சூத்திரர்களை இரண்டாவது வருண படிநிலையிலிருந்து நான்காவது வருண படிநிலைக்கு இறக்குவதற்கு பிராமணர்கள் கையாண்ட உத்திமுறை என்ன?

ambedkar 460இந்த விவாதம் இதுவரை இரண்டு கேள்விகளை மையமாகக் கொண்டு நடைபெற்று வந்தது: சூத்திரர்கள் ஆரம்பத்தில் இரண்டாவது வருணத்தினரான சத்திரியர்களின் ஒரு பகுதியினராக இருந்து வந்தனரா, இல்லையா என்பது முதலாவது கேள்வி. சூத்திரர்களை கீழ்நிலைக்குத் தள்ளும் அளவுக்கு பிராமணர்கள் ஆத்திர மூட்டப்பட்டனரா, இல்லையா என்பது இரண்டாவது கேள்வி. வரிசைமுறைப்படி அடுத்ததாக உள்ள கேள்வியைப் பரிசீலிப்பது இப்போது அவசியம்: சூத்திரர்களை கீழே இறக்குவதற்கு பிராமணர்கள் பின்பற்றிய உபாயம் யாது?

இந்த நோக்கத்தை மனத்திற்கொண்டு பிராமணர்கள் பயன்படுத்திய வழிமுறை சூத்திரர்களுக்கு உபநயனம் செய்துவைக்க மறுத்ததேயாகும் என்பதே இந்தக் கேள்விக்கு எனது சரியான பதிலாக இருக்க முடியும். இந்தத் தந்திரத்தைக் கையாண்டுதான் பிராமணர்கள் தங்கள் குறிக்கோளை நிறைவேற்றிக் கொண்டார்கள் என்பதிலும், இதன் மூலம் சூத்திரர்கள் மீது தங்களுக்குள்ள வஞ்சத்தைத் தீர்த்துக் கொண்டார்கள் என்பதிலும் எனக்கு எள்ளளவும் ஐயமில்லை.

உபநயனம் என்றால் என்ன என்பதையும், இந்திய-ஆரிய சமுதாயத்தில் அதற்குள்ள முக்கியத்துவம் யாது என்பதையும் பற்றி இங்கு தெரிந்து கொள்வது அவசியம். உபநயனம் குறித்த ஒரு தெளிவான கருத்தைப் பெறுவதற்கு மிகச் சிறந்த வழி அந்தச் சடங்கு எவ்வாறு நடத்தப்படுகிறது என்பதை விவரிப்பதேயாகும்.

ஒரு சமய வினைமுறை என்ற முறையில் உபநயனம் ஆரம்பத்தில் மிக எளிய ஒரு சடங்காகவே இருந்துவந்தது. ஒரு சிறுவன் கையில் ஒரு சமிதையுடன் குருவிடம் வருவான்; தான் ஒரு பிரமச்சாரியாக (ஆதாவது மாணாக்கனாக) ஆவதற்கு விரும்புவதாகக் கூறுவான்; கல்வி கற்கும் பொருட்டு அவருடன் தங்குவதற்குத் தன்னை அனுமதிக்குமாறு மன்றாடிக் கேட்டுக்கொள்வான். இவ்வாறுதான் தொடக்கத்தில் நடைபெற்றுவந்தது. பிற்காலத்தில் இது மிக விரிவான சடங்காகி விட்டது. இது எந்த அளவுக்கு விரிந்துபரந்த சமய வினைமுறையாகி விட்டது என்பதை அஸ்வலாயன கிரிஹ்ய சூத்திரத்தில் காணப்படும் பின்கண்ட வருணனையிலிருந்து தெரிந்து கொள்ளலாம்: (கானே, தர்ம சாஸ்திர வரலாறு, தொகுதி II (i) பக்கங்கள் 281-283)

தீக்கை பெறவேண்டி சிறுவன் உரிய அலங்காரத்தோடு வருகிறான். அவனது தலை மொட்டையடிக்கப்பட்டிருக்கிறது. அவன் புத்தாடை உடுத்திருக்கிறான் அல்லது பிராமணனாக இருந்தால் மான் தோலும், சத்திரியனாக இருந்தால் ருரு தோலும், வைசியனாக இருந்தால் ஆட்டுத்தோலும் தரித்திருக்கிறான்; ஆடைகள் அணிந்து வருவதனால் பிராமண, சத்திரிய, வைசிய, சிறுவன் முறையே சிவப்பு, மஞ்சள், சிவப்பு மற்றும் மஞ்சள் நிறத்தில் சாயம் தேய்க்கப்பட்டதை அணிகிறான்; கச்சையுடனும் கையில் ஒரு கோலுடனும் காட்சியளிக்கிறான். சிறுவன் குருவின் கையைப் பிடித்துக் கொள்கிறான்; ஒரு ஓமத்தீயில் நெய்யை சொரிகிறார்; அவர் ஓம குண்டத்தின் வட பகுதியில் முகம் கிழக்கு நோக்கியிருக்க அமர்ந்திருக்கிறார்; சிறுவன் குருவின் எதிரே முகம் மேற்கு நோக்கியவாறு அமர்ந்திருக்கிறான். பின்னர் குரு தனது கையிலும் சிறுவனின் கையிலும் தண்ணீரை நிரப்பிக் கொள்கிறார்; ‘சாவித்திரி போற்றி போற்றி என்று ஓதியவாறு தன் கையிலுள்ள நீரை சிறுவனின் கையிலுள்ள நீரில் ஊற்றுகிறார்; இவ்வாறு நீரை ஊற்றி முடித்ததும் சாவித்ரியின் ஆணையின் பேரில் இரு அச்சுவினிகளின் கரங்களுடனும், புஷனின் கைகளுடனும் சேர்த்து உன் கையைப் பிடிக்கிறேன்என்று கூறியவாறு குரு சிறுவனின் கரத்தைக் கட்டை விரலோடு சேர்த்துப் பிடிக்கிறார்; அப்போது சாவித்திரி உன் கையைப் பிடித்துவிட்டாள்என்று அவர் இரண்டாவது முறையாகக் கூறுகிறார். பிறகு குரு மூன்றாவது முறையாக பையனின் கரத்தைப் பற்றிக் கொண்டு அக்னிதான் உன்னுடைய குரு என்று பகர்கிறார். அடுத்தபடியாக குரு சிறுவன் சூரியனைப் பார்க்கும்படிச் செய்கிறார்; ‘தேவி சாவித்திரி, இவன்தான் உன்னுடைய மாணாக்கன், இவனைப் பாதுகாப்பது உன் பொறுப்புஎன்று கூறுகிறார். அவர் மேலும் பின்வருமாறு சொல்லுகிறார்: நீ யாருடைய பிரமசாரி? நீ பிராணனுடைய பிரமசாரி. உனக்கு யார் தீட்சை கொடுக்கிறார், எவருக்கு அவர் தீட்சை தருகிறார்? உன்னைக்காவிடம் (பிரஜாபதி) ஒப்படைக்கிறேன்’.

