பார்ப்பன - பன்னாட்டு கூட்டுக் கொள்ளைக் காடாக இந்தியா மாறி விட்டது. இங்கே நடப்பது மக்களாட்சியல்ல; உண்மையான மக்களாட்சி தத்துவத்தை பார்ப்பனியத்தால் செரிமானம் செய்து கொள்ள முடியாது. எனவே மக்கள் நாயகத்தை பார்ப்பன மயமாக்குவதற்கு அவர்கள் புதிய புதிய வியூகங்களை வகுத்து செயல்படுத்துகிறார்கள்.

பிரதமர் மன்மோகன் சிங்கின் பொருளாதாரக் கொள்கை பார்ப்பன நாயகத்துக்கு வலிமையான அடித் தளமாகிவிட்டது. அண்மையில் ஊடகங்களின் ஆசிரி யர்கள் குழு ஒன்றுக்கு பிரதமர் பேட்டி அளித்துள்ளார். 

ஊடகங்கள் - பார்ப்பன பன்னாட்டு பெரும் நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்படுகின்றன என்று கூறுவதைவிட, அவர்களாலே நடத்தப்படுகின்றன என்று கூறுவதுதான் சரி. எனவே, பிரதமர் மன்மோகன் சிங்கிடம் அவர்கள் முன் வைத்த கேள்விகளும், பார்ப்பன பன்னாட்டு நலன் சார்ந்தவைகளாகவே இருந்தனவே தவிர, மக்களை முன்னிறுத்தவில்லை. 

ஸ்பெக்டம் - அலைக்கற்றை ஊழலில் பெரும் பணத்தை சுருட்டியவர்கள் இந்த பன்னாட்டு நிறுவனங்கள்தான். அந்த நிறுவனங்கள் மீது சட்டம் பாயவில்லை. மாறாக இந்த கொள்ளையை மூடி மறைக்க ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ஏல முறையைப் பின்பற்றாமல், ‘முதலில் வந்தவர்களுக்கு முதல் உரிமை’ என்ற கொள்கையைப் பின்பற்றியதையே தவறு என்று இந்த பார்ப்பன - பன்னாட்டு ஊடகங்கள் கருத்துரு வாக்கம் செய்கின்றன. அரசாங்கம் ஏல முறையில் ஒதுக்கீடு செய்யவில்லை. என்பது உண்மைதான். ஆனால், ஒதுக்கீட்டு உரிமையைப் பெற்ற பன்னாட்டு நிறுவனங்கள், தங்கள் ஒதுக்கீட்டு உரிமையை சந்தையில் ஏலத்துக்கு விற்று, பணத்தை பல மடங்கு வாரி சுருட்டிக் கொண்டு விட்டார்கள். ஒதுக்கீடு உரிமையை மட்டுமல்ல, அமைச்சர் பதவிகளையும்கூட இந்த பன்னாட்டுக் கும்பலே ‘ஏலம்’ எடுத்தது என்பதையே நீராராடியா உரையாடல்களிலிருந்து புரிந்து கொள்ள முடிகிறது. 

பெரும் பணக்காரர்கள், தொழில் நிறுவனங்கள் சட்டவிரோதமாக சுவிஸ் உள்ளிட்ட வெளிநாட்டு வங்கிகளில் குவித்து வைத்துள்ள பணத்தை வெளியே கொண்டு வருவது பற்றியோ, அவர்களின் பெயர்ப் பட்டியலை வெளியிட வேண்டுமென்றோ, இந்த ஊடக பார்ப்பனியவாதிகள் பிரதமரிடம் கேள்வி கேட்க வில்லை. இப்படி வெளிநாடுகளில் முதலீடு செய்துள்ள தால் இந்தியாவுக்கு நாள் ஒன்றுக்கு ஏற்படும் இழப்பு ரூ.240 கோடி என்று ஒரு சர்வதேச பொருளாதார ஆய்வு நிறுவனம் (Global Financial Integrity) கூறியுள்ளது.  

பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு விட்டனர். பன்னாட்டு நிறுவனங் களுக்கு 70 லட்சம் கோடி வரை வரி தள்ளுபடிகளையும் வரிச் சலுகைகளையும் வாரி வழங்குகிறார்கள். அப்பாவி மக்களையும், மனித உரிமைப் போராளிகளை யும், அகதிகளாக அடைக்கலம் தேடி வந்தவர்களையும் அடக்கி ஒடுக்கும் சட்டங்களைப் போட்டுக் கொண்டு அதே நேரத்தில் பன்னாட்டு நிறுவனங்கள் கொள்ளை யடிக்க கதவு திறந்துவிடும் ஆட்சிதான் இங்கே நடக்கிறது. பட்டினியால் பாதிக்கப்படும் 84 நாடுகளில் 67வது இடத்தில் நிற்கிறது இந்தியா. (Global Hunger Index) கனிம வளங்கள் சுரண்டப்படுகின்றன. சுற்றுச் சூழல் சூறையாடப்படுகிறது. சில்லறை விற்பனை யிலும் பன்னாட்டு நிறுவனங்கள் நுழைந்து விட்டன. பங்குதாரர்கள் என்ற போர்வையோடு நுழைந்து கொண்டிருந்த பன்னாட்டு நிறுவனங்கள், நேரடியாகவே 51 சதவீதம் தொழில் முதலீடுகளை செய்ய மன்மோகன் சிங் முடிவெடுத்துவிட்டார். 

இதற்கு மாநில அரசுகளிடம் கண்துடைப்புக்காக கருத்து கேட்கிறது மன்மோகன் சிங் ஆட்சி. தி.மு.க. ஆட்சி இதற்கு சம்மதித்துவிட்டது. ஆக, இந்தியாவின் சுதந்திரத்தில் 51 சதவீதம் அன்னியர்களிடம் தாரை வார்க்க திட்டம் தயாராகி விட்டது. பன்னாட்டு நிறுவனங்களோடு பார்ப்பன மேலாதிக்கம் மேலும் கொழுக்கிறது. தமிழர்கள் பார்ப்பன-இந்திய அடிமை யாக்கப்படுகிறார்கள்!  

இந்த பன்னாட்டு அடிமை தேசத்தில் தமிழன் வாழும் நிலை தொடரத்தான் வேண்டுமா என்ற கேள்வி எழும் நேரம் வந்து விட்டது!

Pin It