periyar and maniyammai 670ஸ்ரீமான் எஸ்.ராமநாதன் காரைக்குடியில் சொன்னதாகக் காணப்படும் கதர் இயக்க சம்மந்தமான விஷயங்களுக்கு பதில் அடுத்த வாரம் எழுதுவதாய் குறிப்பிட்டிருந்தோம். காரணம் என்னவென்றால் அவ்வார்த்தைகள் உண்மையாய் ஸ்ரீமான் ராமநாதன் அவர்களால் வெளியிடப்பட்டதுதானா என்றறிவதற்காக வேண்டியே அப்படி எழுதியிருந்தோம். ஆயினும் இதுவரை அவற்றை மறுக்கத்தக்க விஷயம் ஒன்றும் நமக்கு எட்டவில்லை. ஆதலால் அவற்றிற்கு நம்முடைய சமாதானத்தை எழுதிவிட வேண்டியவர்களாகிறோம். ஏனெனில் மக்களை ஏமாற்றி சிலர் பிழைப்பதற்காக செய்யப்படும் சூழ்ச்சிகளை நாம் கண்டிக்கப் புறப்படும்போதெல்லாம், இதுவரை நமது கண்டனத்தை கண்டிக்க வந்தவர்கள் ஒருவராவது நாம் என்ன சொன்னோம், அதற்கு அவர்கள் சொல்லுகிற பதில் என்ன? என்பதைக் காட்டாமல், வகுப்புத் துவேஷம், வகுப்பு உணர்ச்சி, பொறாமை, குரோதம் என்கிற வார்த்தைகளைச் சொல்லி தப்பிக்கவோ, மழுப்பவோ, ஏமாற்றவோ, பார்க்கிறார்களேயல்லாமல் யோக்கியப் பொறுப்புடன் நடந்து கொள்பவர்களை காண்பது அரியதாய் விட்டது. அப்படிப்பட்ட சமயத்தில் ஸ்ரீமான்கள் ராமநாதன், காசி விஸ்வநாதஞ் செட்டியார் சம்பாஷணையானது, நாம் பொறாமை, வகுப்புத் துவேஷம், குரோதம் காரணமாக செய்து வருகிறோமா அல்லது உண்மையை மக்களுக்கு அறிவித்து பாமர மக்களை ஏமாற்றத்திலிருந்து தப்புவிக்கச் செய்து வருகிறோமா என்பதை வெளிக்காட்ட ஒரு நல்ல சந்தர்ப்பமாய் கிடைத்திருக்கிறபடியால், நாம் இவ்விருவருக்கும் நன்றி செலுத்த கடமைப் பட்டதோடு இந்த சந்தர்ப்பத்தை விட்டுவிடவும் நமக்கு மனம் வரவில்லை. தவிர, அவற்றுள் இரண்டு அம்சம் அடங்கிக் கிடக்கின்றது. ஒன்று, பொது விஷயம். அதாவது கதர் இயக்க சம்பந்தமானது.

மற்றொன்று தனிப்பட்ட விஷயம். அதாவது ராமசாமி நாயக்கரையும் “குடிஅரசை”யும் “திராவிடனை”யும் தாக்குவது. இவற்றுள் முதல் விஷயத்தைப் பற்றியே இப்போது இதில் சமாதானம் சொல்லுகிறோம். தனிப்பட்டதைப் பற்றி பின்னால் சொல்லுவோம். ‘ஊழியனில்’ கண்ட சம்பாஷணையில் முக்கியமானவைகளில் சிலவற்றை இங்கு குறித்து சமாதானம் சொல்லுவோம்.

“கதர் இலாகாவில் உள்ள சிப்பந்திகளில் பிராமணர்கள் எத்தனைபேர், பிராமணரல்லாதார் எத்தனைபேர்” என்ற ஸ்ரீ காசி விஸ்வநாதஞ் செட்டியார் கேள்விக்கு சுமார் சரிபகுதி பிராமணர்களும், சரிபகுதி மற்றவர்களும் இருக்கலாம் என்பதாக பதில் கூறியிருக்கிறார். ஜனத்தொகையில் அதிகமாயிருக்கும் பிராமணரல்லாதார்களை அவர்கள் தொகைக்குத் தக்கப்படி நியமிக்காததின் காரணம் என்ன?

