மாதிரியே எல்லோரிடமும் வாக்குறுதியும், கையெழுத்தும் வாங்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

சுருதி, ஸ்மிருதி, சாஸ்திரங்கள் என்பன என்னவென்று பார்ப்போமானால், வேதம் சாஸ்திரம் புராணம் ஆகியவைகளும், குறிப்பாக பாராசர் ஸ்மிருதியும் மனுதர்ம சாஸ்திரமும் மற்றும் இதுபோன்றவைகளே முக்கியமானவை. பாராசர் ஸ்மிருதியில் இன்னது இருக்கின்றது என்பதையும் மனுதர்ம சாஸ்திரத்தில் இன்னது இருக்கின்றது என்பதையும் நமது வாசகர்களுக்கு நாம் தெரிவிக்க வேண்டிய கஷ்டம் இல்லை என்றே நினைக்கின்றோம். அநேக தடவை எடுத்துக் காட்டியுமிருக்கின்றோம். அதோடு மாத்திரமல்லாமல், அநேக கூட்டங்களில் அந்த சாஸ்திரங்கள் கொளுத்தப்பட்டும் இருக்கின்றன.

ஆகையால் அவை நமக்கு எவ்வளவு எதிரானவை என்பது தானாகவே விளங்கும்.

எனவே, அப்பேர்ப்பட்ட, நமக்கு இழிவையும் அடிமைத்தனத்தையும் மானக்கேட்டையும் உண்டாக்கத்தக்கதான ஆதாரங்களைக் காப்பாற்றவே, பிரசாரம் செய்யவே, அதில் கண்டுள்ள கொள்கைகளை நம்மீது சுமத்தவே, அம்மகாநாடுகள் நடத்தப்படுகின்றன என்பதை நாம் எடுத்துக் காட்ட வேண்டுமா?

சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், முன் குறிப்பிட்டபடி நமது முன்னேற்றத்திற்கு எந்தெந்த சாதனங்கள் தடை என்று கருதி, அவைகளை அழிக்க முற்படுகின்றோமோ அவைகளைக் காப்பாற்றுவதுதான் பிராமண மகாநாடு என்பதன் முடிவு. இந்தப்படி பார்த்தால் இந்த நாட்டில் வேதம், சாஸ்திரம், புராணம் இவைகளின் மேல் நிற்கும் - இவைகளை ஒப்புக் கொள்ளும் - அமுலுக்குக் கொண்டுவர முயற்சிக்கும் பார்ப்பனர்களும் அவர்களது சிஷ்யர்களும் நமக்கு, அதாவது பார்ப்பனரல்லாத சமூகத்திற்கு கடும் விரோதிகள் என்பது தான் நமது அபிப்பிராயம்.

ஆதலால் இவ்விரோதிகளின் ஆதிக்கத்தை அடியோடு தரைமட்டாய் ஒழிக்க வேண்டும் அல்லது இவர்கள் சம்மந்தத்தில் இருந்து அடியோடு விலகி, உலகில் மகமதியர், கிறிஸ்தவர், பாரசீகர், சீக்கியர்கள் முதலியவர்கள் இருப்பது போல் பார்ப்பனர்களையும் நமக்கு சம்மந்தமில்லாத ஒரு கூட்டத்தார் எனக் கருதி அவர்களது கொள்கைகளையும், ஆதாரங்களையும், நம்மீது சுமத்தவிடாமல் விலக்கிவிட வேண்டும். இவ்விரண்டிலொன்று செய்வதுதான் பார்ப்பன இரத்த சம்மந்தமில்லாத மக்களுடைய வேலையாயிருக்க வேண்டும். அப்படிக்கு இரண்டில் ஒன்று இல்லாதவரை கண்டிப்பாய் பார்ப்பனரல்லாத மக்களுக்கு சுயமரியாதையோ சமத்துவமோ விடுதலையோ கிடையாது என்பதே நமது உறுதியான முடிவாகும்.

