Periyar 235சூத்திரன் என்கிற வார்த்தையானது இழிவான அர்த்தத்தைப் புகட்டி வஞ்சனையாக ஏற்படுத்தப்பட்டதென்றும், அது பார்ப்பனர்களின் சூழ்ச்சியால் பார்ப்பன ஆதிக்கத்திற்காக உண்டாக்கப்பட்டதென்றும், அவ்வார்த்தை நமது நாட்டில் எந்த விதத்திலும் நம்ம தலையில் இருக்கக் கூடாதென்றும், கிளர்ச்சி செய்து அதில் ஒரு விதமான வெற்றிக்குறி காணப்படுகிற காலத்தில் சர்க்காராரே சூத்திரன் என்கின்ற பதத்தை உபயோகித்து வருகின்றார்கள் என்றால், இந்த சர்க்காருக்கு கடுகளவாவது மக்களின் யோக்கியமான உணர்ச்சியில் கவலை இருப்பதாக யாராவது எண்ணக்கூடுமா? பார்ப்பனர்களே இப்போது சூத்திரன் என்று சொல்ல பயப்படுகிறார்கள். அவர்கள் எழுதி கட்டித் தொங்கவிட்டிருந்த போர்டு பலகைகளையெல்லாம் அவிழ்த்தெறிகின்றார்கள். வாழ்க்கையில் இப்போது சூத்திரன் என்கின்ற சப்தம் பார்ப்பனப் பெண்களிடையும் கோமட்டி செட்டியார்கள் என்கின்ற ஒரு வகுப்புப் பெண்களிடையும் தான் இப்போது உச்சரிக்கப்பட்டு வருகின்றது. மற்ற இடங்களில் நாளுக்குநாள் மறைந்து கொண்டே போகின்றது.

அப்படி இருக்க சர்க்காரில் அதுவும் ஒரு பார்ப்பனரல்லாதாராகிய ஒருவரின் ஆதிக்கத்தில் உள்ள இலாகாவில் அதுவும் நமக்கே முழு அதிகாரமும் கொடுத்திருப்பதாக பிரித்து விடப்பட்டதான மாற்றப்பட்ட இலாகாவாகிய ஸ்தல ஸ்தாபன இலாக்காவில் அதுவும் ஜாதி வித்தியாசமில்லை, பிறவியில் உயர்வு தாழ்வு இல்லை என்கிற கொள்கையை உடையவரும் அதை அமுலில் காட்டும் முகத்தால் ஒரு பார்ப்பன பெண்மணியை மணந்தவருமான ஸ்ரீமான் டாக்டர் சுப்பராயக் கவுண்டர் அவர்களின் ஏகபோக ஆக்ஷியில் உள்ள இலாகாவில் பிராமணன், க்ஷத்திரியன், விஸ்வ பிராமணன், சவுராஷ்டிர பிராமணன், வைசியன், சூத்திரன், ஆதிதிராவிடன், ஒடுக்கப்பட்டவன், பிற்பட்டவன் என்று கலம் போட்டு பிரித்து சட்டசபைக்குத் தெரிவிப்பாரானால் அவரது புத்திக் கூர்மையை என்னவென்று சொல்லக்கூடும்.

நமக்கு இதைப்பற்றி அதிகமாக எழுத பல ஆதாரங்களும் ஆத்திரங்களும் இருந்தாலும் அடுத்தாப் போல் கூடும் சட்டசபை கூட்டத்தில் இக்குற்றத்தை உணர்ந்து சூத்திரன் என்ற வார்த்தை உபயோகித்ததற்கு வருந்தி அவ்வார்த்தையை தாம் உபயோகித்திருக்கிற அரசாங்க ஆதரவிலிருந்து எடுத்து விட நமது டாக்டர் சுப்பராய கவுண்டருக்கு ஒரு சந்தர்ப்பத்தை அளித்து அதில் அந்தபடி நடக்காவிட்டால் பிறகு மற்ற விவரங்கள் எழுதலாம் என்கிற எண்ணத்துடன் இதை இத்துடன் முடிக்கின்றோம்.

(குடி அரசு - துணைத் தலையங்கம் - 30.10.1927)