இந்தியாவில் மார்க்சியம், பார்ப்பனர்களால் பரப்பப்பட்டது. ஒரு வகுப்பாக,  பார்ப்பனர்கள் இதற்கு எவ்வகையிலும் பொருத்தமில்லாதவர்கள். பொதுவாக,  பண்பாட்டுப் பாரம் பரியத்தை தூக்கி எறிவதற்காகவும், கடந்த ஆயிரம் ஆண்டுகளாக பெரும்பான்மை மக்களை சுரண்டுவதன் மூலம் நிறுவப்பட்ட பொருளாதாரக் கட்டமைப்பு, அரசியல் அமைப்பு மற்றும் ஆட்சியை உடைத்தெறிவதற்காகவும், சுரண்டலுக்கு ஆளான வகுப்பினரால் அமைக்கப்பட்ட ஓர் அரசாங்கத்தை நிறுவுவதற்காகவுமான ஒரு கருத்தியல் திட்டமே மார்க்சியம் என நம்பப்படுகிறது.

இந்த இயம், அச்சிந்தனையின் தோற்றுவாயான கார்ல் ஹென்ரிச் மார்க்ஸின் பெயரிலிருந்து உருப்பெற்றது. பிறப்பால் ஜெர்மõனியரான மார்க்சுடைய, அடிப்படையில் சுய சிந்தனை வடிவமான, சமூக – பொருளாதார மற்றும் அரசியல் கருத்துகள், 19ஆம்  நூற்றாண்டின்  இரண்டாம் பாதியில் வெளிவந்தன. பொருளாதார சுரண்டலுக்கு ஆளாகி, அனைத்து விதமான சமூக மற்றும் அரசியல் சலுகைகளும் மறுக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட, உற்பத்தி வகுப்பினரை விடுதலை செய்யக் கூடிய ஒன்றாக அவரது திட்டமானது பிரச்சாரம் செய்யப்பட்டது. "பாட்டாளிகள்' என்று அழைக்கப்பட்ட ஓர் எளிய வகுப்பினரின் ஆட்சியை நிறுவ அது முயன்றது. வகுப்புப் பாகுபாடுகள் இல்லாத ஒரு சமூகத்தை நிறுவுவது அதன் இலக்காக இருந்தது.

karl_marx_340கம்யூனிஸ்டுக் கட்சியின் அறிக்கையில் இறுதியாக கார்ல் மார்க்ஸ் இவ்வாறு பதிவு செய்தார் : “கம்யூனிஸ்டுகள் தங்கள் இலக்குகள் மற்றும் கண்ணோட்டங்களிலிருந்து பின்வாங்க மறுக்கிறார்கள். கம்யூனிசப் புரட்சியால் ஆளும் வர்க்கம் நடுங்கட்டும். பாட்டாளிகளுக்கு இழப்பதற்கு ஏதுமில்லை – தங்கள் விலங்குகளைத் தவிர. அவர்கள் வெல்ல ஓர் உலகம் இருக்கிறது.'' சுருக்கமாக, எந்த நாட்டின் ஆளும் வர்க்கத்திற்கும் கம்யூனிசம் எதிரானது. ஏனெனில், “நெடுங்காலமாக ஏழைகளாகவே இருந்து வருகின்ற உழைக்கும் வர்க்கத்தை, தொழிலாளி வர்க்கத்தை ஒழிப்பதற்கான சூழலை ஏற்படுத்துவதன் தத்துவமே கம்யூனிசமாகும்.''

சலுகைகளை அனுபவிக்கும் வகுப்பினர், இயற்கையான உயிரியல் உள்ளுணர்வின்படியும், கோட்பாட்டின்படியும் தங்களின் சலுகைகளுக்கு எதிரான எதையும் செய்வதில்லை. தனித்துவமாக தாங்கள் அனுபவித்து வரும் சலுகைகளை அழிக்க, எவ்வித முயற்சிகளையும் மேற்கொள்ளுவதில்லை. அது, அவர்களின் தற்கொலைக்கு சமமானது. “புரட்சியாளன் என்பவன் போப்பாக மாறக் கூடிய தன்மையிலான மனிதன் அல்ல . போப்பாக மாறிய மனிதன் புரட்சியாளன் ஆவதற்கு எவ்வித விருப்பமும் இல்லாதவன்'' என்று விளக்குகிறார் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர். இந்தியாவின் ஆளும் வர்க்கத்தில் பார்ப்பனர்கள் பெரும்பான்மைப் பங்கை வகிக்கின்றனர்.

