V. உயர்தரக் கல்விபெற உதவி இல்லை

33. தாழ்த்தப்பட்ட சாதியினரின் குழந்தைகளிடையே உயர்தர கல்வியின் முன்னேற்றத்தைக் கவனித்தால், கீழ்க்கண்ட முடிவுகளுக்கு வரலாம்:-

(1) பொதுக்கல்வி துறையிலும் சட்டத்துறையிலும் கல்வி திருப்திகரமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது.

(2) விஞ்ஞானம், பொறியியல் கல்வி எந்த முன்னேற்றத்தையும் அடையவில்லை.

(3) வெளிநாடுகளின் பல்கலைக்கழகங்களில் உயர்தரக் கல்வி கற்பது என்பது எட்டாக் கனியாக உள்ளது.

34. இந்த வருந்தத்தக்க நிலை சரியாகப் புரிந்து கொள்ளப்பட வேண்டும். அரசுப் பணிகளில் தாழ்த்தப்பட்ட சாதியினர் இடம் விஷயமான விவாதத்தில் கூறப்பட்டதுபோல, தாழ்த்தப்பட்ட சாதியினரின் நல்வாழ்வு பரிவுணர்வு கொண்ட அரசுப் பணிகளையே முற்றிலும் சார்ந்துள்ளது.

ambedkar 250அப்பணிகள் பரிவுணர்வோடு இருக்க வேண்டுமெனில், நாட்டில் தேசிய வாழ்வின் பல்வேறு பகுதியினரையும் அதுவும் குறிப்பாக தாழ்த்தப்பட்ட சாதியினரை பிரதிநிதித்துவப் படுத்துவதாக அவசியம் அது இருக்க வேண்டும். இத்துடன் மற்றொன்றையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

அதாவது, தாழ்த்தப்பட்ட சாதியினரின் பிரதிநிதித்துவம் துணைநிலை பதவிகளில் மட்டுமே இருந்தால் அவர்கள் இடம்பெறுவன் எண்ணிக்கை எவ்வளவு அதிகமாக இருந்தாலும், பயனுள்ளதாக இருக்காது. கல்வி கற்ற இளைஞர்களுக்கு ஓர் உத்தியோகம் அளிக்கப்படுவது என்ற கண்ணோட்டத்தில் பார்த்தால் அது நல்லதாக இருக்கலாம். தாழ்த்தப்பட்ட சாதியினரின் நிலையை அது மாற்றாது. மாறாக, நிர்வாக பதவிகளில் தாழ்த்தப்பட்ட சாதியினர் இடம் பெற்றால் மட்டுமே, அவர்களின் அந்தஸ்தும் வாழ்க்கை நிலையும் அபிவிருத்தியடையும்.

நிர்வாகப் பதவிகள் கேந்திரமான பதவிகள்; அவற்றிலிருந்து கொண்டு அரசு விவகாரங்களுக்கு வழிகாட்டுதல் அளிக்க முடியும். நிர்வாகப் பதவி பெறுவதற்கு உயர் மட்ட கல்வி அவசியம் என்பது தெளிவு. உயர்தரக் கல்வி பெற்றவர்களுக்கு மட்டுமே அல்லாமல் அத்தகைய பதவிகள் மற்றவர்களுக்கு கிடைக்க வாய்ப்பில்லை.

35. வெறும் பட்டப் படிப்பு அல்லது சட்டத்துறைப் படிப்பு படித்து முடிப்பது தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு அதிகப் பயன் அளிக்காது. இந்துக்களுக்குக் கூட அது அதிக பலன் அளிக்கவில்லை. எது தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு உதவுமெனில், விஞ்ஞானத்திலும் தொழில்நுட்பத்திலும் உயர்தர கல்வி கற்பதுதான். விஞ்ஞானத்திலும் தொழில்நுட்பத்திலும் கல்வி தாழ்த்தப்பட்ட சாதியினரின் சக்திக்கு அப்பாற்பட்டது.

