periyar 364ஸ்ரீமான் முதலியார் அவர்கள் மாயவரம் மகாநாட்டுக்கு வந்ததும், மகாநாட்டில் அதுசமயம் கூடியிருந்த சுமார் 3000 பேருக்கு மேல்பட்டுள்ள மகாஜனங்கள் செய்த ஆரவாரத்திற்கும், அடைந்த சந்தோஷத்திற்கும் அளவு சொல்ல யாராலும் முடியாது என்றே சொல்லுவோம்.  ஸ்ரீமான் முதலியார் அவர்களை மாயவரம் மகாநாட்டுக்குப் போக விடக்கூடாது என்று செய்த சூட்சிகள் கொஞ்சமும் பலிக்கவே இல்லை.  உண்மையான தேசபக்தர்கள் மாயவரம் மகாநாட்டுக்குப் போகக்கூடாது என்று ஸ்ரீமான் வரதராஜுலு நாயுடு தனது ‘தமிழ்நாடு’ பத்திரிகையில் எழுதி இருந்தது யாவருக்கும் தெரியும்.  அதோடு ‘தமிழ்நாடு’ பத்திரிகை ஏஜண்டு ஒருவர் ஸ்ரீமான் முதலியார் அவர்களுக்கு ஒரு பயமுறுத்தல் கடிதம் எழுதி அதில் மாயவரத்திற்கு வரக்கூடாது என்றும், வந்தால் கலகம், அடிதடி, மரியாதைக் குறைவு முதலியதுகள் நடக்குமென்றும் குறிப்பிட்டிருந்தார்.

இது சங்கதி ஸ்ரீமான் ஈ.வெ.ராமசாமி நாயக்கருக்குத் தெரிந்ததும், முதலியார் அவர்களுக்கு எப்படியாவது வர வேண்டும் என்றும், மாயவரத்தில் கலகமும் அடிதடியும் நடக்குமானாலும் அதற்குத் தான் ஜவாப்புதாரி என்றும், முதல் அடியைத் தான் பட்டுக்கொள்ளத் தயாராயிருப்பதாகவும், முதலியார் விளம்பரப்படுத்திய பிறகு வராவிட்டால் எதிரிகள் குற்றம் சொல்ல இடமேற்பட்டுவிடும் என்றும் கேட்டுக் கொண்டு வற்புறுத்தி எழுதியதின் பேரில் முதலியார் அவர்கள் தைரியமாய் வர நேரிட்டது.  கலகம் செய்வதாய்ப் பயமுறுத்தி முதலியாருக்குக் கடிதம் எழுதியவர்கள் ஸ்ரீமான் பி.வரதராஜுலு நாயுடுக்கு எவ்வளவு வேண்டியவர்களோ, அதைவிட கொஞ்சம் அதிகமாகவே நாயக்கருக்கும் வேண்டியவர்களாயிருந்தபடியாலும் அவர்களுக்கு உண்மையான பார்ப்பனரல்லாத சுத்த ரத்தம் சரீரம் முழுவதும் ஓடிக்கொண்டும் கொதித்துக் கொண்டும் இருந்ததாலும் கலகம் என்கிற எண்ணத்தையே மறந்துவிட்டு ஸ்ரீமான் முதலியார் அவர்கள் அக்கிராசனத்திலேயே தீர்மானங்களைப் பிரேரேபித்து அற்புதமாய்ப் பேசினார்கள்.  மற்றும் மகாநாட்டுக்குப் போகக் கூடாது என்று ஜாடைமாடையாகத் தடுக்கப்பட்ட சில பார்ப்பனரல்லாத தேச பக்தர்களும் அதை லட்சியம் செய்யாமல் தாராளமாக மகாநாட்டில் கலந்து உதவி செய்ததும் மிகவும் போற்றத்தக்கது.

                        மகாநாட்டில் கலவரம் நடக்கும் என்கிற தீர்மானத்தின் பேரில் கலவரத்தைப் பெரிது செய்து பத்திரிகைகளில் எழுதத் தகுந்த மாதிரி அதற்குத் தகுந்த சில நிருபர்களை அனுப்பியும் கூட மகாநாட்டில் ஒரு சிறு கலவரம்கூட நடக்காததால் அனுப்பியவர் ஏமாற்றமடைந்து விட்டார் என்றே சொல்ல வேண்டும். மற்றும் ஜஸ்டிஸ் கட்சியிடமும் மாயவரம் மகா நாட்டினிடமும் பாமர ஜனங்களுக்குக் கெட்ட எண்ணம் ஏற்படும்படி இதில் எழுதுவதற்குத் தகாத எத்தனையோ சூட்சிகள் நடந்தன. ஆனால் அவைகள் ஒன்றும் பயன்பெறாமல் போய் விட்டது. ஆனபோதிலும் மகாநாட்டிற்கு வந்தவர்களில் பெரும்பாலோர் இவைகளை நன்றாய் அறிந்து கொண்டார்கள் என்றே சொல்ல வேண்டும். எப்படி எனில் பிரதிநிதிகள் நாலுபேர் ஐந்து பேர் கூடின இடத்தில் எல்லாம் இதே பேச்சுகள்தானே தவிற வேறில்லை. எனவே நமக்கும் நமது சமூகத்திற்கும் இருக்கும் கஷ்டத்தை இதிலிருந்து கொள்ளும்படி வேண்டுகிறோம்.

(குடி அரசு - துணைத் தலையங்கம் - 15.05.1927)