சமீபத்திய காலச்சுவட்டின் ‘ மதச்சார்பின்மை’ பற்றிய இதழில் கண்ணனின் ‘இஸ்லாமியப் பயங்கரவாதம்’ குறித்த கட்டுரையைப் படித்தவர்கள் அது ஒரு எழுதப்பட்ட உளவுத்துறை ரிப்போர்ட்டை ஒத்ததாய் இருப்பதைப் புரிந்து கொள்ளக்கூடும். அந்தக் கட்டுரையில் இரண்டு விதமான பாசிச மனோபாவங்கள் செயல்படுவதை வாசகர்கள் புரிந்து கொள்ள வேண்டும். முதலாவதாக நிலவும் தமிழ்ச் சுழலில் யார் யாரெல்லாம் முஸ்லீம் ஆதரவாளர்கள்,அதாவது ‘இஸ்லாமியப் பயங்கரவாதத்தின் ஆதரவாளர்கள்’ என்று ஆதிக்க நிறுவனங்களுக்குக் காட்டிக் கொடுக்கிற ‘தினமலர்’ மனோபாவம்.

இரண்டாவது தி.க.காரர்களிடம் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் போதுவாகக் கேட்கிற கேள்வி ‘நீங்கள் இந்து மதத்தை மட்டும்தான் விமர்சிக்கிறீர்கள். இஸ்லாத்தை,கிறித்துவத்தை ஏன் விமர்சிப்பதில்லை?’ - இந்தக் கேள்வியை நான்கு பக்கங்களிக்கு கட்டுரையாக்கினால் அதிதான் கண்ணன் கட்டுரை. அடிப்படைவாததை விமர்சிப்பது வேறு. ‘இஸ்லாமியப் பயங்கரவாதம்’ அன்னும் பாசிசக் கடையாடலை அமெரிக்க, இந்துப் பார்ப்பனீய நோக்கில் விமர்சிப்பது வேறு. இரண்டையும் ஒன்றாக்கித் தன் பார்பன மனத்தை வெளிப்படையாகத் திறந்து காட்டியிருக்கிறார் கண்ணன்.

இஸ்லாத்தின் இறுகிய தன்மை, பெண்ணுரிமை, தொடங்கிப் பல்வேறுபட்ட விமர்சனங்களைப் பெரியார் முதல் பலரும் மேற்கொண்டு வந்திருக்கின்றனர். இதற்கு சமீபத்தைய உதாரணம் கவிதா சரணில் வளர்மதியின் மொழிப்பெயர்ப்பில் வெளிவந்த ‘இஸ்லாமிய எதிர் மறு சீரமைப்பு வாதம்’ என்னும் கட்டுரை. மேலும் இஸ்லாமை திறப்புகளற்ற, மாற்றங்களை அனுமதிக்காத, ஒற்றைத் தன்மையுடைய நிறுவனமாக அணுகுவது முட்டாள்தனம். இஸ்லாத்தின் பன்முகத்தன்மை குறித்த வாசிப்பு நமக்குப் போதாது என்பதுதான் உண்மை.

கண்ணனின் அந்தக் கட்டுரையின் பாசிசத் தன்மையை மேலட்டமான வாசிப்பிலேயே இந்துத்துவ எதிர்ப்பாளர்கள் புரிந்து கொள்ளக்கூடும் என்பதால் அதுபற்றி நான் அதிகமும் எழுதப்போவதில்லை ஆனால் வெளிப்படையாக காலச்சுவடு தன் இந்துத்துவச் செயல்பாடுகளை முன்வைப்பதன் பின்னணி என்ன?

ஏறக்குறையக் கடந்த இருபது ஆண்டுகளாக தலித் இலக்கியத்தின் தனிட்த்தன்மைக்காக நடைபெற்ற சண்டை ஒருவாறு முடிவுற்று ‘இந்தியா டுடே’ முதலான இந்திய தேசியப் பார்ப்பன இதழ்களும், குமுதம் மாதிரியான வெகுஜனப் பத்திரிக்கைகளும்கூட தலித் படைப்புகளை வெளியிட வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாகிவிட்ட சூழலில், இன்றளவும் ஒரு தலித் கவிதையும் வெளியிடாமல் தன் தூய்மையையும் பார்ப்பனக் கன்னிமையையும் பாதுகாத்து வருகிற ஒரே இதழ் காலச்சுவடு.

இப்படிப்பட்ட ஒரு பயங்கரவாத இதழ் “தலித் ஆதரவு” பம்மாத்து காட்ட முடிகிறதென்றால் அதற்கு ஒரே காரணம், ஒரு காலத்தில் தலித் இலக்கியப் போராளியாயிருந்து தற்சமயம் காலச்சுவடின் வளர்ப்புப் பிராணியாக மாற்றப்பட்டுவிட்ட ரவிக்குமார். முதன்முதல் அ.மார்க்ஸ் குறித்த ‘குற்றச்சாட்டுகளையும்’ பெரியார் குறித்த ‘சிறு விமர்சனத்தை’யும் ரவி பதிவு செய்தது காலச்சுவடு நேர்கானலிலேயே.

ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ‘பெரியாரைச் சிந்தனையாளர் என்று சொல்ல முடியாது’ என்று ‘வல்லினம்’ இதழில் வெளியான இரண்டாம் சுற்று வசவிலேதான் ரவியிடமிருந்து நன்னடத்தைச் சான்றிதழ் கிடைக்கிறது காலச்சுவடுக்கு. ‘பல பார்ப்பனரல்லாதார் நடத்தும் பத்திரிக்கையை விட சீரியஸ்னெஸ்சும், இலக்கியத் தரமும் காலச்சுவடுவிற்குத்தான் இருக்கிறது.’

அது தொடங்கி தன் உடல், பொருள், ஆவி, எழுத்து, மூச்சு, சூட்கேஸ் அனைத்தையும் பெரியாரையும், திராவிட இயக்கங்களையும் திட்டுவதிலும், அவதூறுகளைப் பரப்புவதிலும் செலவழிக்கிறார் ரவி, உள்ளூர்ப் பத்திரிகைகளில் தொடங்கிய இந்தத் திருப்பணி ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ வரை நீள்கிறது. வே.மதிமாறனின் பாரதி குறித்த புத்தகத்தை விமர்சிக்க நேர்ந்தாலும் ‘பெரியார்தான் தலித் விரோதி’ என்றுதான் கட்டுரையை முடிக்க முடிகிறது ரவியால்.

‘ISI சதி’ ரேஞ்சுக்கு ரவியால் பெரியாரையும், திராவிட இயக்கத்தையும் குற்றம் சாட்டி முன் வைக்கப்பட்ட சில அதிரடி ஸ்டேட்மெண்ட்கள்: ரஜினி, ‘பாபா’ என்கிற மோசமான இந்துத்துவப் படம் எடுத்ததற்குக் காரணமே கருணாநிதி பராசக்தி படம் எடுத்ததுதான்’. ‘அயோத்தி தாசரை மறைக்கக் காரணம் பெரியார்தான்’. ‘தி.மு.க. பிஜேபியோடு கூட்டு சேர்ந்ததற்குக் காரணம் பெரியார் இந்து மனோபாவத்தோடு வாழ்ந்ததுதான்’.

-இப்படியான கூற்றுகளில் அடிப்படையில் மாய உலகத்தை எழுப்ப முடிந்தது ரவியால். இந்த இடைவெளியில்தான் இதுவரை அடித்து விழ்த்தப்பட்ட பார்ப்பனப் பாம்பு ஒன்று முணுமுணுக்க ஆரம்பித்தது. அதுதான் சு,ரா. ‘தீராநதி’யில் சுந்தர ராமசாமியால் கக்கப்பட்ட விஷம்: ‘தமிழர்கள் உலக அறிவு பெறாமல் போனதற்குக் காரணம் பெரியாரும் தி.மு.க.வும் தான்.’ (தமிழர்கள் உலக அறிவு பெறுவதற்கு உதவுபவர்கள் இரண்டே பேர்கள்தானாம். ஒருவர் ‘தினமணி’ சிவராம அய்யர். இன்னொருவர் ஆர்.எஸ்.எஸ் வெறியன் துக்ளக் ‘சோ’).

sundara_ramaswamy_அதே தீராநதியில் சு.ரா.எழுதுகிறார்: ‘தலித்துகளின் போராட்டம் சாதி ஒழிப்புக்கானதில்லை. பார்ப்பனர்களாவதற்காகத்தான்’ ஒரு உண்மையான தலித் போராளி இதைப் படித்த பிறகு என்ன செய்திருக்க வேண்டும்? காலில் கிடப்பதைக் கழற்றியிருக்க வேண்டும். ஆனால்ரவியோ ‘என்ன செய்வது? தலித்துகளின் கால்களில் விலங்கை மாட்டி ஒடச் சொல்கிறார்களே’ என்று கசிந்துருகிக் கண்ணிர் மல்குகிறார். சமீபத்தைய கண்ணனின் இந்துப் பாசிசக் கட்டுரைக்கான வெளியை ஏற்படுத்தித் தந்தது ‘முஸ்லிம்கள் ஜனநாயகத்தில் நம்பிக்கையற்றவர்கள்’ (வல்லினம்) என்னும் ரவியின் கூற்றுதான்.

முஸ்லிம்கள் ஜனநாயக ரீதியாகப் பேசுவதற்கு என்ன வாய்ப்புகள் உள்ளன? தலித்துகளுக்காய்ப் பேசுகிற தொண்டு நிறுவனங்களும், மனித உரிமை அமைப்புகளும் முஸ்லிம்களுக்காய்க் குரல் கொடுப்பதில்லை. கொடுத்தால் அமெரிக்காவிலிருந்து வருகிற ஃபண்ட் நிறுத்தப்படலாம். தலித்களுக்கு ராம்விலாஸ் பாஸ்வான், மாயாவதி இருப்பது போலத் தேசிய அளவிலான முஸ்லிம் தலைவர்களையோ, இயக்கங்களையோ சுட்டிக் காட்ட இயலவில்லை. (முஸ்லிம் பெரும்பான்மையாய் வசிக்கும் வாணியம்பாடியில், திமிரோடு ஒரு இந்து வேட்பாளரை நிறுத்தி வெற்றி பெற வைக்கிற சூழல் நிலவுகிறதெனில் முஸ்லிம்களின் அச்சத்தையும், அந்நியமாகிப் போன தன்மையையும் என்னென்று சொல்ல?)

