சர்வாதிகாரிகள், மன்னர் பரம்பரை ஆட்சிகள், குடும்ப ஆட்சிகள், பரம்பரை ஆட்சிகளுக்கு எதிராக மக்களின் புரட்சிகரப் போராட்டங்கள் மேற்கு ஆசிய நாடுகளில் கொந்தளித்து எழுந்து வருகின்றன. வெற்றிகளும் துவங்கிவிட்டன. உலகெங்குமுள்ள ஜனநாயகத்தை விரும்பும் மக்கள் இதனால் மகிழ்ச்சிக் கடலில் நீந்துகிறார்கள்.

டூனிசியா நாட்டில் 23 ஆண்டுகளாய் சர்வாதிகார ஆட்சி நடத்திய அதிபர் பென்அலியின் ஆட்சி முடிவுக்கு வந்துவிட்டது. 29 நாட்கள் மக்கள் நடத்திய போராட்டங்களின் முடிவில் சர்வாதிகாரம் தகர்ந்தது.

இதைத் தொடர்ந்து எகிப்தில் சர்வாதிகாரி ஹோஸ்னி முபாரக் ஆட்சியை எதிர்த்து லட்சக்கணக்கான மக்கள் தெருக்களில் இறங்கினர். இந்தக் கிளர்ச்சிக்கு மக்களைத் திரட்ட வலைத்தளங்கள் மூலம் ரகசியமாய் பிரச்சாரம் செய்தனர். ஜனவரி 25ல் துவங்கிய போராட்டம் பத்து நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வெற்றிகரமாக முடிந்தது. மக்களைச் சுட்டுக் கொல்லுமாறு முபாரக் உத்தரவிட்டான். ஆனால் ராணுவம் மறுத்துவிட்டது. முபாரக் ஹெலிகாப்டரில் நாட்டை விட்டுத் தப்பியோடினான். இவனது முப்பதாண்டு கால ஆட்சியில் ஊழல் செய்து கொள்ளையடித்து, வெளிநாடுகளில் பதுக்கி வைத்திருப்பது மூன்று லட்சம் கோடி டாலர்கள் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

எகிப்திய மக்களின் வெற்றிக்குப் பிறகு மற்ற நாடுகளுக்கும் புரட்சி தொடர்ந்து பரவி வருகிறது. அல்ஜீரியா, ஜோர்டான், லெபனான், ஏமன், சிரியா, சூடான், ஈரான், மொராக்கோ, பஹ்ரைன் ஆகிய நாடுகளில் மக்களின் புரட்சிகரப் போராட்டங்கள் நடைபெறுகின்றன. இது மேலும் பல நாடுகளுக்கும் பரவலாம்.

இந்தச் சர்வாதிகார ஆட்சியாளர்களும், பரம்பரை ஆட்சியாளர்களும் மக்களை ஏமாற்ற இலவசங்களை வழங்கினர். வரிக்குறைப்பு, அடிக்கடி அமைச்சரவையை மாற்றியமைப்பது, வலைத்தளங்களைத் தடை செய்வது, விரைவில் பதவியிலிருந்து ஓய்வு பெறப் போவதாய் அறிவிப்பது போன்ற ஏமாற்று வித்தைகள் மூலம் பதவிகளில் நீடிக்கின்றனர். ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி லட்சக்கணக்கான கோடிகளை கொள்ளையடித்து வெளிநாடுகளில் குவித்து வருகின்றனர்.

இநதியாவிலும் தில்லியில் பரம்பரை ஆட்சியும், தமிழகத்தில் குடும்ப ஆட்சியும் லட்சக்கணக்கான கோடிகளைக் கொள்ளையடித்து வெளிநாடுகளில் சொத்துக்களைக் குவித்து வருகின்றனர். இங்கும் தேர்தலை நோக்கி மக்களின் எழுச்சி உருவாகி வருகிறது.

