நமது நாட்டுக்கு வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தின் அவசியத்தைப் பற்றியும், காஞ்சீபுரம் மகாநாட்டு நடவடிக்கைகளைப் பற்றியும், நிர்மாணத் திட்டங்களைப்பற்றியும் எடுத்துச்சொல்லி வருகையில் அவர் முக்கியமாய்க் குறிப்பிட்டதாவது:-

தற்சமயம் நமது தேசத்திலுள்ள பல கட்சிகளுக்கும் ராஜீய திட்டம் ஏறக்குறைய ஒன்றாகி விட்டது. நிர்மாணத்திட்டத்தை நடத்திவைப்பதில், எந்தக் கட்சிக்காரராயிருந்தபோதிலும், நிர்மாணத்திட்டம் நடத்துவதற்குப் பயப்பட வேண்டிய அவசியமே இல்லை. காங்கிரசை ஒப்புக்கொள்ளாதவர்களும் காங்கிரசில் சேரப்பயப்படுபவர்களும் கூட நிர்மாணத்திட்டத்தை நடத்திக் கொண்டு போகலாம். காங்கிரஸில் சேர்ந்தால்தான் நிர்மாணத்திட்டத்தை நடத்தலாம், இல்லாவிட்டால் நடத்தமுடியாது என்னும் பயம் உங்களுக்கு வேண்டாம். மகாத்மாவின் நிர்மாணத்திட்டத்தை ஆதரிக்கக் கூடிய கட்சி எதுவாயிருந்தாலும் அவைகளெல்லாம் எனக்கு ஒன்றுதான். நிர்மாணத் திட்டமில்லாத எந்த ராஜீயக் கட்சியையும் தேசத்திற்கு அநுகூலமானதென்று சொல்லமாட்டேன்.

நிர்மாணத்திட்டத்தில்தான் தேசத்தின் விடுதலை இருக்கிறது. காங்கிரசிலும் நிர்மாணத்திட்டத்தின் ஆதிக்கமிருந்ததினால்தான் காங்கிரசிற்கும் மூலைமுடுக்குகளிலெல்லாம் மதிப்பு இருந்து கொண்டு வந்தது. இப்போது நிர்மாணத் திட்டத்தின் ஆதிக்கம் ஒழிந்து, காங்கிரசினால் ஒரு காலத்தில் உமிழ்ந்து ஒதுக்கித்தள்ளப்பட்ட சட்டசபைப் பைத்தியத்தையும், உத்தியோகப் பைத்தியத்தையும் மறுபடியும் காங்கிரஸ் எடுத்துக்கொள்ளுமானால், பழைய காலத்துக் காங்கிரஸ் யோக்கியதைக்குத்தான் மறுபடியும் வந்துவிடுமென்றும், ஆகையால் நிர்மாணத்திட்டத் தைப் பிரதானமாகக் கொண்ட எந்தக்கட்சியானாலும், நீங்கள் அதிற்சேர்ந்து மனப்பூர்த்தியாய் உழைக்க வேண்டுமென்றும், தீண்டாமை விஷயத்தில் ஏற்படும் எதிர்ப்புக்களை தைரியமாய் முன்னின்று தாக்க வேண்டுமென்றும், அவற்றை அஜாக்ரதையாய் விட்டுவிட்டீர்களேயானால் நமது மதமும், சமூகமும் அடியோடு போய்விடுமென்றும், கதர் விஷயத்தில் கவலை எடுத்துக்கொள்ளாமல் சட்டசபைப் பிரவேசத்திலும், உத்தியோக வேட்டையிலுமே கவனத்தைச் செலுத்துவீர்களானால், தேசத்தில் ஏழைகள் அதிகமாய்ப்போய் கொலை, கொள்ளை முதலியதுகள் பரவிவிடுமென்றும், மதுவிலக்கும் நமது தேச மக்களின் ஒழுக்கத்திற்கு மிகவும் முக்கிய மானதென்றும் சொல்லிக்கொண்டிருக்கையில், ஒரு பிராமணர் மத்தியில் எழுந்து, நீங்கள் ஒத்துழையாதாரராச்சே, எப்படி வகுப்புவாரிப்பிரதிநிதித்வம் கேட்கலாம்? என்று சொன்னார். அதற்கு ஸ்ரீமான். நாயக்கர் ஒத்துழையாமை பெல்காம் காங்கிரசின்போதே ஒதுக்கிவைத்தாகிவிட்டதென்றும், சட்டசபைப் பிரவேசம் காங்கிரஸ் அனுமதித்து விட்டதென்றும், சுயராஜ்யக் கட்சிக்கு மாத்திரம் சம்பந்தமில்லாத தாலூகா போர்டு, ஜில்லாபோர்டு முதலிய ஸ்தல ஸ்தாபனங்கள் இருக்கிறதென்றும் இவைகளுக்குப் போக இஷ்டப்படும் ஜனங்களுக்கு அவரவருக்கு உண்டான உரிமைகள் அவரவருக்குக் கிடைப்பதில் ஒருவருக்கொருவரை ஏமாற்றவும், சூட்சிகளும். கலவரங்களும் நடக்கவும் செய்ய இடம் வைக்கக்கூடாதென்றும், ஆனதால் வகுப்புவாரிப் பிரதிநிதித்வம் கேட்பது காங்கிரஸ் கொள்கைக்கு விரோதமாகாதென்றும், தேசத்தில் பல வகுப்பாரின் ஒற்றுமைக்கும், நம்பிக்கைக்கும் வகுப்புவாரிப் பிரதிநிதித்வம் அவசியமானதென்றும் சொன்னார்.

