ஸ்ரீமான் ஜார்ஜ் ஜோசப் மதுரையில் ஒர் பிரபல பாரிஸ்டர். நல்ல குடும்பத்தில் பிறந்து நல்லொழுக்கத்தில் சிறந்து அதிக வருமானமும் வக்கீல் தொழிலும் உடையவராய் மதுரைக்கு ஓர் மாமணியாய் விளங்கி வந்தவர். சேலம் ஸ்ரீமான் வரதராஜுலு நாயுடுவின் மேல் மதுரையில் கேசு ஏற்பட்டபோது, பொது வாழ்வில் உணர்ச்சி மேலிட்டு தீவிரமாய் ஜார்ஜ் ஜோசப் இறங்கி இடைவிடாத ஊழியம் புரிந்து வந்திருக்கிறார். மதுரை மில்களிலுள்ள தொழிலாளர்களின் கஷ்ட நஷ்ட காலங்களிலும், வேலை நிறுத்த காலங்களிலும் அவர்களுடன் கலந்து அதில் ஈடுபட்டு தம்மாலான சகல உதவிகளையும் தியாகத்துடன் செய்து வந்திருக்கிறார். மதுரை ஜில்லா கள்ள ஜன சமூகத்தாருக்கு ஏற்பட்ட கொடுமையான சட்டதிட்டங்களுக்கு அனாவசியமாய் அவர்கள் இரையாகாதிருக்கும்படி சாக்கிரதையாய் கவனித்து வந்தார். அவர்களுடைய சத்தியாக்கிரகத்தின் போதும், அவர்களுடைய சில கிராமங்களைப் போலீசார் கொளுத்தி பலரை சுட்டுக் கொன்று பலரைக் கைது செய்து பெண்டு பிள்ளைகளையும் இம்சித்து வந்த அந்தக் காலத்தில் ஸ்ரீமான் ஜோசப் தம் காலத்தையெல்லாம் கள்ளர்களுக்காகவே செலவிட்டு உதவி புரிந்து வந்ததை இன்றும் அந்த கள்ள மகாஜனங்கள் மறந்துவிடவில்லை. ஜார்ஜ் ஜோசப் (ரோஜாப்பூ துரை) என்று சொன்னால் கள்ளர் நாட்டில் கடவுளுக்குரிய மரியாதையும் பயபத்தியும் காட்டப்படும்.

periyar04ஒத்துழையாமைக் காலத்தில் தமது தொழிலை விட்டு காந்தி வழி நின்று சிறந்த தொண்டாற்றினார். வங்கத்தில் தாசைப்போல் தமிழகத்தில் ஜோசப் தியாகத்தில் முன்னின்றார். மனைவி மக்களுடன் வைக்கம் சென்று சத்தியாக்கிரகம் செய்து தீண்டாமைக்காகச் சிறை சென்றார். இவர் இல்லாத காலத்து மிக்க கஷ்ட நஷ்டத்தில் இவரில்லக் கிழத்தியார் அந்த சத்தியாக்கிரகத்தில் முன்னின்று வேலை செய்து வந்தார். பின்னர் அலகாபாத் சென்று “இண்டிபெண்டண்டு” என்ற தேசீய ஆங்கில தினசரிக்கு ஆசிரியராய் அமர்ந்து அரிய ஊழியம் புரிந்து வந்தார். அதன் பயனாய் ராஜ துவேஷத்திற்காக இரண்டு வருஷம் வட இந்தியாவில் கடுங்காவல் தண்டனையை அனுபவித்தார். மகாத்மா காந்தியடிகள் சிறையிலுள்ள போது சில காலம் ஸ்ரீமான் ஜோசப் வெளியிலிருக்க நேர்ந்தது. அப்போது காந்தியடிகளுக்கு பதிலாக அவர் ஸ்தானத்தில் அமர்ந்து காந்தியடிகள் பத்திரிகையாகிய “யங் இந்தியா”வை ஆசிரியராக இருந்து நடத்தி வந்தார். காந்தி விடுதலை பெற்றதும் வட இந்தியாவிலிருந்து தமிழ்நாடு வந்து மதுரையம்பதியை அடைந்தார். அடிகளின் பர்டோலி தீர்மானமும், ஒத்துழையாமையைக் கொன்ற சுயராஜ்யக் கட்சியாரின் சட்டசபை நுழைவையும், பகிஷ்கார நிறுத்தத்தையும் காந்தி ஆதரிக்க முற்பட்டதின் பலனாய் அனேக உண்மைத் தொண்டர்களுக்கு ஏற்பட்ட வருத்தத்தைப் போலவே ஸ்ரீமான் ஜோசப்புக்கு மிகுந்த மன வருத்தமும், வெறுப்பும் உண்டாகி விட்டது.