“இந்தியாவின் ஆளும் வர்க்கம் பார்ப்பனிய – பனியா கூட்டாகும்.  ஏறத்தாழ 80 முதல் 90 சதவிகிதமாக இருக்கும் இந்தியாவின் உழைக்கும் வர்க்கத்தினரான – சூத்திரர்களுக்கும் தீண்டத்தகாதவர்களுக்கும் – இந்தியாவின் ஆளும் வர்க்கத்தில் மிகப் பெரும் அதிகாரம் கொண்ட சக்தியாக விளங்கும் பார்ப்பனர்கள், முக்கிய எதிரிகளாக  இருந்து வந்திருக்கின்றனர். பார்ப்பனர்கள்தான் சலுகைகளை அனுபவிக்கும் இந்தியாவின் போப்பாண்டவர்கள் ஆவார்கள். மறுபுறத்தில் மார்க்சியமே, சமூக – அரசியல் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கான அறிவியல் முறைகளை அளிக்கவல்ல தத்துவங்களின் முதுகெலும்பாகத் திகழ்கிறது. இந்த மாற்றமானது, ஆளும் வர்க்கத்தை  (இந்தியாவில் பார்ப்பனர்களை) அதிகாரத்திலிருந்து வலுக்கட்டாயமாக தூக்கியெறிவதையும், உழைக்கும் வர்க்கத்தினரின் சர்வாதிகாரத்தை நிறுவுவதையுமே அதாவது, சூத்திர உழைக்கும் வர்க்கத்தின் ஆட்சியை நிறுவுவதையே நோக்கமாகக் கொண்டுள்ளது. இயற்கை நியதிப்படி, ஓர் அமைப்பினால் பாதிக்கப்பட்டவர்கள்தான் அந்த அமைப்பிற்கு எதிராக ஒன்றிணைத்து போராடுவார்கள்.

அந்த அமைப்பினால் பலன் பெற்றவர்கள், தங்களுக்கு சாதகமாக இருக்கும் அமைப்பை தகர்க்கத் திட்டமிடும் இடத்திற்கு அருகேகூட இருக்க வாய்ப் பில்லை. அந்த அமைப்பை கட்டிக்காக்க வல்ல நடவடிக்கைகளை மேற்கொள்பவர்களின் அருகிலேயே பலன் பெற்றவர்களை காண இயலும். ஆனால், இந்தியாவில் ஆச்சரியப்படும் வகையில்,"பிறரை இளக்காரமாகப் பார்க்கக்கூடிய பார்ப்பனர்கள்' – உற்பத்தி செய்யும் வகுப்பினரான சூத்திரர்களின் ரத்தம் ஏற்கனவே படிந்துள்ள சிவப்புக் கொடிகளை ஏந்தியபடி – உழைக்கும் மக்களான தொழிலாளர்களின் ஆட்சியை நிறுவ மார்க்சின் கருத்துகளைப் பிரச்சாரம் செய்பவர்களாக இருக்கிறார்கள்.

இந்திய போப்பாண்டவர்கள், போப் தன்மைக்கு எதிராகவே கிளர்ச்சி செய்து புரட்சியாளர்களாக முயல்கின்றனர். இது, அந்த அமைப்பினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகவும் ஆபத்தான ஒன்றாகும். பழங்காலம் முதல் ஆளும் வர்க்கமாக இருந்து வரக் கூடிய இந்தியாவின் அர்ச்சகர் வகுப்பினர் (உலகிலேயே மிகவும் ஆச்சாரமானவர்கள்), கம்யூனிஸ்டு கட்சியின் அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதைப் போல நடுங்குவதற்கு மாறாக, “புரட்சி வாழ்க! மார்க்சியம் வாழ்க!'' என்று முழக்கமிடத் தலைப்பட்டுள்ளனர்.

