I

இந்தோ-ஆரிய சமுதாயத்தில் தொன்றுதொட்டே நான்கு வருணங்கள் இருந்துவந்தன என்பது அனைத்து வகுப்பினர்களையும் சேர்ந்த இந்துக்களினாலும் ஐரோப்பிய அறிஞர்களினாலும் ஒப்புக்கொள்ளப்பட்ட கருத்தாகும். முந்தைய இயலில் முன்வைக்கப்பட்ட கருத்தைப் போன்று, அதாவது சூத்திரர்கள் சத்திரியர்களாக இருந்தனர் என்ற கருத்தைப் போன்று, அதாவது சூத்திரர்கள் சத்திரியர்களாக இருந்தனர் என்ற கருத்து ஏற்றுக்கொள்ளப்படுமானால், அப்போது அக்கருத்து தவறானது என்பதும், இந்தோ-ஆரிய சமுதாயத்தில் மூன்று வருணங்கள் மட்டுமே, அதாவது பிராமணர்கள், சத்திரியர்கள், வைசியர்கள் என்று மூன்று வருணங்கள் மட்டுமே இருந்து வந்தன என்பதும் தெளிவாகிறது.

ambedkar 2 350இவ்வாறு இக்கருத்து, ஒரு பிரச்சினையை தீர்க்கும் அதேசமயம் மற்றுமொரு பிரச்சினையை உருவாக்குகிறது. வேறு எவரேனும் இப்பிரச்சினையின் முக்கியத்துவத்தைக் காண்கிறார்களோ இல்லையோ நான் காண்கிறேன். ஆரம்பத்தில் மூன்று வருணங்களே இருந்தன என்ற கருத்தை நிரூபிப்பதில் நான் வெற்றியடையாவிடில், சூத்திரர்கள் சத்திரியர்களாக இருந்தனர் என்ற எனது கருத்து ஐயத்திற்கிடமின்றி நிரூபிக்கப்படுவதாகக் கூறமுடியாது என்ற உண்மையை நான் உணர்ந்திருக்கிறேன்.

இப்பிரச்சினை உறுதியாகத் தீர்க்கப்படும் என்ற நிலைமை இருக்கும்போது அது மற்றொன்றை உருவாக்குகிறது என்ற கருத்தில் நான் ஈடுபட்டிருப்பது துரதிருஷ்டவசமானதுதான் என்ற அதே சமயம், இந்தோ-ஆரியர்களிடையே மூன்று வருணங்கள் மட்டுமே இருந்தன என்பதைக் காட்டும் வலுவான, கோர்வையான சான்று இருப்பதைக் கண்டு நான் அதிருஷ்டசாலியாக இருப்பதை உணருகிறேன்.

நான் ஆதாரமாகக் கொண்டிருக்கும் முதலாவது சான்று ரிக் வேதமேயாகும். ரிக் வேத காலத்தில் வருணாசிரம முறை நடப்பில் இருக்கவில்லை என்று கூறும் அறிஞர்கள் சிலரும் இருக்கின்றனர். ரிக்வேதம் முடிவுக்கு வந்து வெகுகாலத்திற்குப் பின்னர் நடைபெற்ற இடைச்செருகலே புருஷ சூக்தம் என்ற கருத்தை இக்கூற்று ஆதாரமாகக் கொண்டுள்ளது. புருஷ சூக்தம் ஒரு பிற்காலத்திய இடைச்செருகல் என்பதை ஒப்புக்கொண்டாலும் கூட, ரிக்வேத காலத்தில் வருணாசிரம அமைப்பு இருக்கவில்லை என்ற கருத்தை ஏற்றுக்கொள்வது சாத்தியமல்ல.

இத்தகைய ஓர் அமைப்பு ரிக்வேத வாசகத்திற்கு நேர்முரணாக உள்ளது. ஏனெனில் புருஷ சூக்தம் ஒருபுறமிருக்க, ரிக்வேதம் ஒருமுறையல்ல, பலமுறை பிராமணர்களையும், சத்திரியர்களையும், வைசியர்களையும் குறிப்பிடுகிறது. பிராமணர்களின் தனிப்பட்ட வருணமாக பதினைந்து முறையும் சத்திரியர்கள் ஒன்பது முறையும் குறிப்பிடப்படுகின்றனர். இதில் முக்கியமானது என்னவெனில் ரிக்வேதம் சூத்திரர்களை ஒரு தனிப்பட்ட வருணமாகக் குறிப்பிடுவதில்லை என்பதேயாகும். சூத்திரர்கள் ஒரு தனிப்பட்ட வருணமாக இருந்திருப்பார்களேயானால், ரிக்வேதம் அவர்களை அவ்வாறு குறிப்பிடாமல் இருப்பதற்கு எந்தவிதக் காரணமுமில்லை.

