periyar and ku ma subramaniam

(பெரியாருடன் பொறியாளர் கு.ம.சுப்பிரமணியம்)

காலஞ்சென்ற தமிழ் தேசீயகவி சி. சுப்பிரமண்ய பாரதியவர்களின் தேசீய நூல்களின் முதலிரண்டு பாகங்களை சென்னை அரசாங்கத்தார் அராஜக நூல்களென்று பறிமுதல் செய்திருப்பதாகத் தெரிகிறது. அந்நூல்கள் பறிமுதல் செய்யப்படுவதற்கு காரணம் ஜஸ்டிஸ் கட்சியார்தான் என்று “தமிழ்நாடு” பத்திரிகை ஜஸ்டிஸ் கட்சியார் மீது வீண் பழி சுமத்துகிறது.

சென்னை அரசாங்கத்தார்  நூல்களை பறிமுதல் செய்வதற்கு முன்னரே பர்மா அரசாங்கத்தார் பறிமுதல் செய்தனரே அதற்கு யார் காரணம் என்று “தமிழ்நாடு” கூறுமா? பர்மா அரசாங்கம் பறிமுதல் செய்த புஸ்தகத்தை சென்னை கவர்மெண்டாரும் பறிமுதல் செய்ய வேண்டும் என்ற ஒரு அரசாங்க முறை இருந்து வருவதால் நூல்களை சென்னையில் பறிமுதல் செய்ததற்கு பர்மா கவர்மெண்டார் தான் காரணம் என்று சுதேசமித்திரன் பத்திரிகையும் கூட சொல்லியிருக்கிறது. ஆகவே இந்த பறிமுதலுக்கு ஜஸ்டிஸ் கக்ஷியார் எந்த விதத்திலும் காரணமாயிருக்கவில்லை.

பறிமுதல் செய்யப்பட்ட ஸ்ரீசுப்பிரமண்ய பாரதியாரின் நூல்களில் ராஜீயத்தைவிட பார்ப்பனீயமே மிகக் கடுமையாகக் கண்டிக்கப் பட்டிருப்பதால் அவை பறிமுதல் செய்யப்பட்டதற்கு யார் காரணமாயிருந்திருக்கலாம் என்பதை அறிந்தும் அறியாததுபோல் ஜஸ்டிஸ் கட்சியாரை “தமிழ்நாடு” தாக்குவதைப் பார்த்தால் அதைக் ‘கோடாரிக்காம்பு’ என்று சொல்லுவதா அல்லது பழியோரிடம் இருக்க பாவத்தையோரிடம் சுமத்துகிற தென்பதா?

(குடி அரசு - துணைத் தலையங்கம் - 30.09.1928)