பார்ப்பனரல்லாதார் இயக்கத்திற்கானாலும், சுயமரியாதை இயக்கத்திற்கானாலும் ஏதாவது நிபந்தனைகள் ஏற்படுத்துவதாயிருந்தால் அவற்றுள் ஒன்றாக - ஏன் முக்கியமானதாக ‘பார்ப்பனர்களுடைய அதாவது இந்து மத சம்மந்தமான வேத சாஸ்திர புராணங்களில் நான் நம்பிக்கை இல்லாதவன்’, என்பதாக ஒரு நிபந்தனையைக் கண்டிப்பாய் ஏற்படுத்த வேண்டும் என்பது நமது கருத்தாகும். தவிர தன்னைப் பிராமணனென்று சொல்லிக் கொள்ளுகின்ற எவரையும் நமது எவ்வித முன்னேற்ற சங்கத்திலும், சீர்திருத்த சங்கங்கள் எதிலும் கண்டிப்பாய்ச் சேர்த்துக் கொள்ளக் கூடாது என்பதும் நமது கருத்தாகும். தவிர ‘இந்து ராஜாக்கள் அரசாங்கம் இக்காலத்தில் இல்லாததால் மேல்கண்ட வேத சாஸ்திர புராண கொள்கைகளுக்கு கஷ்டம் வந்துவிட்டது’ என்பதாக பார்ப்பனர் மகாநாட்டு அக்கிராசனர் கண்ணீர் வடித்திருக்கின்றார்.

இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால், ‘அரசியல்’ முயற்சியிலும் பிராமணர்களுக்கு அனுகூலமான ராஜியம் ஏற்படுத்தும் முயற்சிகளை நாம் அடியோடு கண்டிப்பாய் ஒழித்தாக வேண்டும் என்பதே. ஆதலால் பார்ப்பனக் கொள்கைகள் கொண்ட இந்து அரசாங்கம் என்பவைகளையும் ஒழித்து நடுநிலைமைக் கொள்கைகள் கொண்ட அரசாங்கத்தையே நாம் ஏற்படுத்த முயல வேண்டும். அது எந்த அரசாங்கமானாலும் நமக்குக் கவலையில்லை. ருஷிய அரசாங்கமானாலும் மேள தாளத்தோடு வரவேற்கத் தயாராயிருக்க வேண்டும். அரசாங்கம் என்பது மக்களின் மானத்திற்கும் சமத்துவத்திற்கும் சுவாதீனத்திற்குமே ஒழிய, அரசாங்கத்தினுடையவோ அல்லது ஒரு தனி வகுப்பு நன்மைக்காகவோ அல்ல என்பதை தைரியமாகச் சொல்லுவோம்.

மற்றும் தலைவர், வேத சாஸ்திரக் கொள்கைகளை இந்து அரசர்கள் ஆதரித்ததால் பிராமணீயம் காப்பாற்றப்பட்டு வந்ததாகவும் அப்பேர்ப்பட்ட இந்து அரசர்கள் இந்தியாவில் அடியோடு நசித்துப் போய் விட்டதாகவும், ஆதலால் பிராமணர்கள் மீது தப்பிதமில்லையென்றும் சொல்லி இருக்கின்றார். இவ்வளவு தூரம் வேத சாஸ்திர புராணக் கொள்கைகளை ஆதரித்து பிராமணர்களை காப்பாற்றி வந்த இந்து அரசாங்கங்கள் அடியோடு ஒழிந்து போனதற்குக் காரணம் என்ன என்று நாம் மகாநாட்டுத் தலைவரைக் கேட்கின்றோம்.

கர்மத்தில் நம்பிக்கை உடையவன் இதற்குப் பதில் சொல்ல வேண்டுமானால் ‘மேல் கண்ட இந்து அரசர்கள் வேத சாஸ்திர புராணங்களை ஆதரித்து பிராமணர்களைக் காப்பாற்றியதால் தான் அவர்களும் அவர்களது ராஜ்ஜியமும் அடியோடு நாசமாய்ப் போய்விட்டார்கள்’ என்றுதானே சொல்லுவார்கள். இதை மறுப்பதற்கு தலைவருக்கு யோக்கியதை உண்டா என்று கேட்கின்றோம்.