ரிக் வேதம் III.8.4.ன் பிற்பாதியை உச்சரிக்கிறார். ஓமகுண்டத்தைச் சுற்றியுள்ள பகுதியைத் துப்புரவு செய்துவிட்டு பிரமசாரி ஓர் ஓமவிறகை மௌனமாக நெருப்பிலிடுகிறான்; பிரஜாபதிக்குரிய எதையும் மௌனமாக செய்ய வேண்டும் என்றும், மாபெரும் ஜதவேதங்களுக்கு, பிரமசாரி பிரஜாபதி உரியவன் என்றும் ஸ்மிருதியில் கூறப்பட்டிருப்பதே இதற்குக் காரணம். இதனை நான் ஓமவிறகு, சமிதை கொண்டு வந்திருக்கிறேன்; ஓ அக்னி, இந்த சமிதையின் மூலம் நீ ஓங்கி வளர்வாயாக, பிரார்த்தனை மூலம் நாங்களும் வளம் பெறுவோமாக! ஓம விறகை நெருப்பிலிட்டு, அதனைத் தொட்ட பிறகு மாணாக்கன் இந்த ஒளியால் நான் தூய்மையடைகிறேன்என்று கூறியவாறு தனது முகத்தை மும்முறை துடைத்துக் கொள்கிறான்; ஸ்மிருதியிலும் இவ்வாறுதான் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

மாணாக்கன் மேலும் பின்வருமாறு பிரார்த்திக்கிறான்: அக்னி, எனக்கு நுண்ணறிவுத் திறத்தையும், குழந்தைச் செல்வதையும், மேன்மையையும் அருளட்டும்; இந்திரன் எனக்கு நுண்ணறிவுத் திறத்தையும், குழந்தைச் செல்வத்தையும், உள்ளுரத்தையும் அருளட்டும்; சூரியன் எனக்கு நுண்ணறிவுத் திறத்தையும், குழந்தைச் செல்வத்தையும், கதிரொளியையும் அருளட்டும்; ஓ அக்னி, உனது வனப்பின் மூலம் எனக்கு மேலும் வனப்பு கிட்டட்டும்; அக்னி, உனது வலிமை எனக்கு மேலும் வலிமை கூட்டட்டும்; அக்னி, உனது சுட்டெரிக்கும் ஆற்றல் எனக்கு மேலும் அத்தகைய ஆற்றல் அளிக்கட்டும்’.

இவ்வாறு மாணாக்கன் அக்னியை வழிப்பட்ட பின்னர், முழந்தாளிட்டு ஆச்சாரியரின் பாதங்களை முத்தமிட்டு, ஆச்சாரியர் மாணவனின் மேலங்கியோடு அவனது கைகளைத் தன கரங்களால் பிடித்துக் கொண்டு, சாவித்திரி மந்திரத்தை பதம்பதமாகவும், அடிஅடியாகவும், முடிவில் முழுவதுமாகவும் ஓதுகிறார். இந்த மந்திரத்தை கூடிய மட்டும் மாணவனே ஓதும்படி ஆசிரியர் செய்கிறார். பின்னர் அவர் மாணவனின் நெஞ்சின்மீது விரல்கள் மேல்நோக்கி இருக்கும் படியாகத் தன கையை வைத்துப் பின்வருமாறு கூறுகிறார்: உன் இதயத்தை எனக்கு ஆற்றும் கடமையின்பால் வைக்கிறேன்.

உன் மனம் என் மனதைப் பின்பற்றட்டும்; என் சொற்களை ஏகச் சிந்தனையாளனாகக் கவனிப்பாயாக; பிரகஸ்பதி உன்னை என் இடத்தில் அமர்த்தட்டும்; பின்னர் ஆசிரியர் மாணாக்கனின் இடுப்பில் கச்சையை கட்டிவிட்டு, கோலை அவனிடம் தருகிறான். அடுத்து, ஒரு பிரமசாரி கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளைப் பின்பற்றுமாறு விவரிக்கிறார்; ‘பிரமசாரியாகிய நீ வாய்வைத்து நீரை உறிஞ்சிக் குடிக்க வேண்டும். பல்வேறு பணிவிடைகளைச் செய்யவேண்டும். பகலில் தூங்கலாகாது.

ஆசிரியரிடம் முழுநம்பிக்கை வைத்து வேதங்களைக் கற்க வேண்டும். மாணவன் காலையிலும் மாலையிலும் வீடுவீடாகச் சென்று உணவை பிச்சையெடுத்து வரவேண்டும்; காலையிலும் மாலையிலும் நெருப்பில் விறகு போடவேண்டும். பிச்சைமூலம் பெற்ற உணவு விவரத்தை ஆசிரியரிடம் தெரிவிக்க வேண்டும். அவன் உட்காரக்கூடாது. எஞ்சிய பகல் முழுவதும் நின்றுகொண்டே இருக்க வேண்டும்.

ஆச்சாரியர் தன்னுடைய மாணவனுக்கு காயத்ரி மந்திரம் என்ற வேத மந்திரத்தைக் கற்பிப்பதுடன் உபநயனம் முடிகிறது. உபநயனச் சடங்கில் காயத்ரி மந்திரம் ஏன் இத்தனை முக்கியத்துவம் பெறுகிறது என்பதைக் கூறுவது கடினம்.

உபநயனம் பற்றிய இந்த வருணனையிலிருந்து இரண்டு விஷயங்கள் தெள்ளத் தெளிவாகின்றன. முதலாவதாக வேதங்களைக் கற்பதற்கு ஒருவருக்குத் தீட்சை அளிப்பதே உபநயனத்தின் நோக்கம்; ஆச்சாரியார் பிரமசாரிக்கு காயத்ரிமந்திரத்தைப் போதிப்பதுடன் இது ஆரம்பமாகிறது. இரண்டாதாக, உபநயனச் சடங்குக்கு சில பொருள்கள் மிக அத்தியாவசியமானவையாகக் கருதப்படுகின்றன.

அவை 1. இரண்டு ஆடைகள், இவற்றில் ஒன்று உடம்பின் மேற்பகுதிக்கானது. இது வாசா என அழைக்கப்படுகிறது. மற்றொன்று உடம்பின் மேற்பகுதிக்கானது, இது உத்தரியம் எனப்படுகிறது; 2. தண்டம் அல்லது மரத்தாலான கோல்; 3. மேகலை அல்லது இடுப்பைச் சுற்றிக் கட்டுவதற்கு தர்ப்பைப் புல்லைக் கொண்டு தயாரிக்கப்பட்ட கச்சை.பண்டைக்காலத்தில் கடைப்பிடிக்கப்பட்ட இந்த உபநயன முறையை பிற்காலத்தில் பின்பற்றப்பட்டுவந்த உபநயன முறையுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் எவரும் உபநயனத்தின் ஒரு பகுதியாக பிரமசாரி அணியும் யக்ஞோபவீதம் (யக்ஞவல்கியம் (I.16.133) இதனை பிரம சூத்திரம் எனக் குறிப்பிடுகிறது.) எனும் பூணூல் பண்டைய முறையில் குறிப்பிடாதது கண்டு வியப்படையாமல் இருக்க முடியாது. இந்த நூலை அணிவது தற்கால உபநயனச் சடங்கில் மிக முக்கிய பங்கை வகிக்கிறது; இதனாலேயே இந்த நூலைத் தயாரிப்பது குறித்தும், அதனைப் பயன்படுத்துவது குறித்தும் மிக விரிவான விதிமுறைகள் வகுத்துத் தரப்பட்டிருக்கின்றன.

