பதினைந்து ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற நிகழ்ச்சி அது. 1992 ஆகஸ்ட் 6 ஆம் நாள் (மற்றொரு ஆகஸ்ட் 6 இல்தான் அமெரிக்க ஏகாதிபத்தியம், இரோஷிமா மீது அணுகுண்டை வீசியது) ஆந்திராவிலுள்ள சுண்டூரு கிராமத்தில் எட்டு தலித் இளைஞர்கள் ஆதிக்க சாதி ரெட்டிகளால் கண்டதுண்டமாக வெட்டிக் கொல்லப்பட்டனர்; அவர்களது உடல் துண்டுகள் கோணிப் பைகளில் அடைக்கப்பட்டு, துங்கபத்திரா வாய்க்காலில் வீசப்பட்டன.

Dalit
இந்தக் கொடூரச் செயல்களைக் கண்டித்தும் பட்டியல் சாதியினர்/பழங்குடியினர் மீதான வன்கொடுமைகள் சட்டத்தின் கீழ் குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டும் என்னும் கோரிக்கை விடுத்தும் தலித்துகள் நடத்திய ஆர்ப்பாட்டம், காவல் துறையினரின் துப்பாக்கிச் சூட்டால் கலைக்கப்பட்டது. இதிலும் ஒரு தலித் இளைஞர் -அனில் குமார் கொல்லப்பட்டார். அரசாங்கத்தின் மீது தலித்துகளின் வன்முறையைத் தூண்டிவிட்டதாக மனித உரிமைச் செயல்வீரர் போஜம் தரகம் குற்றம் சாட்டப்பட்டு, விசாரணைக்குப் பின் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டார். அத்தண்டனைக்கு ஆந்திர உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. அவ்வளவுதான்.

எட்டு தலித் இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு மூல காரணம் எனச் சொல்லப்பட்டது என்ன? அது ஒன்றும் புதிதல்ல; ‘மசாலா' தமிழ்த் திரைப்படங்களில் இருப்பது போன்ற ஒரே ஒரு ‘பார்முலா'தான்! தலித்துகள் மீதான வன்கொடுமைகள் நடக்கும்போது வழக்கமாகச் சொல்லப்படும் ஒன்றுதான் : அதாவது, தலித் இளைஞர்கள் ‘மேல் சாதி' பெண்களிடம் தகாத வார்த்தைகள் பேசினர்; முறைகேடாக நடந்து கொண்டனர்; இதைத் தட்டிக் கேட்கப் போன ‘மேல் சாதி' ஆண்களிடம் அந்த தலித் இளைஞர்கள் அடாவடித்தனம் பேசினர். இதனால் சட்டென்று ஆத்திரமடைந்த மேல் சாதி' ஆண்கள் முன் பின் யோசிக்காமல் அந்த ‘தலித் இளைஞர்களை'த் தாக்கியதால் அந்த உயிர்ப்பலி நேரிட்டது! (அந்த தலித் இளைஞர்கள் முறை கேடாக நடந்து கொண்ட ‘மேல் சாதி'ப் பெண்களின் பெயர்கள் மட்டும் ஒருபோதும் வெளியிடப்பட்டதில்லை. ஏனெனில் அது மேல் சாதி'யினரின் மானப் பிரச்சனை.)

இந்தியா முழுவதிலும் தலித் இயக்கம் பிளவுபட்டுக் கிடக்கிறது என்றாலும், இந்தப் பிளவுகளை மீறியும் கடந்த இருபதாண்டுகளாகவே தலித் சமுதாயம் முழுவதிலுமே -சாதி எதிர்ப்பு உணர்வு வலுப்பட்டு வருவதைப் பார்க்கலாம். சுண்டூரு தலித் இளைஞர்கள் தீண்டாமையை எதிர்த்துப் போராடி வந்துள்ளனர். மேல் சாதியி'னரின் எதிர்ப்பைப் பொருட்படுத்தாது, ஊர் நடுவில் அம்பேத்கர் சிலையை நிறுவியுள்ளனர். ஊர்த் திருவிழாக்களின் போதும் தெரு நாடக நிகழ்ச்சிகளின் போதும் மேல் சாதியி'னருக்குச் சமமாக உட்கார்ந்திருப்பதில் வெற்றி பெற்றுள்ளனர்.