மார்க்சிய கருத்தியலின்படி, பாட்டாளிகள் என்பவர்கள், உழைப்பிற்கு பலன் கிடைக்காத அல்லது ஒரு காலத்தில் தங்களுக்கு உரிமையாயிருந்த நிலங்கள் பறிக்கப்பட்ட நிலையில் இன்று நிலமற்று இருக்கும் விவசாயிகள். வலுக்கட்டாயமாக வேரறுக்கப்பட்ட இந்த நிலமற்ற விவசாயிகள், இங்கிலாந்தில் எலிசபத் காலத்தில் பலியாக்கப்பட்டவர்கள். தொடக்கத்தில் இப்படி வேரறுக்கப்பட்ட விவசாயிகளுக்கு, மற்றவர்களின் நிலங்களில் எப்படி வேலை செய்வது என்பது தெரிந்திருக்கவில்லை. பழங்காலம் முதல் அவர்களுக்கு உரிமையாயிருந்த நிலங்கள் பிடுங்கப்பட்ட நிலையில், தங்கள் வாழ்வை நடத்த, தங்கள் உழைப்பை விற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர்.

தொழில் அமைப்பில், முதலாளித்துவத்தின் வருகைக்குப் பிறகு, இவர்களே தொழிலாளி வர்க்கமாக உருவெடுத்தனர். விவசாயிகளிடமிருந்து நிலங்கள் அபகரிக்கப்பட்ட கொடூர நடைமுறையை, குறிப்பாக சிறு மற்றும் நடுத்தர நில உடைமையாளர்களின் நிலையை தாமஸ் மூர், தனது பெரும் ஆக்கமான "உடோபியா'வில் விவரிக்கிறார்.

அய்ரோப்பாவில், விவசாயிகளை அவர்கள் மண்ணிலிருந்து அப்புறப்படுத்துவது என்பது 16 – 17 ஆம் நூற்றாண்டில் தொடங்கியது. இந்த நடைமுறை, இங்கிலாந்திலும் அய்ரோப்பாவிலும் தொடங்குவதற்கு முன் நிலமற்ற விவசாயத் தொழிலாளர்கள் என்று யாரும் இல்லை. ஒவ்வொரு விவசாயியும் ஒரு சிறு அளவிலான நிலத்தை சொந்தமாகக் கொண்டிருந்தனர். நிலத்தை அபகரித்தல் என்பது, பழங்கால நிலவுடைமை பொருளாதார அமைப்பு அழுகத் தொடங்கியதன் விளைவாகவும், விவசாயப் புரட்சி மற்றும் நில ஆக்கிரமிப்பு இயக்கங்களினாலும் எழுந்தது. “அவர்களின் நில ஆக்கிரமிப்பு வரலாறு, மனித வரலாற்றின் பக்கங்களில் ரத்தத்தாலும் நெருப்பாலும் எழுதப்பட்டுள்ளது. அவர்கள்தான் பெரும்பான்மையானவர்களாகவும், சமூகத்தின் அடி நிலையில் இருப்பவர்களாகவும் இருக்கிறார்கள்.''

“சமூகத்தில் பாட்டாளி வர்க்கம் என்பவர்கள், தங்கள் உழைப்பை விற்பதன் மூலம் மட்டுமே தங்கள் வாழ்விற்கான தேவைகளை நிறைவேற்றிக் கொள்பவர்களாக உள்ளனரே அன்றி, வேறு ஏதேனும் முதலீட்டின் மூலம் வரும் லாபத்தினால் அல்ல. அவர்களின் வளமும் வலியும், வாழ்வும் சாவும், அவர்களின் மொத்த இருப்பும் உழைப்பிற்கான தேவையை சார்ந்தே இருக்கிறது'' என்று விளக்குகிறார் மார்க்ஸ். அவரைப் பொருத்தவரை, அடிமைகள் பிறரால் விற்கப்பட்டதைப் போல, பாட்டாளி தன்னைத் தானே நாளும் பொழுதும் விற்றுக் கொள்ள வேண்டியுள்ளது. ஒரு தனிப்பட்ட அடிமையின் இருப்பு, ஒரு தனிப்பட்ட முதலாளியின் விருப்பு வெறுப்பைச் சார்ந்தது. ஆனால் ஒவ்வொரு தனிப்பட்ட பாட்டாளியும், இருத்தலுக்கான எவ்வித உத்தரவாதமும் இன்றி, ஒரு தனிப்பட்ட முதலாளியின் கட்டுப்பாட்டிலிருந்து விடுதலை பெற்றவராக, ஒட்டுமொத்த அதிகார வர்க்கத்தின் உடைமையாக இருக்கிறார்.'' அய்ரோப்பாவில் குறிப்பாக அவர்கள் தொழிற் புரட்சிக் காலத்திற்குப் பின் உருவானார்கள்.