யக்ஞோபவீதம் மூன்று நூல்களைக் கொண்டதாக இருக்க வேண்டும். ஒவ்வொரு நூலிலும் ஒன்பது தந்துகள் அல்லது புரியிழைகள் இடம் பெற்றிருக்கும். ஒவ்வொரு தந்துவும் ஒரு தேவதையை (தெய்வத்தை) குறிக்கும்.

யக்ஞோபவீதம் தொப்புள்வரை (கானே, டி.எஸ்.II (மு) பக்கம் 292

தேவ ஸ்மிருதியின்படி ஒன்பது தந்துகள் குறிக்கும் தெய்வங்கள் வருமாறு: ஓங்காரம், அக்னி, நாகன், சோமன், பித்ரிஸ், பிரஜாபதி, வாயு, சூரியன், விஸ்வதேவன். இந்தக் கண்ணோட்டத்தில் சில மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதாகத் தோன்றுகிறது. இஸ்திஸ், விலங்குகள் பலி, மற்றும் சில யாகங்களின்போது யக்னேஞாபவீதத்தில் மூன்று தந்துகளைக் கொண்ட ஒரே ஒரு நூல்தான் இருக்க வேண்டும்.

அஹினா, ஏகஹா, சத்ரா ஆகிய மூன்று வகையான யாகங்களுக்கு மூன்று தீக்குண்டங்கள் தேவைப்படுவதால் அவற்றிற்கு மூன்று நூல்களும், ஏழு சோமசமஸ்த யாகங்களுக்கு ஏழு நூல்களும், மூன்று சவணாக்களுக்கும் இரண்டு சந்தியாக்களுக்கும் ஐந்து நூல்களும் பயன்படுத்தப்பட வேண்டும் என்று மேதாத்தி (கானே பார்க்கவும்) கூறுகிறது: பிரமசாரி ஒரே ஒரு நூலும், அதேபோல் சந்நியாசிகள் யக்ஞோபவீதத்தைப் பயன்படுத்துபவர்களாக இருந்தால் ஒரே ஒரு நூலும் அணிய வேண்டும்.

ஸ்நதகனும் (பிரமசரியம் முடிந்து ஆச்சாரியரின் இல்லத்திலிருந்து திரும்பி வருபவன்) இல்லறத்தானும் இரண்டு நூல்களை அணிய வேண்டும். நீண்ட ஆயுளை விரும்புபவர்கள் இரண்டுக்கு அதிகமான நூல்களை அணியலாம். ஒரு ஸ்நதகன் எப்போதும் இரண்டு நூல்களை அணிய வேண்டும். இல்லறத்தான் பத்துவரை எத்தனை நூல்களை வேண்டுமானாலும் அணியலாம்.) எட்டுவதாக இருக்க வேண்டும்; தொப்புளுக்கு அப்பாலோ மார்புக்கு மேலேயோ இருக்கக் கூடாது.

ஒருவன் ஒன்றுக்கு மேற்பட்ட யக்னோபவீதம் அணியலாம். எவ்வாரிருப்பினும் ஒருவன் எப்போதும் யக்னோபவீதம் அணியவேண்டும். யக்னோபவீதத்தை அணியாமல் உணவு உண்டாலோ அல்லது யக்னோபவீதத்தை வலது காதில் சுற்றிக்கொள்ளாமல் மலஜலம் கழிக்கச் சென்றாலோ அவன் குளித்தல், பிரார்த்தனை, உண்ணாநோன்பு போன்ற பிராயச்சித்தங்களை மேற்கொள்ளவேண்டும்.

மற்றவர்களது பாத அணிகள், அணிமணிகள், மலர்மாலை, கமண்டலம் முதலியவற்றுடன் யக்னோபவீதம் அணிவது தடைசெய்யப்பட்டுள்ளது. (யாக்ஞவல்கியம் (I.16.133) இதனை பிரம சூத்திரம் எனக் குறிப்பிடுகிறது.)

யக்னோபவீதத்தை மூன்று விதமாக அணிவது அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அவை வருமாறு 1.நிவிதம் 2.உபவிதம். நூல் கழுத்திலிருந்து இருதோள்பட்டைகள் மார்பு வழியாகச் சென்று இருதயம் இருக்கும் இடத்துக்குக் கீழேயும், தொப்புளுக்கு மேலேயும் இரண்டு கைகளின் கட்டைவிரல்களாலும் பிடித்துக் கொள்ளும்முறையில் அணிவது நிவிதம் எனக் கூறப்படுகிறது. இடது தோளிலிருந்து வலது பக்கம் தொங்கும் வகையில் நூல் அணிவது உபவிதம் எனப்படுகிறது. இதேபோன்று வலது தோளிலிருந்து இடது பக்கம் தொங்கும் விதத்தில் நூல் அணிவது பிரசிநாவிதம் என்று அழைக்கப்படுகிறது.

இந்த யக்னோபவீதம் எவ்வாறு தோன்றிற்று? இதற்கு திரு.திலகர் ஒரு விளக்கம் தந்திருக்கிறார். அதனை இங்கு மேற்கோள் காட்டுவது உசிதமாக இருக்கும். (மிருகசீரிடம், பக்.144-146) திரு.திலகர் இது குறித்துப் பின்வருமாறு கூறுகிறார்.

வேத நூல்களில் மிருகசீரிடம் பிரஜாபதி அல்லது யக்ஞன் எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. யக்ஞனின் இடுப்பைச் சுற்றியுள்ள மேகலை அல்லது துணிக்கச்சை அவனது பெயரில் யக்ஞோபவீதம், உபவீதம் அல்லது யக்ஞனின் துகில் என அழைக்கப்படுவது இயல்பே. எனினும் இப்பதம் தற்போது பிராமணர்களின் பூணூலைக் குறிக்கிறது; அப்படியானால் மிருகசீரிடத்தின் அரைக்கச்சையின் இயல்பை அது பெற்றிருக்கிறதா என்று இங்கு கேட்கப்படுவது நியாயமே. அத்தகைய இயல்பை பின்கண்ட அடிப்படையில் அது பெற்றிருக்கிறது என்றே கருதுகிறேன்.

யக்னோபவீதம் என்னும் சொல்லை நம் நாட்டுக் கற்றறிவாளர்கள் அனைவரும் யக்ஞம் + உபவீதம் என்பதிலிருந்தே பெற்றுள்ளனர். ஆனால் இந்தக் கூட்டுச் சொல்லை யக்ஞத்திற்கான ஓர் உபவீதமாகக் கொள்ளவேண்டுமோ அல்லது இது யக்ஞங்களின் உபவீதத்தை’ குறிக்கிறதா என்பது பற்றி கருத்து வேறுபாடு நிலவுகிறது. முந்தையது தவறானதல்ல என்றாலும் பிந்தையது அதிக சான்றுவலிமை பெற்றிருகிறது.