அங்கு ஏராளமான படித்த தலித் இளைஞர்கள் உள்ளனர். மேல் சாதி' இளைஞர்களைக் காட்டிலும் தலித் இளைஞர்களிடையேதான் படித்தவர்கள் அதிகம். இடஒதுக்கீட்டின் காரணமாக அவர்களுக்குக் கல்வி வாய்ப்பு மட்டுமின்றி வேலை வாய்ப்புகளும் கிடைத்துள்ளன. பல தலித் இளைஞர்கள் ரெட்டி இளைஞர்களைக் காட்டிலும் முன்னேறியுள்ளனர். ரயில்வே துறையில் வேலை பார்க்கின்றனர். பலர் இளங்கலைப் பட்டதாரிகளாக, முதுநிலைப் பட்டதாரிகளாக, பொறியியல் பட்டதாரிகளாக உள்ளனர்.

சுண்டூரு மாணவர்கள், கல்லூரிப் படிப்புக்காக 20 கி.மீ. தொலைவிலுள்ள தெனாலிக்குத்தான் செல்ல வேண்டும். ரயில், பேருந்துப் பயணங்களின்போது தலித் இளைஞர்களுக்கும் ‘மேல் சாதி' பெண்களுக்குமிடையே தொடர்புகள் ஏற்பட்டிருக்கலாம்; அது நட்பாக வளர்ந்து காதலில் போய் முடிந்திருக்கலாம். இது ‘மேல் சாதி' குடும்பங்களுக்கு எரிச்சலூட்டியிருக்கலாம். எனவே, தலித் இளைஞர்கள் ‘மேல் சாதி' பெண்களிடம் ‘முறை கேடாக' நடந்திருக்கின்றனர் என்பதில் ஓரளவு உண்மை இருக்கக் கூடும்.

இந்த சம்பவத்தைப் பொருத்தவரை, மூலகாரணமாகச் சொல்லப்பட்டதும்கூட வழக்கமான பார்முலாதான் : திரைப்பட அரங்கொன்றில் ஒரு தலித் இளைஞன் ஒரு ரெட்டிப் பெண்ணைக் கேலி செய்திருக்கிறான், எனவே ரெட்டி ஆண்களுக்குச் சட்டென்று கோபம் ஏற்பட்டது. அதனால் முன் பின் யோசிக்காமல் தாக்குதலில் ஈடுபட்டனர். ஆனால், ‘முன் பின் யோசிக்காமல்' என்று கூறப்படுவதைச் செரிப்பது கடினம். ஏனெனில், படுகொலை நிகழ்ந்த அன்று ஏறத்தாழ நானூறு ரெட்டிகள் முன்கூட்டியே திட்ட மிட்ட வகையில் கொலை ஆயுதங்களோடு ஒன்று கூடியிருந்தனர். சட்டென்று வந்த ஆத்திரத்தால் கொலை செய்வதோடு அவர்கள் நின்றிருக்கலாம். ஆனால், கொலையுண்டவர்களின் உடல்களைக் கண்ட துண்டமாக வெட்டி வாய்க்காலில் தூக்கியெறியுமளவிற்கு அவர்கள் சென்றது ஏன்? தன்மானம் பேசும் தலித்துகளுக்குப் பாடம் புகட்டத்தான்.

ஆந்திராவிலுள்ள ஆதிக்க சாதிகளிலேயே மிக வெறி பிடித்தவர்கள் ரெட்டிகள்தான். கடந்த 400 ஆண்டுகளாகவே அவர்கள் கிராமப் புறங்களில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இந்தியா ‘சுதந்திரம்' அடைந்த பிறகு ஏறத்தாழ நாற்பதாண்டுகளுக்கு மேலாக அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வருபவர்களும் அவர்கள்தான். நீதித்துறையையும் அவர்கள் தங்கள் கைக்குள் போட்டு வைத்திருக்கிறார்கள்.