எனவேதான் பலர் தங்கள் குழந்தைகளை வெறும் பட்டப் படிப்புக்கோ, சட்டத்துறைப் படிப்புக்கோ அனுப்புகிறார்கள். சர்க்கார் உதவியில்லாமல், விஞ்ஞானத்திலும் தொழில்நுட்பத்திலும் உயர்தரக் கல்வியின் கதவுகள் தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு ஒரு போதும் திறந்திருக்க மாட்டா. இது விஷயத்தில் அவர்களுக்கு உதவ மத்திய சர்க்கார் முன்வர வேண்டுமென்பது சரியானதும் நியாயமானதுமாகும்.

36. கீழ்க்கண்ட ஆலோசனைகளை இந்திய சர்க்கார் ஏற்றுக் கொண்டால், இந்தப் பிரச்சினை தீர்க்கப்படும்:

(1) இந்தியாவில் உள்ள பல்கலைக் கழகங்கள் அல்லது விஞ்ஞானப் பயிற்சி நிறுவனங்களில் விஞ்ஞான, தொழில்நுட்ப படிப்பு மேற்கொள்ளும் தாழ்த்தப்பட்ட சாதியினரின் மாணவர்களுக்கு உதவித் தொகையாக வருடத்திற்கு 2 லட்ச ரூபாய் மான்யம் அளிக்க வேண்டும்.

(2) இங்கிலாந்து, ஏனைய பிரிட்டிஷ் குடியேற்ற நாடுகள், ஐரோப்பாவில், அமெரிக்காவில் உள்ள வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் விஞ்ஞான, தொழில்நுட்ப படிப்புப் படிப்பதற்கு முன்வரும் தாழ்த்தப்பட்ட சாதி மாணவர்களுக்கு ஆண்டொன்றுக்கு உதவித் தொகையாக ஒரு லட்ச ரூபாய் வழங்க வேண்டும்.

37. இந்தப் பொறுப்பை ஏற்றுக் கொள்வதிலிருந்து சர்க்காரைத் தடுப்பது எதுவும் இல்லை. கல்வி சம்பந்தமாக சட்டங்கள் இயற்றும் அதிகாரம் மத்திய சர்க்காருக்கு இல்லை என்பது உண்மையே. மத்தியச் சட்டமன்றம் சட்டம் இயற்றுவது சம்பந்தப்பட்ட நோக்கங்களுக்கு உட்பட்டதாக இல்லாவிடினும் மற்ற எந்த நோக்கத்திற்காகவும் மத்திய சர்க்கார் மானியம் வழங்கலாம் என்று இந்திய சர்க்கார் சட்டம், பிரிவு 150(2) கூறுகிறது.

கல்வி நிறுவனங்களுக்கு ஆதரவு தருவதற்காக இந்திய சர்க்காரால் இந்த அதிகாரம் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. நேரடியாக மத்திய சர்க்காரால் நிர்வகிக்கப்படும் பிரதேசங்களுக்கு வெளியே உள்ள மத்திய வருவாயிலிருந்து மான்ய உதவி பெறும் கல்வி நிறுவனங்களின் பட்டியல் கீழே தரப்படுகிறது.

I. கல்வி நிறுவனங்கள் வருடம் வழங்கப்படும் தொகை
1. இந்திய பெண்கள் பல்கலைக்கழகம், பம்பாய் திரும்ப வழங்கப்பட வேண்டியிராத மானியம் ரூ.50,000/- இருமுறை 1937-38லும் 1941-42லும் இந்த நிறுவனத்திற்கு அளிக்கப்பட்டுள்ளது
2. விஸ்வபாரதி, சாந்தினிகேதனம் ரூ.25000
3. அனைத்துப் பல்கலைக்கழகக் குழுமம், இந்தியா 1,000
4. ஆங்கிலோ-இந்திய ஐரோப்பிய கல்விக்கான இடைநிலை மாகாணக் குழுமம் 3,600
II. விஞ்ஞானக் கழகங்கள்  
1. இந்திய விஞ்ஞான வளர்ச்சி அமைப்பு, கல்கத்தா 18,000
2. வங்காள ராயல் ஆசியக் கழகம், கல்கத்தா 2,500
3. இந்தியப் புள்ளிவிவரக் கழகம், கல்கத்தா 37,000
4. இந்திய தேசிய விஞ்ஞானக் கழகம், கல்கத்தா 6,000
5. விஸ்வேஸ்வரானந்த வேத ஆய்வுக் கழகம், சிம்லா 2,500
6. இந்திய விஞ்ஞானக் கழகம், கல்கத்தா 1,50,000
7. பந்தார்கர் கீழ்த்திசை நாடுகள் ஆய்வுக்கழகம், புனா 4,000
8. போஸ் ஆய்வுக் கழகம் 45,000
III. பலவிதமான அமைப்புகள்  
1. இந்திய ஒலிம்பிக் கழகம் 2,000
2. இந்திய சாரணப் பெண்கள் அமைப்பு 2,500
ஆண்டுதோறும் தொடர்ந்து அளிக்கப்படும் மானியத் தொகை மொத்தம் 2,99,100

38. அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்திற்கு வருடத்திற்கு 3 லட்ச ரூபாயும், காசி இந்து பல்கலைக் கழகத்திற்கு வருடத்திற்கு 3 லட்ச ரூபாயும் இந்திய சர்க்கார் அளிக்கும் உதவித் தொகை இதில் உட்படவில்லை. இந்த இரு பல்கலைக் கழகங்களுக்கும் மத்திய சர்க்கார் அளிக்கும் உதவி, உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் தாழ்த்தப்பட்ட சாதியினர் உயர்கல்வி பெறுவதற்குப் பெரிதும் உறுதுணையாக இருக்கிறது. இந்தப் பல்கலைக் கழகங்களுக்கு வழங்கப்படும் மானியம் உண்மையில் இந்து, முகமதியர் வகுப்பினருக்கு உயர் கல்விக்கு அளிக்கப்படும் மானியமேயாகும்.

இவ்விதம் இருக்கும்போது, தாழ்த்தப்பட்ட சாதியினரின் உயர் கல்வியை ஊக்குவிப்பதற்காக வருடத்திற்கு 3 லட்ச ரூபாயை இத்தகைய மான்யமாக வழங்க மத்திய சர்க்கார் ஏன் பொறுப்பேற்றுக் கொள்ளக் கூடாது என்பதற்கு எந்தக் காரணமும் இல்லை. தாழ்த்தப்பட்ட சாதியினரின் அந்தஸ்தை உயர்த்துவது தங்கள் கடமை என்று அடிக்கடி பிரகடனப்படுத்தி வரும் இந்திய சர்க்கார் உண்மையில் அவ்வாறு செய்ய விரும்பினால், மத்திய சர்க்காரின் கல்வி வரவு-செலவுத் திட்டத்தில் இத்தகைய ஒதுக்கீடு செய்வதற்கு இதுதான் சரியான சமயம்.

39. இந்தத் திட்டம் அமுலுக்கு கொண்டு வரப்பட்டால் தாழ்த்தப்பட்ட சாதியினரின் நிலையையும் அந்தஸ்தையும் அது புரட்சிகரமாக மாற்றும். தாழ்த்தப்பட்ட சாதியர் இதில் மாபெரும் நம்பிக்கை வைத்துள்ளனர். இந்தத் திட்டம் மான்யம் அளிக்கும் திட்டமாக இருப்பதைவிட கடன் வழங்கும் திட்டமாக ஆக்கப்படுவதற்கும் அவர்கள் தயாராக இருப்பர். உபகாரச் சம்பளத் தொகையை, அதை அவர்களுக்கு வேலை கிடைத்தவுடன் அல்லது குறைந்த சம்பள விகிதத்தில் சர்க்காருக்கு சேவை செய்ய வேண்டிய நிலைமையில் திருப்பி கொடுக்க வேண்டி இருந்தாலும், அதனைத் தாழ்த்தப்பட்ட சாதி இளம் தலைமுறையினர் மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்வர். இந்த ஆலோசனைகளை சர்க்கார் ஒப்புக் கொள்வதற்கு ஆட்சேபனை எதுவும் இருக்க முடியாது.