பரமாத்மா வைத்தான் ஹோட்ரிஸ்கள் யக்ஙன் என்று அழைக்கின்றனர் என ஒரு ஸ்மிருதியிலிருந்து மேற்கோள் காட்டி சில ஆசிரியர்கள் கூறுகின்றனர்; இதுதான் அவரது உபவீதம்; எனவே இது யக்ஞ உபவீதமாகிறது. பூணூல் அணியும்போது ஓதப்படும் மந்திரம் யக்ஞ உபவீதத்தால் உன்னைப் பிணைக்கிறேன்என்று பொருள்படுகிறது. ஒரு பிராமணன் பூணூல் அணியும்போது உச்சரிக்கும் மந்திரத்தின் முதல்பகுதி பின்வருமாறு அமைந்துள்ளது:

இந்த மந்திரத்தை தற்போதுள்ள சம்ஹிதை எதிலும் காண முடியாது. எனினும் பிரமோபநிடத்திலும் போதாயணத்திலும் இது இடம்பெற்றிருக்கிறது. இந்த சுலோகம் ஹவமயெஸ்திலிருந்து மேற்கோள் காட்டப்பட்டிருக்கும் மேலே கண்ட சுலோகத்துடன் பெரிதும் ஒத்திருக்கிறது. அது பின்வருமாறு கூறுகிறது; யக்னோபவீதம் மேன்மைமிக்கதும் புனிதமானதுமாகும்; இது ஆதிபிரஜாபதியுடன் பிறந்தது!

இதில் உள்ள புரஸ்தாத்தம் எனும் சொல் அவெஸ்தா என்னும் சுலோகத்தில் வரும் பௌர்வாணிம் என்ற சொல்லுடன் ஒத்திருப்பதைக் காணலாம்; இவ்வாறு, டாக்டர் ஹக் எழுப்பிய பிரச்சனைக்கு தீர்வுகாணப்படுகிறது; அதேசமயம் பிரஜாபதியின் கைகால்களுடன் பிறந்த சகஜா என்பது மைனியுதஸ்தம் என்ற பொருளிலேயே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த இசைவுப் பொருத்தம் தற்செயலானதாக இருக்கமுடியாது.

மிருகசீரிடத்துடன் அரைக்கச்சையிலிருந்தே பூணூல் எனும்சொல் பெறப்பட்டிருக்க வேண்டும் என்று எனக்குத் தோன்றுகிறது. உபவீதம் என்னும் பதம் நெய்யப்பட்ட ஒரு துண்டுத்துணியைக் குறிக்கிறதே அன்றி நூலைக் குறிக்கவில்லை.

எனவே, இடுப்பைச் சுற்றிலும் துணியைக் கட்டுவது யக்ஞோபவீதத்தின் ஆரம்பகால வடிவமாக இருந்ததாகத் தோன்றுகிறது. பிரஜாபதியின் அரைக்கச்சையை உருவகமாகப் பிரதிநிதித்துவப்படுத்தியதால் அது புனிதத்தன்மையைப் பெற்றிருக்கக்கூடும்.

திரு.திலகர் தந்துள்ள இந்த விளக்கம் சுவாரசியமாக இருக்கிறது என்பதில் ஐயமில்லை. ஆனால் சில பிரச்சினைகளுக்கு அது விளக்கம் தரவில்லை. உபநயனம் மேற்கொள்ளப்படும்போது உத்தரீயமும் வாசாவும் அணிந்திருப்பது அவசியம். இந்த இரு ஆடைகளுக்கும் யக்ஞோபவீதத்துக்கும் உள்ள சம்பந்தத்தை திரு.திலகர் விளக்கவில்லை. இந்த இரு ஆடைகளுடன் சேர்த்து யக்ஞோபவீதத்தையும் அணியவேண்டுமா? அவ்வாறு அணியவேண்டுமென்றால், உபநயனத்தைப் பற்றிய ஆரம்பகால வருணனைகளில் அது ஏன் குறிப்பிடப்படவில்லை? இங்கு மற்றொரு சிக்கலும் எழுகிறது. துணிக்குப் பதிலாகத்தான் பிற்காலத்தில் நூல் பயன்படுத்தப்பட்டது என்றால் உபநயனத்தின்போது இன்னமும் புத்தாடைகள் அணியும் நடைமுறை பின்பற்றப்படுவது ஏன்?

இதற்கு மற்றொரு விளக்கமும் அளிக்கப்படுகிறது. அதனை இங்கு தருகிறேன். இதன்படி, பூணூல் அணிவது கோத்திரத்தை வரித்துக்கொள்வது சம்பந்தப்பட்டதாகும். ஒருவரை ஒரு குறிப்பிட்ட கோத்திரத்துடன் பிணைப்பதே இதன் நோக்கம். இதற்கும் உபநயனத்துக்கும் எந்தச் சம்பந்தமும்I இல்லை; ஏனென்றால் உபநயனத்தின் குறிக்கோள் ஒருவருக்கு வேதங்களைப் படிப்பதற்குத் தீட்சை அளிப்பதாகும்.

பண்டைய ஆரிய விதிமுறைகளின்படி மகன் தந்தையின் கோத்திரத்தை தன்னியல்பாகவே மரபுரிமையாகப் பெற்றுவிடுவதில்லை. தந்தை தனது கோத்திரத்தை மகனுக்கு அளிக்க ஒரு விசேட சடங்கை நடத்தியாக வேண்டும். இந்த சடங்கு செய்யப்பட்ட பிறகுதான் மகன் தந்தையின் அதே கோத்திரத்தை சேர்ந்தவனாகிறான். இது விஷயத்தில், இந்தோ-ஆரிய சமுதாயம் கடைப்பிடித்துவந்த இரண்டு விதிமுறைகளை இங்கு குறிப்பிடவேண்டும்.

ஒன்று தீட்டுகள் சம்பந்தப்பட்ட விதிமுறை; மற்றொன்று தத்து எடுத்துக்கொள்வது சம்பந்தப்பட்ட விதிமுறை; மரணத்தில் ஏற்படும் தீட்டு சம்பந்தப்பட்டவர், தீட்டுப்படும் நாட்கள் இறந்தவருடனான குருதித் தொடர்புடைய உறவைப் பொறுத்து வேறுபடுகின்றன. உறவு மிக நெருக்கமானதாக இருந்தால் தீட்டுநாட்கள் உறவு அத்தனை நெருக்கமில்லாதபோது ஏற்படும் தீட்டுநாட்களைவிட அதிக எண்ணிக்கையில் இருக்கும். பூணூல் அணியாத ஒரு சிறுவனது மரணத்தால் ஏற்படும் தீட்டு மிகவும் குறைவு: (மனு ஸ்மிருதி அத்தியாயம் V, சுலோகங்கள் 67-70 பார்க்க) இது ஒரு சில தினங்களுக்கு மேல் நீடிக்காது; தத்து எடுத்துக்கொள்ளும் விதியைப் பொறுத்தவரையில், (வியவஹார மயூகன் மேற்கோள் காட்டிய கலிகபுராணம், கானே பதிப்பித்தது, பக்கம். 144இது சம்பந்தப்பட்ட பல முறையீடுகள் நீதிமன்றங்களுக்குக் கொண்டு செல்லப்பட்ட விவரங்களை கானே குறிப்பிட்டிருக்கிறார்.)

