ஜப்பானை, ரிக்டர் அளவுகோளில் 8.9 புள்ளிகள் வரை பதிவான ஒரு சக்திவாய்ந்த பூகம்பம் தாக்கியுள்ளது. பல்லாயிரக்கணக்கானோர் இறந்து போனார்கள் அல்லது காணாமல் போனார்கள். வளர்ச்சியடைந்த இந்த நாட்டில் பூகம்பத்தால் சகலமும் நொறுங்கிப்போனது. அணு உலைகளும் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு ஆபத்தில் சிக்கிக்கொண்டன. பூகம்பமும் சுனாமியும் தாக்கிய பகுதிக்கு மிக அருகிலுள்ள நான்கு அணு உலைகள் பெரும் பாதிப்படைந்தன. 10 மீட்டருக்கும் அதிகமான உயரத்தோடு வந்த சுனாமிப் பேரலைகள் பசுபிக் கடலோரப் பகுதிகள் முழுவதிலும் எச்சரிக்கை விடுத்துச்சென்றன. கடலோரத்திலிருந்து 100 கி.மீ. தொலைவில், கடலின் அடியில் 24.4 கி.மீட்டர் ஆழத்தில் பூகம்பம் மையம் கொண்டது.

இந்த ஆழத்தின் அளவும் தூரத்தின் அளவும் குறைந்திருந்தால் சேதத்தின் விளைவு மிக மோசமானதாக ஆகியிருக்கும். புவியின் அச்சு இடம் மாறிவிட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்குள் இப்படி புவியின் அச்சு பிசகியிருப்பது இது மூன்றாவது முறை: முதலில் ஹைட்டி; பின்னர் சிலி; தற்போது ஜப்பான். இத்தகைய இயற்கை சீற்றங்களுக்கு மனிதர்கள் மீது குற்றம் சுமத்த முடியாது. ஒவ்வொரு நாடும், .இதுபோன்ற கடுமையான சூழலை எதிர்கொள்ளும் மக்களுக்கு தங்களது சக்திக்கு உட்பட்டு முடிந்த உதவியை உறுதிப்படுத்த வேண்டும்; அதில் முதன்மையானது மனிதத்தன்மையற்ற அணுசக்தி தாக்குதலையும், தேவையில்லாத போர்ச்சூழலையும் தடுத்து நிறுத்துவதே.

ஸ்பானிய புவியியல் வல்லுநர்களின் கருத்துப்படி, ஜப்பானில் ஏற்பட்ட இந்த பூகம்பம், 200 மில்லியன் டன் டைனமைட் வெடிகுண்டு வெடித்துச்சிதறியதற்கு சமமானது. இந்தத் துயரத்திலிருந்து அந்த மக்களை மீட்க ஜப்பானிய அரசும் உலக நாடுகளும் முயற்சிகளையும் உதவிகளையும் மேற்கொண்டிருக்கின்றன.இந்த உலகைத் தாக்கியுள்ள மற்றொரு பூகம்பம் அரசியல் தன்மைவாய்ந்தது. இது மிகவும் பயங்கரமானது. லிபியாவில் மையம்கொண்டுள்ள இந்த பூகம்பம், உலகின் அனைத்து நாடுகளையும் பாதிக்கப்போகிறது. எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. ஜார்ஜ் புஷ் மீதும் நேட்டோ ராணுவக்கூட்டமைப்பு மீதும் லிபிய ஜனாதிபதி கடாபியும் அந்நாட்டின் தலைமையும் வைத்த நம்பிக்கை தவறாகிப்போனது. எனக்கு எந்த சந்தேகமுமில்லை.

அரபு உலகம் முழுவதிலும் மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக கிளர்ந்தெழுந்துள்ள புரட்சிகர போராட்ட அலையை ஒழித்துக்கட்டுவதற்கு லிபியா மீது ராணுவத்தாக்குதலை நடத்த அமெரிக்காவும் நேட்டோவும் ஏற்கெனவே முடிவு செய்துவிட்டன. மார்ச் 19 சனிக்கிழமை மாலையில் மிக அற்புதமான, ஆரோக்கியமான விருந்துக்குப்பின்னர், நேட்டோவின் தலைவர்கள் தங்களது படைகளுக்கு உத்தரவிட்டார்கள், லிபியாவை தாக்குங்கள் என்று! “ஒடிசி டான்” என்று இதற்குப் பெயர்வைத்திருக்கிறார்கள். தன்னை உலகின் அனைத்து அதிகாரமும் படைத்த தலைவன் என்று கருதிக்கொண்டிருக்கும் அமெரிக்கா முடிவெடுக்காமல் இது நிற்கப்போவதில்லை. உலகின் கவனம் ஜப்பானுக்குத் திரும்பியிருந்தது.

பூகம்பம், சுனாமி, அணு உலை விபத்து என பல்லாயிரக்கணக்கான மக்கள் இறந்துபோனதைப்பற்றி கவலைப்பட்டுக்கொண்டிருந்தது. கவனம் அங்கேயிருக்கிற சூழலில், ஏற்கெனவே பருவநிலை மாற்றம், உணவுப்பொருட்களின் விலை வரலாறு காணாத உயர்வு, இயற்கை வளங்களையும், மனித வளங்களையும் கசக்கிப்பிழிந்து அதைக்கொண்டு ராணுவங்களுக்கு மிகப்பெருமளவில் நிதி ஒதுக்கீடுகள் என அழிவுச்சூழல் அதிகரித்துள்ள தருணத்தில் நேட்டோவின்போர் துவங்கியிருக்கிறது. நேட்டோவின் ராணுவத்தலையீட்டை உலகம் முழுவதிலுமுள்ள மக்கள் கடுமையாக எதிர்க்கிறோம். அந்நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு அந்நியர்களின் தலையீடு ஏதுமின்றி ஒரு அரசியல் தீர்வு உருவாக்கப்படவேண்டும் என்ற கருத்தை உரத்து முழங்குகிறோம். தங்கள் மீது தொடுக்கப்பட்டுள்ள ஏகாதிபத்திய தாக்குதலை தேசபக்த லிபிய மக்கள் தங்களது இறுதி மூச்சுவரை எதிர்கொண்டு தாய்நாட்டைக் காப்பார்கள் என்று நம்புகிறோம்.

Pin It