மற்றும் ‘பிற மதஸ்தர்கள் மதப்பிரசாரத்திற்கு ஏராளமான பணம் செலவழிக்கின்றார்கள்’ ‘நம் மதஸ்தர்கள் தெய்வ ஆராதனம் கூடச் சரி வரச் செய்வதில்லை’ என்பதாகச் சொல்லி இருக்கின்றார். எத்தனை கோடி ரூபாய்கள் இந்து மதத்திற்காக இந்துக்கள் என்பவர்களிடமிருந்து செலவாகின்றதென்பது அக்கிராசனருக்குத் தெரியாதா? என்று கேட்கின்றோம். அவர் வாழும் திருவாங்கூர் ராஜியத்தில் திவான் பார்ப்பான் முதல் விபசாரத்திற்கு விதவைப் பார்ப்பனத்திகளைக் கூட்டி வைத்துக் கொண்டு பணம் சம்பாதிக்கும் பார்ப்பனர் வரை ஏறக்குறைய எல்லாப் பார்ப்பனரும் ராஜாங்கத்தின் பொதுப்பணமான வரிப்பணத்திலிருந்து செலவு செய்யும் சத்திரச் சாப்பாடு, கோவில் சாப்பாடு ஆகியவைகளை இன்னமும் சாப்பிட்டுக் கொண்டுதான் இருக்கின்றார்கள் என்பது அக்கிராசனருக்குத் தெரியாதா? இந்துக்கள் மதப் பிரசாரத்திற்கு எவ்வளவு பணம் செலவு செய்கின்றார்கள் என்பதற்கு இந்த ஒரு உதாரணம் போதாதா?

இதுபோலவே காசியில் நடப்பதும் அக்கிராசனருக்குத் தெரியாதா? மற்றும் தென் இந்தியாவிலுள்ள இந்து கோவில்களுக்கு பூஜை, அபிஷேகம், ரிபேர், புதுக்கோவில் கட்டுதல், கும்பாபிஷேகம், உற்சவம், யாத்திரை, வேண்டுதல் முதலிய துறைகளில் வருஷம் ஒன்றுக்கு 10 கோடி ரூபாய்க்கு மேலும் சடங்கு முதலியவைகளுக்கு வருஷம் 10 கோடி ரூபாய்க்குக் குறையாமலும் செலவு செய்யப்பட்டு வருவது அக்கிராசனருக்கு உண்மையாகவே தெரியாதா என்று கேட்கின்றோம். மற்றும் சாமியார்கள், சங்கராச்சாரிகள், மடாதிபதிகள், பிராமணர்கள் என்னும் பேரால் தீவட்டிக் கொள்ளைகள் போல, பகற்கொள்ளைகள் போல, வருஷா வருஷம் கோடிக் கணக்கான ரூபாய்கள் கொள்ளை அடிக்கப்படுவது தலைவருக்குச் சத்தியமாகவே தெரியாதா என்று கேட்கின்றோம். எனவே மதப் பிரசாரத்திற்காக இன்னமும் என்ன செய்ய வேண்டும், எவ்வளவு பணம் தொலைய வேண்டும் என்று அக்கிராசனர் விரும்புகின்றார் என்பது நமக்கு விளங்கவில்லை.

தவிர, அக்கிராசனர் முடிவுரையில், தாங்கள் ‘இந்தியாவுக்கு மாத்திரம் பிராமணனாக இருக்கக் கூடாது, உலகத்திற்கே பிராமணனாக இருக்கத்தக்க பிரசாரம் செய்ய வேண்டும்’ என்று சொல்லியிருக்கின்றார். இதிலிருந்து பார்ப்பன ஆசைக்கு உள்ள எல்லை எவ்வளவு என்று தெரிகின்றது. ஆனாலும், இந்தியாவைத் தவிர வேறு நாட்டில் மனுதர்ம சாஸ்திரத்தினுடையவும், பராசரர் ஸ்மிருதியினுடையவும் ராமாயணம், பெரியபுராணம் முதலிய புராணத்தினுடையவும் கொள்கைகள் கொண்ட பார்ப்பனீயம் தலைகாட்ட முடியுமா? அந்தப்படி தலைகாட்டிவிட்டு, பார்ப்பனர்கள் வாழ முடியுமா? என்று கேட்கின்றோம். நமது வேத சாஸ்திர புராணத்தில் ஆயிரத்திலொரு பங்கு கொடுமையும் அயோக்கியத்தனமுமில்லாத நாடுகளான துருக்கி, ஆப்கானிஸ்தானம், ருஷியா முதலிய நாட்டுப் பார்ப்பனர்கள் படுகின்ற பாட்டுக்கு இந்தியப் பார்ப்பனர்கள் கதி அங்கு என்ன ஆகும் என்பதைச் சற்று யோசித்தால் விளங்காமல் போகாது.