பூணூல் அணிந்த பையன் தத்து எடுத்துக்கொள்வதற்கு தகுதிப்படைத்தவன் அல்ல என்று இந்த விதி கூறுகிறது. இந்த விதிமுறைகள் கூறுவது என்ன? அந்தக் கருத்து தெள்ளத்தெளிவானது; அதாவது பூணூல் அணிந்து முறைப்படி தன்னுடைய தகப்பனது கோத்திரத்தில் இணையாத பையன் விஷயத்தில் தீட்டு பெயரளவில்தான் இருக்கும். சுவிகாரம் என்கிற போது சுவீகாரம் எடுத்துக்கொண்ட தந்தையின் கோத்திரத்தில் சேர்ந்துவிட்டதைக் குறிக்கும். பூணூல் சடங்கு நடந்து முடிந்ததுமே பையன் மாற்ற முடியாதபடி மற்றொரு கோத்திரத்தில் இணைந்தவனாகிவிடுகிறான்.

ஆக, பூணூல் சடங்கு என்பது கோத்திரத்துடன் சம்பந்தப்பட்டதேயன்றி உபநயனத்துடன் சம்பந்தப்பட்டதல்ல என்பதை இந்த இரண்டு விதிகளும் காட்டுகின்றன.

பூணூல் கோத்திரத்துடன் தொடர்புடையது என்ற கருத்தை ஜைன நூல்கள் உறுதி செய்கின்றன. ஆச்சார்ய ரவிசேனாவால் படைக்கப்பட்ட பத்மபுராணம் 4 ஆவது பருவத்தின் 87 ஆவது சுலோகம் பின்வருமாறு கூறுகிறது: (நாதுராம் பிரேமி ஜைன சாகித்யம் நமது இதிகாசங்கள்எனும் நூலில் (இந்தி) இதனை மேற்கோள் காட்டியிருக்கிறார், பக்கம் 55)

பகவான்! சத்திரியர், வைசியர், சூத்திரர்களின் மரபுமூலம் பற்றி எங்களுக்கு எடுத்துரைத்தீர்கள். தங்கள் கழுத்தில் பூணூல் அணிந்திருப்பவர்களின் தோற்றமூலம் பற்றித் தெரிந்து கொள்ள நான் ஆவலாக இருக்கிறேன்.

     கழுத்தில் பூணூல் அணிந்திருப்பவர்கள்என்னும் சொற்கள் இங்கு மிக முக்கியமானவை. இது பிராமணர்களைப் பற்றிய வருணனை என்பதில் ஐயமில்லை. ஒரு காலத்தில் பிராமணர்கள் மட்டுமே பூணூல் அணிந்திருந்தார்கள் என்பதும், மற்றவர்கள் அணியவில்லை என்பதும் இதிலிருந்து தெளிவாகிறது. கோத்திர உறவு என்பது பிராமணர்களுக்கு மட்டுமே பொருந்தக்கூடியது என்பதைக் கருத்திற் கொண்டு பார்க்கும்போது, பூணூல் சடங்கு பையனை அவனுடைய தந்தையின் கோத்திரத்தில் பிணைக்கும் ஒரு சடங்கே தவிர வேதங்கள் பயில்வதில் தீட்சை அளிக்கும் உபநயனத்துடன் இது எவ்வகையிலும் சம்பந்தப்பட்டதல்ல என்பது தெள்ளத் தெளிவு.

இது உண்மையாயின் பூணூல் சடங்கும், உபநயனமும் ஒரு காலத்தில் வெவ்வேறு நோக்கங்களைக் கொண்டவையாக இருந்தன என்பது புலனாகிறது. பிற்காலத்தில் இவை இரண்டும் ஒன்றாக இணைந்திருந்தன. இந்த இணைவுக்கு ஒரு நியாயமான காரணம் இருந்தது. பூணூல் சடங்கில்லாத உபநயனத்தில் பையனை ஆச்சாரியர் தன்னுடைய கோத்திரத்தில் சேர்ந்துக்கொள்ளும் அபாயம் இருந்தது. இந்த அபாயத்தைத் தவிர்க்கும்பொருட்டு பையனின் தந்தை அவனை ஆச்சாரியரிடன் ஒப்படைக்கும் முன்னர் பூணூல் சடங்கை செய்து முடித்துவிடும் வழக்கம் நடைமுறைக்கு வந்தது. இந்த இரண்டு சடங்குகளும் ஏன் ஏககாலத்தில் செய்யப்பட்டன என்பதற்கு அனேகமாக இதுதான் காரணமாக இருக்கக்கூடும்.

இது எப்படிஇருப்பினும், உபநயனம் என்பது வேதபிராமணர் வேதத்தைப் போதிப்பதையே குறிக்கும்.

 III

எனது வாதம் அசைக்க, மறுக்கமுடியாதது என்ற திடநம்பிக்கை எனக்கு இருந்தபோதிலும் இதற்கு எவரும் மறுப்புகள் கூறமாட்டார்கள் என்று நினைப்பது மட்டுமீறிய தன்னம்பிக்கை கொள்வதையே அது குறிக்கும். பின்கண்ட ஆட்சேபங்களை நான் எதிர்பார்கிறேன்:

எனது வாதம் குறித்த எதிர்வாதங்களைக் கூறிவிட்டேன். அவற்றிற்கான எனது பதிலைக் கூற விரும்புகிறேன்.

IV

முதல் ஆட்சேபத்தை எடுத்துக்கொள்வோம். யார் சூத்திரன் என்பதை நிர்ணயிப்பதற்கு எது நிச்சயமான பிரமாணம் என்பது பற்றி இந்தியாவிலுள்ள நீதிமன்றங்கள் அளித்துள்ள தீர்ப்புகளை இங்கு குறிப்பிடுவது முதல் ஆட்சேபத்துக்குச் சரியான பதிலாக இருக்க முடியும்.

இவ்வகையில் முதல் தீர்ப்பை 7, எம்.ஐ.ஏ. 18ல் (சுயோகிர்ய ரான்முர்தான் சின்னுக்கும் சாகப் புர்ஹூலாத் சின்னுக்கும் இடையே நடைபெற்ற வழக்கு.) காணலாம். 1837-ல் பிரிவிக் கவுன்சில் இந்தத் தீர்ப்பை அளித்தது. குறிப்பிட்ட அச்சமயம் இந்தியாவில் சத்திரியர்கள் எவரேனும் இருக்கிறார்களா என்பதுதான் சர்ச்சைக்குரிய பிரச்சினை. சத்திரியர்கள் இருக்கிறார்கள் என்பது ஒரு தரப்பினரது வாதம்.