பிறகு மற்றொருவர் தேவஸ்தான மசோதாவைப் பற்றி சில வார்த்தைகள் சொல்ல வேண்டுமென்று, அக்ராசனாதிபதிக்குச் சீட்டு அனுப்பியதின்பேரில், அதைப் பற்றியும் சில வார்த்தைகள் சொல்ல அக்கிராசனாதிபதி கட்டளையிட்டார். அதன்பேரில் ஸ்ரீமான். நாயக்கர் பேசுகையில் தேவஸ்தான சட்டமானது நமது நாட்டில் வெள்ளைக்காரர் வந்த பின்புங்கூட அதாவது 1817-1863 வருடங்களிலேயே இந்துமத தர்ம பரிபாலனத்தைப் பற்றி சர்க்காரார் என்கிற முறையில் சட்டம் செய்திருக்கின்றார்களென்றும், அந்தச் சட்டம் போராதென்றும், இனியும் கண்டிப்பான சட்டங்கள் செய்யவேண்டுமென்றும் அநேக வருஷங்களாக காங்கிரஸ் கான்பரன்ஸ் முதலிய ராஜீய மகாநாடுகளின் தீர்மானங்கள் மூலியமாகச் சர்க்காரைக் கேட்டுக் கொண்டிருக்கிறோமென்றும், 1914-ம் வருஷத்திய கோயமுத்தூர் ஜில்லா கான்பரன்ஸிலும்கூட ஒரு தீர்மானம் இதைப்பற்றி ஸ்ரீமான். பி.வி.நரசிம்ம ஐயரால் பிரேரேபிக்கப்பட்டு தீர்மானமாயிருப்பது தமக்கு ஞாபகமிருக்கின்றதென்றும், ஜஸ்டிஸ் கட்சியார் இந்த சட்டத்தைச் செய்தார்களென்கிற காரணத்திற்காக அதைச் சிலர் தூற்றுவதற்கு நாம் காதுகொடுப்பது பைத்தியக்காரத்தன மென்றும், நமது மதம் தற்காலம் சிரிப்புக்கிடமாய் கோர்ட்டுகளில் தொங்கிக் கொண்டிருக்கின்றதென்றும், யானையின் பின் தொடையில் போடுகிற நாமம், வடகலையா, தென்கலையாவென்பது ஓர் வெள்ளைக்கார அதிகாரி சொன்னால்தான் நமது மனம் திருப்தியடைகின்றதென்றும், இன்னும் பல முக்கியமான விஷயங்களுக்கு சர்க்கார் பிரவேசத்தையும் எதிர்பாராமலிருப்பதற்கு நமக்கு யோக்கியதை இல்லை என்பதை தினம் காட்டிக்கொண்டிருக்கிறோமென்றும், இந்து மதத்தில் ஒரு இந்து பொதுத் தெருவில் நடப்பதற்குச் சர்க்கார் தயவிருந்தாலுங்கூட நம்மவரே செய்யும் சூட்சிகளால் முடியாமலிருப்பதோடு, இன்னும் பல கெடுதிகள் நம்மவரே செய்கிறார்கள் என்றும் இம்மாதிரியான ஜனங்களிடையில் வாழவேண்டுமானால் சர்க்கார் சட்டமில்லாமல் எப்படி வாழ முடியுமென்றும், மதத்தின் பேரால் வசூல் செய்யப்படுகிற கோடிக் கணக்கான ரூபாய்களை சரிவரச் செலவழிப்பதற்குக் கணக்குக் கேட்காமலிருக்கக்கூடிய அவ்வளவு யோக்கியர்களா நாம்.