ரூ. 12 லட்சம் கோடி ஊழல்

பிரதமர் மன்மோகன் சிங் தன்னை நேர்மையின் அவதாரம் என்று கதைத்து வருகிறார். ஆனால் அவரது கட்டுப்பாட்டில், நேரடி ஆளுகையின் கீழ் உள்ள விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோவில் தான் இந்த இரண்டு லட்சம் கோடி ரூபாய் ஊழல் வெளியாகியுள்ளது.

இஸ்ரோவின் வர்த்தகப் பிரிவு ஆன்ட்ரிக்ஸ் மூலம் தேவாஸ் மல்டி மீடியா என்ற கம்பெனிக்கு இரண்டு செயற்கைக் கோள்களை விண்ணில் ஏவி, இருபதாண்டுகள் நிலைக்கச் செய்வதே இந்த ஒப்பந்தமாகும். இந்த ஒப்பந்தம் ஐந்தாண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது. இந்த தேவாஸ் மல்டி மீடியாவின் உரிமையாளர் சந்திரசேகர் இஸ்ரோவின் முன்னாள் தலைவராவார். அவருக்குப் பின்னால் இருப்பவர்களின் பெயர்கள் வெளிவரவில்லை.

இரண்டு செயற்கைக் கோள் மூலம் கிடைக்கும் எஸ்-பேண்ட் அலைக்கற்றையானது மொபைல் போன்களை இயக்குவதற்கும், உளவு பார்க்கவும் பயன்படும். இதன் உரிமம் தேவாஸூக்கு வெறும் ஆயிரம் கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளது. கடந்த ஐந்தாண்டுகளில் எஸ்-பேண்ட் அலைக்கற்றையின் ஒரு பகுதியை தேவாஸ் நிறுவனம் பல ஆயிரம் கோடி ரூபாய்களுக்கு விற்பனை செய்துள்ளது. மத்திய அரசுக்கு இதன் மூலம் கிடைக்க வேண்டிய இரண்டு லட்சம் கோடி ரூபாய், மத்திய அரசால் தாரை வார்க்கப்பட்டுள்ளது. இதை மத்திய அரசின் தணிக்கைக்குழு அம்பலப்படுத்தி விட்டது.

இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் முன்பே தேசிய விண்வெளிக் கமிசனும், மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் மோகன் பராசரனும் எதிர்ப்புத் தெரிவித்தனர். ஆனால் அதையும் மீறி ஒப்பந்தம் செய்தனர். ஆனால் நேர்மையாளர் போல் நடிக்கும் பிரதமர் மன்மோகன் சிங் இந்த ஒப்பந்தம் பற்றி தனக்கு எதுவுமே தெரியாது என்கிறார். அப்படியானால் சோனியாஜி, ராகுல்ஜி (2ஜி) களுக்குத் தெரியுமா?

நமது நேர்மைப் பிரதமருக்கு கார்கில் வீரர்களின் குடும்பங்கள் மோசம் போனது (ஆதர்ஷ் ஊழல்) தெரியாது. காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் ரூ. 76, 000 கோடிகள் பறிபோனது தெரியாது. ஸ்பெக்ட்ரம் ரூ. 1. 76 லட்சம் கோடி ஊழல் தெரியாது. இஸ்ரோ ஊழலும் தெரியாது. சோனியா கொடுத்த பிரதமர் நாற்காலி மட்டும் தெரியும். அதை இழந்து விடாமல் காங்கிரஸ் தலைவருக்கு ஆமாம் சாமி போடவும் தெரியும். வெட்கக்கேடான ஊழல்களைப் பற்றி அலட்டிக் கொள்ளாத பிரதமர், இப்போது அமைச்சரவையைக் கூட்டி இஸ்ரோ-தேவாஸ் ஒப்பந்தம் ரத்து செய்யப்படுவதாய் அறிவிக்கிறார். தேவாஸ் நிறுவனம் நீதிமன்றத்துக்குப் போகப் போவதாய் அறிவித்துள்ளது. நமக்கோ

"பொழுதெல்லாம் எங்கள் செல்வம்

கொள்ளை கொண்டு போகவோ

நாங்கள் சாகவோ" என்ற பாரதியின் பாடல்தான்

நினைவுக்கு வருகிறது.