அவ்வாறு சத்திரியர்கள் எவரும் இல்லை என்பது இன்னொரு தரப்பினரின் வாதம்.சத்திரியர்கள் அனைவரையும் பிராமணரான பரசுராமர் பூண்டோடு அழித்துவிட்டார், எஞ்சியிருப்பவர்களையும் சூத்திர மன்னனான மகாபத்ம நந்தன் தீர்த்துக் கட்டிவிட்டான், இதன்பின்னர் சத்திரியர்கள் எவருமே இல்லை, பிராமணர்களும் சூத்திரர்களும் மட்டுமே இருந்தனர் என்ற பிராமணர்களது பிரச்சாரத்தை ஆதாரமாக கொண்டது இரண்டாவது வாதம்.

பிரிவுக் கவுன்சில் இந்த வாதத்தை ஏற்றுக்கொள்ளவில்லை; இது தவறான வாதம் என்றும் பிராமணர்களின் கட்டுக்கதை என்றும், சத்திரியர்கள் இன்னும் இருந்து வருகின்றனர் என்றும் அது தீர்ப்பளித்தது. எனினும் சத்திரியரை சூத்திரரிடமிருந்து பிரித்துக்காணும் நிருபணம் எதையும் அது வகுத்துத் தரவில்லை. இந்த பிரச்சினையை ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அது சம்பந்தப்பட்ட தகவல்களை அடிப்படையாக வைத்துத் தீர்மானிக்க வேண்டும் என்று அது கருத்து தெரிவித்தது.

இந்த விஷயம் குறித்து இரண்டாவது வழக்கை ஐ.எல்.ஆர்.10 கல். 688-ல் (ராஜ்குமார் லாலுக்கும் பிஸ்செஸ்ஸுர் தயாளுக்கும் இடையே நடைபெற்ற வழக்கு.) காணலாம். பீகாரைச் சேர்ந்த காயஸ்தர்கள் சத்திரியர்களா அல்லது சூத்திரர்களா என்பதே இந்த வழக்கில் எழுப்பப்பட்ட பிரச்சினை. அவர்கள் சூத்திரர்கள் தான் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால் பீகார் காயஸ்தர்கள் இதனை ஏற்கவில்லை.

பிகார் காயஸ்தர்கள் வங்காளம், மேல் மாகாணங்கள், காசி முதலிய பகுதிகளை சேர்ந்த காயஸ்தர்களிடமிருந்து முற்றிலும் வேறுபட்டவர்கள் என்றும், மேல் மாகாணங்கள் மற்றும் காசியை சேர்ந்த காயஸ்தர்கள் சூத்திரர்கள் என்றும், ஆனால் பீகார் காயஸ்தர்கள் சத்திரியர்கள் என்றும் அவர்கள் வாதிட்டனர். எனினும் நீதிமன்றம் இந்த வேறுபாட்டை ஏற்க மறுத்துவிட்டது; பீகார் காயஸ்தர்களும் சூத்திரர்கள்தான் என்று அது தீர்ப்பளித்தது.

இந்தத் தீர்ப்பை அலகாபாத் உயர்நீதிமன்றம் ஏற்கவில்லை. ஐ.எல்.ஆர்.12 அல.328-ல் (துளசிராமுக்கும் பீகாரி லாலுக்கும் இடையே நடைபெற்ற வழக்கு.) நீதிபதி மகமூத் தமது தீர்ப்பின் 334ஆவது பக்கத்தில் பின்கண்டவாறு குறிப்பிட்டார்:

“இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்களான காயஸ்தர்கள் என்பவர்கள் மனுதர்மத்தின்படியோ அல்லது வேறு எந்த இந்து சட்ட விதிமுறைகளின்படியோ மனிதகுலம் பிரிக்கப்பட்டிருக்கும் அடிப்படையில் சூத்திரர்கள் இனத்தைச் சேர்ந்தவர்கள் என்று கீழ் நீதிமன்றங்கள் தெரிவித்திருக்கும் கருத்து சரிதானா என்பது குறித்து எனக்குப் பெருமளவுக்கு ஐயப்பாடு உண்டு. மனித இன வேறுபாட்டியல் அடிப்படையில் மட்டுமின்றி, மக்கட் தொகையில் இந்த முக்கியமான பகுதியினர் விஷயத்தில் இந்து சட்ட விதிமுறைகளைச் செயல்படுத்துவதைப் பொறுத்தவரையிலும்கூட இந்தப் பிரச்சினை மிகச் சிக்கலான ஒன்றாகும்.

ஸ்ரீ நாராயண் மித்தருக்கும் ஸ்ரீ மட்டி கிருஷ்ன் சூந்தூரி தாஸ்ஸிக்கும் (எல்.ஆர்.ஐ.ஏ. பிற்சேர்க்கை, தொகுதி 149) இடையே நடைபெற்ற வழக்கிலும் அல்லது மகசோவ சோஷிநாத் கோஷுக்கும் ஸ்ரீமதி கிருஷ்ண சூந்தரி தாசிக்கும் (எல்.ஆர்.7.ஐ.ஏ. 250) இடையே நடைபெற்ற வழக்கிலும் பிரிவுக் கவுன்சில் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணமுடியும் என்று நான் கருதவில்லை.

இவ்விரண்டு வழக்குகளுமே வடமேற்கு மாகாணங்கள், அயோத்தி போன்ற இந்தியாவின் மேற்கு மாகாணங்களில், வாழும் பன்னிரண்டு காயஸ்த சாதிகளிடமிருந்து வேறுபட்ட கீழ் வங்காளத்தைச் சேர்ந்த காயஸ்தர்களின் சுவீகாரம் சம்பந்தப்பட்டவையாகும்.

சௌதரி ஹஸ்ஜாரி லாலுக்கும் விஷ்ணு தயாளுக்கும் இடையே நடைபெற்ற சுவீகார வழக்கில் தலைமை நீதிபதியும் என் சகோதரர் தைரலும் அளித்த பிரசுரிக்கப்படாத தீர்ப்பும் (1886-ம் வருட 113-ம் எண் முதலாவது மேல் முறையீடு குறித்து 1887 ஜூன் 15-ம் தேதி தீர்ப்பளிக்கப்பட்டது) இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணுவதாக நான் கருதவில்லை. இது குறித்து இதற்கு மேலும் எதுவும் கூற நான் விரும்பவில்லை....”

இனி அடுத்து மூன்றாவது வழக்கைப் பற்றிப் பார்ப்போம்: இந்த வழக்கு எண் (1916) 20 கல்.டபிள்யூ.என்.901. (அசித்தா மோகன் கோஷிக்கும் நிரத் மோகன் கோஷ் மாவ்லிக்கும் இடையே நடைபெற்ற வழக்கு.) வங்காள காயஸ்தர்கள் சத்திரியர்களா அல்லது சூத்திரர்களா என்பதே இவ்வழக்கில் எழுப்பப்பட்ட பிரச்சினையாகும். அவர்கள் சூத்திரர்கள் தான் என்று கல்கத்தா நீதிமன்றம் தீர்பளித்தது. கல்கத்தா நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து பிரிவுக் கவுன்சிலுக்கு மேல் முறையீடு செய்யப்பட்டது. பிரிவுக் கவுன்சிலின் முடிவு (1926) 47.ஐ.எ.140 என்ற எண்ணில் வெளியிடப்பட்டது.