ரிக் வேதத்திலிருந்து நாம் பெறக்கூடிய உண்மையான முடிவு என்னவெனில், வருணாசிரம முறை நடைமுறையில் இருக்கவில்லை என்பதல்ல, மாறாக மூன்று வருணங்கள் மட்டுமே நடைமுறையில் இருந்தன, சூத்திரர்கள் நான்காவது வருணமாக, ஒரு தனிப்பட்ட வருணமாக கருதப்படவில்லை என்பதேயாகும்.

நான் ஆதாரமாகக் கொண்டிருக்கும் இரண்டாவது அத்தாட்சி சதபதம், தைத்ரீயம் என்ற இரு பிராமணர்களின் சான்றுரைகளாகும். இவ்விரண்டுமே மூன்று வருணங்கள் மட்டுமே உருவாக்கப்பட்டதாகக் கூறுகின்றன. அவை சூத்திரர்கள் என்ற தனிப்பட்ட வருணம் உருவாக்கப்பட்டதைப் பற்றிக் கூறவில்லை.

சதபத பிராணம் கூறுகிறது: (முய்ர், தொகுதி I, பக்கம். 17)

II.1.4.11 – பிரஜாபதியானவர் ‘பூஹ்’ என்று கூறி இப்பூவுலகை தோற்றுவித்தார். ‘புவாஹ்’ என்று கூறி அவர் காற்றைத் தோற்றுவித்தார், ‘ஸ்வாஹ்’ என்று கூறி வானத்தைத் தோற்றுவித்தார். இந்த மூன்று உலகங்களையும் உள்ளடக்கியதுதான் இப்பிரபஞ்சம். (அக்னி) மொத்தத்திற்கும் பொதுவாக வைக்கப்பட்டது. ‘பூஹ்’ என்று கூறு பிரஜாபதி பிராமணனைத் தோற்றுவித்தார்; ‘புவாஹ்’ என்று கூறி அவர் ஆற்றலை தோற்றுவித்தார்; அனைவருக்கும் பொதுவாக அக்னி தோற்றுவிக்கப்பட்டது. ‘பூஹ்’ என்று கூறி பிரஜாபதி தன்னைத் தானே தொற்றுவித்துக் கொண்டார். ‘புவாஹ்’ என்று கூறி அவர் தனது குழந்தைகளைத் தோற்றுவித்தார்; ‘ஸ்வாஹ்’ என்று கூறி அவர் பிராணிகளைத் தோற்றுவித்தார். இந்த உலகமே அவர் அவருடைய சந்ததிகள்,, குழந்தைகள், பிராணிகள் ஆகியவற்றை உள்ளடக்கியது தான். (அக்னி) அனைத்திற்கும் பொதுவாக தோற்றுவிக்கப்பட்டது.”

தைத்திரீய பிராமணம் கூறுகிறது: (முய்ர் மேற்கோள், தொகுதி I, பக்கம் 17)

“இப்பிரபஞ்சம் முழுவதையுமே பிரம்மா உருவாக்கினார். வைசிய இனம் ரிக் வேதச் செய்யுள்களிலிருந்து உருவானதாகக் கூறுகின்றனர். யஜூர் வேதம் என்ற கர்ப்பப் பையில் இருந்துதான் சத்திரியர் தோன்றியதாக அவர்கள் கூறுகின்றனர். சாம வேதம் என்ற மூலாதாரத்திலிருந்துதான் பிராமணர்கள் தோன்றினார்கள். இதைத்தான் பண்டையக் காலத்தவர் பண்டையக் காலத்தவருக்குக் கூறினார்.”