தியாகமும் செய்து, காரியமும் கெட்டு, நாட்டில் ஆதரவும் இல்லாத போது வறுமைவாய்ப்பட்டு சுயமரியாதையை இழப்பதற்குச் சம்மதியாமல் மறுபடியும் மதுரையில் தம்முடைய வக்கீல் தொழிலை ஸ்ரீமான் ஜோசப் ஆரம்பித்தார். சிறிது காலத்திற்குள் ஆயிரத்திற்கு குறையாத வரும்படியையும் செல்வாக்கையும் பெற்று விட்டார். இவரிடம் தமிழ்நாட்டார் தங்களுக்குரிய மதிப்பையும் அன்பையும் காட்டுவதற்கறிகுறியாகவே இவர் தமிழ் மாகாண மகாநாடு சேலத்தில் கூடிய போது ஏகமனதாய் தலைவராகத் தெரிந்தெடுக்கப்பட்டார். இவ்வளவு செல்வாக்கும், பெரும் புகழும், கீர்த்தியும் வாய்ந்த திரு ஜோசப் திடீரென்று பிராமணர்களின் மாயவலைக்குள் சிக்கி சுயராஜ்யக் கட்சியை ஆதரிக்க முன் வந்தார். ஜஸ்டிஸ் கட்சியை மிகவும் பலமாய் தாக்கி பனகால் மந்திரி சபையையும் உடைப்பதற்காக அரும்பாடு பட்டார். சுயராஜ்யக் கட்சியாரைவிட இன்னும் ஒருபடி அதிகமாய் போய் ஸ்ரீமான் நாயுடு சொன்னது போலவே சட்டசபையில் மந்திரி உத்தியோகம் முதலானவைகளையும் கூட ஒப்புக் கொள்ள வேண்டுமென்றார். உண்மையான ஒத்துழையாமைக்கும் மாறுபட்ட அபிப்பிராயங்கொண்டு பிராமணர்களுக்கும் சுயராஜ்யக் கக்ஷியாருக்கும் ஆபத்தில் உற்றத் துணையாக விளங்கினார்.

டாக்டர் சுப்பராயன் மந்திரி சபையை ஆதரித்து சுயராஜ்யக் கக்ஷியாரின் மறைவான வேண்டுகோளை நிறைவேற்றி வைக்க மதுரையில் அக்கிராசனம் வகித்து பேசியும் பல ஆதரவுக் கடிதங்கள் எழுதியும் வந்தார். மதுரையில் நடந்த பிராமணரல்லாதார் மகாநாட்டின் நடவடிக்கைகளில் கூட கலந்து கொள்ளாமல் பிராமணர்களுக்கு பயந்து கொண்டு சும்மா இருந்து விட்டார். கோவை மகாநாட்டில் பிராமணர், பிராமணரல்லாதாருக்கு ஒற்றுமை ஏற்படப் போவதை அறிந்து பிராமணர்களின் கட்டளை பெற்று அந்த மகாநாட்டை தாக்கி எழுதியபோது தானும் அதில் கலந்து கொள்ளாமல் தனித்து நின்று விட்டார். இம்மாதிரி மதுரையில் ஸ்ரீமான் ஜார்ஜ் ஜோசப் தனது உழைப்பு, தியாகம், தீவிரக் கொள்கை இவற்றையெல்லாம் விட்டு பிராமணர்களுக்கு அடிமையாயிருந்து வந்ததால் பிராமண பத்திரிகைகளான ஹிந்துவும், மித்திரனும், சுயராஜ்யாவும் ஸ்ரீமான் ஜோசப் தும்மினாலும், இருமினாலும், மூச்சு விட்டாலும், பேசினாலும், எழுதினாலும், தந்தியில் அவைகளை வரவழைத்து பெரிய எழுத்தில் பிரபலமான இடத்தில் பிரசுரித்து அவசியமாயின் அதன் பேரில் தலையங்கங்களையும் எழுதி வந்தன. அசோசியேட் பிரசும், பிரீ பிரசும், ஜோசப் வீட்டு வாயிற்படியை காத்துக் கொண்டிருந்தன.

