சைவ வைணவ ஆதாரங்கள் சொல்லுவது

Periyarஇத்தலைப்பில் இதுவரை சைவ, வைணவர்கள் ஒருவரை ஒருவர் எவ்வளவு இழிவுப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பதைப் பற்றி இராமாயணத்தில் உள்ளபடியும், காஞ்சிப்புராணத்தில் உள்ளபடியும் ஆதாரங்களோடு எழுதப்பட்டிருந்ததை வாசகர்கள் படித்தறிந்திருக்கக்கூடும்.

இந்த வாரம் வைணவர்களுக்கு மிகவும் முக்கியமான சாஸ்திர ஆதாரமும், பதினெட்டுப்புராணங்களில் அதிமுக்கியமானதுமான பாகவதத்தில் இருந்து, சிவனை வைணவர்கள் ஆபாசமாய் இழிவுப்படுத்தியிருப்பதற்கு மற்றொரு சேதி எடுத்துக் காட்டப்படுகிறது.

அதாவது “ஸ்ரீமத் பாகவதம்” - “பண்டிதர், இஞ்சிக்கொல்லை,ஆர்.சிவராம சாஸ்திரியார் அவர்களால் தமிழில் மொழிபெயர்க்கப் பட்டது” 1912-ஆம் வருடம் சென்னை புரோகரசிவ் பிரசில் அச்சடிக்கப்பட்டதுமான “பாகவத தமிழ் வசனம்” என்னும் புத்தகத்தில் 8-வது ஸ்கந்தம் 12-ஆவது அத்தியாயம், 846,847,848, 849-ஆவது பக்கங்களில் “பரமசிவன் விஷ்ணுவின் மோகினி ரூபத்தைப் பார்க்க விரும்பியது” என்ற தலைப்பில் இருப்பதாகும். சற்று தயவு செய்து இதையும் படித்துப் பாருங்கள். என்னவென்றால், “ஸ்ரீமகாவிஷ்ணு மோகினி வேஷங் கொண்டு அசுரர்களை மோகிக்கும்படிச் செய்து ஏமாற்றித் தேவர்களுக்கு அமிர்தத்தைக் கொடுத்தார்” என்கின்ற சங்கதியைப் பரமசிவன் கேள்விப்பட்டு, கைலாயத்தில் இருந்து பார்வதியுடன் விஷ்ணுவிடம் வந்து, விஷ்ணுவை வணங்கி, “ஜகத் காரணரே, தேவதேவரே, நீரே பூரணர், நீரே நித்தியர், உம்மை விட வேறு கடவுளே இல்லாதவரே” (என்றும் இன்னும் பலவாறாகவும் சொல்லிப் பிரார்த்தித்ததாக இரண்டு பக்கம் எழுதப்பட்டிருக்கிறது) என்று பிரார்த்தித்துவிட்டு, “தேவாதி தேவரே! தங்களுடைய எல்லா அவதாரத்தையும் தரிசித்தேன். மோகினி வேஷத்தை மாத்திரம் பார்க்கவில்லை அதனைப் பார்க்க வந்தேன், காட்டி அருள வேண்டும்” என்றார்.

அதனைக் கேட்ட மகாவிஷ்ணுவானவர். “அது அசுரர்களை ஏமாற்ற எடுத்த வேஷமானதால், அதைக் காண்பவர்களை மோகிக்கச் செய்யும். மன்மதனை அதிகப்படுத்தும், காமிகள் தான் அதைத் தோந்திரஞ் செய்வார்கள்” என்று சொல்லி மறைந்து, ஒரு நந்தவனத்தில் பந்தாடிக் கொண்டிருக்கும் ஒரு அழகிய பெண்ணாகத் தோன்றினார்.

சிவனும் பார்வதியும் நான்கு புறமும் விஷ்ணுவைத் தேடிப்பார்த்துக் காணாமையால், நந்தவனத்தைப் பார்க்க அதில் ஒரு பெண் பந்து விளையாடிக் கொண்டிரும்பதைப் பார்த்துச் சிவன் புத்தி கலங்கிப் பார்வதியும் சிவகணங்களும் பக்கத்தில் இருப்பதைக் கூட நினைக்காமல் அவளை (மோகினியை) பார்த்தார். மோகினி வேஷம் போட்ட பெண், பந்தடிக்கும் கவனத்தில் தனது ஆடை (சேலை)யை மெல்ல நழுவவிட்டுவிட்டாள். அதைப் பார்த்த பரமசிவனுக்குக் காமம் அதிகரித்து விட்டது. மன்மதன் தனது முழு சக்தியையும் பிரயோகித்தான். பார்வதி பார்த்திருக்கப் பார்த்திருக்க வெட்கமில்லாமல் சிவன் மோகினியின் பின் சென்றான். மோகினி(விஷ்ணு) ஓடி ஒரு மரத்தில் மறைந்து கொண்டாள்.

சிவன் ஓடோடி அவளைப் பிடித்தான். அவள் திமிரிக் கொண்டு வேகமாக ஓடினாள். சிவன் வேகமாக ஓடி அவள் மயிரைப் பிடித்து இழுத்து, இரு கைகளால் ஆலிங்கனம் செய்து கொண்டு பலவந்தம் செய்தான். அவள் அவிழ்ந்த தலை மயிருடன், ஆடையின்றியே சிவனை வஞ்சித்து நழுவிக் கொண்டு ஓட்டமெடுத்தாள். சிவன் புத்தி இழந்து, காமங்கொண்ட “ஆண் யானையின் இந்திரியம் கீழே சிந்துவது போல்” தனது இந்திரியத்தை நிலத்தில் சிந்தவிட்டுக் கொண்டே பின் தொடர்ந்தார்.