நமது மடாதிபதிகளையும், மகந்துக்களையும், பூஜாரிகளையும் அடையதகுந்த யோக்கியதைக்கு வந்துவிட்டோமாவென்றும், நமது மதத்தைப்பற்றி நமக்கு என்ன ஞானமிருக்கிறதென்றும், “சுவாமி ஏன் பன்றி அவதாரமெடுத்தார்? உலகத்தைப் பாயாய்ச் சுருட்டிக்கொண்டு ஒரு இராக்ஷசன் சமுத்திரத்துக்குள் ஒளிந்து கொண்டான், அதைப் பிடுங்கிக்கொண்டு வரத்தான் பன்றி அவதாரம் எடுக்கப் பட்டதென்று” சொன்னால், “அப்போது தண்ணீர் எதன் மேலிருந்தது” என்று கேட்கும் பிற மதஸ்தர்களுக்குப் பதில் சொல்லத் தெரியாமல் விழித்து, நமது மதத்தை இழந்து, அன்னிய மதத்துக்குப் போய்ச்சேரும் பாமரர்களைத் தடுக்கத் தகுந்த மதக்கல்விக்காவது, நமது பணத்தை ஆயிரம், பதினாயிரமாகக் கொள்ளையடித்து காலைக் கழுவி பாத தீர்த்தமென ஒரு உத்ரணித் தண்ணீரைக் கொடுத்து சோம்பேறிகளுக்குப் பொங்கிப் போட்டுக் கொண்டும், தங்கப் பல்லக்கில் சவாரி செய்து கொண்டும், தாசி வேசிகளை வைத்துக் கொண்டும், மற்றும் கூடா ஒழுக்கத்தில் திரியும் நமது மடாதிபதிகளென்போரும், மற்றோரும் இதுவரை என்னவழி செய்திருக்கிறார்கள் என்றும், இவற்றையெல்லாம் நினைக்கும் போது இப்போதுள்ள தேவஸ்தானச் சட்டம் கூட போதாதென்றே சொல்லி முடித்தார்.

பிறகு அக்ராசனரால் முடிவுரை சொல்லப்பட்டுக் கூட்டம் கலைந்ததும், அக்ராசனருக்கும், உபன்யாசகருக்கும் வந்தனம் சொல்லப்போவதாய் கோயமுத்தூர் டவுண் காங்கிரஸ் காரியதரிசியென்ற முறையால், ஒரு பிராமணர் எழுந்து தன்னைக் கேட்காமல் இக்கூட்டம் கூட்டியதென்றபோதிலும், அதைத் தான் ஒப்புக்கொள்ளுவதாகவும், ஸ்ரீமான். நாயக்கர் நிர்மாணத் திட்டத்தைப் பற்றி வெகு அற்புதமாகச்சொன்னாரென்றும், ஆனால் காங்கிரசில் சேராதீர்களென்று சொன்னதை மாத்திரம் தான் ஒப்புக்கொள்ள முடியா தென்றும் பத்திரிக்கை நிருபர்களைப் பார்த்துச் சொன்னார். உடனே அங்கிருந்த ஜனங்களெல்லாம் அவரை, “நீர் சொன்னது தப்பு, ஸ்ரீமான். நாயக்கர் சொல்லாத பொய்யான வார்த்தைகயைச் சொல்லி பத்திரிக்கையில் ஸ்ரீமான். நாயக்கருக்கு விரோதமான பிரசாரம் செய்வதற்கு அநுகூலமாகப் பிராமணத்தந்திரம் செய்திருக்கிறீர், ஸ்ரீமான். நாயக்கருக்கு வந்தனங்கூறுவதாகச் சொல்லி தந்திரமாக மேடையில் ஏறிக்கொண்டு இம்மாதிரி பொய்யான சங்கதிகளைப் பேசுவது மிகவும் ஒழுங்கீனமென்றும், காங்கிரஸ் பெயரைச் சொல்லிக்கொண்டு திரியும் பிராமணர்கள் யோக்கியதையே இப்படியிருக்குமானால், மற்றவர்கள் சங்கதி எப்படியிருக்குமென்றும்” சொன்னார்கள். பிறகு அந்த பிராமணர், தனக்கு அந்தமாதிரி பட்டதாக நினைத்து, அவ்விதம் சொன்னேன் என்று சொல்லிக் கொண்டார். உடனே அக்ராசனர் பொது ஜனங்களை அமர்த்தி, கூட்டத்தைக் கலைத்தார். பிறகு, பிராமணர் ஸ்ரீமான். நாயக்கரிடம் வெளியில் வரும்போது சமாதானம் சொல்லிக்கொள்ளுவதற்காகப் பேச வந்தார்.

