கனவான்களே!

பார்ப்பனரல்லாதார் கட்சித் தலைவரான கனம் பனகால் அரசரின் வெற்றிக்காக இக்கூட்டம் கூட்டி நாம் கொண்டாட வேண்டுமென்பது அவ்வ ளவு அவசியமானதல்ல என்பது எனது அபிப்பிராயம். ஆனால் நமது முன்னேற்றத்திற்கு எதிரிகளாயுள்ளவர்கள் நமது பனகால் அரசர் வெற்றிக்குத் தடையாக செய்த சூழ்ச்சிகளும், முயற்சிகளும், அக்கிரமமான செய்கை களும் பொதுமக்களின் உணர்ச்சியைப் பலமாகக் கிளப்பி விட்டுவிட்டது. அதுமாத்திரம் அல்லாமல் “பனகால் வீழ்ந்தார், பார்ப்பனரல் லாதார் கட்சிக்கு சாவு மணி” என்பதாகவும், மற்றும் மேடைகளில் பேசும் சோமாறிகள் “பனகாலை வெட்டிப் புதைத்தாகிவிட்டதென்றும் கொள்ளி வைத்தாகி விட்டதென்றும் பலமாதிரி லுச்சத்தனமாகப் பேசி வந்ததாலும் சுயராஜ்யக் கட்சித் தலைவர்கள் என்று சொல்லுபவர்களில் சிலரும் அவரைப் பற்றி மிகுதியும் ஈனத்தனமாய் பேசி வந்ததாலும் பார்ப்பனரல்லாத பெருவாரி மக்களுக்கு பனகால் அரசரிடம் ஒருவித அன்பு ஏற்பட இடம் கொடுத்தது. அதற்காக கொண்டாட வேண்டியதாயிற்று.

periyar 341உதாரணமாக, நானும் ஸ்ரீமான் எஸ்.ராமநாதன் அவர்களும் மதுரை பிளாட்பாரத்தில் ரயில் வண்டியிலி ருந்தபடியே சில கனவான்களோடு பேசிக் கொண்டிருக்கையில் எங்கள் அறைக்கு அடுத்த அறையில் இருந்த ஒரு பார்ப்பனத் ‘தலைவர்’ மற்றொரு பார்ப்பனத் ‘தலைவரோடு’ பேசிக் கொண்டிருக்கையில் ‘‘அவனொரு முட்டாள், அயோக்கியன்; அவனை அடக்க நீரே தக்கவர்; அவன் ஒழிந்தால் அந்த ஸ்தானத்திற்கு நீங்கள்தான் தகுந்தவர்” என்று இம்மாதிரியாக இன்னும் அநேக அல்ப வார்த்தைகளால் குடிகாரர் வெறிகாரர் பேசுவது போல் பேசினார். அந்த மதுரைத் ‘தலைவருக்கு’ இது பிடிக்காமல் தனது அருவருப் பைக் கூட காட்டினார். இன்னும் எத்தனையோ இதுபோல் நடந்தன. இவ்வளவு பெயர்களால் வசவு கேட்டவரும் ஒழிந்து போனார்; செத்துப் போனார்; குழியில் புதைக்கப்பட்டு போனார் என்று சொல்லப்பட்ட வருமான ஒருவர் “உயிரோடிருக்கிறார், பிழைத்து விட்டார்” என்கிற செய்தி யைக் கேட்டால் சந்தோஷப்படாமல் இருக்க முடியுமா? இது ஒருபுறமிருந் தாலும் தேர்தல் விஷயத்திலும் நமது சுயமரியாதைக்கு எதிரிகளான பார்ப்பனர் பனகாலைத் தோற்கடித்து விட்டால் தங்கள் ஆதிக்கம் நிரந்தரமாய் நிலை நிறுத்தப்பட்டுவிடும் என்கிற அபிப்பிராயத் தின் பேரில் பனகாலை வெற்றி பெறாமல் செய்வதற்குப் பட்ட பாடுகள் கணக்கு வழக்கில்லை என்பதும் உங்கள் எல்லோருக்கும் தெரியும்.