தாமாக முன்வந்து நிலத்தை சீர்படுத்தி விவசாயம் செய்து கொண்டிருந்தவர்களிடமிருந்து நிலத்தை அபகரிக்கும் நடைமுறை, இந்தியாவில் ஆரியர்களின் ஆக்கிரமிப்போடு தொடங்கியது. ஆரிய ஊடுருவாளர்கள் இந்தியாவின் மீது படையெடுத்தபோது, இந்தியாவின் பொருளாதாரம், சிறு தொழில்கள் மற்றும் வளமான விவசாயத்தின் உபரி விளைச்சலால் விளைந்த வளமான வணிகம் ஆகியவற்றின் மூலம் வளர்ச்சி அடைந்த நிலையில் இருந்தது. ஆரியர்களுக்கு முந்தைய இந்தியாவில், பணம் கடன் கொடுப்பது போன்றவை கூட நடைமுறையில் இருந்தன. கிராமப்புற பொருளாதாரத்தின் வளர்ச்சி மற்றும் அதனால் சேர்ந்துவிட்ட உபரியின் காரணமாக, பாரிய மற்றும் மிகவும் முன்னேறிய வணிக நகர் மய்யங்கள், நாட்டின் அரசியல் வரைபடத்தில் உருவாகத் தொடங்கின.

வரலாற்றுக்கு முந்தைய காலகட்டத்தில் இருந்து உற்பத்தியில் ஈடுபட்டு வந்து, முதல் வெளிநாட்டு ஆக்கிரமிப்பாளர்களால் அதிலிருந்து வேருடன் பிடுங்கப்பட்டு, பலனற்ற உழைக்கும் வர்க்கமாக மாற்றப்பட்ட இந்த இந்தியர்களே – சூத்திரர்கள் என்றும் தீண்டத்தகாதவர்கள் என்றும் அழைக்கப்படுகின்றனர். இவர்களே எந்த ஒரு குறிப்பிட்ட முதலாளியிடமும் விற்கப்படாத உழைக்கும் வர்க்கத்தினர். இவர்களே "தெய்வீக அடிமைகள்.' இவர்கள் இந்திய சமூக அமைப்பில் ஆகக் கீழ்நிலையில் இருப்பவர்கள் மட்டுமல்லாது, இவர்கள்தான் ஆகப் பெரும்பான்மையினராகவும் அதாவது, 90 சதவிகிதமாகவும் இருக்கின்றனர். சமூகப் படிநிலையினால் பாதிக்கப்பட்டவர்கள் என்பதோடு, சுரண்டலுக்கு ஆளான மக்கள் என்ற அடிப்படையில் இந்த சமூக அமைப்பிற்கு எதிராகக் கிளர்ந்தெழுவதற்கான இயற்கையான ஆர்வமும் வேகமும் கொண்டுள்ளனர்.

cow_lady_360மறுபுறம், இந்திய சமூக அமைப்பில் ஆக மேல்நிலையில் தங்களை அமர்த்திக் கொண்டுள்ள பார்ப்பனர்கள், மிக நுண்ணிய சிறுபான்மையினராகவே இருக்கின்றனர். இந்தியா மிகப்பெரும் பணக்காரர்களின் நாடு என்று புகழ் பெற்றது. ஆசியாவின் பெரும் பணக்காரர்களில் அதிக எண்ணிக்கையிலானாவர்கள், இந்தியாவைச் சேர்ந்தவர்களாகவே இருக்கிறார்கள். ஆனால் அதே நேரத்தில் உலக வங்கியின் அறிக்கையின்படி, உலகில் பத்தாவது ஏழை நாடாகவும், அதிக எண்ணிக்கையிலான மக்கள் தொகையினர் வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள நாடாகவும் இந்தியாவே இருக்கிறது!