இதற்கு ஸ்ரீமான் ராமநாதனின் பதில், சர்க்கா சங்கத்தின் சிப்பந்திகள் , நிர்வாகிகள் சம்பந்தப்பட்ட வரையில் பிராமணர்களைக் காட்டிலும் தகுதி பெற்று கதர் வேலை செய்யும் தொண்டர்களைத் தான் வழக்கமாகவும் முறையாகவும் வைத்து கொண்டிருக்கிறேன்.

பிராமணரல்லாத தொண்டர்கள் அகப்படாவிட்டால்தான் பிராமணர்களை ஏற்றுக் கொண்டு வந்திருக்கிறேன். இதில் முதல் கேள்விக்கு பதில் சொன்ன விஷயத்தைப் பற்றி இது உண்மைக்கு மாறுபட்டது என்று வருத்தத்துடன் கூறுகிறோம். அதற்கு புள்ளி விபரமும் தருகிறோம். கீழ்க்கண்ட புள்ளி விபரத்தை நேயர்கள் பொறுமையுடன் கவனிக்க வேண்டும்.

கதர் இலாகாவை மூன்று முக்கிய பிரிவுகளாகப் பிரிக்கலாம். அவை நிர்வாகம், உற்பத்தி, விற்பனை ஆகியவைகள். இம்மூன்று பிரிவுகளிலும் உள்ள பார்ப்பனரல்லாதார் கணக்கைக் குறிப்பிடுகிறோம். இக்குறிப்புகள் தான் நம்மை முதல் முதல் கதர் நிர்வாகத்தைப் பற்றி எழுதச் செய்தது. இவற்றில் ஏதாவது சிறு பிழைகள் இருந்தாலும் இருக்கலாம். அதுவும் ஏற்பட நியாயமில்லை.

(1.) நிர்வாகத்தில் அதாவது ஈரோட்டில் உள்ள அகில பாரத சர்க்கா சங்க நிர்வாக காரிய ஸ்தலத்தில் 16 பெயர்கள் இருக்கிறார்கள். அவர்களுள் 13 பேர் பார்ப்பனர், மூன்றே மூன்று பார்ப்பனரல்லாதார்தான் இருக்கிறார்கள்.

அவர்களது பெயர்களும் சம்பளமும்

பார்ப்பனர்கள்

ஸ்ரீமான்கள் உத்தியோகம் சம்பளம்

 1. V. சுப்பரமணியய்யர் கணக்கர் 45
 2. P.S.சீனிவாசய்யர் தபால் 35
 3. ஸ்ரீ கண்டய்யர் கணக்கர் 30
 4. அனந்தய்யர் தபால் 20
 5. நரசய்யர் கணக்கர் 25
 6. கோவிந்தராவ் கணக்கர் 20
 7. V.ராமசந்திரன் தபால் 25
 8. V.R. ராமசாமி அய்யர் ஸ்டோர் மானேஜர் 30
 9. S.D.சுப்பரமணியய்யர் குடி நூல் உதவி ஆசிரியர் 25 டிச 30
 10. N.S.வரதாச்சாரி இன்ஸ்பெக்டர் 30
 11. பார்த்தசாரதி அய்யங்கார் இன்ஸ்பெக்டர் 35
 12. T.ரங்கசாமி அய்யங்கார் இன்ஸ்பெக்டர் 30
 13. பாஷ்க்கர அய்யர் 30