சிவனுக்கு இந்திரியம் வெளிப்பட்டவுடன் மோகினி (விஷ்ணு) மறைந்து விட்டாள். சிவன் ஏமாந்தான். அந்த இந்திரியம் எங்கு எங்கு நிலத்தில் விழுந்ததோ அந்த இடமெல்லாம் தங்கம், வெள்ளி விளையும் சுரங்க பூமிகளாக ஆகிவிட்டன. அந்த இந்திரியம் எங்கு எங்குக் காடுகளிலும், வனங்களிலும், மலைகளிலும், நதிகளிலும், குளங்களிலும், விழுந்ததோ அங்கெல்லாம் சிவனின் சான்னித்தியம் விளங்குகிறது. மகரிஷிகளும், தேவர்களும் அங்கு விளங்குகிறார்கள்.

சிவன் இம்மாதிரி தனது இந்திரியம் சிந்திய பின், புத்தி வந்து “நான் விஷ்ணுவினால் ஏமாற்றப்பட்டு மூடனாக்கப்பட்டேனே” என்று கருதியதுடன் மகாவிஷ்ணுவின் மகிமை தெரிந்தவரானதால் இது சகஜம்தான் என்று திருப்திடைந்தார் என்பதாக, இந்தப்படி பாகவத மூலத்தின் 8-வது ஸ்கந்தம் 12-ஆம் அத்தியாயம் 1முதல் 37 ஆவது சுலோகம் வரை உள்ள விஷயத்தின் மொழிபெயர்ப்பில் குறிப்பிட்டிருக்கிறது.

இது இப்படியிருக்க, இந்தப் பாகவத விஷயங்களைத் தமிழில் கவியாகப் பாடப்பட்ட பாகவத புராணம் என்னும் நூலிலும், மோகினி உருவம் காட்டிய அத்தியாயம் பாட்டு, 1,2,3,4,5,6,7,8,9,10, 11,12,13,14,15,16,17,18,19,20,21 வரை இன்னும் மோசமாகப் பாடப்பட்டிருக்கிறது. அதாவது, விஷ்ணுவின் மோகினி அவதாரத்தைப் பார்க்கச் சிவன் பார்வதியுடன் கைலையில் இருந்து வைகுண்டத்துக்குச் சென்று விஷ்ணுவை நமஸ்கரித்து “ எமது சுவாமியே” என்று வணங்கி மோகினி வேஷத்தைக் காட்டு என்றான்.

விஷ்ணு பெண் உருவத்தை எடுத்தான். சிவனுக்குக் காமம் ஏற்பட்டுப் பொலிகாளை எருதுபோல் பெண்ணின் கிட்டப் போனான். விஷ்ணு ஓட்டம் காட்டினான். சிவன் புத்திகலங்கித் தன் இடுப்பிலுள்ள ஆடை (புலித்தோல்) அவிழ்ந்து கீழே விழுந்தும் கவனியாமல், ஓடி எட்டிப் பெண்ணின் மயிரைப்பிடிக்க முயன்றான். முடியவில்லை. மோகத்தால் சிவனின் இந்திரியம் கொட்டிப் போய்விட்டது. பிறகு சிவனுக்கும் புத்திவந்து, சுவாமி! உன் பெருமையை அறியாமல் மோசம் போனேன்” என்று விஷ்ணுவுக்கு நமஸ்காரம் செய்தான். உடனே விஷ்ணு சங்குசக்கரத்துடன் காட்சியளித்து மறைந்தார்.

“சிவன் கைலாயத்துக்குச் சென்று விஷ்ணுவின் பெருமையைப் பார்வதிக்குச் சொன்னான்” என்று இருக்கிறது. சிவனும் விஷ்ணுவும் இடுப்பில் துணியில்லாமல் ஆணும், பெண்ணுமாய்த் தெருவில் ஓடிய ஓட்டத்தைக் கண்டு வைகுண்டத்தில் உள்ள ஆண்களும், பெண்களுமான தேவர்கள், முனிவர்கள், நம் வைகுண்ட பிராப்த்தி அடைந்தவர்கள் சிரிக்காவிட்டாலும், அந்தக் கதையைப் படித்து, நடித்துக் காலசேஷபம் செய்து ஸ்ரவணாந்தம் செய்து வாழும் சைவ, வைணவ பக்தர் சிரிக்காவிட்டாலும், பகுத்தறிவும், சுயமரியாதையும் இல்லாத மானமற்ற கூலிப்பண்டிதர்கள் சிரிக்காவிட்டாலும், மற்ற உண்மைத் தமிழ் மக்கள் இப்படிப்பட்ட ஆரிய மதத்தையோ, இந்துமதத்தையோ, சைவ வைணவ மதங்களையோ பற்றி என்ன நினைப்பார்கள் என்று கேட்பதே இந்த வியாசத்தின் லட்சியமாகும்.

(தந்தை பெரியார் அவர்கள் சித்திர புத்திரன் என்ற புனைப்பெயரில் எழுதிய கட்டுரை - 06.11.1943 தேதியிட்டு வெளியான குடிஅரசில் வெளி வந்தது நூல்:-“இந்து மதமும் தமிழர்களும்” பக்கம்:-9-12 )

அனுப்பி உதவியவர்: தமிழ் ஓவியா