ஐகோர்ட் ஜட்ஜிகள், ஜில்லா ஜட்ஜிகள், சப் ஜட்ஜிகள், ஜில்லா கலெக்டர், அரசாங்க நிருவாகசபை மெம்பர்கள் ஆகிய பெரிய உத்தியோகமுள்ள கூட்டங்களில் பலரும், போலீசு நிர்வாக உத்தியோக கூட்டங்களில் பலரும், பெருத்த லேவாதேவிக் கூட்டங்களில் பலரும் ஒன்று சேர்ந்து ஜமீன்தார் களின் ஓட்டுகளை ஸ்ரீமான் அல்லாடி அய்யருக்கு வாங்கிக் கொடுப்பதற் காக பட்ட பாடுகள் இவ்வளவு அவ்வளவு என்று சொல்ல முடியாதென்று கேள்விப் பட்டேன். இன்னும் எத்தனை ஜமீன்தார்களின் விவகாரத்தைக் காட்டி மிரட்டியும், ஆசை வார்த்தைச் சொல்லியும், எத்தனை ஜமீன்தாரர்கள் கடனைக் காட்டி மிரட்டியும் ஆசை வார்த்தைச் சொல்லியும், கொடுமை செய்தும் ஓட்டுகள் வாங்கப் பிரயத்தனப்பட்டதையும் கேள்விப் பட்டேன். இவைகள் பொய்யானாலும் சரி மெய்யானாலும் சரி இவ்வளவுக்கும் தப்பி வெற்றி பெற்று விட்டார் என்றால் கேட்போருக்குக் கொண்டாட்டம் ஏற்படுமா? ஏற்படாதா? இவ்வளவுதான் கொண்டாட்டத் திற்கு காரணமே யல்லாமல் பனகால் சட்டசபை மூலம் நமக்கு வேண்டியதை யெல்லாம் சாதித்து விடுவார் என்று எனக்கு எள்ளளவும் நம்பிக்கை கிடையாது. இவர்கள் போன்றவர்கள் தோல்வியுற்றால்தான் பார்ப்பனரல்லாதார்கள் விழிப்பார்கள். சட்டசபையைப் பற்றி எனது அபிப்பி ராயம் தங்களுக்குத் தெரியும். சட்ட சபையில் ஆகிற காரியம் ஒருபுற மிருந்தாலும் சட்டசபைத் தேர்தல் முறையே நம்ம நாட்டுக்குக் கேடானது என்பது எனது பலமான அபிப்பிராயம். இம்மாதிரி தேர்தல் மூலம் பிரதிநிதித் துவம் அளிப்பது என்பது கலால் இலாக்கா மூலம் குடியை ஒழிப்பது என்பது போலத்தான் ஏற்படும். இத்தேர்தல் முறை நமது நாட்டுக்கு வருமுன் மக்களி டை இவ்வளவு ஒழுக்க ஈனமும் கண்ணியக் குறைவும் இல்லவே இல்லை.