வங்காளி காயஸ்தர்கள் சூத்திரர்களா அல்லது சத்திரியர்களா என்னும் பிரச்சினைக்கு அது முடிவு ஏதும் கூறவில்லை; இது கருத்து வேற்றுமைக்குரிய விஷயம் என்று கூறிவிட்டது. 1916க்கும் 1926க்கும் இடையே கல்கத்தா நீதிமன்றம் இரண்டு தீர்ப்புகளை வெளியிட்டது. வங்காள காயஸ்தர்களுக்கும் தாந்தியர்கள் ((1921) 48.கல்.626. விஸ்வநாத் கோஷுக்கும் திருமதி பலாய் தேசாய்க்கும் இடையே நடைபெற்ற வழக்கு.) மற்றும் தோம்களுக்கும் ((1924) 51.கல்.788. போலோநாத் மிட்டருக்கும் மன்னர் பிரான் அரசுக்கும் இடையே நடைபெற்ற வழக்கு.) இடையே நடைபெறும் கலப்புத் திருமணங்கள் சட்டரீதியாக செல்லுபடியாகக் கூடியவை, ஏனென்றால் இந்த இரு கீழ்ச் சாதிகளும் சூத்திரர்களின் உபசாதிகளாகும் என்று அது கருத்து தெரிவித்தது.

இந்த இரண்டு தீர்ப்புகளும் காயஸ்தர்களின் நிலையை மேலும் மோசமாக்கியது; இதனைத் தொடர்ந்து மற்றொரு தீர்ப்பு வெளிவந்தது; ஐ.எல்.ஆர். பாட்னா 506 ((1926) ஈஸ்வரி பிரசாத்துக்கும் ராய் ஹரி பிரசாத் லாலுக்கும் நடைபெற்ற வழக்கு) தீர்ப்பே அது. நீதிபதி திரு.ஜூவாலா பிரசாதின் இந்தத் தீர்ப்பு 47 பக்கங்களைக் கொண்டதாக இருந்தது. காயஸ்தர்களைப் பற்றிய குறிப்புகள் இடம் பெற்றிருந்த ஒவ்வொரு புராணத்தையும், ஒவ்வொரு ஸ்மிருதியையும் நீதிபதி அலசி ஆராய்ந்திருந்தார். அவர் கல்கத்தா நீதிமன்றத்தின் தீர்ப்பிலிருந்து வேறுபட்டு, பீகாரைச் சேர்ந்த காயஸ்தர்கள் சத்திரியர்களே என்று கருத்துத் தெரிவித்திருந்தார்.

அடுத்தபடியாக, மராட்டியர்கள் சத்திரியர்களா அல்லது சூத்திரர்களா என்ற பிரச்சினை சம்பந்தமாக பல வழக்குகள் நடைபெற்றன. இவ்வாறு நடைபெற்ற முதலாவது வழக்கு 48 மெட்.1 (கோலாப்பூர் மகாராஜாவுக்கும் சுந்தரம் ஐயருக்கும் நடைபெற்ற வழக்கு.) என்பதாகும். தஞ்சாவூர் மன்னரின் சொத்துக்களை நிர்வகிக்க நீதிமன்றத்தில் நியமிக்கப்பட்ட பொறுப்பாளர் (ரிசீவர்) தொடர்ந்த வழக்கு இது. மன்னரின் தந்தை வழி உறவினர்களும் தாய்வழி உறவினர்களும் இந்த வழக்கில் பிரதிவாதிகளாகச் சேர்க்கப்பட்டிருந்தனர்.

தஞ்சை அரசு வெங்கோஜியால் நிறுவப்பட்டதாகும். இவர் ஏகோஜி எனவும் அழைக்கப்பட்டார். இவர் மராட்டியர்; மராட்டிய சாம்ராஜ்யத்தை நிறுவிய சிவாஜியின் சகோதரர். இந்த வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பு 229 பக்கங்களைக் கொண்டிருந்தது. மராட்டியர்கள் சத்திரியர்களா என்னும் பிரச்சினை இவ்வழக்கில் மிக விரிவாக ஆராயப்பட்டிருந்தது. பிரதிவாதிகள் வாதாடியது போன்று மாராட்டியர்கள் சூத்திரர்களே அன்றி, சத்திரியர்கள் அல்ல என்று சென்னை நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

மராட்டியர்கள் சம்பந்தப்பட்ட அடுத்தவழக்கு பற்றிய விவரங்கள் ஐ.எல்.ஆர். (1928) 52 பக். 497-ல் (சுப்பாராவ் ஹம்பிராவ் பட்டீலுக்கும் ராதா ஹம்பிராவ் பட்டீலுக்கும் நடைபெற்ற வழக்கு.) காணப்படுகின்றன. இந்த வழக்கில் நீதிமன்றம் பின்வருமாறு தீர்ப்பளித்தது.

“பம்பாய் ராஜதானியில் மராட்டியர்களிடையே மூன்று வகுப்பினர் உள்ளனர்: (1) ஐந்து குடும்பத்தினர்; (2) தொண்ணூற்றாறு குடும்பத்தினர்; (3) ஏனையோர். இவர்களில் முதல் இரண்டு பிரிவினர் சட்டரீதியாக சத்திரியர்களாவர்.”

இவ்வகையைச் சேர்ந்த கடைசி வழக்கு குறித்த தகவல்கள் ஐ.எல்.ஆர்.(1927) 52 மெட். 1.1 – ல் காணக்கிடைகின்றன. மதுரையைச் சேர்ந்த யாதவர்கள் சத்திரியர்களா என்பதை சர்ச்சைக்குள்ளான பிரச்சினை. யாதவர்கள் தாங்கள் சத்திரியர்கள்தான் என்று உரிமை கொண்டாடினர். ஆனால் சென்னை நீதிமன்றம் இந்த வாதத்தை ஏற்க மறுத்து, யாதவர்கள் சூத்திரர்களே என்று தீர்ப்பளித்தது.

யார் சத்திரியர், யார் சூத்திரர் என்பதைத் தீர்மானிப்பதில் இவ்வாறு நீதிமன்றங்கள் மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கின. இத்தீர்ப்புகள் பலதிறப்பட்ட, பலவகைப்பட்ட கதம்பமாக அமைந்தன. இவற்றில் தெளிவு குறைவு, குழப்பம் அதிகம். ஒரு தீர்ப்பின்படி பீகார், மேல் மாகாணங்கள் (தற்போது உத்திரபிரதேசம்), காசி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த காயஸ்தர்கள் சத்திரியர்கள், அதேசமயம் வங்காளக் காயஸ்தர்கள் சூத்திரர்கள்!! சென்னை நீதிமன்றத்தின் தீர்ப்பின் பிரகாரம் எல்லா மாராட்டியர்களும் சூத்திரர்கள். ஆனால் பம்பாய் நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி ஐந்து குடும்பங்களையும் 96 குடும்பங்களையும் சேர்ந்த மராட்டியர்கள் சத்திரியர்கள், மற்ற மராட்டியர்கள் சூத்திரர்கள்!! கிருஷ்ணர் சார்ந்த யாதவ சமூகம் சத்திரியர்கள் என்றே பொதுவாகக் கருதப்படுகிறது. ஆனால் சென்னை நீதிமன்றமோ யாதவர்கள் சூத்திரர்கள் எனத் தீர்ப்பு அளித்துள்ளது!!