என்னுடைய அத்தாட்சி இங்குதான் உள்ளது. ரிக் வேதத்திலிருந்து பெறப்பட்ட ஒரு கருத்தையும் இரு பிராமணர்களிடமிருந்து பெறப்பட்ட இரு கூற்றுகளையும் அது உள்ளடக்கியுள்ளது. அதிகாரபூர்வமான விஷயம் என்ற விதத்தில் இப்பிராமணங்கள் வேதங்களுக்குச் சமமானவையாக உள்ளன. ஏனெனில் இரண்டுமே ஸ்ருதிகள் தாம். இரண்டுமே நிச்சயமான, துல்லியமான சொற்களில், மூன்று வருணங்கள் மட்டுமே இருந்தன என்பதைக் கூறுகின்றன. சூத்திரங்கள் ஒரு தனிப்பட்ட, தெளிவான ஒரு வருணமாக நான்காவது வருணமாக இருக்கவில்லை என்பதை இரண்டுமே ஒப்புக்கொள்கின்றன. ஆகவே, மூன்று வருணங்கள் மட்டுமே இருந்தன, சூத்திரர்கள். இரண்டாவது வருணத்தின் ஓர் அங்கமாகவே இருந்தனர் என்ற எனது கூற்றுக்கு ஆதரவாக இதைவிடச் சிறந்த சான்றுகள் இருக்க முடியாது.

II

இதுவே என்னுடைய அத்தாட்சியாகும். மறுபுறத்தில் ரிக் வேதத்தின் புருஷ சூக்தத்தில் அடங்கியுள்ள சான்று, ஆரம்பம் முதலே நான்கு வருணங்கள் இருந்ததாகச் சாதிக்கின்றது. பிரச்சினை என்னவெனில், இந்த இரு கூற்றுகளில் எதைச் சரியானது என்று எடுத்துக் கொள்வது? இப்பிரச்சினையை எப்படித் தீர்மானிப்பது? மீமாம்சையின் விதிகளை பிரயோகித்து இதற்குத் தீர்வு காணமுடியாது. அதை நாம் பிரயோகித்தால், நான்கு வருணங்கள் இருந்ததாகக் கூறும் புருஷ சூக்தத்தின் கூற்றையும், மூன்று வருணங்களே இருந்தன என்ற பிராமணர்களின் கூற்றையும் நாம் உண்மை என்று ஒப்புக்கொள்ள வேண்டியிருக்கும். இது ஓர் அபத்தமான நிலை. காலவரிசைக் கிரமம், உள்ளார்ந்த திறனாய்வு போன்ற வரலாற்று ரீதியான திறனாய்வு விதிகளின் பின்னணியில் இந்த விஷயத்தை நாம் தீர்மானிக்க வேண்டும். முக்கியப் பிரச்சினை என்னவெனில், புருஷ சூக்தம் பின்னாளில் அசல் ரிக்வேதத்துடன் சேர்க்கப்பட்டதா என்பதேயாகும். இப்பிரச்சினை தோன்றியதற்கான மூலக் காரணமே, ரிக் வேதத்தின் இதர பகுதிகளுடன் ஒப்பிடும்பொழுது, சூக்தத்தின் நடை வித்தியாசமாக இருப்பதுதான். அது ரிக் வேதத்துடன் பின்னாளில் சேர்க்கப்பட்டது என்பதுதான் அறிஞர்களனைவரின் கருத்தாகும். இதைத்தான் கோல்புரூக் பின்வருமாறு கூறுகிறார்: (முய்ரால் மேற்கோள் காட்டப்பட்டது, தொகுதி I, பக்கம். 14)

“அந்த அற்புதமான செய்யுள் பகுதியான (புருஷ சூக்தம்) நடையிலும் யாப்பிலும் பாணியிலும், அது சம்பந்தப்பட்டுள்ள பிரார்த்தனைகளின் இதர பகுதிகளிலிருந்து மிகவும் மாறுபட்டிருக்கிறது. அது நிச்சயமாக நவீன நடையில் உள்ளது; சமஸ்கிருத மொழி பண்படுத்தப்பட்டு அதன் இலக்கணமும் லயமும் செம்மைப்படுத்தப்பட்ட பின்னர் அது இயற்றப்பட்டிருக்க வேண்டும். இப்போது உள்ளது போன்று வேதங்கள் தொகுக்கப்பட்டதானது, சமஸ்கிருத மொழி அதன் கரடுமுரடான, ஒழுங்கற்ற சொல் வழக்கிலிருந்து முன்னேற்றமடைந்த நிலைக்கு வந்த பின்னர் நிகழ்ந்ததாகும் என்ற முக்கியமான உண்மையை தெளிவுபடுத்துவதற்குரிய சான்றுகளை இது வழங்குகின்றது. வேதத்தின் எண்ணற்ற துதிப்பாடல்களும் வழிப்பாடுகளும் பழைய பாணியில் இயற்றப்பட்டிருந்ததை பண்படுத்தப்பட்ட உரத்து ஒலிக்கக்கூடிய சொல்வழக்கில் புராணக் கதைகளாகவும், புராணங்களாகவும் காவியங்களாகவும் எழுதப்பட்டுள்ளன.”