நிற்க, அந்த மகாநாட்டின் தீர்மானங்களைப் பற்றி இரண்டொரு வார்த்தை கூறுவோம். அதாவது அங்கு பல தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டிருந்தாலும், வேத சாஸ்திரம் உணராதவர்கள் மதத்தில் பிரவேசிக்கக் கூடாது என்றும் மதசம்மந்தமான விஷயங்களில் சர்க்கார் தலையிடக் கூடாது என்றும், சீர்திருத்தங்கள் சட்டத்தின் மூலம் செய்யக் கூடாது என்றும் வகுப்பு வாரி பிரதிநிதித்துவம் கூடாது என்றும் மற்றும் இது போன்று செய்யப்பட்ட தீர்மானங்களே முக்கியமானவையாகும். எனவே இவற்றை சற்று கவனிப்போம்.

வேத சாஸ்திரம் (பிராமணர்களைத் தவிர) நாம் படிக்கக் கூடாது என்கின்ற நிபந்தனை இருப்பதால் மக்களும் ‘மதத்தைப் பற்றியோ, மதத்தினால் உள்ள கஷ்டத்தைப் பற்றியோ அதில் உள்ள கொடுமைகள், அயோக்கியத்தனங்கள் ஆகியவைகளைப் பற்றியோ பேசக் கூடாது’ என்பதும் ‘சர்க்காரும் அவைகளில் தலையிட்டு ஒன்றும் செய்யக் கூடாது’ என்பதுமே மேல்கண்ட தீர்மானத்தின் கருத்தாகும். அப்படியானால் (நமக்கு) மக்களுக்கு வேறு என்னதான் ‘கதிமோக்ஷம்’ இருக்கிறது என்று கேட்கின்றோம்.

உதாரணமாக திரு. நாயக்கர், சடங்கைப் பற்றியும், உற்சவங்களைப் பற்றியும், பார்ப்பான் மேல் ஜாதி மற்றவர்கள் சூத்திரன், பார்ப்பனரின் தாசி மகன் என்கின்ற சாஸ்திரங்களைப் பற்றியும், சாமிக்குப் பெண்களைப் பொட்டுக் கட்டி விடுவதைப் பற்றியும், சிறு பெண்களைக் கல்யாணம் செய்வதைப் பற்றியும், பெண்களை அடிமைப்படுத்துவதைப் பற்றியும் மக்களுக்கு எடுத்துச் சொல்வது “வேதசாஸ்திரங்கள் தெரியாதவன் அதில் பிரவேசித்த குற்றமாவதால் அவனைத் தண்டிக்க வேண்டியது சர்க்கார் கடமை” என்றும் (இக்கருத்து வரவேற்பு அக்கிராசனர் உபன்யாசத்தில் இருக்கிறது) திரு. முத்துலக்ஷிமி அம்மாள் மசோதாவையும் திரு. சாரதா மசோதாவையும் சட்டசபையில் எடுத்துச் சொல்லி சட்டம் செய்ய கெஞ்சினால் அது “சர்க்கார் மதத்தில் பிரவேசித்த குற்றம்” என்றும் ஆகின்றது.”

எனவே, இந்த நிலையில் நாம் பார்ப்பனரல்லாத மக்களை குறிப்பாக, ‘இந்து மதத்தையும்’ அதன் ‘உள் சமயங்களையும்’ ஆதரிக்கவே கங்கணம் கட்டிக் கொண்டிருக்கும் ‘தேசீய வீரர்களை’யும் ‘சமயக் காப்பாளர்களையும்’ ஒன்று கேட்கின்றோம்.