40. தாழ்த்தப்பட்ட சாதி மாணவர்கள் மேம்பட்ட விஞ்ஞான தொழில்நுட்ப கல்வி பெறும் நோக்குடன், வேறு இரண்டு யோசனைகளையும் முன்வைக்கிறேன். ஒன்று:

(3) சுரங்கங்கள் பற்றிய பள்ளியில் தாழ்த்தப்பட்ட சாதி மாணவர்களுக்கு இடம் ஒதுக்குவது

தான்பாத்திலுள்ள சுரங்கங்கள் பற்றிய இந்தியப் பள்ளி இந்திய சர்க்காரின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ளது. சுரங்க பொறியியல் பற்றியும் புவியியல் பற்றியும் உயர் கல்வியை இப்பள்ளி அளிக்கிறது. இந்தியச் சுரங்கங்கள் பற்றிய பள்ளியில் அளிக்கப்படும் பயிற்சியின் மூலம் நிலக்கரித் தொழிலிலும் மற்ற தாதுப்பொருட்கள் தொழிற்சாலைகளிலும் பணியாற்றுவதற்கு மாணவர்கள் தயார் செய்யப்படுகிறார்கள். சுரங்கங்கள் பற்றிய இந்தியப் பள்ளியில் இப்பொழுது கல்வி பெறும் மாணவர்களின் எண்ணிக்கை 97க்கு பக்கம் உள்ளது. இந்தியாவின் எல்லாப் பாகங்களிலிருந்தும் வரும் மாணவர்கள் இதில் இடம்பெறுகின்றனர். விசாரித்ததில் 97 மாணவர்களில் ஒருவர் கூட தாழ்த்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்தவர் அல்ல என்பது கண்டுபிடிக்கப்பட்டது. சுரங்கங்கள் பற்றிய இந்தியப் பள்ளியைப் பயன்படுத்தும் நிலையில் தாழ்த்தப்பட்ட சாதியினரைச் சார்ந்த மாணவர்களை வைக்க இந்திய சர்க்கார் சில விசேட நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது மிக அவசியம். இந்த நோக்கத்தை அடைய தேவைப்படுவது:

(அ) இப்பள்ளியில் சேர்வதற்கு தேவைப்படும் குறைந்தபட்ச கல்வித் தகுதியுள்ள தாழ்த்தப்பட்ட சாதி மாணவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் இட ஒதுக்கீடு செய்தல்.

(ஆ) இலவசக் கல்வி அளித்தல்.

(இ) உபகாரச் சம்பளம் வழங்குதல்.

மொத்தம் உள்ள இடங்களில் பத்தில் ஒரு பங்கு தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்று கோருவது அதிகமாகாது. இது தொழிலாளர் நல இலாகாவின் அதிகார வரம்புக்குட்பட்டது. இலவசக் கல்வி, உபகாரச் சம்பளம் என்கிற வகையில் அரசின் வருமானத்தில் இழப்பு ஏற்படும் என்பதால், நிதி இலாகா சம்பந்தப்பட்டதுமாகும் இது. ஆனால் இந்த நடவடிக்கைகளால் ஏற்படும் நஷ்டம் மிக அதிகமாக இருக்காது. சுரங்கம் பற்றிய பள்ளியில் ஒரு மாணவன் செலுத்த வேண்டிய கட்டணம் மாதம் சராசரியாக சுமார் 60 ரூபாயாகும்.

ஒரு மாணவனுக்கு மாதம் செலவழிக்க வேண்டிய சராசரி தொகை மாதத்திற்கு ரு.60/- என்று இதற்குப் பொருள். அப்படியாயின் ஒரு மாணவனுக்கு மாதம் செலவாகும் தொகை ரூ.60/- ஆகும்.

41. நான் முன்வைக்க விரும்பும் மற்ற கோரிக்கை வருமாறு:

(4) மத்திய கல்வி ஆலோசனைக் குழுமத்தில் தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு பிரதிநிதித்துவம்.

42. இந்தக் குழுமத்தில் பின்வருபவர்கள் இடம்பெறுவார்கள்:-

(1) கல்வி, சுகாதாரம், நிலம் ஆகிய துறைகளுக்குப் பொறுப்பாக உள்ள மாண்புமிகு உறுப்பினர் (தலைவர்);

(2) இந்திய சர்க்காரின் கல்வி ஆணையர்;

(3) இந்திய சர்க்கார் நியமிப்பவர்கள் 10 பேர்; இவர்களில் குறைந்தது ஒருவராவது பெண்மணியாக இருப்பார்;

(4) மேல் அவையால் தேர்ந்தெடுக்கப்பட்ட அந்த அவையின் ஓர் உறுப்பினர்;

(5) சட்டமன்றத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் இருவர்;

(6) அனைத்துப் பல்கலைக்கழகக் குழுமத்தால் நியமிக்கப்பட்ட அனைத்துப் பல்கலைக்கழகக் குழும உறுப்பினர் மூவர்.

