சமூகத்துக்கு வெளியே இந்து சமூக அமைப்பில் தீண்டாதோரின் இடம் என்ன? அவர்களின் இடம் பற்றி உண்மையான சித்திரம் ஒன்றைத் தருவதே இந்த இயல்களின் முக்கிய நோக்கம். ஆனால், இந்து சமூக அமைப்பில் தீண்டாதோர் எப்படி வாழ்கிறார்கள் அல்லது வாழச்செய்யப்பட்டுள்ளனர் என்பது பற்றி எதுவுமே அறியாத ஒருவருக்கு அதை உள்ளது உள்ளபடி உருவாக்கிக் காட்டுவதற்கு மிகச் சிறந்த முறையைத் தீர்மானிப்பது எளிதல்ல. இதற்கு ஒரு வழி, இந்து சமூக அமைப்பின் மாதிரி வரைபடம் ஒன்றை வரைந்து அதில் தீண்டாதோருக்குத் தரப்பட்டுள்ள இடத்தைக் காட்டுவதாகும். இதற்கு, இந்து கிராமம் ஒன்றுக்குச் செல்வது அவசியமாகும். நமது நோக்கத்துக்கு இதைவிடச் சிறந்த வழி வேறில்லை. இந்து கிராமம் இந்து சமூக அமைப்பின் செயல் முறை விளக்க வரைபடமாகும். அதில், இந்து சமூக அமைப்பு முழுவீச்சில் செயல்படுவதைக் காணலாம். சராசரி இந்து, இந்தியக் கிராமத்தைப் பற்றிப் பேசும்போதெல்லாம் பேரானந்தத்தில் திளைக்கிறார். உலகிலேயே வேறெங்கும் ஈடு, இணை காணமுடியாத இலட்சிய சமூக அமைப்பு அது என்று அவர் எண்ணுகிறார். சமூக அமைப்புத் தத்துவத்துக்கு இது ஒரு சிறப்பான பங்களிப்பு என்றும் இதைப்பற்றி இந்தியா பெருமைப்பட முடியும் என்றும் கூறப்படுகிறது.

ambedkar 267இந்தியக் கிராமம் இலட்சிய சமூக அமைப்பின் உருவம் என்பதில் இந்துக்கள் எவ்வளவு வெறித்தனமான நம்பிக்கை கொண்டுள்ளனர்

என்பதை, இந்திய அரசியல் நிர்ணய சபையில் இந்து உறுப்பினர்கள் கோபாவேசத்துடன் பேசிய பேச்சுக்களிலிருந்து காணலாம். சுயாட்சியுள்ள நிர்வாகப் பகுதிகளைக் கொண்ட அரசியல் சாசன கோபுரக் கட்டமைப்புக்கு, இந்தியக் கிராமத்தை அடித்தளமாகக் கொள்ளவேண்டும் என்றும், கிராமத்துக்கெனச் சொந்த சட்ட மன்றம், நிர்வாக அமைப்பு, நீதிமன்ற அமைப்பு ஆகியவை இருக்க வேண்டும் என்றும் அவர்கள் வாதிட்டார்கள்.

தீண்டாதோரைப் பொறுத்தமட்டில் இதைவிடப் பெரிய கேடு வேறெதுவும் இல்லை. கடவுள் செயலாக, அரசியல் நிர்ணய சபை இதை ஏற்கவில்லை. என்றாலும், இந்தியக் கிராமம் ஓர் இலட்சிய சமூக அமைப்பு என்ற நம்பிக்கை இந்துக்களிடம் இன்னமும் வலுவாக உள்ளது. இந்துக்களின் இந்த நம்பிக்கை பரம்பரையாக உள்ள நம்பிக்கையோ, பண்டைக் காலத்திலிருந்தே வருவதோ அல்ல. கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆட்சிப் பணியில் இருந்த சர் சார்ல்ஸ் மெட்காஃப் என்பவரிடமிருந்து இரவல் பெற்ற நம்பிக்கை இது.

வருவாய் அதிகாரியாக இருந்த மெட்காஃப், தம்முடைய வருவாய்த் துறை அறிக்கையொன்றில் இந்தியக் கிராமத்தைப் பற்றிப் பின்வருமாறு வர்ணித்தார்:

“கிராம சமுதாயங்கள் சிறிய குடியரசுகளாக உள்ளன. தங்களுக்குத் தேவையான எல்லாவற்றையும் அவை தங்களிடமே கொண்டுள்ளன அநேகமாக வெளி உறவுகள் எவையும் இல்லாமல் சுதந்திரமாக உள்ளன. வேறெதுவும் நிலைத்து நிற்காத போதும் இவை மட்டும் நிலைத்து நிற்பதாகத் தோன்றுகிறது. அரசு வம்சங்கள் அடுத்தடுத்து வருகின்றன, வீழ்கின்றன, புரட்சிக்குப் பின் புரட்சியாக அடுத்தடுத்து நடக்கின்றன; இந்துக்கள், பட்டானியர், முகலாயர், மராட்டியர், சீக்கியர், ஆங்கிலேயர், என்று ஆட்சியாளர்கள் மாறுகிறார்கள்; ஆனால், கிராம சமுதாயங்கள் அப்படியே இருக்கின்றன. படையெடுப்புகள் ஏற்படும் போது அவை ஆயுதங்களைத் தயார் செய்து கொண்டு கோட்டைகளை அமைத்துக் கொள்கின்றன. நாட்டின் வழியே பகைப்படை செல்லும் போது கிராம சமுதாயங்கள் தங்களுடைய கால்நடைகளைக் கோட்டைச் சுவருக்குள்ளே சேர்த்து வைத்துக் கொண்டு படையைப் போகவிடுகின்றன.

கொள்ளையும் அழிவுச் செயல்களும் தங்கள் மீதே திரும்பினால், பகைப்படை தங்களால் எதிர்த்து நிற்கமுடியாத அளவுக்குப் பெரிதாக இருந்தால், அவை தூரத்தில் உள்ள நேசமான கிராமங்களுக்கு ஓடிப்போகின்றன. பகைப்புயல் கடந்து சென்றபின் அவை திரும்பி வந்து, தங்கள் தொழில்களை முன்போல மீண்டும் பேடன் பலம் தம்முடைய “பிரிட்டிஷ் இந்தியாவில் நிலமுறை, தொகுதி - 1” என்ற புத்தகத்தில் இதை மேற்கோள் காட்டுகிறார்.

நடத்தத் தொடங்குகின்றன. நாட்டில் தொடர்ந்து பல ஆண்டுகளுக்குக் கொள்ளையும் கொலையும் நடந்து கொண்டு கிராமங்களில் வசிக்கமுடியாமல் போனால், சிதறிக்கிடக்கும் சமுதாயமக்கள், அமைதியாகத் திரும்பிச் செல்லச் சமயம் கிடைக்கும் போது மீண்டும் சென்று விடுகிறார்கள். ஒரு தலைமுறையே முடிந்து போகலாம் என்றாலும் அடுத்த தலைமுறையினர் திரும்பிச் செல்கிறார்கள். தந்தைகளின் இடங்களுக்கு மகன்கள் திரும்புகிறார்கள். கிராமம் அதே இடத்தில் அமையும்; அவரவர் வீடுகளுக்கும் அதே இடம்; வெளியே விரட்டியடிக்கப்பட்டவர்களின் சந்ததியினர் கிராமத்துக்குத் திரும்பி வந்து முன்னோரின் அதே நிலங்களை மீண்டும் தாங்கள் எடுத்துக்கொள்கிறார்கள்.

அவர்களை வெளியே விரட்டுவதும் எளிதான செயலல்ல; ஏனென்றால், பல சமயங்களில் அவர்கள் கலவரங்களிலும் குழப்பங்களிலும் தங்கள் இடங்களை விடாமல் நிலைகொண்டு கொள்ளையையும் கொடுங்கோலையும் எதிர்த்து நிற்கப் போதிய பலமும் பெற்றுவிடுவார்கள். ஒவ்வொன்றும் ஒரு சிறியநாடு போன்ற இந்தக் கிராம சமுதாயங்கள் சேர்ந்த அமைப்புதான் வேறெதையும் விட இந்திய மக்கள் அழிந்துவிடாமல் பாதுகாத்துள்ளது என்று நான் கருதுகிறேன்; அவர்களிடம் உயர்ந்த அளவில் காணப்படும் மகிழ்ச்சிக்கும், அவர்கள் பெருமளவு சுதந்திரத்தை அனுபவிப்பதற்கும் இதுவே காரணமாகும்.”

ஆளும் வர்க்கத்தின் உயர் அதிகாரி ஒருவர் இந்தியக் கிராமத்தைப் பற்றி எழுதிய இந்த வர்ணனையைப் படித்துவிட்டு, இந்துக்கள் மகிழ்ந்துபோய் இதைத் தங்களுக்கு அளிக்கப்பட்ட பாராட்டாகக் கொண்டு அவரது கருத்தை ஏற்றுக் கொண்டார்கள். இந்துக்கள் இந்தக் கருத்தை ஏற்றுக் கொண்டதில் அவர்களது அறிவுத் திறனோ புரிந்துகொள்ளும் சக்தியோ காணப்படவில்லை. அடக்கியாளப்படும் எல்லா மக்களுக்கும் பொதுவாக உள்ள பலவீனம் தான் காணப்படுகிறது. வெளிநாட்டினர் பலர் இந்தியக் கிராமத்தைப் பற்றிய இலட்சியரீதியான இந்தக் கருத்தை ஏற்றுக் கொள்கிறார்கள். ஆதலால் இந்தியக் கிராமங்களில் சமூகத்தின் நிலை பற்றி உண்மையான சித்திரத்தைத் தருவது நல்லது.