ஸ்ரீமான். நாயக்கர் உங்கள் சமாதானத்தைப்பற்றி எனக்கு அக்கரையில்லை, கூட்டத்தில் அம்மாதிரி பேசிவிட்டு, தனியாக இங்குவந்து என்னிடம் பல்லைக்கெஞ்சுவதில் என்ன பிரயோஜனம்? ஒரு சிறு சந்தர்ப்பம் கிடைத்தவுடனேயே இவ்வளவு விஷமம் செய்துவிட்டீர்களே, பெரிய யோக்கியதை கிடைத்தால் பிராமணரல்லாதார்களை அடியோடு ஆலையில் வைத்தல்லவா நசுக்கி விடுவீர்கள் என்று சொன்னார். உடனே அந்த பிராமணர் தனக்குக் காங்கிரசிலிருக்கும் சம்பந்தத்தை ராஜீனாமாச் செய்வதாகத் தீர்மானம் செய்து, ராஜீனாமாக் கடிதத்தை எழுதி ஜோப்பில் போட்டுக்கொண்டுதான் உங்கள் கூட்டத்திற்கு வந்தேனென்று சொல்லி அக்கடிதத்தை எடுத்துக் காட்டினார். பக்கத்திலிருந்தவர்கள், “மீட்டிங்குக்கு வரும்போதே இம்மாதிரி கலகம் செய்யலாம், அங் கிருக்கிறவர்கள் ஏதாவது சொன்னால், உடனே ராஜீநாமாக் கொடுத்து விடுவதாய்ச் சொல்லிவிடலாமென நினைத்து ராஜீநாமா எழுதி ஜோப்பில் போட்டுக் கொண்டு, கலகத்திற்குத் தயாராக வந்திருக்கிறீர் என்பது இந்த ராஜீநாமாவால் ருஜுவாகிறதா இல்லையா” வென்று கேட்டார்கள்.

பிறகு அந்தப் பிராமணர் வெட்கி தலைகுனிந்துகொண்டு பேசாமற் போய்விட்டார். கூட்டத்திலிருந்தவர்களுக்கு தேசீய பிராமணர்கள் சூழ்ச்சியின் முறை நன்றாய் விளங்கிற்று.

இப்படியிருக்க, சுதேசமித்திரன் என்னும் பிராமணப் பத்திரிக்கை ஸ்ரீமான், நாயக்கர் பேசியதுபற்றி சரியாய் எழுதாமலும், நடந்த வர்த்தமானங்களைப்பற்றி சரியாய்க் குறிப்பிடாமலும், ஸ்ரீமான். நாயக்கர் பேரில் பழிசுமத்தி எழுதியிருக்கிறது. பிராமணப் பத்திரிகைகளின் வல்லமைகளை அறிவதற்கும், ஆக்கவும், அழிக்கவும் கூடிய சக்திகள் அவைகளுக்குண்டென்பதைக் காட்டவும் இந்த உதாரணமே போதுமானதா? இல்லையாவென்பதை வாசகர்களே யூகித்துக்கொள்ள வேண்டுமாய்க் கேட்டுக்கொள்ளுகிறேன்.

(குடி அரசு - சொற்பொழிவு - 27.12.1925)