காங்கிரசின்போது காங்கிரசுப் பந்தலில் வருணாசிரம மகாநாடு என்பதாக ஒரு மகாநாடு நடக்கப் போவதாய் பல பத்திரிகைகளில் தெரிய வருகின்றது.

periyar 28வருணாசிரம மகாநாடு என்பது என்ன என்று நாம் மக்களுக்கு விளக்க வேண்டியதில்லை. ஆனாலும் சிறிது குறிப்பிடுவோம். என்னவெனில் உலகத்திலுள்ள மக்கள் எல்லாம் 6 வருணத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், அதாவது:- 1. பிராமணன் 2. க்ஷத்திரியன் 3. வைசியன் 4. சூத்திரன் 5. பஞ்சமன் 6. மிலேச்சன் என்பதாக பிரிக்கப்பட்டிருக்கின்றது என்றும், அதில் பிராமணன் உயர்ந்தவன் குருவாயிருக்கத் தக்கவன், க்ஷத்திரியன் அதைவிடத் தாழ்ந்தவன் அரசனாயிருக்கத் தக்கவன், வைசியன் அதைவிடத் தாழ்ந்தவன் வியாபாரியாய் இருக்கத் தகுந்தவன், சூத்திரன் அதைவிடத் தாழ்ந்தவன் மேல்கண்ட மூவருக்கும் அடிமையாய் இருக்க வேண்டியதோடு சிறப்பாக பிராமணர்களுக்கு அடிமையாகவும் இருப்பதுடன், சூத்திரனது பெண்களும் பொருள்களும் பிராமணர்களுக்கே உரியது என்றும், கொடுக்காவிட்டால் பலாத்காரத்தினால் பிடுங்கிக் கொள்ளலாம் என்றும், அவர் படிக்கவும் கடவுளை நெருங்கி வணங்கவும் உரிமையற்றவன் என்கின்றதுமான கொள்கையை கொண்டது. ஆதிதிராவிடர், ஆதிசூத்திரர், அவர்ணஸ்தர் நாம் சூத்திரர் என்பதான கோடிக்கணக்கான மக்கள் பஞ்சமர், அதாவது காணவும், நெருங்கவும், நிழல் மேலே படவும், பேசவும், வழியில் நடக்கவும், கோயில் என்பதில் நுழையவும், கடவுள் என்பதை தரிசிக்கவும் உரிமை இல்லாததான கொள்கையைக் கொண்டது.

மிலேச்சர்கள் என்பது மகமதியர், கிறிஸ்தவர்கள் மற்றும் இந்துக்கள் என்போரகளல்லாதவர்களையும், சமஸ்கிருதம் தவிர மற்ற பாஷை பேசுகின்றவர்களையும் குறியாய் கொண்டது. இந்து சாஸ்திரங்கள் மதத் தத்துவங்கள் என்பவைகளின்படி பஞ்சமர், மிலேச்சர் என்பதற்கு ஆதாரம் இல்லாவிட்டாலும் பார்ப்பன செல்வாக்காலும் அவர்களினது அவசியத்தாலும் இவ்விரண்டு வகுப்புகளும் ஏற்பட்டு பழக்கத்திற்கும் எப்படியோ ஆதியில் கொண்டு வந்து விடப்பட்டு விட்டது. ஆனால் இப்போது இவைகளுக்கு பல தகராறுகள் ஏற்படுவதால் ஆறு வருணத்தையும் இரண்டு வருணமாக்கி, அதாவது கலியுகத்தில் பிராமணன், சூத்திரன் என்னும் இரண்டைத் தவிர வேறு வருணம் இல்லை என்பதாக முடிவுகட்டி அதையே மதத் தத்துவமாகவும் ஆக்கி விட்டார்கள். ஆனாலும் இப்பார்ப்பனர் பேச்சை நம்பி ஆதியில் பூணூல் போட்டுக் கொண்ட பலர் தங்களை பிராமணன், க்ஷத்திரியன், வைசியன் என்று கொண்டிருந்தவர்கள், இப்போது தகராறு செய்ய வருவதால் அதற்கு அவர்கள் ஏமாறும்படி சமயத்திற்கு ஏற்ற தந்திரங்கள் செய்து நமது பார்ப்பனர்கள் தப்பித்து வருகிறார்கள்.