பேராசிரியர் மாக்ஸ்முல்லரின் கருத்தில்: (முய்ரால் மேற்கோள் காட்டப்பட்டது, தொகுதி I பக்.13)

உதாரணமாக பத்தாவது நூலின் 90ஆவது துதிப்பாடல் அதன் தன்மையிலும் நடைவளத்திலும் நவீனமானதாக இருப்பதில் யாருக்கும் ஜயப்பாடு இருக்க முடியாது. அது பலிச்சடங்குகள் சம்பந்தமான குறியீடுகள் நிறைந்ததாக உள்ளது, தத்துவரீதியான சொற்களைப் பயன்படுத்துகிறது, மூன்று பருவகாலம் ஆகியவற்றைக் குறிப்பிடுகிறது; நான்கு ஜாதிகள் இருப்பதாகக் கூறும் ஒரே ஒரு பத்திதான் ரிக் வேதத்தில் அடங்கியுள்ளது. இப்பாடல்கள் இயற்றப்பட்டது நவீன் காலத்தின் சொல்வழக்கில்தான் என்பதற்கான சான்றுகள் வலுவாக இருக்கின்றன. உதாரணமாக, கோடைகாலத்தைக் குறிக்கும் கிரிஸ்மா என்ற சொல் ரிக் வேதத்தின் வேறு எந்தப் பாடல் வரியிலும் இடம்பெறவில்லை; அதேபோன்று வசந்த காலத்தைக் குறிக்கும் சொல்லான வசந்தாவும் கூட வேதகாலக் கவிஞர்களின் தொன்மையான சொல்வழக்கிற்கு உரியதல்ல. அது ரிக்வேதத்தில் (X.161.4). மேலும் ஒரே ஒரு இடத்தில் அதாவது மூன்று பருவங்களான முறையே ௸ரத் – இலையுதிர்காலம், ஹேமந்தா – பனிக்காலம்; வசந்தா – வசந்தா காலம் என்று குறிப்பிடப்படும் பத்தியில் இடம் பெறுகிறது.  

பேராசிரியர் வெபர் கூறுகிறார்: (முய்ரால் மேற்கோள் காட்டப்பட்டது, தொகுதி I பக்.14)

“ரிக்வேதத்தின் ஒரு துதிப்பாடல் என்று கருதப்படும் புருஷ சூக்தம், அத்தொகுப்பின் அண்மைக்கால சேர்க்கையாகும் என்பது அதன் உள்ளடக்கத்திலிருந்து தெளிவாகக் காணப்படுகிறது. அதிலிருந்து எந்த ஒரு செய்யுள் வரிசையையும் சாம சம்ஹிதை கையாளவில்லை என்ற உண்மை முக்கியத்துவம் அற்றது அல்ல (நான் எனது ஆய்வுக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளதுடன் ஒப்பிடுக). உண்மையில் நைகியா கோட்பாட்டு மரபானது (இது நிச்சயமற்றது என்றபோதிலும் கூட) முதலாவது அர்ச்சிகாவின் ஏழாவது பிரபாதகாவில் முதலாவது ஐந்து செய்யுள் வரிகளை கையாண்டிருப்பது போல் தோன்றுகிறது, ஏனெனில் அவை அதற்கு புதுமையானவையாக உள்ளன.”