இந்தியக் கிராமம் ஒரே ஒரு சமூக அலகாக இல்லை. அது பல சாதிகளை கொண்டது. ஆயினும் நமது நோக்கத்திற்குப் பின்வரும் விவரங்கள் போதுமானவை-

இந்தியக் கிராமத்தில் தீண்டத்தக்கவர்களும் தீண்டாதோரும் என்ன நிபந்தனைகளில் இணைந்து வாழ்கிறார்கள்? ஒவ்வொரு கிராமத்திலும் தீண்டத்தக்கவர்கள் சில விதிகள் வைத்திருக்கிறார்கள்; இவற்றைத் தீண்டாதவர்கள் பின்பற்றி நடக்கவேண்டும். என்ன செயல்களைச் செய்தால் குற்றம், என்ன செயல்களைச் செய்யத்தவறினால் குற்றம் என்று தீண்டத்தக்கவர்கள் கருதுவார்கள் என்பதை இந்த விதிகள் கூறுகின்றன. இத்தகைய குற்றங்களின் பட்டியல் கீழே தரப்படுகிறது:

 (அ) இழிவான பெயரைக் கொண்டிருப்பது,

 (ஆ) சுத்தமான உடை அணியாதிருப்பது,

 (இ) வீட்டுக்கு ஓட்டுக்கூரை இல்லாமலிருப்பது,

 (ஈ) வெள்ளி, தங்க நகைகள் அணியாமலிருப்பது.

இந்த விதிகளில் எதையும் மீறுவது குற்றமாகும்.

 அடுத்தபடியாகத், தீண்டாதவர்கள், தீண்டத்தக்கவர்களுக்காகச் செய்யவேண்டிய கடமைகள் இந்த விதிகளில் கூறப்படுகின்றன. இதன் கீழ் பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்:

இந்தக் கடமைகளை யெல்லாம் ஊதியம் பெறாமல் செய்ய வேண்டும்.

இந்தக் கடமைகளின் உட்பொருளை உணர்வதற்கு, இவை ஏன் விதிக்கப்பட்டன என்பதை அறிவது அவசியம். கிராமத்தில் உள்ள ஒவ்வொரு இந்துவும் தீண்டாதவர்களைவிடத் தாம் உயர்ந்தவர் என்று கருதுகிறார். தாம் எஜமானர் என்பதால் தம்முடைய கௌரவத்தை நிலைநிறுத்த வேண்டும் என்று நினைக்கிறார். தம்முடைய கட்டளைப்படி ஆடுகின்ற ஒரு பரிவாரம் இல்லாவிட்டால் இந்தக் கௌரவத்தை அவர் காப்பாற்ற முடியாது. இதற்குக் கிடைப்பவர்கள் தீண்டாதவர்கள்தான்; அவர்களைப் பயன்படுத்துவதற்கு அவர் கால்காசு கூடச் செலவிடவேண்டியதில்லை. தீண்டாதவர்கள் ஒன்றும் செய்யமுடியாத உதவியற்ற நிலையில் இருப்பதால், இந்த வேலைகளைச் செய்ய மறுக்க முடியாது. தங்கள் கௌரவத்தை நிலைநிறுத்த இவர்களின் சேவை இன்றியமையாததாய் இருப்பதால் கிராமத்து இந்துக்கள் கொஞ்சமும் தயக்கமின்றி இவர்களைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

இந்தக் குற்றங்களில் எதுவும் பிரிட்டிஷ் அரசினால் இயற்றப்பட்ட தண்டனைச் சட்டத்தில் இடம்பெறவில்லை. என்றாலும், தீண்டாதவர்களைப் பொறுத்தமட்டில் இவை உண்மையில் குற்றங்களாக உள்ளன. இந்த விதிகளில் எந்த ஒன்றை மீறினாலும் தீண்டாதவர்களுக்கு நிச்சயமாகத் தண்டனை உண்டு. இவை எப்படிச் செயல்படுத்தப்படுகின்றன என்பது இயல் 5 மற்றும் 6-இல் தெளிவாக்கப்படுகிறது.

மற்றொரு முக்கிய அம்சம், இந்தக் குற்றங்களுக்கான தண்டனை எப்போதுமே பொதுத் தண்டனையாக விதிக்கப்படுவதாகும். குற்றத்தைச் செய்தவர் ஒரு தனி நபராக இருந்தாலும், தீண்டாதோர் சமுதாயம் முழுவதுமே தண்டனைக்குரியதாகும்.

