திராவிட இயக்கங்களின் தேர்தல் அரசியல், தமிழ்ச் சமூகத்தை அதலபாதாளத்துக்குள் இட்டுச் செல்வதில் தன்னிகரற்று திகழ்கிறது. தமிழ்ச் சமூகமே சாதிய சமூகம் என்று பேசும் திராவிட இயக்கங்கள், தமிழ்ச் சமூகத்தில் இருந்து சாதிய வேறுபாடுகளைக் களைய என்ன செய்திருக்கின்றன? தேவர் ஜெயந்தி விழாவை அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் போட்டிபோட்டுக் கொண்டு கொண்டாடிக் களிக்கின்றன. தென்தமிழகத்தின் ஆதிக்கச் சாதி அமைப்புகளை அங்கீகரித்து தேர்தல் உடன்பாடு கொள்கின்றன. முக்குலத்தோர் அமைப்புகளை தேர்தலில் கூட்டுச் சேர்த்துக் கொண்டு அவர்களை வாக்கு வங்கிகளாகப் பயன்படுத்திக் கொண்ட திராவிட இயக்கங்களின் ஆட்சியால் அந்த‌ சமூகத்தினர் அடைந்த பயன்தான் என்ன?

புதிய தமிழகம் கிருஷ்ணசாமி, ஜான் பாண்டியன், பூவை ஜெகன், திருமாவளவன், செ.கு.தமிழரசு ஆகியோரை திராவிட இயக்கங்கள் ஆதரித்து அரவணைத்துக் கொண்டதால், அவர்கள் பிரதிநிதிகளாக உள்ள சமூகம் வளர்ந்த விகிதம் எவ்வளவு?

பாட்டாளி மக்கள் கட்சியை மாறி மாறி அரவணைத்துக் கொண்ட இரு பெரும் திராவிட கட்சிகளால் இன்றைக்கு அந்தக் கட்சியைச் சேர்ந்தவர்கள் செல்வந்தர்களாக வளர்ந்திருக்கிறார்கள். ஆனால், தமிழ்நாட்டில் உள்ள வன்னியர் சமூகம் எந்தளவுக்கு முன்னேறியிருக்கிறது? தங்களுடைய வாக்கு பொறுக்கும் தேர்தல் அரசியலுக்காகவே சாதி அமைப்புகளை திராவிடக் கட்சிகள் மாறி மாறி ஆதரிக்கின்றன என்பது கூட குறைத்த மதிப்பீடுதான். உண்மையில் புதுப் புது சாதிய அமைப்புகளை தேர்தல் அரசியலுக்குள் இழுப்பதன் மூலம் தமிழ்நாட்டு மக்களுக்குள் பிரிவினையை ஏற்படுத்தி அதன்மூலம் நீண்ட காலத்துக்கு அரசியல் ஆதாயம் தேட இரு பெரும் திராவிடக் கட்சிகளும் திட்டமிட்டு செயல்படுகின்றன.

தேர்தல் கட்சியாக உருமாறி இரண்டு ஆண்டுகள் கூட முடிவடையாத கொங்குநாடு முன்னேற்றக் கழகத்தை வரும் சட்டப் பேரவைத் தேர்லுக்காகக் கூட்டுச் சேர்த்துக் கொண்டு அவர்களுக்கு ஏழு தொகுதிகளை ஒதுக்கியிருக்கிறார், கருணாநிதி. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கொங்குநாடு முன்னேற்றக் கழகம் தனித்துப் போட்டியிட்டதால் சோபிக்க முடியவில்லை. அந்தக் குறையை இந்த முறை கருணாநிதி துடைத்திருக்கிறார். இவருக்குப் போட்டியாக மற்றொரு திராவிடக் கட்சியான அ.தி.மு.க. கொங்கு இளைஞர் பேரவைக்கு ஒரு இடம் ஒதுக்கியிருக்கிறது.

கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த கோவை, பொள்ளாச்சி, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், கரூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல் என கவுண்டர்கள் ஆதிக்கம் அதிகமான உள்ள மாவட்டங்களைச் சுற்றியுள்ள கிராமங்களில் தீண்டாமைக் கொடுமைகள் தீராத நோயாக இன்னும் இருக்கின்றன. கவுண்டர்கள் எதிரில் தாழ்த்தப்பட்டோர் சைக்கிள் ஓட்டக் கூடாது. அவர்கள் முன்பு தலித்துகள் தோளில் துண்டு போட்டுக் கொள்ளக் கூடாது. இன்றளவும் அம்மாவட்டங்களில் இரட்டை டம்ளர் முறை தொடர்கிறது.