III

இது வாதத்தின் ஒரு வகையாகும். புருஷ சூக்தமானது பண்டைய நூல்தானா அல்லது பின்னாளில் உருவாக்கப்பட்டதா என்பதைத் தீர்மானிப்பதில் நமக்கு உதவக்கூடிய மற்றொரு வாதமும் உள்ளது. இதற்கு புருஷ சூக்தத்தை ஏற்றுக்கொண்ட வேதத்தின் எத்தனை சம்ஹிதைகள் உள்ளன என்பதைக் கண்டறிவது அவசியம். வெவ்வேறு வேதங்களையும் சம்ஹிதைகளையும் ஆய்வு செய்யும்போது ஏற்படும் நிலைபாடு வருமாறு:

புருஷ சூக்தத்திலிருந்து சாமவேதம் ஐந்து செய்யுள்களைத் தான் எடுத்துக் கொண்டுள்ளது. வெள்ளை யஜூர் வேதத்தைப் பொறுத்தவரை, வாஜசனேயி சம்ஹிதை அதை உள்ளடக்கியுள்ளது. ஆனால் இரண்டிற்கும் இடையிலான வேறுபாடு மகத்தானது. ரிக் வேதத்தில் உள்ளது போன்று, புருஷ சூக்தம் 16 செய்யுள்களை மட்டுமே கொண்டிருக்கிறது. ஆனால் வாஜசனேயி சம்ஹிதையில் புருஷ சூக்தமானது 22 செய்யுள்களைக் கொண்டிருக்கிறது. கருப்பு யஜூர் வேதத்தில் தற்போது மூன்று சம்ஹிதாக்கள் மட்டுமே காணக்கிடக்கின்றன. ஆனால் இந்த மூன்று சம்ஹிதைகளான தைத்தீரியம், கதகம் மற்றும் மைத்ராயணி ஆகியவை எதுவும் புருஷ சூக்தத்துக்கு இடம் தரவில்லை. ரிக் வேதத்தில் வரும் புருஷ சூக்தத்தின் கிட்டத்தட்ட அதே மறுபதிப்பை உள்ளடக்கியுள்ள ஒரே வேதம் அதர்வண வேதமேயாகும்....

வெவ்வேறு வேதங்களில் இடம்பெறும் புருஷ சூக்தத்தின் வாசகம் ஒரேமாதிரியானதல்ல. வாஜசனேயி சம்ஹிதையின் ஆறு கூடுதல் செய்யுள்கள் அதற்கு விசேடமானவையாகும். அது ரிக் வேதம், சாம வேதம், அதர்வண வேதம் ஆகியவற்றில் இடம்பெறவில்லை. 16 ஆவது செய்யுள் சம்பந்தமாக மற்றுமொரு வேறுபாடும் உள்ளது. ரிக் வேதத்தின் 16வது செய்யுளை அதர்வண வேதத்திலோ அல்லது யஜூர் வேதத்திலோ காணமுடியவில்லை. அதேபோன்று அதர்வண வேதத்தில் இடம்பெற்றுள்ள செய்யுளை ரிக் வேதத்திலோ அல்லது யஜூர் வேதத்திலோ காணமுடியவில்லை. மூன்று வேதங்களுக்கும் பொதுவான செய்யுள்களின் வாசகங்கள் ஒரே மாதிரியானவை அல்ல. மூன்று வேதங்களில் இடம்பெற்றுள்ள செய்யுள்களின் வரிசைக் கிரமமும் கூட ஒரேமாதிரியானதல்ல என்பதைப் பின்வரும் அட்டவணையிலிருந்து காணலாம்:

யஜூர் வேதம் ரிக் வேதம் சாம வேதம் அதர்வண வேதம்
1 1 3 1
2 2 5 4
3 3 6 3
4 4 4 2
5 5 7 9
6 8 * 10
7 9 * 11
8 10 * 14
9 7 * 13
10 11 * 12
11 12 * 5
12 13 * 6
13 14 * 7
14 6 * 8
15 15 * 15
16 16 * 16+
17 * * *
18 * * *
19 * * *
20 * * *
21 * * *
22 * * *

( * இந்த செய்யுள்கள் காணப்படவில்லை என்று இதற்குப் பொருள்.  + இவை ஒரே மாதிரியானவையாக இல்லை என்று இதற்குப் பொருள். )

இதில் விஷயம் என்னவெனில் புருஷ சூக்தம் ஒரு முதிய, பழமையான வாசகத்தைக் கொண்டிருந்திருக்குமேயானால் தொன்மையான மரபினால் தெய்வீகத் தன்மையைப் பெற்றிருந்திருக்குமேயானால் இதர வேதங்கள் அதனிடம் இத்தனை தாராளமாக நடந்து கொண்டிருக்குமா? அதை அவை மாற்றியிருக்குமா? அதை சின்னாபின்னமாக்கியிருக்குமா?

