உலக விளையாட்டு ரசிகர்களின் பார்வையை சீனாவின் குவாங்சு நகர் 16 நாட்கள் ஆக்கிரமித்துக்கொண்டன. இதற்குக் காரணம், ஒலிம்பிக் போட்டிக்கு அடுத்ததாக மிகப்பெரிய போட்டியாக கருதப்படும் ஆசிய விளையாட்டு போட்டியாகும். நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த விளையாட்டுத் திருவிழா நவம்பர் 12ஆம் தேதி முதல் 27ஆம் தேதிவரை சீனாவின் குவாங்சு நகரில் நடைபெற்றது. இதில் இந்தியா, சீனா, வடகொரியா, தென்கொரியா, பாகிஸ்தான், ஜப்பான் உள்ளிட்ட 45 நாடுகளிலிருந்து 10 ஆயிரம் வீரர்கள் சங்கமித்தனர். இந்த விளை யாட்டு போட்டிகளுக்காக அமைக்கப்பட்ட 55 மைதானங்களில் பந்தயங்கள் நடைபெற்றன.

இந்த தொடரில் 906 வீரர்களை களம் இறக்கிய இந்தியா 14 தங்கம், 14 வெள்ளி, 33 வெண்கலத்துடன் 64 பதக்கங்களை வென்று ஆறாவது இடம் பிடித்து, அதிக பதக்கம் குவித்து வரலாற்று சாதனை படைத்து நாட்டிற்கு பெருமையை தேடிக்கொடுத்தது. இது போதுமா என்றால் நிச்சயம் இல்லை.

இந்த முறை ஆசியப் போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட துப்பாக்கிச் சுடுதல், குத்துச் சண்டை, இறகுப் பந்து, பளுத்தூக்குதலில் நம்மவர்கள் ஏமாற்றத்தை அளித்தனர்.

தடகளத்தில் மட்டும் 5 தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் உட்பட 11 பதக்கங்கள் வென்று சாதித்தனர். அடுத்ததாக குத்துச் சண்டையில் 2 தங்கம் உட்பட 9 பதக்கமும், படகு வலித்தலில் 1 தங்கம் உட்பட 14 பதக்கங்களை கைப்பற்றினர். துப்பாக்கிச் சுடுதலில் ஒரே ஒரு தங்கம் மட்டுமே கிடைத்தது.

இந்திய வீரர்களின் வரலாற்றுச் சாதனைக்கு சொந்தக்காரர்கள் குக்கிராமங்கள், சிறு நகரங்களைச் சேர்ந்த இளம் வீராங்கனைகள் என்பது பெருமைக்குரியது.

உடுப்பி மாவட்டத்திலுள்ள ஓர் சிறிய கிராமத்தில் விவசாயக் குடும்பம் ஒன்றில் பிறந்த வீராங்கனை அவினி. பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வரும் இவர் தடை ஓட்டத்தில் 400 மீட்டர் பிரிவில் தங்கம் வென்று கர்நாடக மாநிலத்திற்கு பெருமை சேர்த்தார்.

ஓட்டப் பந்தயத்திற்கு தேவையான ஷ¨ கூட வாங்க முடியாத பழங்குடியினத்தைச் சேர்ந்த கவிதா ரவத், தனது ஏழ்மை நிலையிலும் வெறும் காலுடன் ஓடிப் பயிற்சிப் பெற்று வெள்ளிப் பதக்கம் வென்று மத்தியபிரதேசத்திற்கு பெருமையை தேடிக் கொடுத்துள்ளார்.

4400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் தங்கம் வென்று உலகத்தின் பார்வையை தன் பக்கம் திருப்பிய ப்ரீஜா ஸ்ரீதரன், கேரளா மலைப் பகுதியான இடுக்கியில் தினக்கூலி தொழிலாளியான தனது தாய்க்கு கிடைக்கும் குறைந்த வருவாயில் வாழ்ந்து வருகிறார். காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தியின் சொந்தத் தொகுதியான உத்திரபிரதேசம் ராய்பரேலியில் பயிற்சி பெற மைதானம் இல்லாத நிலையில், 3000 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் தங்கம் வென்ற சுதாசிங்ன் குடும்பம் வசதிபடைத்ததல்ல. இருப்பினும் கடின உழைப்பின் மூலமே இந்த வெற்றியை பெற முடிந்தது.