திருப்பூர் மாவட்டம் இடுவாய் கிராமத்தில் கவுண்டர்களின் சாதிக் கொடுமைகளை எதிர்த்து கேள்வி கேட்ட (கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்த) ஊராட்சித் தலைவர் இடுவாய் ரத்தினசாமி கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் சுவடு இன்னும் அங்கே மிச்சமிருக்கிறது.

கோவை மாவட்டம் காளப்பட்டியில் கவுண்டர்களின் கோபத்துக்கு ஆளாகும் தலித்களின் குடிசைகள் அவ்வப்போது தீவைத்து கொளுத்தப்படுகின்றன. தாழ்த்தப்பட்டோர் கடுமையாக தாக்கப்படுகின்றனர். இன்றும் அந்தப் பகுதி சர்ச்சைக்குரிய பகுதியாகவே இருந்து வருகிறது. பெரியார் திராவிட கழகத்தினர் நடத்திய கள ஆய்வில் கொங்கு மண்டலத்தில் இரட்டை டம்ளர் முறை இன்றும் ஒழிக்கப்படாத நிலையிலேயே இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருப்பூர் எம்எல்ஏ கோவிந்தசாமி, திருப்பூர் எம்.பி. சிவசாமி, திருப்பூர் நகர்மன்றத் தலைவர் செல்வராஜ், அமைச்சர்கள் பொங்கலூர் பழனிச்சாமி, வெள்ளக் கோயில் சாமிநாதன் என எல்லோருமே கவுண்டர்கள்தான. கம்யூனிஸ்ட் கட்சிகளும் கொங்கு மண்டலத்தின் பொதுத் தொகுதிகளில் கவுண்டர்களை மட்டுமே வேட்பாளர்களாக நிறுத்துகின்றன. தலித்துக்கு ஓட்டுப் போட கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கவுண்டர்கள் தயாராக இல்லை என்பதைத்தான் இது காட்டுகிறது. கோவை தொகுதி முன்னாள் எம்.பி. சுப்பராயன் கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்தவர். சுப்பராயனுக்கு முன்பு எம்.பி. தேர்தலில் நிறுத்தப்பட்ட நல்லகண்ணு, தோற்றுப் போனதற்கு அங்கு நிலைத்திருக்கும் சாதிய சிக்கலும் ஒரு காரணம்தான். திராவிடக் கட்சிகளின் மாவட்டச் செயலாளர்களும் பெரும்பாலும் கவுண்டர்களே. திராவிடக் கட்சிகளில் மட்டுமல்ல கம்யூனிஸ்ட்கள் முதல் இந்து அமைப்புகள் வரை எல்லாவற்றிலும் கவுண்டர்களின் கையே கொங்கு மண்டலத்தில் ஓங்கி இருக்கிறது.

கொங்கு மண்டலத்தில் அரசு அலுவலகங்கள், காவல்துறையினர், நீதிமன்றங்கள் எல்லாம் கவுண்டர்களின் ஆதிக்கத்தில்தான் உள்ளன. ‘நோ பார்க்கிங்‘கில் காரை நிறுத்தும் கவுண்டரை தட்டிக் கேட்ட காவல்துறை அதிகாரி அதே இடத்தில் அடிபட வேண்டிய சூழல்தான் இன்றைக்கும் உள்ளது. கவுண்டர்கள் சமூகத்தில் கணிசமானவர்கள் வசதியானவர்களே. இவர்களில் பெரும்பாலானோர் நிலச்சுவான்தார்கள்; தொழிலதிபர்கள். அண்மையில் இவர்கள் நடத்திய மாநாட்டிற்கு வந்து போனவர்கள் கத்தை கத்தையாக ரூபாய் நோட்டுகளை மாநாட்டுப் பந்தலில் வைத்திருந்த அண்டாக்களில் கொட்டிச் சென்றனர்! இப்போது ஆளும் கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொண்டதால் தேர்தலில் பணத்தை வாரியிறைக்க வாய்ப்புள்ளது!

