இரண்டாண்டுகளுக்கு முன் 2009ஆம் ஆண்டு மே மாதம் தமிழீழ விடுதலைப் போராளிகளுக்கு ஏற்பட்ட கடும் வீழ்ச்சிகளுக்கும் பின்னடைவுகளுக்கும் பிறகு தமிழீழ விடுதலைப் போராட்டம் தாற்காலிகமாக ஒரு தேக்கத்திற்கு வந்துள்ளது.

இந்த நிலையில் போராளி அமைப்புகளில் யார், யார் இருக்கிறார்கள், எங்கு இருக்கிறார்கள், அடுத்த கட்டமாக அவர்கள் என்ன செய்யத் திட்டமிட்டிருக்கிறார்கள் என்பதெல்லாம் பலருக்கும் கேள்வியாக இருக்கிறது. இந்தக் கேள்விகளுக்கெல்லாம் உடனே பதில் தெரிந்தாக வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை. போராளி அமைப்பைச் சேர்ந்தவர்கள் இவற்றை வெளிப்படையாக அறிவிக்கும் சாத்தியமும் இல்லை. கடும் நெருக்கடிக்கும் வீழ்ச்சிக்கும் உள்ளான போராளி இயக்கம் எதுவும் அப்படியே முற்றும் செயலிழந்து போகாது அது எப்படியாவது மீண்டும் துளிர்த்தெழவே முயற்சிக்கும் என்கிற அடிப்படையில் அது மீண்டும் புத்துயிர் பெற்று வரும் என்று நம்பலாம்.

ஆனால், இந்நிலையில், இப்போராளி அமைப்புகளுக்கு எந்த வகையிலும் நேரடியாக சம்பந்தமில்லாத, அல்லது போராளி அமைப்புகளால் அறிவிக்கப்படாத ஒரு அமைப்பு ‘நாடு கடந்த தமிழீழ அரசு’ என்கிற பெயரில் உருவாக்கப்பட்டு, பல்வேறு நாடுகளிலும் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களை வைத்து அங்கே தேர்தலும் நடத்தி இந்த அரசுக்கான நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்துள்ளதாகச் செய்திகள் வந்துள்ளன. கூடவே அந்தத் தேர்தலும் நம்மூர் சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்கள் போல் பல தில்லு முல்லுகளோடு நடந்ததாகவும் தகவல்.

இது இப்படியிருக்க, இந்த நாடு கடந்த தமிழீழ அரசு பற்றியதான கூட்டம் ஒன்று சென்னையில் நடைபெற்று அதில் தமிழ் நாட்டைச் சேர்ந்த ஒருவர் நியமன உறுப்பின ராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டி ருக்கிறார். இந்த நிலையில் சாதாரண தமிழீழ விடுதலை ஆதரவாளர்களுக்கு, தமிழீழ மக்களின் நலனில் அக்கறையுள்ளவர்களுக்கு எழும் கேள்விகள் கீழ்வரும்.

1. இந்த நாடு கடந்த தமிழீழ அரசை நிறுவுவது அல்லது உருவாக்கியது யார்? இதற்குப் போராளி அமைப்புகளில் குறிப்பாக விடுதலைப் புலிகள் அமைப்பின், தலைமையகத்தின் ஆதரவு அல்லது ஏற்பு உண்டா?

2. இந்த ஏற்பாட்டை முதலில் தொடங்கி வைத்த குமரன் பத்மநாபன் என்பவர் சிங்கள அரசால் கைது செய்யப்பட்டு அவர் சிங்கள அரசின் கட்டுப்பாட்டில் இருக்க ருத்ரகுமாரன் என்பவர் இந்தப் பொறுப்பை ஏற்று நடத்தும் சாத்தியம் எப்படி, எந்த அடிப்படையில் ஏற்பட்டது அல்லது உருவாக்கப்பட்டது?

3 தமிழீழ விடுதலைப் போராட்டம் தொடங்கிய காலம் தொட்டு அதற்காகக் குரல் கொடுத்துப் போராடிய தமிழகத் தலைவர்கள், உணர்வாளர்கள் பலரும் இதில் சம்பந்தப்படாது ஒதுங்கியே இருக்கிறார்களே அது ஏன், அவர்கள் இந்த நாடு கடந்த தமிழ் ஈழ அரசைப் புறக்கணிக்க அல்லது ஒதுக்கக் காரணம் என்ன?

4. தமிழீழ விடுதலைக்கான போராட்டத்தை, எழுச்சியைத் திசை திருப்பவும், தணிக்கவும், அதற்கு ஒரு வடிகால் போல் பயன்படவும் ஆட்சியாளர்களே இப்படி ஒரு ஏற்பாட்டைச் செய்து உலவ விட்டிருக்கிறார்கள். இதில் பணம் விளையாடியிருக்கிறது என்றும் ஒரு கூற்று இருக்கிறதே, இதை எப்படி எடுத்துக் கொள்வது?