வெவ்வேறு வேதங்களின் செய்யுள்களில் புருஷ சூக்தத்துக்குள்ள இடமும் கூட மிக முக்கியமானதாகும். ரிக் வேதத்தில் அது பல செய்யுள் திரட்டுப் பகுதியில் வருகிறது. அதர்வண வேதத்தில் அது அனுபந்தப் பகுதியில் வருகிறது. ரிக் வேதத்தின் தொன்மையான அங்கமாக அது இருந்திருக்குமேயானால் ஏன் அது இத்தகைய முக்கியத்துவமற்ற தொகுப்பில் இடம்பெற வேண்டும்? இவை எதைக் குறிக்கின்றன? அவை நமக்குக் கூறுவது இதுதான்:

1) “கறுப்பு யஜூர் வேதத்தின் தைத்திரீய, கதக, மைத்ராயணி சம்ஹிதைகளில் புருஷ சூக்தம் சேர்க்கப்படவில்லை என்றால், கறுப்பு யஜூர் வேதத்தின் தைத்திரீய சம்ஹிதை, கதக சம்ஹிதை, மைத்ராயணி சம்ஹிதை ஆகியவற்றுக்குப் பின்னர் புருஷ சூக்தத்தை ரிக் வேதத்துடன் சேர்த்திருக்க வேண்டும் என்பது தெரியவருகிறது.

2) “வேதங்களில் பல்வகைத் திரட்டுப் பகுதியிலும் பிற்சேர்க்கைப் பகுதியிலும் அது சேர்க்கப்பட்டிருப்பது அது பிற்காலத்தில் இயற்றப்பட்டது என்பதைக் காட்டுகிறது.”

3) “வெவ்வேறு சம்ஹிதைகளின் ஆசிரியர்கள் செய்யுள்களை சேரப்பதிலும், நீக்குவதிலும், பதிவு செய்வதிலும் எடுத்துக்கொண்ட சுதந்திரமானது, அதை அவர்கள் ஒரு தொன்மையான செய்யுளாகக் கருதவில்லை என்பதைக் காட்டுகிறது. அது தொன்மையானதாக இருந்திருக்குமானால் அதை அதன் அசல் வடிவத்தில் மறுபிரசுரம் செய்ய வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும்.

புருஷ சூக்தம் பின்னாளில் சேர்க்கப்பட்டது என்று பேராசிரியர் மாக்ஸ் முல்லரும் மற்றவர்களும் கூறிய கருத்துக்களுக்கு ஆதரவாக இந்த விஷயங்கள் ஆணித்தரமான சான்றுகளை வழங்குகின்றன.

IV

புருஷ சூக்தம் செய்யுள் பகுதிகளின் வடிவங்களில் உள்ள வேறுபாடும் கூட குறிப்பிடத்தக்கதாகும். புருஷ சூக்தத்தை படிக்கும் எவரும் 11 மற்றும் 12 ஆகிய இரு செய்யுள்களை தவிர, மீதமுள்ள அனைத்தும் கதை வடிவில் இருப்பதைக் காணமுடியும். ஆனால் நான்கு வருணங்களின் தோற்றத்தை விளக்கும் இந்த இரு செய்யுள்களும் கேள்வி-பதில் வடிவத்தில் உள்ளன. இதில் முக்கியமான விஷயம் என்னவெனில், ஏன் இந்த இரு செய்யுள்கள் மட்டும் இதர செய்யுள்களைப்போல் கதை வடிவில் இல்லாமல் கேள்வி வடிவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன? இதற்கு ஒரே விளக்கம் அந்த எழுத்தாளர் ஒரு புதிய விஷயத்தை ஒரு குறிப்பிட்ட விதத்தில் அறிமுகப்படுத்த விரும்பினார் என்பதேயாகும். புருஷ சூக்தமானது ரிக் வேதத்துடன் பின்னாளில் சேர்க்கப்பட்டது என்பது மட்டுமின்றி, இக்குறிப்பிட்ட செய்யுள்கள் புருஷ சூக்தம் இயற்றப்பட்டதற்கு பின்னர் சேர்க்கப்பட்டதேயாகும் என்பதே இதற்கு அர்த்தம்.