(7) ஸ்தல சர்க்காரின் ஒரு பிரதிநி; அவர் கல்வி இலாகாப் பொறுப்பில் உள்ள அமைச்சரோ (அல்லது அவரது துணை-அமைச்சரோ); அல்லது கல்வி இயக்குனர் (அல்லது துணை இயக்குனர்), அல்லது மாகாண சர்க்காரால் தன் சார்பில் நியமிக்கும் ஒருவர்.

43. இந்தக் குழுமத்தின் செயல்பாடுகள் வருமாறு:

(அ) இந்திய சர்க்காராலோ அல்லது ஸ்தல சர்க்காராலோ அதற்கு அனுப்பப்படும் எந்த கல்வி சம்பந்தமான விஷயத்திலும் ஆலோசனை வழங்குதல்.

(ஆ) இந்தியாவுக்கு விசேட அக்கறையும் முக்கியத்துவமுள்ள கல்வி சம்பந்தமான தகவல்கள் பெறுவதும் ஆலோசனை வழங்குவதும்.

44. குழுமத்தின் செயல்பாடுகளைப் பார்க்கும்போது, தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு விசேஷ அக்கறையுள்ள கல்விப் பிரச்சினைகள் பற்றி ஆராய்ந்து மத்திய, மாகாண சர்க்காருக்கு பரிந்துரைகளையும் ஆலோசனைகளையும் வழங்க குழுமத்தால் முடியும் என்பது மிகத் தெளிவாக உள்ளது. தாழ்த்தப்பட்ட சாதியினரிடையே உயர் கல்வியைப் பரப்புவது பற்றி சர்க்கார்கள் மற்றும் பல்கலைக் கழகங்களின் கவனத்தை ஈர்ப்பதில் இத்தகைய செயல் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்க முடியும்.

45. எனினும், முதலாவதாக, தாழ்த்தப்பட்ட சாதியினர் போன்ற வகுப்பினரின் விசேடக் கல்விப் பிரச்சினை பற்றி குழுமம் அக்கறை கொள்ளச் செய்வது அவசியமாகும். குழுமத்தில் தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு பிரதிநிதித்துவம் அளிப்பதன் மூலம் மட்டுமே இதைச் செய்ய முடியும். எனவே, குழுமத்திற்கு தாழ்த்தப்பட்ட சாதியினரின் இரு பிரதிநிதிகளை அவசியம் நியமிக்க வேண்டுமென ஆலோசனை வழங்கப்படுகிறது.

VI. தொழில்நுட்பப் பயிற்சி மற்றும் தொழில்நுட்ப கல்விக்கு வசதிகள் இல்லாதது

46. பொருளாதார நிலையை உயர்த்தும் விஷயத்திலிருந்து நோக்கும்போது, தாழ்த்தப்பட்ட சாதியினருக்குப் பொதுக் கல்வியை விட தொழில்நுட்பக் கல்வி அதிக முக்கியத்துவம் வாய்ந்தது என்பது தெளிவு. ஆனால் தொழில்நுட்பக் கல்விக்காகும் செலவு மிக அதிகமானது; தொழில்நுட்பக் கல்வி பயில்வது தாழ்த்தப்பட்ட சாதியினரின் குழந்தைகளுக்குச் சாத்தியமல்ல; தொழில்நுட்பக் கல்வி இல்லாமல் அவர்களது பொருளாதார நிலையை அபிவிருத்தி செய்ய முடியாது. இந்துக்களது சமூக அமைப்பின் காரணமாக, இந்தியப் பொருளாதாரத்தில், தாழ்த்தப்பட்ட சாதியினர் பொருளாதார ரீதியில் மிகத் தாழ்ந்த நிலையில் உள்ளனர்.