பார்ப்பனரல்லாதார்

ஸ்ரீமான்கள் உத்தியோகம் சம்பளம்

 1. W.P. இக்னேஷியஸ் மானேஜர் 115
 2. வீராசாமி இன்ஸ்பெக்டர் 35
 3. ஈஸ்வரன் இன்ஸ்பெக்டர் 35

கதர் இயக்கத்தில் இந்த இலாகாவானது சர்க்காரில் சிக்ரெட்ரியேட் என்று சொல்லுவதற்கு சமானமான அவ்வளவு அதிகார பலமும் சூழ்ச்சித் தன்மை காட்ட சவுகரியமுமானது. எனவே இந்த ஸ்தாபனத்தில் 16-க்கு 13 பார்ப்பனர்களும் மூன்றே மூன்று பார்ப்பனரல்லாதாரும் இருந்தால் இது ஸ்ரீமான் ராமநாதன் சொல்லுகிறபடி சுமார் ‘சரிபகுதியா’ என்பதை யோசிப்பதுடன் இந்த பார்ப்பனக் கணக்கர், கரஸ்பான்டெண்ட் என்னும் தபால் இலாகாகாரர், இன்ஸ்பெக்டர்கள் ஆகியவர்களிடம் பார்ப்பனரல்லாத சிப்பந்திகள் எவ்வளவு பாடுபடுவார்கள் என்பதையும், அவர்கள் எவ்வளவு தூரம் தங்களது சுயமரியாதையை விற்றுப் பிழைக்கச் சம்மதமிருப்பதால் மாத்திரம் இந்த இலாகாவிற்கு வர சம்மதிப்பார்கள் என்பதையும், நேயர்கள் யோசித்துப் பார்க்க விரும்புகிறோம்.

இரண்டாவதான உற்பத்திலாகாவில், உற்பத்திலாகா நிர்வாக காரியாலயம், உற்பத்திலாகா கீழ்ப்பட்ட காரியாலயங்கள் என இருவகைப்படுத்தலாம்.

(2) இவற்றுள் உற்பத்திலாகா நிர்வாக காரியாலயம் என்பது திருப்பூரில் உள்ளது. இந்த காரியாலயத்தில் ஒட்டு மொத்தம் 10 உத்யோகஸ்தர்கள். அவர்களில் 8 பேர் பார்ப்பனர் 2 பேர் பார்ப்பனரல்லாதார். அதாவது:-

பார்ப்பனர்

ஸ்ரீமான்கள் உத்தியோகம் சம்பளம்

 1. திருநாராயணய்யங்கர் மானேஜர் 75
 2. ஆர்.வி.சர்மா சாய மானேஜர் 50
 3. என்.ராமய்யங்கார் கணக்கர் 40
 4. சாமிநாதய்யர் நூல் இலாகா 30
 5. பத்மநாப ராவ் தபால் இலாகா 30
 6. என்.எஸ்.சுப்பிரமணியய்யர் ஸ்டாக் இலாகா 30
 7. என்.எஸ்.கலியாணசுந்திரம் அய்யர் ஸ்டாக் இலாகா 25
 8. ராமய்யர் தெரியாது

பார்ப்பனரல்லாதார்

ஸ்ரீமான்கள் உத்தியோகம் சம்பளம்

 1. நாராயணசாமி பொக்கிஷதார் 45
 2. பஞ்சரத்தினம் சாய இலாகா 30

இந்த மானேஜர் கடின வருணாசிரமக்காரரும், கொடிய ஆசாரக்காரருமாவார். இவருக்குத் தீண்டாமை மாத்திரமல்ல பார்க்காமையும் உண்டு. இவரைப் பற்றி முன்னமே எழுதி இருந்தோம். அவரும் ஒப்புக் கொண்டு ராஜினாமா கொடுத்தார். ஆனால் கதர் இலாக்கா தலைவர் ஸ்ரீமான் எஸ்.ராமனாதன் அவர்கள் “இந்த காரணத்திற்காக ராஜினாமா கொடுத்தால் கதர் இலாகாவின் மீது குற்றம் சொன்னவர்கள் வெற்றியடைந்தவர்களாகி விடுவார்கள், ஆதலால் போகக்கூடாது” என்று கேட்டுக் கொண்டு, வருணாசிரமத்திற்கும், தீண்டாமைக்கும், பார்க்காமைக்கும், ஆசாரத்திற்கும், கதர் இலாகாவுக்கும் சம்மந்தமில்லை என்பதாக தீர்ப்புக்கூறி மறுபடியும் அவரை இழுத்து வைத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் மகாத்மா பணம் வசூல் செய்வதற்காக செய்யும் பிரசங்கத்தில் தீண்டாமைக்கும் கதருக்கும் சம்மந்தமுண்டு என்று சொல்லி பணம் வசூலிக்கிறார். இது வேறு விஷயமானதால் இதை இவ்வளவுடன் விட்டு விடுவோம். இம்மாதிரியான ஒரு பார்ப்பன அக்கிராரத்தின் கீழ் எப்பேர்ப்பட்ட பார்ப்பனரல்லாதாராயிருந்தால் வேலை பார்க்க முடியும் என்பதை நேயர்களே யோசித்துப் பார்த்துக் கொள்ள வேண்டியது. இனி உற்பத்தி இலாகா கீழ்த்தர காரியாலயங்களைப் பற்றி கவனிப்போம்.