தங்களது மேலாண்மை நிலைக்கு வலுசேர்ப்பதற்காக பிராமணர்கள் செய்த பித்தலாட்டமே புருஷ சூக்தம் என்று கூறுமளவிற்கு சில திறனாய்வாளர்கள் சென்றுள்ளனர். மத குருமார்கள் பல பித்தலாட்டங்களை செய்துள்ளனர் என்பது தெரிந்ததே. கத்தோலிக்க மதத்தின் வரலாற்றில் கான்ஸ்டான்டின் மற்றும் சூடோ இசிடோர் டிக்றேடால்ஸ் ஆகியோரின் நன்கொடைகள் பிரபலமான பித்தலாட்டங்கள் என்பது அனைவருக்கும் தெரியும். இந்தியாவின் பிராமணர்கள் இத்தகைய சூழ்ச்சியிலிருந்து விதிவிலக்கானவர்கள் அல்ல. விதவைகள் எரிக்கப்பட்டதற்கு ரிக் வேதத்தை ஆதரவு வழங்கச் செய்வதற்காக அவர்கள் எவ்வாறு மூலச்சொல்லான ‘அக்ரி’யை ‘அக்னி’ என்று மாற்றினார்கள் என்பதை பேராசிரியர் மாக்ஸ் முல்லர் போன்ற மிகச் சிறந்த அறிஞர் சுட்டிக்காட்டியுள்ளார். கிழக்கிந்தியக் கம்பெனியின் காலத்தில் ஒரு வாதியின் வழக்கிற்கு ஆதரவாக ஒரு ஸ்மிருதி முழுவதுமே திரித்து எழுதப்பட்டது என்பது பிரபலமானதாகும். ஆகவே நான்காவது நடப்பிற்கு வந்த வெகுகாலத்திற்கு பின்னர், புருஷ சூக்தத்தின் மொத்த பகுதிகளை அல்லாவிட்டாலும், குறைந்தபட்சம் 11 மற்றும் 12 ஆகிய செய்யுள்களேயானும் பிராமணர்கள் போலியாகத் தயாரித்திருந்தால் அதில் ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை. அவர்களுடைய நோக்கமே சதுர்வர்ண அமைப்பிற்கு வேதங்களின் அங்கீகாரத்தை வழங்குவதேயாகும்.

V

புருஷ சூக்தம் பிராமணர்களுக்கு முந்தியதா? இக்கேள்வி முதலாவதினின்றும் தனியானது, வேறுபட்டது. புருஷ சூக்தமானது ரிக் வேதத்தின் பிற்பகுதிக்குச் சொந்தமானதாக இருக்கக் கூடும். ஆயினும் ஒட்டுமொத்தமாக ரிக்வேதமானது பிராமணர்களை விட முந்தியதாக இருக்குமானால் புருஷ சூக்தம் பிராமணர்களை விட இன்னமும் முந்தியதாக இருக்கும். ஆகவே இப்பிரச்சினையைத் தனித்தனியாகப் பரிசீலிக்க வேண்டிய தேவை உள்ளது.

வேதகால இலக்கியத்தின் வளர்ச்சியில் இருந்த ஒழுங்குமுறையானது முதலில் வேதங்கள், பின்னர் பிராமணர்கள், அதற்குப் பின்னர்தான் சூக்தங்கள் என்பது பேராசிரியர் மாக்ஸ் முல்லரின் கருத்தாகும். இக்கருத்து ஏற்றுக்கொள்ளப்படுமானால் புருஷ சூக்தமானது பிராமணர்களுக்கு முந்தியதாக இருக்க வேண்டுமென்று அர்த்தமாகும். பிரச்சினை என்னவெனில்: பேராசிரியர் மாக்ஸ் முல்லரின் கருத்தை அறுதியானதாக ஏற்றுக்கொள்ள முடியுமா? அது அறுதியானது என்று ஏற்றுக்கொள்ளப்படும் பட்சத்தில் அக்கருத்து இரு முடிவுகளுக்கு இட்டுச் செல்லும்:

1) ரிக் வேத காலத்தில் நான்கு வருணங்கள் இருந்தன; சதபத பிராமண காலத்தில் அது மூன்றாயிற்று; அல்லது

2) சதபத பிராமணத்தில் அப்பாரம்பரியம் முழுமையாகப் பதிவு செய்யப்படவில்லை.