செழிப்பான காலங்களில் அவன் தான் கடைசியாக வேலைக்கு நியமிக்கப்படுவான்; பொருளாதார மந்த நேரங்களில் அவன்தான் முதலில் வேலைநீக்கம் செய்யப்படுவான். அவன்பால் இந்துக்கள் கொண்டுள்ள சமூக விரோதக் கண்ணோட்டத்தின் விளைவே இது; இது அவனுக்கு எதிராகச் செயல்படுகிறது. மேலும், அவன் பாதையில் குறுக்கிடும் வேறு ஒரு இடர்ப்பாடும் உள்ளது; அவன் பொதுவாக, பயிற்சி பெறாத, தொழில்நுட்ப ஞானம் இல்லாத ஒரு தொழிலாளியாக இருப்பதே அந்த இக்கட்டு.

47. அவன் இப்பொழுது பெற்றிராத தொழில்நுட்பத் திறமையை அவன் அடைவதைச் சாத்தியமாக்குவதன் மூலம் அவனுடைய வாழ்வு வளம்பெற, நலம்பெற இந்திய சர்க்கார் எவ்வளவோ செய்ய முடியும் என்று எனக்குத் தோன்றுகிறது. இந்திய சர்க்காரால் நடத்தப்படும் அல்லது அவர்கள் கட்டுப்பாட்டிலிருக்கும் நிறுவனங்களில் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த இளைஞர்களுக்கு தொழில்நுட்பப் பயிற்சி அளிக்கும் முறையைக் கொண்டு வருவதன் மூலம் இதைச் சுலபமாகச் செய்யலாம்.

இவ்வகையில் இருவிதப் பயிற்சிகளைப் பற்றி இங்கு குறிப்பிட விரும்புகிறேன்:-

(1) சர்க்கார் அச்சகங்களில் தொழில்முறைப் பயிற்சி:

இந்திய சர்க்காரின் பராமரிப்பில் பல அச்சகங்கள் உள்ளன. இவற்றில் பயிற்சி பெறும் நபர்களுக்கு அச்சுக் கோப்பவர்கள் அச்சடிப்பவர்கள், பைண்டர்கள் முதலிய பல்வேறு வேலைகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. அச்சுத் தொழில் சம்பந்தப்பட்ட பல்வேறு தொழில்களை தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த இளைஞர்கள் கற்றுக் கொள்வதற்கு வகை செய்யும் ஒரு திட்டத்தை இந்திய சர்க்கார் ஏன் வகுக்கக் கூடாது என்பதற்குக் காரணம் எதுவும் இல்லை.

(2) ரயில்வே தொழிற்சாலைகளில் பயிற்சி:

இந்தியாவிலுள்ள ரயில்வேக்களில் பெரும்பாலனவை இந்திய சர்க்காருக்குச் சொந்தமாக உள்ளன. இந்த ரயில்வேக்கள் தொழிற்சாலைகளை நிர்வகிக்கின்றன. பிட்டர்கள், தச்சர்கள் மற்றும் தொழில்நுட்பம் தெரிந்தவர்கள் பலர் இங்கு வேலைக்கு அமர்த்தப்படுகின்றனர். பலருக்குத் தொழில்நுட்பப் பயிற்சியளித்து அவர்களை ரயில்வே பணிகளில் சேர்த்துக் கொள்ளும் திட்டம் எதுவும் ரயில்வே இலாகாவுக்கு உள்ளதா என்பது எனக்குத் தெரியாது. அத்தகைய திட்டம் இப்பொழுது இல்லாமலிருந்தாலும், தாழ்த்தப்பட்ட சாதியினரின் நலனுக்காக அம்மாதிரியான திட்டம் ஒன்றை ஏற்படுத்துவது அவசியம்.

48. எனவே, இத்தகைய ஒரு பயிற்சி திட்டம் அவசியம் என்பது என் கருத்து. அதன்படி அச்சகங்களிலும் ரயில்வேத் தொழில் கூடங்களிலும் ஆண்டுதோறும் பெரும் எண்ணிக்கையில் தாழ்த்தப்பட்ட சாதி இளைஞர்களுக்கு பயிற்சியளிக்கப்பட வேண்டும். இதற்கான செலவு அதிகமாக இருக்காது.

 (பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுதி 19, பாகம் II)