ஜெயில் ராசா

திமுகவின் கொள்கை பரப்புச் செயலாளர் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா தற்போது திகார் சிறையில் ஊழல் கொள்கையைப் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார். அலைக்கற்றை ஊழலில் பங்கு பெற்ற அனைவரும் கைது செய்யப்பட்டு, அவர்களது சொத்துக்களைப் பறிமுதல் செய்ய வேண்டும் என்று மக்கள் கோருகிறார்கள். ராசா தொந்தரவு தாளாமல் ஏதேனும் உளறிவிடுவாரோ என்று கருணாநிதியும், சோனியாவும் பயப்படுவதாகவும் செய்திகள் கசிகின்றன.

இந்த 1. 76 லட்சம் கோடி ரூபாய் ஊழலில் கருணாநிதி குடும்பம் முழுமையும் பங்கெடுத்துள்ளது என்றும், ஊழலில் காங்கிரஸ் தலைவரான சோனியாவுக்கும் பங்கு போயிருப்பதாகவும் ஏற்கெனவே செய்திகள் வெளி வந்துள்ளன. இந்த ஊழல் பணத்திலிருந்து 214 கோடி ரூபாய் கலைஞர் தொலைக்காட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது. கனிமொழி குடும்பத்தினருக்கு வெளிநாடுகளில் சொத்துக்கள் வாங்கிக் குவித்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. டாடா, ராசாத்தி அம்மாளின் பினாமிக்கு 350 கோடி ரூபாய் பெறுமானமுள்ள இடத்தை வழங்கியுள்ளார். தயாளு அம்மாவுக்கு 300 கோடி ரூபாயில் கட்டிடம் கட்டித் தரப் போகிறார்.

தயாநிதிமாறன் தனது பாட்டி தயாளு அம்மாவுக்கு 600 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்து மத்திய ஜவுளித்துறை அமைச்சராகியுள்ளார். 600 கோடி ரூபாய் கொடுத்து அமைச்சரானவர் ஐந்தாண்டில் எத்தனை ஆயிரம் கோடி சம்பாதிப்பார்? இதனால் நூல்விலை கிலோவுக்கு 21 ரூபாய் எகிறி நெசவுத் தொழில் படுத்துவிட்டது. மத்திய அமைச்சர்கள் எதை ஏற்றுமதி செய்தாலும், இறக்குமதி செய்தாலும் 17 சத கமிசன் கிடைப்பதாக நீரா ராடியா டேப்பில் கூறப்பட்டுள்ளது.

சிபிஐ, கலைஞர் டி. வி. அலுவலகத்தை ரெய்டு செய்துள்ளது. சிபிஐ விசாரணை நேர்மையாக இருக்க வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். உச்சநீதிமன்றத்திடமும் மக்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.

எரியும் மீனவர்கள்

தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையின் தாக்குதல்கள் தொடர்கின்றன. அண்மையில் 106 மீனவர்கள் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். தற்போது மத்திய அரசின் தலையீட்டால் விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும் 24 மீனவர்கள் மீது இலங்கைப் படையினர் பெட்ரோல் குண்டுகளை வீசியுள்ளனர். வெந்தவர்கள் மருத்துவ மனைகளில் உள்ளனர்.