உதாரணமாக, இந்த சட்டசபைப் பிரதிநிதித்துவம் சுமார் முப்பது வருஷங்களுக்கு முன்னால் இருந்த மாதிரியானது இப்போது இருந்ததைப் போலல்லாமல் எவ்வளவு கண்ணியமானதாயிருந்தது. அதாவது, சென்னை மாகாணத்திற்கு மூன்றே சட்டசபை மெம்பர்கள் தெரிந்தெடுக்கப்படுவார்கள். அவர்களும் கூடியவரையில் ஸ்ரீமான்கள் சேலம் சி.விஜயராகவாச்சாரியார், ரத்தினசபாபதி முதலியார் , ஜம்பு லிங்க முதலியார் போன்ற கூடுமானவரை கண்ணியமுள்ளவர்களாய் இருந்தார்கள். இவர்களைத் தெரிந்தெடுக்கும் ஓட்டர்கள் தொகையோ எல்லாம் சேர்ந்து மாகாணத்திற்கே சுமார் 100 பேர்கள் தான் இருப்பார்கள். அதாவது, ஒவ்வொரு முனிசிபல் சபைக்கு ஒரு ஓட்டு வீதம் ஜனப் பிரதிநிதி சபைகளுக்கு ஓட்டு இருந்து வந்தது. இதனால் பணம் கொடுத்து ஓட்டு வாங்கவும் பணம் வாங்கி ஓட்டுக் கொடுக்கவும் வழியில்லாமல் இருந்தது. அதற்குப் பிறகு 1910 -ல் ஏற்பட்ட சீர்திருத்தம் 8 ஜில்லாவுக்கு 1 மெம்பர் என்பது மாறி 3 ஜில்லாவுக்கு 1 மெம்பர் வீதமும், 8 ஜில்லாவுக்கு முப்பது, நாற்பது ஓட்டர்கள் என்பது மாறி 3 ஜில்லாவுக்கு 300 ஓட்டர்கள் வீதமும் ஏற்பட்டது. அந்த ஓட்டர்கள் குறைந்த அளவு ஞானம் உள்ளவர்களாகவாவது இருந்தார்கள். எப்படியென்றால் தாலூக்காபோர்டு மெம்பர், முனிசிபல் கவுன்சிலர், ஜில்லா போர்டு மெம்பர் என்கிற ஏதாவது ஒரு யோக்கியதாம்சம் உடையவர் களாகவே இருந்தார்கள்.

இந்தத் தொகுதி யிலும் ஓட்டர்களை ஏமாற்ற முடியாமலும் கணக்குப்பிள்ளை, மணியக்கார், வாத்தியார், பிரசாரகர் முதலிய தரகர்களுக்கு பணம் கொடுத்து ஓட்டுச் சேகரிக்க முடியாமலும் கூடியவரை வெகு சிலரே பணத்திற்கு ஆசைப்படத் தக்கதாகவும் வெகுசிலரே கொடுக்கத் தக்கதாகவும் இருந்து வந்தது. இப்போது 1920 வருஷத்திய சீர்திருத்தத்தில் 3 ஜில்லாவுக்கு ஒருவர் மெம்பர் இருந்தது போய் ஒரு ஜில்லாவுக்கு 3 மெம்பர் வீதமும், மூன்று ஜில்லாவுக்கு 300 ஓட்டர்கள் இருந்தது மாறி ஒரு ஜில்லாவுக்கு எழுபது ஆயிரம் ஓட்டர்கள் வீதமும் ஏற்பட்டதின் பலனாய் ஏய்க்க சக்தி படைத்தவனும், பணம் செலவு செய்ய சக்தி படைத்தவனும் சட்டசபைக்குப் பிரதிநிதியாகத்தக்க யோக்கிய தையாய் முடிந்து விட்டது. 2 அணா கொடுத்தால் தங்கள் வோட்டுகளை யாருக்கு வேண்டுமானாலும் கொடுக்கத்தக்கவர்களாகவும் ஒரு குடம் கள்ளுக்கு 30 அல்லது 40 ஓட்டுகள் கிடைக்கும்படியாகவும் வோட்டர் நிலை மை ஏற்பட்டுப் போய்விட்டது. இப்படி நான் சொல்லுவதால் 30 வருஷத் திற்கு முன் சட்டசபை மூலம் நமக்கு கிடைத்து வந்த நன்மை இப்போது போய்விட்டது என்று சொல்லவரவில்லை. அதுவும் உபயோகமில்லாதது. ஆனாலும் சட்டசபைத் தேர்தல் முறையில் அபேக்ஷகர்கள் யோக்கியதை யும் ஓட்டர்கள் யோக்கியதையும் மிகுதியும் கேவலப்பட்டு விட்டதோடு தேசத்தில் மக்களிடை அயோக்கியத்தனமும் நாணயக் குறைவும் பரவு வதற்கு இம்முறைகள் அதிக ஆஸ்பதமாயிருக்கிறதென்றே சொல்லுகிறேன்.