5 இது சிங்கள, இந்திய உளவுத் துறையால் ஏற்படுத்தப்பட்டு இருக்குமோ என்று பரவலாக எல்லார் மத்தியிலும் ஒரு ஐயம் இருப்பது ஒரு புறம் இருக்க, தமிழீழம் என்றாலே எட்டிக் காயாய் வெறுக்கும் தில்லி, தமிழக அரசுகள் இந்தக் கூட்டத்திற்கு அனுமதி கொடுத்ததோடு தமிழ் நாட்டைச் சேர்ந்த ஒருவர் அடுத்த நாட்டு அரசுக்கு நாடாளுமன்ற உறுப்பினராக நியமனம் பெறவும் அனுமதித்துள்ளதே, அது எப்படி?

6. இந்த நாடு கடந்த தமிழீழ அரசு அமைப்பையட்டி, அடிக்கடி வெளிநாடு செல்லவும், ஊர்களைச் சுற்றவும், புலம் பெயர்ந்து வாழும் வசதி பெற்ற தமிழர்களிடமிருந்து கணிசமாக வசூல் செய்யவும், இது ஒரு நல்ல கவசமாக அமையும் என்பதால்தான், இதில் சிலர் ஆர்வம் காட்டுகிறார்கள் என்கிறார்களே, இது உண்மையா?

7. தமிழகத்தில் உள்ள தமிழீழ விடுதலை ஆதரவாளர்களை வசப்படுத்தி, தங்கள் வளையத்துக்குள் கொண்டு வந்து காயடிக்கவும், இயலாமல் போனால் அழித் தொழிக்கவும் சிங்கள உளவுப் படையும் கூலிப்படையும் இந்திய அரசின் துணையோடு தமிழகத்தில் தங்கு தடையின்றி உலவி வருவதாகவும் ஒரு புறம் பேசப்படுகிறதே, நாடு கடந்த அரசு என்பதும் இது போன்ற முயற்சிகளில் ஒன்றுதானா?

8. நாடு கடந்த தமிழீழ அரசு முதலில் அறிவிக்கப்பட்டபோது தமிழ் நாட்டில் யாரும் அதைக் கண்டு கொள்ளாமலோ ஆதரவளிக்காமலோ இருக்க இந்த சூழ்ச்சி வலைக்கு வசப்படுபவர்கள் யார்? பொருளியல் நடவடிக்கைகளில் அவர்களது அணுகுமுறை எவ்வாறு என்பதை யெல்லாம் உளவுத்துறை மூலம் கண்டறிந்து அதன் பிறதே தமிழகத்தில் இதற்கான ஏற்பாடு செய்யப் பட்டதாகக் கூறப்படுகிறதே, இது நிஜமா?

9 எல்லாவற்றுக்கும் மேலாக இந்த நாடு கடந்த தமிழீழ அரசு, தமிழீழ மக்களுக்கு என்ன செய்ய இருக்கிறது? என்ன செய்யமுடியும்? தற்போது வீடு, வாசல் இழந்து நிலம் இழந்து சொந்த மண்ணிலேயே அகதிகளாகவும் அனாதைகளாகவும் முள்வேலி முகாம்களுக்குள் சிறைப் பட்டவர்களாகவும் வாழ்ந்து வரும் தமிழர்களுக்கு இந்த அரசு என்ன செய்யப் போகிறது. என்ன செய்ய முடியும்? அதை எப்படி செய்யும்? அதற்கானத் திட்டம் ஏதும் இந்த அரசிடம் இருக்கிறதா?

10.சீனாவிலிருந்து தப்பிவந்த தலாய்லாமா கூட இந்திய மண்ணில் அருணாசலப் பிரதேச தர்மசாலாவில் நாடு கடந்த திபெத் அரசை நிறுவி நிர்வகித்துக் கொண்டிருக்கிறார், இந்திய அரசின் துணையோடு. சீன எதிர்ப்பு நிலைப்பாட்டை தலாய்லாமா கடைப்பிடித்து வருவதால் இந்திய அரசு அவருக்கு ஆதரவளித்து வருகிறது.இங்குள்ள நாடு கடந்த தமிழீழ அரசும் அப்படி இலங்கை இனவெறி அரசுக்கு எதிரான நடவடிக்கைகள், நிலைப்பாடுகளை எடுத்து இங்கே செயல்பட்டால் இந்திய அரசு அதை அனுமதிக்குமா? எப்படி?

இப்படி அடுக்கடுக்காக எண்ணற்ற கேள்விகள் நாடு கடந்த தமிழீழ அரசு சார்ந்து எழுகின்றன. இந்நிலையில்தான் தமிழக மக்கள் இந்தக் கேள்விகளை, இதுபோன்ற இன்னமும் பல கேள்விகளைத் தங்களுக்குள் எழுப்பி விடை தேடிக் கொண்டிருக்கிறார்கள். விவரம் அறிந்தவர்கள் விளக்கம் தந்தால் நல்லது.

Pin It