நமது நாட்டுப் பண்டை அரசாங்கங்கள் ஒழுக்கவீனமாக நடந்ததற்கும் வேற்றரசர்களால் ஜயிக்கப்பட்டதற்கும் அன்னிய நாட்டரசுகள் ஆதிக்கம் பெற்றதற்கும் பார்ப்பன மந்திரித்துவம்தான் முக்கிய காரணமென்பது கர்ண பரம்பரையாகவும் சரித்திர வாயிலாகவும் அனுபோக பூர்த்தியாகவும் நாம் அறிந்த விஷயம்.

periyar cake cuttingதிருவாங்கூர் ராஜ்யம் சென்ற 100 ´ காலத்திற்கு 22 மந்திரிகளில் 93 ´ காலம் 20 மந்திரிகள் பார்ப்பன மந்திரிகளாகவே இருந்து துர் மந்திரித்துவ ஆதிக்கம் செலுத்தி வந்ததின் பலனாய் இப்போது அந்த ராஜ்யத்தில் 100 - க்கு 50 பங்கு ஜனங்கள் அன்னிய மதஸ்தர்களாவதற்கு இடம் கொடுத்து வந்திருக்கிறது.   40 லட்சம் ஜனத்தொகையில் 20 லட்சம் ஜனங்கள் அன்னிய மதஸ்தர்கள்.   எந்த பார்ப்பன மந்திரியாவது இதைப்பற்றி கவனித்தவரே அல்லர்.   அன்றியும் நமது மக்களைப் பறிகொடுத்து பாதிரிமார்களுக்கு நல்ல பிள்ளைகளாக நடந்து வெள்ளைக்கார கவர்னர்களது சிபார்சு பிடித்து   பெரிய பட்டங்களும்   உத்தியோகங்களும் சம்பாதித்துக் கொண்டு வந்திருக்கிறார்களே அல்லாமல் கொஞ்சமாவது மனிதாபிமானத்துடன் அதிகாரம் செலுத்தவேயில்லை. கொச்சியிலும் இதுபோலவேதான். அது போலவே 100 -க்கணக் கான வருஷங்களாய் பார்ப்பனர்களே மந்திரியாய் இருந்து வந்த - வரும் புதுக்கோட்டை அரசாங்கத்தை இன்னது தான் செய்திருக்கிறார்கள் என்று சொல்லவே முடியாது.   அது இப்போது இருக்கும் யோக்கியதையைப் பார்த்தாலே தெரியவரும்.   

ஐதராபாத், மைசூர் அரசாங்கங்களும் பார்ப்பன மந்திரித் துவத்தின் பலனாய் நாளுக்கு நாள் அதன் விஸ்தீரணங்கள் குறைந்து வந்திருப்பதும் வெள்ளைக்காரருக்கு உளவு சொல்லிக்கொடுத்து அந்நாடு களை ஒழிக்கப் பாடுபட்டு வந்ததும் இன்னமும் வெளி அரசாங்கங்களும் அதாவது இப்போது பட்டத்திலிருந்து விலகிய இந்தூர் அரசர், பட்டத்திலி ருந்து விலகுவதற்கு காரணமாயிருந்த சம்பவம் நடந்த காலத்திலும் பார்ப்பன மந்திரித்துவமும் ஆதிக்கமும் இருக்கும்போதுதான் அவ்வரசனுக்கு இந்த கதி ஏற்பட்டது.   

இனியும் இந்த தேசத்தில் இப்போது பிரத்தியக்ஷத்தில் கெட்டுப் போன அரசுகளும், ஜமீன்களும், பாளையப்பட்டுகளும் ஆகியவைகளில் எதை எடுத்துக்கொண்டாலும் பார்ப்பன ஆதிக்கம் இல்லாததாக ஒன்று கூட கிடைப்பது கஷ்டமாகத்தானிருக்கும். இவற்றை உணர்ந்தே பெரியவர்கள் “ஆறு கெட நாணலிடு ஊரு கெட நூலை (பூணூலை) விடு” என்று சொல்லியிருப்பதும் அவ்வைப் பிராட்டியாரும் “ஒரு அரசன் மந்திரி வேலைக்குத் தகுந்தவர்கள் யார் என்று கேட்டபோது நூலாலே (பூணூலாலே) நாடு கெடும் என்று சொன்னதோடு, வேளாளர்கள் மந்திரியுமாவார்கள் வழித் துணையுமாவார்கள்” என்று ஒரு பாட்டில் சொல்லியிருக்கிறார்கள்.   இன்னமும் இதற்கு எத்தனையோ உதாரணங்களும் ஆதாரங்களுமிருக்கின்றன.

இப்படி இருக்க இப்போது பரோடா சமஸ்தானத்திற்கும் ஒரு பார்ப்பனரையே திவானாக நியமித்திருப்பதாக தெரியவருகிறது.   இந்தப் பார்ப்பனர் திவானாகப் போய் அந்நாட்டின் லக்ஷியத்தை கவனியாமல் வெள்ளைக் காரருக்கு அனுகூலம் செய்வதன் மூலம் அவர்களது திருப்தி பெற்று திவான் பகதூர், மு.ஊ.ஐ., சர். முதலிய பட்டங்கள் பெற்று நிர்வாக சபை மெம்பராகி அவர்கள் வீட்டு நாய்க்குட்டிகள் முதல்கொண்டு டிப்டி கலெக்டர், முன்சீப், ஜட்ஜி, கலெக்டர், சூபரெண்டு முதலிய உத்தியோகங்கள் பெற்று நம் தலையில் கை வைக்கப் போகிறார்கள்.   ஆனால் பார்ப்பனரல்லாதாரை அனுப்புவதென் றாலோ வெள்ளைக்காரருக்கு பயம். பார்ப்பனரிடம் இருக்கும் நம்பிக்கை அவர்களுக்கு மற்றவர்களிடம் இருப்பதில்லை.   இவர்களும் ராஜ்யம் எப்படியோ போகட்டு மெனக் கருதி வெள்ளைக்காரருக்கு நல்ல பிள்ளையாய் நடப்பதுமில்லை; அதனால்தான் வெள்ளைக்காரர்கள் பார்ப்பனர்களையே பார்த்து சிபார்சு செய்து அனுப்புகிறார்கள்.

(குடி அரசு - கட்டுரை - 06.02.1927)