(2) இந்த இலாகாவில் இருபது சிப்பந்திகள் இருக்கிறார்கள். இவர்களில் 10 பேர்கள் தான் பார்ப்பனர்கள். 10 பேர் பார்ப்பனரல்லாதார். ஏன் இதில் சரி சமமாக இருக்கிறது என்பதற்கு ஒருசமாதானம் வேண்டியிருக்கும். அதையும் வெளியிடுகிறோம். அதாவது இந்த வேலை மிகக் கடினமானது. எப்படியெனில் இந்த காரியாலயங்கள் ஏறக்குறைய பெரும் பகுதி கிராமம். ரயிலுக்கு 30, 40, 50 மைல் தூரமுள்ளது. வண்டி சவுகரியங்கள் கஷ்டமானது. தன் கையாலேயே பொங்கி சாப்பிட வேண்டியது. வேலை கடினமானது. அதாவது பஞ்சு கொடுக்கவும், நூல் வாங்கவும், நூல் கொடுக்கவும், துணி வாங்கவும், கணக்கு எழுதவும் ஆனவேலையோடு பார்ப்பனர்கள் சில இடங்களில் இருக்கவும் முடியாதது. எல்லாவற்றையும் விட கொஞ்சம் பணப் பொறுப்பும் வேண்டும். எனவே இதில் சரிபகுதி இருக்க நேர்ந்ததே அல்லாமல் வகுப்பு பார்த்து உத்தியோகம் கொடுத்ததாலல்லவென்றே சொல்லுவோம். ஆதலால் இதில் பெயர் சம்பளம் குறிக்கவில்லை.

(3) விற்பனை இலாகா தமிழ்நாட்டில் 15 இடங்களில் கதர் கடைகள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. அவற்றுள் ஒட்டு மொத்தச் சிப்பந்திகளில் 11 பார்ப்பனரல்லாதாரும் 10 பார்ப்பனர்களும் இருக்கிறார்கள். இதிலும், பார்ப்பனரல்லாதார் அதிகமாயிருப்பதற்குக் காரணம் இதுவும் உற்பத்திலாகா போலவே சற்று கஷ்டமான வேலை. ஏனெனில் சரக்கு விற்பனை செய்ய வேண்டும், கடையில் காத்திருக்க வேண்டும், டிபாசிட்டு கட்ட வேண்டும், பணம் பொறுப்பு வேண்டும். ஆகிய விஷயங்களால் பார்ப்பனரல்லாதார் சரி சமமாய் நியமிக்க நேர்ந்ததே தவிர பார்ப்பனரல்லாதார் என்கிற காரணத்தால் அல்ல. அன்றியும் டிப்போ மானேஜர்களில் பார்ப்பனரல்லாதாரிடமேதான் அதிகமாக டிபாசிட்டு வாங்கப்பட்டிருக்கின்றது.