இது எப்படி இருந்தாலும் ஸ்ரீமான் காந்தி அவர்களாலேயே இந்த வருணாசிரம அடிப்படைத் தத்துவமும் கொள்கையும் ஒப்புக் கொண்டாய் விட்டது. அதாவது பார்ப்பனர்களுக்கும், ஸ்ரீகாந்திக்கும் வர்ணம் நான்கு என்பதிலும், அவைகளுக்கு பார்ப்பனர்கள் சொல்லுகின்றபடியே நான்கு தொழில்கள் உண்டு என்பதிலும், அதுவும் பார்ப்பனர்கள் சொல்லுகின்றபடியே பிறவியில் பிராமணன், க்ஷத்திரியன், வைசியன், சூத்திரன் ஏற்படுகிறான் என்பதிலும் யாதொரு அபிப்பிராய வித்தியாசமுமில்லை. ஆனால் வருணம் ஆறா அல்லது நான்கா அல்லது இரண்டா என்பதுதான் இப்போது ஸ்ரீகாந்திக்கும் பார்ப்பனருக்கும் சண்டை. பார்ப்பனர்கள் இரண்டு வருணம்தான், அதாவது பிராமணன், சூத்திரன் என்பதாக சொல்லுகிறார்கள். ஸ்ரீகாந்தி நாலு என்கின்றார். இந்த வாதில் நமக்கு எவ்வித லாபமும் இல்லை. ஏனெனில் பார்ப்பனர்கள் கொள்கைப்படியும் ஸ்ரீகாந்தி அவர்கள் கொள்கைப்படியும் நாம் சூத்திரர்களில்தான் சேர்க்கப்படுகின்றோமே ஒழிய வேறில்லை. சூத்திரனின் தருமம் பார்ப்பானுக்கு வேலை செய்ய வேண்டியது. இது பிறப்புரிமை என்று இருவரும் சொல்லுகின்றார்கள். ஆதலால் இம்மாதிரி கொடுமையுள்ளதும் அயோக்கியத்தனமானதுமான ஒரு கொள்கை கொண்ட வருணாசிரம தர்மம் என்பதாக ஒரு மகாநாடு நடப்பதை எப்படிப் பொதுமக்கள் பொறுத்துக் கொண்டிருப்பார்கள் என்று பார்ப்பனர்கள் நினைத்திருக்கின்றார்கள் என்பது நமக்கு விளங்கவில்லை.

உலகத்தில் இதுசமயம் எழுந்திருக்கும் சுயமரியாதை உணர்ச்சியைப் பார்த்த பிறகும் சர்க்கார் எப்படி இவ்வித போக்கிரித்தனங்களுக்கு இடம் கொடுத்துக் கொண்டு வருகிறார்கள் என்பதும் நமக்கு விளங்கவில்லை. சாதாரணமாக ரங்கிலாரசூல் என்ற மகமதிய மத தலைவராகிய ஸ்ரீமான் மகமது நபி அவர்கள் விபசாரம் செய்தார் என்கிற தத்துவம் கொண்ட துண்டு விளம்பரம் போட்டதற்காக பல விவகாரங்களும் பல கொலைகளும் கூட நடந்து வருவதுடன், ஏதோ ஒரு பெரிய சதியாலோசனைக் கூட்டமும் பின்னால் இருந்து கொண்டு, இனியும் வெகு பேரை கொலை செய்யக் காத்திருப்பதாகவும் சந்தேகப்படும்படியான காரியங்கள் நடந்து வருகின்ற இக்காலத்தில், ஒரு பெரிய சமூகத்தையே ஒரு சிறு கூட்டத்தாராகிய சோம்பேறிகள், தங்களுக்கு பிறவி அடிமைகள் என்றும், அவர்களது பெண்கள் எல்லாம் தங்களுக்கு வைப்பாட்டிகள் என்றும், அவர்கள் பேசுவது மிலேச்ச பாஷை என்றும், அவர்களது சொத்துக்கள் எல்லாம் தாங்கள் பலாத்காரத்தினால் பிடுங்கிக் கொள்ளலாமென்றும், இனியும் என்ன என்னமோ இழிவுக் கொள்கைகள் கொண்டதான ஒரு விஷயத்தை நிலைநிறுத்த ஒரு மகாநாடு கூட்டினால் மக்கள் எந்த விதத்தில் பொறுமையோடு இருப்பார்கள் என்று நமது சர்க்காரார் நினைத்துக் கொண்டிருக்கிறார் என்பது நமக்கு விளங்கவில்லை. எப்படியாவது கலகத்திற்கும் அடிதடி சண்டைக்கும் இடம் கொடுத்து கொலைகள் நடக்கின்ற தருணம் வந்தால்தான் தங்கள் அக்கிரம ஆட்சி நடைபெற சவுகரியம் ஏற்படும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றுதான் நினைக்க வேண்டி இருக்கிறது.

(குடி அரசு - தலையங்கம் - 30.10.1927)