இவர்களுக்கு எதிராக சுண்டூரு இளைஞர்கள் நடத்தி வரும் உறுதியான போராட்டத்தின் காரணமாகத்தான் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒரு சிறப்பு நீதிமன்றம், சம்பவம் நடந்த இடத்திலேயே நிறுவப்பட்டது. இதன் காரணமாக நீதிமன்றம் செல்வதற்காக தலித்துகள் நகர்ப்புறங்களுக்குப் பயணம் செல்ல வேண்டிய தேவை இல்லாமல் போய் விட்டது. நீதியை நிலைநாட்டுவதற்காக தலித்துகள் ‘சுண்டூரு பாதிக்கப்பட்டோர் சங்கம்' என்னும் அமைப்பை உருவாக்கினார்கள். தங்கள் சார்பில் வழக்காட நியமிக்கப்பட்ட அரசாங்க வழக்குரைஞரின் பின்னணியை ஆராய்ந்து, அவர் தலித்துகளின் பால் அக்கறை கொண்டவர் என்பதை உறுதி செய்து கொண்ட பிறகே அவருடன் ஒத்துழைக்க முடிவு செய்தனர்.

Dalit women
ரெட்டிகளின் கொலை மிரட்டல்கள், அச்சுறுத்தல்கள், ஆசை காட்டுதல்கள், ரெட்டிகளுக்கு வழக்காட வந்த ‘புகழ் பெற்ற' வழக்குரைஞர்களின் திறமைகள் ஆகியவற்றைப் பொருட்படுத்தாது நீதிமன்றம் சென்று குற்றவாளிகளை அடையாளம் காட்டினர். இத்தகைய தலித் சாட்சிகளில் முக்கியமானவர் தனராஜ். இவருமே 1992 ஆகஸ்ட் 6 ஆம் நாள் நடந்த தாக்குதலில் குற்றுயிரும் குலையுமாக விட்டுச் செல்லப்பட்டு எப்படியோ தப்பிப் பிழைத்தவர். அய்ந்து தலித்துகள் தன் கண் எதிரேயே படுகொலை செய்யப்பட்டதைப் பார்த்தவர். மற்றொரு முக்கிய சாட்சி, ‘சுண்டூரு பாதிக்கப்பட்டோர் சங்க'த்தின் முன்னாள் தலைவர் மெருகொண்டா சுப்பாராவ். இவர் கூலித் தொழிலாளி.

இத்தனை ஆண்டுக்காலப் போராட்டத்திற்குப் பிறகு 31.7.2007 அன்று அவர்களுக்கு ஒரு வெற்றி கிடைத்திருக்கிறது. அது முழுமையான வெற்றி அல்ல என்னும் போதிலும் குற்றம் சாட்டப்பட்டவர்களில் 21 பேருக்கு ஆயுள் தண்டனை; 35 பேருக்கு ஓராண்டுக் கடுங்காவல்; எஞ்சியுள்ளோர் மீது குற்றம் சரிவர நிரூபிக்கப்படவில்லை என்று நீதிமன்றம் அவர்களை விடுதலை செய்துள்ளது. தண்டிக்கப்பட்டவர்கள் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யவுள்ளனர். அதே போல விடுதலை செய்யப்பட்டவர்கள் மீண்டும் விசாரணை செய்யப்பட்டுத் தண்டிக்கப்பட வேண்டும் என இது நாள் வரை போராட்டம் நடத்தி வந்த தலித் அமைப்புகளின் கூட்டமைப்பும் மேல் முறையீடு செய்ய முடிவு செய்துள்ளது.