ஓர் உலகளாவிய ஆய்வின்படி, மாதத்திற்கு 460 ரூபாய்க்கும் குறைவான வருமானத்தைக் கொண்ட குடும்பங்கள் அதிக எண்ணிக்கையில் வாழ்வது, இந்தியாவில்தான் என்று அறியப்படுகிறது. உலகில் கல்வியற்றவர்களில் அதிக எண்ணிக்கையுடையவர்கள் வாழ்வதும் இந்தியாவில்தான்! இவ்வாறு வறுமைக் கோட்டுக்கு கீழே வாழக்கூடிய மக்களில் 95 சதவிகிதத்திற்கும் அதிகமானவர்கள் – சூத்திரர்கள், தீண்டத்தகாதவர்கள், பழங்குடியினர் மற்றும் இவர்களில் இருந்து இஸ்லாமிய மதத்திற்கு மாறியவர்களே!

பிரிட்டிஷாரிடமிருந்து இந்தியா விடுதலை பெற்று 60 ஆண்டுகளுக்குப் பிறகு எடுக்கப்பட்ட தேசிய மாதிரி ஆய்வு அமைப்பின் அறிக்கை, “அமைப்பு சாரா தொழிலாளர்களில் 79 சதவிகிதம், பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர்களில் 88 சதவிகிதம், பிற பிற்படுத்தப்பட்டவர்களில் 80 சதவிகிதம் மற்றும் முஸ்லிம்களில் 84 சதவிகிதம் ஆகியோர் மிகவும் ஏழைகள் மற்றம் பாதுகாப்பற்றவர்கள் என்ற நிலையில் இருக்கின்றனர்'' என்று உறுதி செய்கிறது. மேலும், அவர்கள் மிகவும் வெளிப்படையாகவும் – தொடர்ச்சியாகவும் ஏழைகளாகவே இருந்து வந்திருக்கின்றனர். எவ்வித சமூகப் பாதுகாப்பும் அற்றவர்களாக, மிகவும் மோசமான, சுகாதாரமற்ற, பாதுகாப்பற்ற சூழல்களில் பணியாற்றக் கூடியவர்களாக இருக்கின்றனர். இப்படியான ஏழைகள் மற்றம் பாதுகாப்பற்றவர்கள் என்ற வகைப்பாட்டில் இந்திய மக்கள் தொகையில் 77 சதவிகிதம் பேர் வாழ்கின்றனர். இந்த "உலக அனாதை'களின் மோசமான வாழ்நிலைகளின் துயரங்கள் எல்லையற்றவை.

மறுபுறம், ஆசியாவின் பெரும் பணக்காரர்களுக்கான இடமாக இந்தியா உருப்பெற்றுள்ளது. இந்தியாவின் 40 பெரும் பணக்கார தொழிலதிபர்களின் மொத்த சொத்து மதிப்பு 7 லட்சத்து 65 ஆயிரம் கோடி ரூபாய் என அமெரிக்க நாட்டு தொழில் இதழான "போர்ப்ஸ்' கணக்கிட்டுள்ளது. 2004 இல் 100 கோடிக்கு மேல் சொத்து வைத்துள்ளவர்கள், இந்தியாவில் 9 பேர் மட்டுமே இருந்தனர். லட்சுமி மிட்டல், முகேஷ் அம்பானி, அனில் அம்பானி மற்றும் அசிஸ் பிரேம்ஜி ஆகியோர் – உலகப் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் முறையே 5 ஆவது, 14ஆவது, 18 ஆவது மற்றும் 21 ஆவது இடங்களைப்  பெற்றிருக்கின்றனர்.

சொத்துடைமையால் நிலவும் இப்பாரிய சமத்துவமின்மையும், எவ்விதக் கட்டமைப்பு மாற்றங்களுமின்றி தொழில் துறையில் இந்தியப் பொருளாதாரத்தின் பெரும் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சியும் – இந்தப் பெரும் பணக்காரர்கள் ஆடம்பர வாழ்வில்  புரண்டு கொண்டிருக்கும் கேவலமான நிலையை படம் பிடித்துக் காட்டுகிறது. இந்த சித்திரத்தை எஸ். பர்னியர் எனும் ஒரு பிரெஞ்சு நாட்டுப் பயணி, 17ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் நடுத்தர வகுப்பினர் என்று ஒரு பிரிவினர் இல்லாத காலகட்டத்தில், தான் மேற்கொண்ட இந்தியப் பயணம் பற்றிய பதிவில் தெளிவாக வெளிப்படுத்துகிறார்.