இனியும் காங்கிரசோ சுயராஜ்யக் கட்சியோ வாங்கிக் கொடுக்கப் போகும் அடுத்த சீர்திருத்தத்தில் மனிதப் பிறவியாய் பிறந்து 20 வயதிற்கு மேற்பட்ட ஆண், பெண் சகலருக்கும் ஓட்டுரிமையும் அபேக்ஷக உரிமையும் வழங்கு வது என்று வந்துவிட்டால் தேசத்தில் எவ்வளவு பித்தலாட்டம், சூழ்ச்சி, அயோக்கியத்தனம், நாணயக் குறைவு முதலிய ஒழுக்க ஈனங்கள் ஏற்படும் என்பதை நீங்களே யோசித்துப் பாருங்கள். நான் இப்படிச் சொல்லுவதால் மக்களுக்கு சுதந்திரம் வேண்டாமென்று சொல்லுவதாக யாரும் நினைக்கக் கூடாது. மக்களை கண்ணியக் குறைவிலும் ஒழுக்க ஈனத்திலும் கொண்டு வந்துவிடும் சுதந்திரங்கள் வளர்ந்து கொண்டே போனால் மக்கள் கதி என்ன ஆவது? இத்தேர்தல் மூலம் உண்மையான சுதந்திரம் வருவதாயிருந்தால் முதலாவது நமது சுயமரியாதைக்கும் சுதந்திரத்திற்கும் பிறவி எதிரிகளான இப்பார்ப்பனர்கள் சுதந்திரம் வேண்டுமென்று சர்க்காரை கேட்டிருப்பார் களா? கேட்டாலும் அவர்களது பங்காளிகளான வெள்ளைக்காரர்கள் கொடுத்திருப் பார்களா? என்பதை நீங்களே நன்றாய் யோசித்துப் பாருங்கள், சுதந்திரம் கொடுப்பதற்கும் ஓட்டுரிமை கொடுப்பதற்கும் சர்க்காருக்காவது பார்ப்பனர் களுக்காவது நமக்கு வேண்டியது இன்னது என்பது தெரியாதா? மதுபா னத்தை நிறுத்த சட்டசபை மூலம்தான் சண்டை போட வேண்டுமா? உத்தி யோகம் கொடுக்க சட்டசபை மூலம்தான் கேட்க வேண்டுமா? தீண்டாமை ஒழிய சட்டசபையில்தான் தீர்மானம் கொண்டுவர வேண்டுமா? 150 வருஷமாய் நம்மை ஆண்ட ஒரு அரசாங்கத்திற்கு நமக்கு வேண்டியதை சட்டசபை மூலம் கேளுங்கள் என்றால் இது போகாத ஊருக்கு தடம் காட்டுவதேயல்லாமல் வேறென்ன? “கொக்குத் தலையில் வெண்ணெய் வைத்து” அது உருகி கண்ணை மூடும்போது அதை பிடித்துக் கொள்ளலாம் என்பது போலில்லையா? உண்மையாய் சர்க்காரும் பார்ப்பனரும் செய்ய வேண்டுமென்று கருதினால் சட்டசபை இல்லாமல் செய்ய முடியாதா? அதுதான் அப்படி என்றாலும் உண்மையாகவே இப்போது சட்டசபை மெம்பர்களுக்கு என்ன யோக்கியதையைக் கண்டு ஓட்டர்கள் ஓட்டு செய்கிறார்கள் என்பதையாவது பாருங்கள்.