தவிர, ஸ்ரீமான் ராமநாதன் அவர்களே, “பிராமணர்களைக் காட்டிலும் தகுதி பெற்று கதர் வேலை செய்ய முன்வரும் பிராமணரல்லாத தொண்டர்களைத்தான் ஏற்றுக் கொள்ளுவதை முறையாகவும் வழக்கமாகவும் வைத்துக் கொண்டிருக்கிறேன்” என்று அச்சம்பாஷணையில் சொல்லியிருக்கிறார். இதன் கருத்து என்ன? பிராமணர்களைவிட கெட்டிக்காரனாய் இருக்கிற பிராமணரல்லாதாரை சேர்த்துக் கொள்ளுவேன் என்பதிலேயே பிராமணர்களைச் சேர்த்துக் கொள்ளுவது சாதாரணம் என்றும், அவனை விட கெட்டிக்காரன் கிடைத்தால் தான் பிராமணரல்லாதாரை சேர்க்க முடியுமென்றும் ஏன் சொல்ல வேண்டும்? பிராமணரல்லாதாருக்கு மாத்திரம் அவ்வளவு கடுமையான நிபந்தனை எதற்கு? அல்லாமலும், இதுவரை கதர் போர்டில் பார்ப்பனரல்லாதாரை அதிகமாக சேர்க்காததற்கு காரணமும் பிராமணர்களை விட அதிகமான யோக்கியதை உள்ளவன் கிடைக்காததுதான் என்று தானே ஏற்படுகிறது. இந்த அபிப்பிராயம் கொண்டிருப்பவரிடம் யோக்கியமான பார்ப்பனரல்லாதான் எப்படி வேலை செய்ய முடியும்? பார்ப்பனரல்லாதாரைப் பற்றி சென்னையில் ஸ்ரீமான் ஓ.கந்தசாமி செட்டியார் பேசிய பேச்சுக்கும், ஸ்ரீமான் ராமநாதன் பேச்சுக்கும் வித்தியாசம் என்ன? இந்தக் கொள்கைப்படி பார்த்தால் ஸ்ரீமான் ராமநாதன் மாத்திரம் எப்படி கதர் இயக்கத்தில் இருக்கத் தகுதி உடையவர் என்று கேட்கிறோம். ஏனெனில் இவர் எல்லாப் பார்ப்பனர்களைக் காட்டிலும் அதிக தகுதி உடையவராக இருந்திருக்க வேண்டும். அந்தத் தகுதி என்ன என்பது நமக்குத் தெரியவில்லை. சர்க்கார் சொல்லும் தகுதிக்கும் பார்ப்பனர் சொல்லும் தகுதிக்கும் ஸ்ரீமான் ராமநாதன் சொல்லும் தகுதிக்கும் வித்தியாசம் என்ன என்றுகேட்கிறோம்.

இதிலிருந்து, கதர் இலாகாவைப் பற்றி அது பார்ப்பன அக்கிரகாரம் என்று நாம் எழுதினவைகளுக்கு ஆதாரம் இருக்கின்றதா இல்லையா என்பதையும், அதன் அதிகார ஸ்தானம் முழுவதும் பார்ப்பனர்கள் கையில் இருக்கிறதா இல்லையா என்பதையும் கவனித்துப் பாருங்கள். காரிய ஸ்தலத்தில் 100 - க்கு 80 பார்ப்பனர்கள், உற்பத்தி ஸ்தலத்தில் 100 - க்கு 80 பார்ப்பனர்கள் இன்ஸ்பக்ஷன் ஸ்தலத்தில் 100 - க்கு 66 பேர் பார்ப்பனர்கள். மற்றது கஷ்டப்படுவது, மூட்டை தூக்குவது, பொறுப்பு ஏற்றுக் கொள்வது, செடிக்குத் தண்ணீர் ஊற்றுவது, ஆபீசு கூட்டுவது முதலிய ஆட்கள் பார்ப்பனரல்லாதார் என்றால் இது நியாயமான சமாதானமா?

 மற்றபடி, சம்பாஷணையின் மற்ற பாகங்களுக்கு அடுத்த வாரம் எழுதுகிறோம்.

(குடி அரசு - தலையங்கம் - 09.10.1927)