அக்காலகட்டத்தில் இருப்பவர்கள் – இல்லாதவர்கள், ஏழைகள் – பணக்காரர்கள், அதிகார வர்க்கத்தினர் – பாட்டாளிகள் எனப்படுபவர்கள் மட்டுமே இருந்தனர். இம்மண்ணின் உண்மையான உரிமையுடைய மக்களான பழங்குடியினர், சூத்திரர்கள், தீண்டத்தகாதவர்கள் மற்றும் மதம் மாறியவர்கள் ஆகியவர்களை கொண்ட இந்திய பாட்டாளிகளின் கட்டமைப்பில் காந்தியவாதிகளோ – அம்பேத்கரியவாதிகளோ, காவி உடை அணிந்தவர்களோ – மார்க்சியவாதிகளோ, துறவிகளோ – சைத்தான்களோ யாராலும் ஒரு சீரிய பாதிப்பை ஏற்படுத்திவிட முடியாது. மார்க்சியத்தின் நோக்கமானது, சுரண்டலில் ஈடுபட்டுள்ள ஆளும் வர்க்கத்தை, அதாவது, இங்கே பார்ப்பனியர்களை, அவர்கள் இருக்கும் உயரத்திலிருந்து கீழிறக்கி, வர்க்கங்களற்ற சமூகத்தை நிர்வகிக்கும் வர்க்கமாக சூத்திரர்களையும் தீண்டத்தகாதவர்களையும் அமர்த்துவதே ஆகும்.

இந்தியச் சூழலில் 90 சதவிகிதத் திற்கும் குறையாமல் இருக்கக்கூடிய பெரும்பான்மை மக்கள் ஆளும் வர்க்கமாக மாறும்பொழுது, சமூகம் – வர்க்கங்களற்ற சமூகமாக மாற்றம் பெறுகிறது. ஒட்டுமொத்த சமூகமே ஆளும் வர்க்கமாக மாறும் பொழுது, வரலாற்று நடைமுறைகளின் அடிப்படையில் நோக்கினால் அவர்களின் ஆட்சி ஒருபோதும் சர்வாதிகாரமாக இருக்க முடியாது. மார்க்சின் கருத்தின்படி, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்பதை,  சுய ஓர்மையுள்ள ஒரு பாட்டாளி வர்க்க இயக்கத்தின் மூலம், மிகப் பெரும்பான்மையினரின் நலன்களைச் சார்ந்த, மிகப் பெரும்பான்மையினரின் சுதந்திரமான இயக்கத்தின் மூலம்,  தற்பொழுது நிலவக் கூடிய அனைத்து சமூக நிலைகளையும் – வலுக்கட்டாயமாக தூக்கியெறிவதன் வழியாகவே அடைய முடியும்.

அதிகாரப்பூர்வ சமூகத்தின் ஒட்டுமொத்த கட்டமைப்பையும் வேரோடு பிடுங்கி காற்றில் எறியாமல், தற்போதைய நமது சமூகத்தின் அடி நிலையில் இருக்கும் பாட்டாளிகள், சமூகத்தில் ஒரு கலக்கத்தை ஏற்படுத்தவோ, தன்னை உயர்த்திக் கொள்ளவோ முடியாது. எனவே,  இந்தியாவில் ஆளும் பார்ப்பன சாதியானது, மார்க்சிய தத்துவத்தையும் அதன் நோக்கங்களையும் நடைமுறைப்படுத்தவும், நிறைவேற்றவும் எத்தகைய நேர்மறையான பங்களிப்பையும் செய்யஇயலாது என்பது மார்க்சியத்தின் அடிப்படைக் கோட்பாடுகளின்படி தெளிவாகிறது.                                        

ஆங்கிலத்தில்: எஸ்.கே.பிஸ்வாஸ்

தமிழில் : பூங்குழலி

Pin It