இதைவிட மோசமானது ரவி ‘இந்தியா டுடே’ இதழில் எழுதிய ‘குஜராத் படுகொலைகள்’ பற்றிய கட்டுரை, ‘குஜராத்திலாவது கடவுளுக்குப் பயந்தவர்கள் இருந்தார்கள். தமிழ்நாட்டில் கலவரம் வந்தால் கடவுள் நம்பிக்கையற்றவர்கள் முஸ்லிம்களைக் கூசாமல் கொல்வார்கள் ‘ என்கிற தொனி. காலச்சுவடு ஏற்பாடு செய்திருந்த குஜராத் வன்முறை குறித்த அரங்கைப் பற்றி எழுதியிருந்தது ‘புதிய கலாச்சாரம்’. முஸ்லிம் தலைவர்கள் கவனமாய்த் தவிர்க்கப்பட்டு சாருஹாசன் போன்ற ‘தீவிர’ இந்து எதிர்ப்பாளர்கள்(!) அழைக்கப்பட்டதையும், தவிறிக்கூட் அவர்கள் வாயிலிருந்து ‘இந்துப் பயங்கரவாதம் பொன்ற வார்த்தைகள் வராததையும் விரிவாகப் பதிவு செய்திருந்தது பு.க. அந்த அரங்கிலும் வழக்கம்போல ‘பெரியார் முஸ்லிம்களின் எதிரி’ என ‘நிறுவி’னார் ரவி. இப்படியான ஒரு வெளியை ரவிக்குமார் தொடர்ந்து உருவாக்குவதும், அதில் கண்ணன் புகுந்து தூள் கிளப்புவதும் சகிக்க இயலாதவை.

இந்துத்துவ ஆபத்து குறித்து ஒரு வார்த்தையையும் ரவி மட்டுமல்ல அவரைத் தீவிரமாய் ஆதரித்துவரும் ‘புதிய கோடாங்கி’ இதழும் சொல்லத் தயாராயில்லை. சமீப காலங்களாய் கோடாங்கியில் இந்துத்துவத்தை எதிர்த்து ஒரு கட்டுரையும் வரவில்லை. என் நினைவின் படி கடைசியாய் அதில் வெளிவந்த இந்துத்துவ எதிர்ப்புக் கட்டுரை அ.மார்க்சின் ‘கவனியுங்கள் இந்துத்துவ எதிர்ப்புக் கட்டுரை’ என்னும் கட்டுரைதான். சிவகாமியும், புதிய கோடாங்கியில் எழுதும் பிற எழுத்தாளர்களான பிரதிபா ஜெயச்சந்திரன் மாதிரியான ‘புகழ்பாடி’களும், ‘சோதிப் பிரகாசம்’ மாதிரியான கூமுட்டைகளும் தொடர்ந்து விமர்சித்து வருவது சங்கராச்சாரி, ஜெயலலிதா, ராமகோபாலன், சோ மாதிரியான பார்ப்பனர்களை அல்ல; அ.மார்க்ஸ், இன்குலாப் முதலான தலித் ஆதரவாளர்களையே.

ரவிக்குமாரைத் தலித் அரசியலின் ஒரே பிரதிநிதியாய் முன்னிறுத்தி, அவரது எல்லாச் சொல்லாடல்களையும் தனது முஸ்லிம் விரோத இந்துப் பார்ப்பனீய ஆதிக்கத்திற்கான நுழைவு வெளிகளாய் மாற்றியமைப்பதில் ஓரளவு காலச்சுவடு வெற்றி பெற்றுள்ளது. ‘தலித் அரசியல் ‘என்ற போர்வையில் செயற்படும் இந்த்த் தரகு அரசியலில் நீங்கள் மயங்கினீர்களெனில், குறைந்தபட்சம் பார்வையாளராய் வாளாதிருந்தீர்களெனில், எல்லாச் சிறுகதையாடல்களையும் அடித்து நொறுக்குகிற இதன் எதிர்காலத்திய அபாயம் குறித்து அக்கறை காட்டாதிருப்பீர்களெனில் நீங்களும் காலச்சுவடின் வளர்ப்புப் பிராணியாக மாற்றப்படுவதையும், அந்த வளர்ப்புப் பிராணிகளின் பண்ணைக்குக் கண்ணனும், சு.ராவும் மேய்ப்பர்களாக மாறுவதையும் தவிர்க்க ஏலாது.

- சுகுணா திவாகர் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It