ஒரு மெம்ப ருக்கு ரோட்டு மேஸ்திரி ஓட்டுப் போடச் சொன்னார் என்பதும், மற்றொரு மெம்பருக்கு வக்கீல்களும் வக்கீல் குமாஸ்தாக்களும் ஓட்டுப் போடச் சொன்னார்கள் என்பதும், மற்றொரு மெம்பருக்கு கவுண்டர் ஓட்டுப் போடச் சொன்னார் என்பதும், மற்றொரு மெம் பருக்கு பட்டக்காரர் ஓட்டுப்போடச் சொன்னார் என்பதும் ஆகிய இவைகள் தானே யோக்கியதையாய் இருக்கிறதே அல்லாமல் வேறென்ன? இது தவிர இந்த மெம்பர்களும் ஓட்டுப் பெற எவ்வளவு பொய்யும் புளுகும் அளக்க வேண்டியிருந்தது. எவ்வளவு அக்கிரமங்கள் செய்ய வேண்டி இருக்கிறது? சட்டசபை வேலையான பிறகு இந்த ஓட்டர்களுக்கும் மெம்பர்களுக்கும் மறு தேர்தல் வரை ஏதாவது சம்பந்தமுண்டா? எந்த ஓட்டரையாவது மெம்பர்களுக்கு அடையாளம் தெரியுமா? இந்த ஓட்டர்களின் தேவை இன்னது என்று மெம்பர்களுக்குத் தெரியுமா? மெம்பர்களின் சக்தி, யோக்கியதை, அவர் களது எண்ணம் இன்னது என்று ஓட்டர்களுக்குத் தெரியுமா? என்பதை யோசித்துப் பாருங்கள். வீணாய் நமது மக்களை பிரித்து வைத்து அவர் களை கண்ணியக் குறைவில் பழக்கி ஏமாற்றிப் பிழைக்க சர்க்காரும் பார்ப் பனரும் சேர்ந்து செய்த சூழ்ச்சியில் நமது மக்கள் அறியாமல் சிக்கிக் கொண்டு வெளியேற வகை தெரியாமல் நாசமாய்ப் போகிறார்களே அல்லா மல் இத்தேர்தலால் வேறு என்ன நடக்கிறது. இவ்வித தேர்தல் முறைகளை இந்நிலையில் வளரவிடுவது நமது நாட்டுக்குப் பெருங் கேடாகுமென்று மறுமுறையும் சொல்லுகிறேன்.

நிற்க, தேர்தல் யோக்கியதைக்கு படித்தவர்கள் படியாதவர்கள் என இரண்டு பிரிவுகள் சொல்லிக் கொள்ளப்படுகிறது. நமது நாட்டில் படித்தவர் களுக்கும், படியாதவர்களுக்கும் என்ன தாரதம்மியம் இருக்கிறது. படிக்காத வன் என்பவன் குற்றம் செய்கிறான் என்று வைத்துக் கொண்டால் படித்தவன் என்பவன் அக்குற்றத்திற்கு தக்க தண்டனையடையாமல் செய்து விடுவித்து, மறுபடியும் அதே குற்றத்தைச் செய்யத் தூண்டுகிறான்.

குற்றம் செய்தவன் தண்டனை அடையத்தக்க நீதி நமது நாட்டில் வழங்கினால் இவ்வளவு குற்றங்கள் நமது நாட்டில் வளருமா? இதற்கு இடையூறாயிருப்பவர்கள் படித்தவர்களா? படிக்காதவர்களா? என்பதை யோசித்துப் பாருங்கள். ஒரு வக்கீல் ஒரு சமயத்தில் தனது பெருமையை சொல்லிக் கொள்ளும்போது 22 தடவை கொலை செய்தவனை 22 தடவை தப்பித்து வைத்தேன் என்று சொல்லிக் கொண்டாராம். இதுதான் படித்தவர் களின் மேன்மை. இன்னமும் படித்தவர்கள் செய்யும் அக்கிரமங்களையும் படியாதவர்கள் செய்யும் அக்கிரமங்களையும் பார்த்தால் படித்தவர்களில் 100-க்கு 90 பேர் அயோக்கியர்கள் இருந்தால், படியாதவர்களில் 100-க்கு 10 கூட அகப் படமாட்டான். இம்மாதிரியான படிப்பை படிப்பு என்று சொல்லி அதற்கு யோக்கியதை கொடுத்து வந்தால் அந்த நாடு ஒழுக்கமடையுமா? யோக்கிய மடையுமா? ஆதலால் தற்கால யோக்கியதையும் தேர்தலும் தேச nக்ஷமத்தின் பிரதிநிதித்துவத்திற்கு யோக்கியமானதல்ல என்பதே நமதபிப் பிராயம். தேச nக்ஷமத்திற்கு வேலை செய்பவர்களுக்கு சட்ட சபையில் ஒரு வேலையும் இல்லை.