இந்திய வரைபடத்தில் ஒரு சிறு புள்ளி அளவே கொண்ட சிக்கிம் மாநிலத்தைச் சேர்ந்த வில்வித்தை வீரர்கள் ராகுல் பேனர்ஜி, தருண் தீப், ஜெயந்த், மங்கல் ஆகியோர் இரண்டு வெண்கலம், ஒரு வெள்ளி பதக்கம் வென்று கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பதை நிரூபித்துள்ளனர். காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற, அசாம் மாநிலம் கவுஹாத்தியைச் சேர்ந்த சோம்தேவ் தேவர்மன் டென்னிஸ் போட்டியில் இரண்டு தங்கமும், மகாராஷ்டிர மாநிலம் புனேவைச் சேர்ந்த பங்கஜ் அத்வானி பில்லியர்ஸ் போட்டியிலும், ராஜஸ்தான் மாநிலத்தில் சிறிய கிராமத்தில் பிறந்த பஜரங் லால் தாக்கர் படகு வலித்தலிலும் முத்திரைப்பதிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த மூன்று பேரும் ஆசிய போட்டியிலும் முதன் முறையாக தங்கம் வென்று வரலாற்று சாதனை படைத்தனர்.

ஆசிய போட்டி வரலாற்றில் நான்கு தங்கம், ஏழு வெள்ளி உட்பட 11 பதக்கங்களை குவித்து அதிகப் பதக்கம் வென்ற வீரங்கனையாக பி.டி.உஷா திகழ்ந்து வருகிறார். இவரிடம் பயிற்சி பெற்ற ப்ரீஜா இந்த முறை பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.

அதே சமயம், ஆசிய போட்டியில் இந்த முறை தங்கம் குவிப்பார்கள் என்று அதிகம் எதிர்ப்பார்க்கப்பட்ட சென்னை கல்லூரி மாணவி காயத்ரி 100 மீட்டர் தடை ஓட்டத்திலும், பிரேம் ஆன்ந்த் 400 மீட்டர் தொடர் ஓட்டத்திலும் பிரான்சி சகாயரா 800 மீட்டர் ஓட்டத்திலும், நிகில் சிற்றரசு உயரம் தாண்டுதலிலும் சரஸ்வதி ஈட்டி எறிதலிலும், தீபிகா பலிகல், ஜோஷ்னா ஆகியோர் குவா போட்டியிலும் ஏமாற்றிவிட்டனர்.

முதன் முறையாக ஆசியப் போட்டியில் சேர்க்கப்பட்ட பெண்கள் கபடியில் இந்திய அணி, தங்கம் வென்று சாதனைப் படைத்தனர். இந்த அணியில் தமிழகத்தைச் சேர்ந்த கவிதா இடம் பெற்றிருந்தது மட்டுமே ஆறுதல். உலகிலேயே அதிக மக்கள் தொகையைக் கொண்ட நாடு சீனா. பொருளாதாரம், தொழில்நுட்பம் போன்றவற்றில் அசூர வளர்ச்சி பெற்று உலக நாடுகளுக்கு சவாலாக விளங்கிவருகிறது. விளையாட்டுத் துறையிலும் தாங்கள் வல்லவர்கள் என்பதை ஒலிம்பிக், ஆசிய போட்டிகளில் தொடர்ந்து நிருபித்துக்காட்டி வருகின்றனர்.

இதற்கு முக்கியக் காரணம் அங்கு அளிக்கும் கடுமையான பயிற்சியும், நவீன வசதியும் ஒன்றாகும். சிறு வயது முதல் கல்வியோடு விளையாட்டிலும் ஊக்கமளிக்கிறார்கள். அதற்கு தகுந்தாற்போல் விளையாட்டு மைதானங்களும் வீரர்கள் தேர்வு முறையும் சிறப்பாக அமைத்து கொடுத்து வருகிறார்கள்.

அதே சமயம் சீனாவுக்கு அடுத்தபடியாக மக்கள் தொகை கொண்டுள்ள இந்தியா சர்வதேசப் போட்டிகளில் பதக்கம் வெல்வது குதிரைக் கொம்பாகவே உள்ளது.

தமிழ்நாட்டில் சிறந்த விளையாட்டு வீரர்களை உருவாக்க கிராமம் மற்றும் நகரங்களில் பள்ளி அளவில் தேர்வு செய்து தனியார் துறைக்கு நிகராக பயிற்சி அளிக்க வேண்டும். வீரர்களுக்கு தரமான மைதானங்கள் அமைத்து கொடுப்பதோடு, தரமுள்ள உபகரணங்களையும் தேவைக்கேற்ப வழங்க வேண்டும். மாவட்ட அளவில் வெற்றி பெரும் வீரர்களை அதிக ஊக்கம் கொடுத்து சர்வதேச தரத்திற்கு உயர வழிவகுத்துத் தர வேண்டும். இதற்கு அரசு கூடுதலாக நிதி ஒதுக்குவதோடு முறையாக செயல்படுத்த வேண்டும். அப்போதுதான் பிற மாநிலங்களோடும் நாடுகளோடும் வெற்றிகளை குவிக்கமுடியும்.

Pin It