கவுண்டர்கள் மீது தீண்டாமை வன்கொடுமைச் சட்டம் பாய்கின்ற சூழலில் அதிலிருந்து அவர்களைக் காப்பாற்ற தங்கள் சாதியைச் சேர்ந்த அமைச்சர்களோ, எம்.எல்.ஏ.வோ துணைக்கு வருவதில்லை என்ற மனக்குறை அவர்களிடம் நீண்ட காலமாக இருந்தது. இதை சரிகட்டவே கொங்குநாடு முன்னேற்றப் பேரவை கொங்கு நாடு முன்னேற்றக் கழகம் என்று தேர்தல் கட்சியாக மாறியது. (இதை அவர்களே தங்கள் மாநாட்டுத் தீர்மானத்தில் வழிமொழிந்திருக்கிறார்கள்)

இவர்களை இரு திராவிட இயக்கங்களும் கூட்டுச் சேர்த்துக் கொள்ள விரும்பின. அந்தப் போட்டா போட்டியில் வெற்றி பெற்ற தி.மு.க. அவர்களுக்கு ஏழு தொகுதிகளை ஒதுக்கியிருக்கிறது. கொங்கு மண்டலத்தில் ஆதிக்கச் சாதியினராக இருந்த கவுண்டர்களிடம் ஆட்சி அதிகாரம் இருந்தாலும் இத்தனை நாள் கட்சியின் தலைமைக்குக் கட்டுப்பட்டு இருந்தார்கள். ஆனால், இன்றைக்கு அவர்கள் தனிக் கட்சியாக உருவாகி, தேர்தலிலும் நின்று வெற்றி பெறுவார்களேயானால், கொங்கு மண்டலத்தில் கவுண்டர்களின் ஆதிக்கம் கட்டுப்பாடு அற்றுப் போகும். அதன் விளைவுகள் மிக மோசமாக இருக்கும் என்பதில் எந்த ஐயமுமில்லை.

கவுண்டர்களில் பெரும்பாலானோர் இஸ்லாமியர்களையும் தலித்களையும மோசமாகவே நடத்துவார்கள். தங்கள் தோட்டத்தில் கூலிவேலை பார்க்கும் தலித் தொழிலாளியை கவுண்டர் வீட்டு சிறுவன் கூட ‘டேய் மாரியப்பா இங்கே வாடா‘ என்று தான் அழைப்பான். கொங்குநாடு முன்னேற்றக் கழகத்தினர் ஆட்சி அதிகாரத்துக்கு வந்துவிட்டால், இஸ்லாமியர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் அங்கே அதிகரிக்கும். தலித்களுடன் மோதல் போக்கை கவுண்டர்கள் வெளிப்படையாக கையாள்வார்கள். சாயப்பட்டறை கழிவுகளால் நொய்யல் ஆறும் ஒரத்துப்பாளையம் அணையும் வீணாகிப் போனதும் இவர்களால்தான். மாங்கல்ய திட்டம், திருமணத் திட்டம் எனத் தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டி கொழுத்தவர்கள் இவர்கள். கொங்கு மண்டலத்தின் ஆட்சி அதிகாரம் இவர்கள் கைக்கு வந்தால் இந்தச் சிக்கல்கள் மேலும் அதிகரிக்கும் என்பதில் ஐயமுமில்லை. கடந்த பேரவைத் தேர்தலிலும், நாடாளுமன்றத் தேர்தலிலும் கொங்கு மண்டலத்தில் பின்னடைவைச் சந்தித்த தி.மு.க., இந்த முறை அதை மாற்றியாக வேண்டும் என்பதற்காக நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த கையோடு அதற்கான வேலைகளைத் தொடங்கியது.

கோவையில் நடந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடும் அதைத் தொடர்ந்து, அ.தி.மு.க. பொதுக்கூட்டத்துக்குப் போட்டிக் கூட்டமும் அதை உறுதிப்படுத்தின. மேலும், கொ.மு.க.வை தங்கள் அணியில் சேர்க்க வேண்டும் என்பதிலும், தி.மு.க. ஆர்வமாக இருந்தது. இறுதியில் 7 தொகுதிகளைக் கொடுத்து தங்களது அணியில் சேர்த்துக் கொண்டுள்ளது.

கொ.மு.கழகத்துக்கு ஏழு தொகுதிகளும் இளைஞர் பேரவைக்கு ஒரு தொகுதியும் ஒதுக்கி அவர்களைத் தேர்தல் அரசியலில் நுழைய விட்டதன் மூலம், கொங்கு மண்டலத்தின் அமைதிக்கு வேட்டு வைத்திருக்கிறார்கள் பெரியார் வழி வந்ததாக சொல்லிக்கொள்ளும் கருணாநிதியும், ஜெயலலிதாவும்!

- வேலு (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It