இப்படி எல்லாம் இருந்த ஸ்ரீ ஜார்ஜ் ஜோசப் அவர்களுக்கு இப்போது பிராமணர்களும் சுயராஜ்யக் கட்சியாரும், பிராமணர்கள் ஆதிக்கம் நிறைந்த காங்கிரஸ் கட்சியாரும் பிராமணப் பத்திரிகைகளாகிய ஹிந்து, மித்திரன், சுயராஜ்யாவும் என்ன சன்மானம் செய்தன என்பதை யோசித்துப் பாருங்கள். கேவலம் ஒருசிறு முனிசிபாலிட்டியில் உள்ள ஒரு முனிசிபல் கவுன்சிலர் ஸ்தானத்தைக்கூட அவர் அடைய முடியாமல் செய்து கைவிட்டு விட்டனர். ஸ்ரீ ஜோசப்பின் உதவியைக் கொஞ்சமும் நினையாமல் அவர் செய்த பனை அளவு நன்றிக்கு பதிலாக பிராமணர்கள் தினையளவு நன்றி கூடக் காட்டத் தயாராயில்லாமல் ஒரே அடியாய் தங்கள் இனத்தாரையே ஆதரித்து விட்டார்கள்.

 “எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்நன்றி கொன்ற மகற்கு”

என்ற பொய்யா மொழி வாக்கை பொய்யாக்க வந்த பிராமணர்களுக்கு நான் மனமாற நன்றி செலுத்துகின்றேன். மதுரையில் இவ்வாறு பிராமணர்கள் செய்திராவிடில் சேலத்தில் ஸ்ரீ. பி. சுப்பராவ் மூன்று ஓட்டுகள் மட்டும் பெற்று நம்மை கௌரவித்திருப்பாரா? ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீமான் கே.வி. ரங்கசாமி அய்யங்கார் எம்.எல்.ஏ யும், அவர் தம்பி ஸ்ரீமான் கே.வி. ஸ்ரீனிவாசய்யங்காரும், சென்னையில் காமத்தும், மற்றும் ஆங்காங்கு பார்ப்பன அபேக்ஷகர்களும் வரிசையாய் தோல்வி அடைந்து இருக்க முடியுமா? மதுரையில் ஸ்ரீஜோசப் முனிசிபல் கவுன்சிலின் ஒரு ஸ்தானத்திற்கு அபேக்ஷகராய் காங்கிரஸ் சுயராஜ்யப் பிராமண கட்சியாராலேயே நிறுத்தப்பட்டார். உள்ளே பகையும் உதட்டில் உறவும் வைத்துள்ள பிராமண காங்கிரஸ் ஓட்டர்கள் மறைவாய் ஸ்ரீ ராமனாதய்யரை எதேச்சைவாதியாய் நிற்கும்படி செய்து ஓட்டுக் கொடுத்து வெற்றியை உண்டாக்கி ஸ்ரீ. ஜோசப்பை தோல்வியுறும்படி செய்து அவமானப்படுத்திவிட்டார்கள். “குதிரை கொன்றதுமல்லாமல் குழியையும் தோண்டுவது” போல ஸ்ரீ ராமனாதய்யர் தாம் தான் ஓட்டர்களால் விரும்பப்பட்ட உண்மையான காங்கிரஸ்வாதி என்றும் ஸ்ரீ ஜோசப் மகா ஜனங்களால் வெறுக்கப்பட்ட படியால் தோல்வியுற்றார் என்றும் சொல்ல முன்வந்து விட்டார். அந்த டிவிஷனில் உள்ள பிராமண ஓட்டர்களும், ஸ்ரீ ஜார்ஜ் ஜோசப் தங்களை பயமுறுத்தி ஓட்டை அடைய முயற்சித்ததால் ஸ்ரீராமனாதய்யருக்கே தங்கள் ஓட்டுகளை எல்லாம் கொடுத்ததாகவும்கையெழுத்திட்டு மித்திரனில் பிரசுரித்திருக்கிறார்கள்.