மேலே குறிப்பிடப்பட்ட தீர்ப்புகளில் நீதிமன்றங்கள் தாம் மேற்கொண்ட முடிவுகளுக்குக் கைக்கொண்ட பிரமாணங்கள் மிக முக்கியமானவை. நீதிமன்றங்கள் கடைபிடித்த பிரமாணங்களில் பின்வருபவை குறிப்பிடத்தக்கவை:

1) ஐ.எல்.ஆர். 10 கல்.688-ல் பின்கண்ட பிரமாணங்கள் கைக்கொள்ளப்பட்டன: (i) தாஸ் என்னும் பட்டப் பெயரைப் பயன்படுத்துதல், (ii) பூணூல் அணிதல், (iii) ஓமம் செய்யும் தகுதி, (iv) தீட்டு நீடிக்கும் காலம், (v) முறைக்கேடாகப் பிறந்த புதல்வர்களுக்கு வாரிசு உரிமை பெறுவதற்குள்ள தகுதி அல்லது தகுதியின்மை.

2) ஐ.எல்.ஆர். 6 பாட்னா 606-ல் பொதுவான புகழ் அளவுகோலாக எடுத்துக் கொள்ளப்பட்டிருப்பதாகத் தோன்றுகிறது. நற்பெயருடன் ஒரு சமூகம் சத்திரியராக இருக்குமாயின் அந்த சமூகம் சத்திரிய சமூகமாகக் கருதப்பட வேண்டும்.

3) 48 மெட்ராஸ் 1-ல், பலதரப்பட்ட அளவுக்கோல்கள் கைக்கொள்ளப்பட்டுள்ளன. இவற்றில் ஒன்று சமூகத்தின் பிரக்ஞை. இரண்டாவது, பூணூல் அணியும் சடங்கிலிருந்து வேறுபட்ட முறையில் உபநயன சடங்கை மேற்கொள்ளுதல். தாங்கள் சத்திரியர்கள் அல்லது வைசியர்கள் என்பதை தக்க ஆதாரத்துடன் நிலைநாட்டினாலொழிய, எல்லாப் பிராமணரல்லாதோரும் சூத்திரர்களே என்பது மூன்றாவது பிரமாணமாகும்.

4) ஐ.எல்.ஆர். பம். 497-ல் (i) சமூகத்தின் பிரக்ஞை, (ii) அதன் பழக்க வழக்கங்கள், (iii) அந்தப் பிரமாணங்கள் கைக்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த விஷயம் குறித்து எதுவும் தெரியாதவர்கள் பல்வேறு நீதிமன்றங்கள் கைக்கொண்டிருக்கும் அளவுக்கோல்கள் அதாவது பிரமாணங்கள் சரியானவையே என்று கூறக்கூடும். இது சரியன்று. ஏனென்றால், தீட்டு நீடிக்கும் காலம் போன்ற ஓர் அளவுக்கோல் பிரச்சினைக்குத் தீர்வு காணுவதில் எவ்வகையிலும் சம்பந்தமற்றது.

ஓமம் செய்யும் தகுதி போன்ற ஒரு பிரமாணம் இப்பிரச்சினைக்கு சம்பந்தமுடையது என்றபோதிலும் அதனை ஆதாரமாகக் கொள்ள முடியாது, ஏனென்றால் காரியத்தை காரணமாக அது தவறாக எடுத்துக் கொண்டுள்ளது. அடுத்து, பிரக்ஞை அளவுகோலையும் சரியானதெனக் கூறுவதற்கில்லை. ஏனெனில், ஒரு சமூகம் தனது சக்திக்கு அப்பாற்பட்ட காரணங்களால் அவசியமான சமயவினை முறைகளைக் கைக்கொள்ளும் நடைமுறையைப் பின்பற்றத் தவறியதன் விளைவாக அது தனது பிரக்ஞையை இழந்திருக்கக்கூடும். உபநயன அளவுகோல் வேறுபட்டதொரு அடித்தளத்தின் மீது அமைந்துள்ளது.

நீதிமன்றங்கள் அதனை சரியானபடி முன்வைக்கவில்லை. தக்கவாறு புரிந்துகொண்டு, சரியானபடி முன்வைத்தால் இந்த உபநயன அளவுகோல் நல்லாதாரமுடையதாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

ஆனால் உபநயன விஷயத்தில் சமூகத்தின் சட்டப்படியான நிலையையும் மெய்ந்நடப்பிலுள்ள நிலையையும் நீதிமன்றங்கள் வேறுபடுத்திப் பார்க்கத் தவறிவிட்டன; சட்டப்படி எது உண்மையோ மெய்ந்நடப்பிலும் அது உண்மையாக இருக்கும் என்ற அனுமானத்தின் அடிப்படையிலேயே அவை செயல்பட்டுள்ளன. உபநயனம் என்னும் அளவுகோலைப் பயன்படுத்துவதில் ஏற்படும் இந்தத் தவறுதான் பல அபத்தங்களையும் முரண்பாடுகளையும் தோற்றுவிக்கிறது.

ஒரு சமூகத்துக்கு ஒரு பிரதேசத்தில் ஒரு குறிப்பிட்ட அந்தஸ்தை வழங்குவது, அதே சமூகத்திற்கு இன்னொரு பிரதேசத்தில் முற்றிலும் வேறுபட்டதொரு அந்தஸ்தை அளிப்பது, ஒருவர் ஒரு குறிப்பிட்ட காலத்துக்குத்தான் அந்த அந்தஸ்தைப் பெறமுடியும் என்பது, நடைமுறையில் பூணூல் அணிந்து வருவதை ஆதாரமாகக் கொண்டு ஒரு சமூகம் சட்டரீதியாக அதனை அணிய முடியாது என்று கூறிவிட்டது போன்றவற்றை இவ்வகையில் முக்கியமாகக் குறிப்பிட வேண்டும்.

ஒருவர் சூத்திரரா அல்லது சத்திரியரா என்பதை நிர்ணயிப்பதற்கான ஒரே உண்மையான, சரியான உரைகல் உபநயனம் செய்து கொள்வதற்கு அவருக்கு உரிமை இருக்கிறதா என்பதே ஆகும் என்று நிச்சயமாகக் கூறலாம்; அதாவது இரத்தினச் சுருக்கமாகக் கூறினாள், இது விஷயத்தில் உண்மையான அளவுகோல் பூணூல் அணிவதல்ல, மாறாக பூணூல் அணிவதற்கு ஒருவருக்குள்ள உரிமையே எனலாம்.

 (பாபாசாகேப் அம்பேத்கர் நூல் தொகுப்பு 13 - இயல் 10)