மேலவளவு, கோலார் அருகிலுள்ள கம்பளப்பள்ளி கிராமம் ஆகியவற்றில் படுகொலை செய்யப்பட்ட தலித்துகளுக்கு நீதி கிடைக்கவில்லை. மேலவளவு படுகொலையைப் பொருத்தவரை, குற்றவாளிகளுக்குத் தகுந்த தண்டனை வாங்கித் தருவதில் எந்த தலித் அமைப்புக்கும் அக்கறையோ உறுதிப்பாடோ இருக்கவில்லை. தலித் அமைப்புகள் ஒன்றுபட்டுக் கூட்டமைப்பை உருவாக்கிப் போராட முன்வரவில்லை. கம்பளப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த முக்கியமான தலித் சாட்சிகள் சிலர் நீதிமன்றத்தில் ‘பல்டி' அடித்து மேல் சாதி'யினருக்கு சாதகமாக நடந்து கொண்டனர். இன்னொரு பக்கம், நாடு முழுவதிலுமே, ‘வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தைப் பொருத்தவரை, காவல் துறை ஆதிக்க சாதிகள் சார்பாகவே நடந்து கொண்டிருக்கிறது.

இந்தச் சூழலில், சுண்டூரு தலித்துகளின் ஒற்றுமையும் உறுதிப்பாடும், அங்குள்ள தலித் அமைப்புகளின் ஒருமைப்பாடும் தலித்துகளின் தன்மானப் போராட்டத்தில் சிறப்பான மைல் கல்லாக அமைகின்றன. சிறப்பு நீதிமன்றம் சுண்டூரு தலித் மக்களுக்கு வழங்கியுள்ள மகிழ்ச்சி நீடிக்காது போய்விடலாம். நீதித் துறையும் ஆதிக்க சாதிகளின் கட்டுப்பாட்டிலேயே உள்ளதால், உயர் நீதிமன்றத்தில் செய்யப்படும் மேல் முறையீடுகளில் ரெட்டிகளுக்குச் சார்பாகத் தீர்ப்பு வழங்கப்படலாம். ஆந்திராவில் மாறி மாறி ஆட்சி செலுத்திவரும் ஆதிக்க சாதியினரான கம்மாக்களுக்கும் ரெட்டிகளுக்குமிடையிலான அதிகாரப் போட்டா போட்டிகளும் முரண்பாடுகளும், உயர் நீதிமன்றத் தீர்ப்பின் திசையைத் தீர்மானிக்கக் கூடியதாக இருக்கக் கூடும்.

அண்மைய சிறப்பு நீதிமன்றத் தீர்ப்பையும்கூட இந்தப் பின்னணியில்தான் பார்க்க வேண்டும். இப்போது ஒரு ரெட்டி முதலமைச்சராக உள்ளார். எனவே, ரெட்டிகளுக்குச் சார்பாக சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்குமேயானால், அது ரெட்டிகளுக்குச் சார்பானதும் தலித்துகளுக்கு எதிரானதுமான அப்பட்டமான பாரபட்சமாகக் கருதப்பட்டிருக்கலாம் என சில தலித் அறிஞர்கள் கருதுகின்றனர். ஏறத்தாழ சுண்டூரு படுகொலை நடந்த அதே காலக்கட்டத்தில் கரம்சேடு என்னும் கிராமத்தில், தலித்துகள் ‘கம்மா' சாதியினரின் வன்கொடுமைக்காளாகினர். ஆனால், சாட்சிகளும் சந்தேகத்துக்கிடமின்றி குற்றத்தை நிரூபிக்க உதவவில்லை என்று நீதிமன்றம் கூறி, குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்தது.

எனினும் இந்த உண்மைகள் சுண்டூரு தலித்துகளின் உற்சாகத்தையோ, போராட்டப் பண்பையோ சிறிதும் குலைத்துவிடப் போவதில்லை. வெற்றிகளைப் போலவே, தோல்விகளும் அவர்களைப் போராட்டப் பாதையில் உந்திவிடத்தான் செய்யும்.

-எஸ்.வி.ராஜதுரை
Pin It