ஸ்ரீஜோசப் தோல்வியிலிருந்து அவருடைய பெரிய பிரசங்கங்களும் அறிக்கைகளும் பிராமண பத்திரிகைகளில் இடம்பெற முடியவில்லை. அவரை ஏமாற்றி ஜெயித்து விட்டதாகக் கூறி ஆகாயத்தில் பறக்கும் குப்பை கூளம் பதர்களின் பல கடிதங்கள், தந்தி மூலம் இடம் பெற்று பிராமணப் பத்திரிகைகளில் பிரசுரிக்கப்பட்டு வருகின்றன. காங்கிரசினிடமிருந்து ஸ்ரீமான்கள் பி.வரதராஜுலு நாயுடு, ஈ.வெ.ராமசாமி நாயக்கர், திரு.வி. கலியாணசுந்தர முதலியார் போன்றவர்களை நீக்கி விட்டு காங்கிரசை பரிசுத்தப்படுத்த எண்ணிப் பேசிய ஸ்ரீ.சீனிவாசய்யங்காரைப் பின்பற்றி மதுரைப் பிராமணர்களும் ஸ்ரீ.ஜோசப்பை காங்கிரசினின்றும் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்காமல் விலக்கி மதுரையையும், மதுரைக் காங்கிரஸ் கமிட்டியையும் பரிசுத்தப்படுத்தி புண்ணியாவாஹம் செய்து விட்டார்கள். இதை மறைப்பதற்காக ஸ்ரீ ராஜகோபாலாச்சாரியார் மகாத்மா காந்தியை ஜோசப் வீட்டில் இறக்கி அவரைக் கொண்டு ஸ்ரீ ஜோசப்புக்கு ஆறுதல் சொல்ல செய்திருக்கிறார். இவற்றையெல்லாம் பார்க்கும் போது இவ்வளவு காலம் தாழ்ந்தும் இவ்வளவு அனுபோகம் பிறந்தும் ஸ்ரீ ஜார்ஜ் ஜோசப்பிற்கு இன்னும் சரியான புத்தி வந்ததாகத் தெரியவில்லை. இன்னும் பிராமண மயக்கமும், சூழ்ச்சியும் தம்மை விழுங்கிவிட்டதிலிருந்து மீள முடியாமல் தவிக்கிறார். பார்ப்பனரை விட்டுப் பிரிந்தால் வாழ முடியாது என்று நினைக்கிறார்.

எப்படியெனில் இத்தோல்வியை ஆதாரமாகக் கொண்டு தாம் பிராமணர்களிடத்தில் போய் பிரசாரம் செய்து அவர்களை நல்வழியில் திருத்தப் போகிறாராம். எத்தனையோ காலமாய் எத்தனையோ பெரியார்களால் திருத்தமுடியாத பிராமணர்களை ஸ்ரீ ஜோசப் திருத்துவது நரியைப் பரியாக்குவது போல்தான் முடியும். எப்படியாவது போகட்டும் கெட்டவர்களுக்குப் பட்டது பிரீதி; எனினும் அவருக்கு ஒன்று சொல்லுவோம். அதாவது இப்பொழுதாவது பிராமணரல்லாதவர்களுடன் ஒன்று கூடி பிராமணர்களின் வகுப்பு வாதத்தைப் பற்றி எச்சரிக்கை செய்து சாக்கிரதையாய் இருக்கும்படி நாட்டிற்கு பிரசாரம் செய்தால் ஸ்ரீ.ஜோசப், தமக்கும் தம்முடைய வகுப்பிற்கும் நன்மை செய்தவராகக் கருதப்படுவார். இதை செய்யாமல் மறுபடியும் விரோதிகளுக்கே உடந்தையாயிருந்து உதைத்தக் காலுக்கு முத்தம் கொடுத்துக் கொண்டிருந்தால், அவர் மற்றொரு தோல்வி பெற்று நமக்கிடையில் வந்து சேரும் வரை பிராமணரல்லாத சமூகம் ஸ்ரீ ஜோசப்புக்காகக் காத்திருக்க முடியாதென்பதை அவருக்கு பணிவுடன் அறிவிக்கிறோம்.

பிராமணரல்லாத சகோதரர்களே! நீங்கள் மதுரையில் நடந்ததை ஸ்ரீ ஜோசப்புக்கென்று நினைத்து பாராமுகமாயிருக்க வேண்டாம். அது பிராமணரல்லாதார் ஒவ்வொருவருக்கும் பிராமணர்களால் வழக்கம் போல் ஏற்படுத்தப்பட்டு வருகிற அநீதி, அக்கிரமம், சூழ்ச்சி என்று உணர்ந்து ஒற்றுமைப்பட்டு தமிழ்நாட்டிலுள்ள எல்லா பிராமணரல்லாதாரும் ஸ்ரீ ஜோசப் கற்ற பாடத்தால் எச்சரிக்கையாயிருந்து பிராமணர்களிடமிருந்து தப்பி, சுயமரியாதையையும், சுயராஜ்ய ஸ்தாபனங்களையும் அடைந்து ஜெயக்கொடி நாட்டும்படியாய் வேண்டிக் கொள்கின்றோம்.

(குடி அரசு - தலையங்கம் - 23.10.1927)