கடந்த ஐந்தாண்டு காலத்தில் நூற்றுக்கணக்கான தமிழக மீனவர்கள் இலங்கைப் படையினரால் கொலை செய்யப்பட்டுள்ளனர். இத்தனை காலமாக மத்திய அரசுக்குக் கடிதம் எழுதிக் கொண்டிருந்தவர், தற்போது இலங்கைத் தூதரகம் முன்பு கனிமொழியை விட்டு ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளார். அன்றைய மாலைப் பத்திரிகைகளில் 'கனிமொழி கைது' என்ற போஸ்டர்களைப் பார்த்து மக்கள் பரபரப்பாகப் பத்திரிகைகளை வாங்கினர். ஸ்பெக்ட்ரம் ஊழலுக்காகக் கைது செய்யப்பட்டிருப்பார் என நினைத்து ஆர்வமாய் வாங்கியவர்கள். ஆர்ப்பாட்டத்திற்காகக் கைது என்ற செய்தியைப் படித்துவிட்டு 'ப்பூ' என்று பத்திரிகைகளைக் கீழே வீசினர்.

மீனவர்கள் யாரும் திமுகவுக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்பதற்காக சிங்காரவேலர் 150 ஆம் ஆண்டு விழாவைக் கொண்டாடப் போவதாய் முதல்வர் அறிவித்துள்ளார். காரணம், சிங்காரவேலர் மீனவ சமுதாயத்தில் பிறந்தவர் என்பது தான். ஓட்டு வாங்கும் தந்திரம்தான்.

தேர்தல் முடியும் வரை கூட காங்கிரஸ்-திமுக கூட்டணியால் தமிழக மீனவர்களைப் பாதுகாக்க முடியவில்லை. இந்திய-இலங்கைக் கடற்படைக் கூட்டு ரோந்துக்குக் கூட ஏற்பாடு செய்ய முடியவில்லை.

அத்வானி மன்னிப்பு

சுவிஸ் வங்கிகளில் கறுப்புப் பணத்தைப் பதுக்கி வைத்துள்ளோரில் ராஜிவ் காந்தி, சோனியா இருவரும் உள்ளனர் என்று பாரதிய ஜனதாக் கட்சி அறிக்கை வெளியிட்டது. சோனியா அதற்கு மறுப்புத் தெரிவித்து எல். கே. அத்வானிக்குக் கடிதம் எழுதினார். அத்வானி உடனே சோனியாவிடம் மன்னிப்புக் கேட்டுக் கடிதம் எழுதினார். இதை பி. ஜே. பி. தலைவர்கள் சிலர் அத்வானியைக் கண்டித்தனர்.

இது பற்றி பத்திரிகையாளர் குருமூர்த்தி கூறும் போது "சோனியா குடும்பம் சுவிஸ் வங்கியில் பணம் போட்டுள்ளது பற்றிய விபரங்களை ஆதாரங்களுடன் வெளியிட்டோம். அந்த அறிக்கையை பி. ஜே. பி. வெளியிடவில்லை. நாங்கள் (எஸ். குருமூர்த்தி, இந்திய உளவு அமைப்பின் முன்னாள் தலைவர் அஜித்தோவல், பெங்களூர் ஐ. ஐ. எம். பேராசிரியர் ஆர். வைத்தியநாதன், பிரபல வழக்கறிஞர் மகேஷ் ஜேத்மலானி) நால்வரும் தான் அறிக்கை வெளியிட்டோம். 1991ம் ஆண்டில் சுவிஸ் நாட்டுப் பத்திரிகையான ஸ்வீசர் இல்லஸ்ட் ரேட் இதழ் ராஜிவ்காந்தியும் சோனியாவும் பணம் போட்டதை படத்துடன் செய்தியாக வெளியிட்டது. வேண்டுமானால் சோனியா எங்கள் மீது வழக்குத் தொடரட்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆக, சோனியா குடும்பம் ஸ்விஸ் வங்கியில் பணம் பதுக்கி வைத்திருப்பது உறுதியாகி விட்டது. அதனால் தான் சுவிஸ் வங்கியில் போடப்பட்டுள்ள பணத்தைத் திரும்பப் பெற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க மறுத்து வருகிறது என்பதும் இதில் அம்பலமாகிவிட்டது.

Pin It