இந்த இரு முடிவுகளுமே அபத்தமானவை, நிராகரிக்கப்பட வேண்டியவை என்பது தெளிவு. முதலாவது முடிவு எடுத்த எடுப்பிலே அபத்தமானது. இரண்டாவது முடிவு ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது, ஏனெனில் இரண்டு பிராமணங்களும் வழங்கும் வருணங்களின் பரிணாம வளர்ச்சித் தத்துவம், முழுமைப் பெற்றதாகத் திகழும் புருஷ சூக்தத்தில் கூறப்படுவதிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாகும். மாக்ஸ் முல்லரின் கருத்தை அறுதியானது என்று ஒருவர் எடுத்துக்கொள்வாரேயனால், ஏற்படும் பலனின் அபத்தம் இன்றியமையாததாகும். அனைத்து சம்ஹிதைகளும் நடப்பிற்கு வரும் வரை பிராமணமும் இயற்றப்படவில்லை என்று அர்த்தப்படுத்தும் விதத்தில் இக்கருத்தை அறுதியானதாக எடுத்துக்கொள்ள முடியாது. மறுபுறத்தில், பேராசிரியர்கள் பேல்வால்கரும் ரானடேயும் சுட்டிக்காட்டியிருப்பது போல இப்பாடல்களில் பெரும்பாலானவை கலவையானவையாகவும் ஒன்றுக்கொன்று இசைவானவையாகவும் உள்ளன. ஆகவே வேதத்தின் ஒரு பகுதி மற்றொரு பகுதியைவிட முந்தியதாக இருக்கக்கூடும். பிராமணங்களின் ஒரு பகுதியானது வேதங்களின் சில பகுதிகளை விட முந்தியதாக இருக்கக்கூடும் என்பதும் சாத்தியமே. இக்கருத்து சரியானதாக இருக்குமானால், ஒரு காலத்தில் மூன்று வருணங்கள் மட்டுமே இருந்தன என்ற கருத்தைப் பதிவு செய்த சதபத பிராமணம் மற்றும் தைத்தீரிய பிராமணத்தின் சில பகுதிகள் ரிக் வேதத்தின் புருஷ சூக்தத்தை விடவும் முந்தியதாக இருக்கக்கூடும் என்று கருதுவதில் உள்ளார்ந்த சாத்தியக் கூறுகள் இல்லாமல் இல்லை.

      புருஷ சூக்தத்தை ஆய்வு செய்ததிலிருந்து நாம் பெறும் முடிவு என்ன? இதில் ஒரே ஒரு முடிவுக்குத்தான் வர முடியும். அதாவது சூக்தமானது பிற்காலத்தில் ரிக் வேதத்துடன் சேர்க்கப்பட்டதாகும் என்பதே அந்த முடிவு. ஆகவே ஆரிய சமுதாயத்தில் தொடக்கம் முதலே நான்கு வருணங்கள் இருந்தன என்ற வாதத்திற்கே இடமில்லை.

      மேலே கொடுக்கப்பட்டுள்ள காரணங்களுக்காக, இந்த இயலின் தொடக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது போன்று சூத்திரர்களின் மூலத்தைப் பற்றிய எனது ஆய்வுக் கட்டுரை எந்தப் பிரச்சினையையும் உருவாக்கவில்லை என்பதைக் காணமுடியும். அது ஒரு பிரச்சினையை உருவாக்குவதுபோல் தோன்றுமானால் அதற்குக் காரணம், தான் கூற விரும்புவதன் ஓர் அறுதியான, உண்மையான ஆவணமாக புருஷ சூக்தம் விளங்குகிறது என்ற ஊகமேயாகும். அந்த ஊகம் எந்த வகையிலும் ஆதாரமற்றது என்பது இப்போது காட்டப்பட்டுள்ளது. ஆகவே ஆரிய சமுதாயம் மூன்று வருணங்களை மட்டுமே கொண்டிருந்த ஒரு காலம் இருந்தது. சூத்திரர்கள் இரண்டாவது வருணத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தனர் அல்லது சத்திரிய வருணத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தனர் என்ற முடிவுக்கு வருவதில் எந்த சிரமமும் எனக்குத் தெரியவில்லை.

 (பாபாசாகேப் அம்பேத்கர் நூல் தொகுப்பு 13 - இயல் 8)