அதாவது, ஓ அய்யன்மீர்! நீங்கள் இந்து மதத்திற்கு ஆதாரம் என்பதான வேத சாஸ்திர புராணங்களை (சுருதி ஸ்மிருதிகளை) ஒப்புக் கொள்ளுகின்றீர்களா? முதலாவது உங்களுக்கு அவைகளில் என்ன இருக்கிறது என்பது தெரியுமா? ஒப்புக் கொள்வதனால் அவற்றில் கண்டபடி நடக்கத் தயாராயிருக்கின்றீர்களா? தயாராயிருப்பதானால் அதன் கருத்துப்படி நீங்கள் யார்? ‘இந்து’ மதத்தில் உங்கள் நிலை என்ன? ஒப்புக் கொள்ளவில்லையானால் இந்து மதத்தையும் உள் சமயத்தையும் காப்பாற்ற வேண்டும் என்பதின் கருத்து என்ன? யாரிடம் கூலி வாங்க இந்த வேஷம்? என்பதுதான்.

மற்றபடி, “திரு. நாயக்கர் பார்ப்பனர்களைத் திட்டுவதில் நமக்கு ஆnக்ஷபணை இல்லை, மதத்தில் கை வைப்பது தான் நமக்கு அதிக வருத்தமாயிருக்கின்றது. திரு. நாயக்கரால் ஜஸ்டிஸ் கக்ஷிக்கே ஆபத்து வந்து விடும் போலிருக்கின்றது. நாயக்கர் போகின்ற போக்கைப் பார்த்தால் நானே ஜஸ்டிஸ் கக்ஷியில் இருக்க முடியாது போல் இருக்கின்றது” என்று சொல்லிக் கொண்டு பிரசவ வேதனைப் படுகின்றவர்களையும் ஒன்று கேட்கின்றோம். அதாவது, இந்தக் கேள்வி பாமர மக்களில் இப்படிக் கேட்பவர்களை அல்ல. சட்டசபை மெம்பர்களையும் மந்திரிகளையும் ஜஸ்டிஸ் கக்ஷி மூலம் பெரிய மனிதர்களான தலைவர்கள், ஜட்ஜிகள், ஜில்லா, தாலூகா போர்ட் முனிசிபாலிட்டி தலைவர்கள், மெம்பர்கள், சைமன் கமிட்டி அங்கத்தினர்கள், இயக்கத் தலைவர்கள் முதலிய பிரமுகர்களையே கேட்கின்றோம்.

அதாவது, நீங்கள் எந்த அளவில் இந்துக்கள்? உங்களுக்குத் தர்மம் என்ன? சமயம் என்ன? இவற்றிற்கு ஆதாரம் என்ன? அவைகளின்படி உங்களால் நடக்க முடியாவிட்டாலும், நீங்கள் அவைகளை ஒப்புக் கொள்ளுகின்றீர்களா? அப்படியானால் உங்களால் பார்ப்பனரல்லாத சமூகத்திற்கு மானமோ, சமத்துவமோ, உண்டாக முடியுமா? உங்களைத் தலைவர்களாகவும் அங்கத்தினர்களாகவும் ஆதரவுக்காரர்களாகவும் கொண்ட கக்ஷி உயிருடன் இருக்க வேண்டுமா? என்பவைகளே யாகும்.

எனவே, நாம் மதத்தைப் பற்றியோ, வேதத்தைப் பற்றியோ, புராணங்களைப் பற்றியோ, அப்புராணங்களில் காணும் கடவுள்களைப் பற்றியோ வேண்டுமென்றே குற்றம் சொல்லுகின்றோமா, அல்லது அவற்றால் நாம் என்றென்றைக்கும் தலையெடுக்க முடியாத படிக்கு அழுத்தி வைத்திருப்பதால் குற்றம் சொல்லுகின்றோமா என்பதை உணர்ந்து பார்க்கும்படி வாசகர்களை வேண்டுகின்றோம்.

(குடி அரசு - தலையங்கம் - 03.02.1929)