இந்த ஜில்லாவுக்கு இவ்வருஷம் பிரதிநிதிகளாய் நிற்கும் 4 மெம்பர் களும் செய்த பணச் செலவும் பட்ட கஷ்டங்களும் சட்ட சபைத் தேர்தலுக்கு செலவு செய்யாமல் ஓட்டர்களுக்கு ஓட்டின் தன்மையை படிப்பிப்பதிலோ உண்மையான பொது நல சேவையைச் செய்வதிலோ செலவழித்திருந்தால் ஒரு வருஷத்தில் இந்த ஜில்லாவுக்கு எவ்வளவோ நன்மைகள் ஏற்பட்டி ருக்கும் என்றே சொல்லுவோம். ஆதலால் பனகால் ராஜாவின் வெற்றி விஷயத்தில் நமது பார்ப்பனர்கள் எண்ணம் பலிக்க வில்லை என்பதைப் பொறுத்தவரை நாம் திருப்திக் கொள்ள வேண்டிய தோடு நமது முற்போக் குக்கு இடையூறாக எவ்வளவு தூரம் நமது பார்ப்பனர் கள் முயற்சி செய்கிறார் கள் என்பதை பாமர ஜனங்களும் தெரிந்து கொள்ள இது ஒரு சந்தர்ப்பமாய் ஏற்பட்டது என்பதைப் பொறுத்தவரையும்தான் கொண்டாடத்தக்கதே அல்லா மல் நாட்டிற்கோ, சமூகத்திற்கோ பிரமாதமான நன்மை எதுவும் இதனாலேயே உண்டாகி விடாது. சட்டசபை அங்கத்தினர் என்பது சர்க்கார் உத்தியோகம், பட்டம் முதலியதுகள் போல ஒரு பதவியே அல்லாமல் வேறல்ல. உத்தி யோகம் பெறுவதற்கும் பட்டம் பெறுவதற்கும் சர்க்கார் உத்தியோகஸ்தர் களுக்கும் நிர்வாக அதிகாரிகளுக்கும் பணம் செலவு செய்ய வேண்டும். சட்டசபை மெம்பர் பதவி பெறுவதற்கு பிரசாரகர்களுக்கும் தரகர்களுக்கும் ஓட்டர்களுக்கும் பணம் செலவு செய்ய வேண்டும். இவ்வளவுதான் வித்தியாசமே ஒழிய வேறொன்றும் பிரமாத வித்தியாசமில்லை. அதிக செலவில்லாமல் இப்பதவி கிடைப்பதானால் ஏன் நம்ம வருக்கே கிடைக்கக் கூடாது என்று பார்ப்பனரல்லாதார் ஆசைப்பட பாத்தியமுண்டு என்பதையும் ஞாபக மூட்டுகிறேன்.

குறிப்பு :- 10.11.1926 இல் கோவை டவுன்ஹாலில் நடைபெற்ற பனகால் அரசர் வெற்றிக்கொண்டாட்ட நிகழ்ச்சியில் ஆற்றிய உரை.

குடி அரசு - சொற்பொழிவு - 14.11.1926