தீண்டாதவர்கள் எப்படி வாழ்கிறார்கள், தங்கள் வாழ்க்கைக்கு எப்படிப் பொருள் தேடுகிறார்கள்? தீண்டாதவர்கள் பொருள் தேடுவதற்கு என்ன வழிகள் திறந்திருக்கின்றன என்பதை அறிந்துகொள்ளாமல், இந்து சமூகத்தில் அவர்களின் இடம் பற்றித் தெளிவாகத் தெரிந்து கொள்ளமுடியாது.

ஒரு விவசாய நாட்டில், விவசாயம் வாழ்க்கைக்கு முக்கிய ஆதாரமாக இருக்கமுடியும். ஆனால் பொருள் ஈட்டுவதற்கான இந்த வழி பொதுவாகத் தீண்டாதவர்களுக்குத் திறந்திருப்பதில்லை. இதற்குப் பல காரணங்கள் உள்ளன. முதலாவதாக, நிலம் வாங்குவது அவர்களின் சக்திக்கு அப்பாற்பட்டது. இரண்டாவதாகத், தீண்டாதவரிடம் நிலம் வாங்குவதற்குப் பணம் இருந்தாலும், வாங்குவதற்கான வாய்ப்பு அவருக்கு இருப்பதில்லை. பல பகுதிகளில், தீண்டாதவர் நிலம் வாங்க முன்வருவதையும், அதன் மூலம் தீண்டத்தக்கவர்களுடன் சமம் ஆக முயலுவதையும் இந்துக்கள் எதிர்ப்பார்கள். தீண்டாதவரின் இந்த முயற்சியை இந்துக்கள் ஏற்கமாட்டார்கள் என்பது மட்டுமின்றி, அவருக்குத் தண்டனையும் கிடைக்கக்கூடும். சில பகுதிகளில் அவர்கள் நிலம் வாங்க முடியாமல் சட்டமே தடையாக உள்ளது. உதாரணமாக, பஞ்சாபில் நில பராதீனச் சட்டம் என்ற சட்டம் உள்ளது. இந்தச் சட்டம் நிலம் வாங்க அனுமதியுள்ள சமுதாயங்களைப் பட்டியலிட்டுக் கூறுகிறது.

இந்தப் பட்டியலில் தீண்டாதவர்கள் விலக்கப்பட்டிருக்கிறார்கள். இதன் விளைவாகப் பெரும்பாலான பகுதிகளில் தீண்டாதவர்கள் நிலமற்ற உழைப்பாளிகளாகவே இருக்கவேண்டிய கட்டாயம் உள்ளது உழைப்பாளிகள் என்ற முறையில் அவர்கள் நியாயமான ஊதியங்களையும் கேட்கமுடியாது. இந்து விவசாயிகள் தங்கள் விருப்பம் போல் கொடுக்கும் ஊதியத்தைத்தான் அவர்கள் பெறமுடியும். இந்து விவசாயிகள் கூட்டுச் சேர்ந்துகொண்டு மிகக் குறைந்த அளவில் ஊதியம் கொடுக்கமுடியும். இவ்வாறு செய்வது அவர்களின் நலனுக்கு ஏற்றதாயிருக்கும். ஆனால் தீண்டாதவர்களுக்கு இதை எதிர்த்து நிற்கும் சக்தி இல்லை. அவர்கள் ஏதேனும் ஊதியம் பெற்றாகவேண்டும்; இல்லையென்றால் பட்டினிதான். பேரம் பேசும் சக்தியும் அவர்களுக்கு இல்லை. நிர்ணயிக்கப்படும் ஊதியத்தை அவர்கள் ஏற்றுக் கொண்டேயாக வேண்டும்; இல்லையென்றால் அவர்கள் வன்முறைக்கு உள்ளாவார்கள்.

தீண்டாதவர்களுக்குக் கொடுக்கப்படும் ஊதியம் பணமாக அல்லது தானியமாகக் கொடுக்கப்படுகிறது. உத்தரப்பிரதேசத்தின் சில பகுதிகளில் தீண்டாதோருக்குக் கொடுக்கப்படும் தானியம் “கோபரஹா” எனப்படுகிறது. “கோபரஹா” என்றால் ஒரு விலங்கின் சாணத்தில் உள்ள தானியம் என்று பொருள். மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் தானியம் விளைந்து, முற்றிப் பயிர் அறுவடையாகி, உலர்த்தப்பட்டுக் களத்து மேட்டில் பரப்பப்படுகிறது. அதன்மேல் மாடுகள் சுற்றிச்சுற்றி நடக்கவிடப்படுகின்றன. இந்த மாடுகளின் குளம்புகளால் மிதிக்கப்பட்டு தானியம் வைக்கோலிலிருந்து பிரிக்கப்படுகிறது. இவ்வாறு பிணையலடித்துச் சுற்றிவரும் போது, மாடுகள் வைக்கோலையும் அதனுடன் சேர்நதுள்ள தானியத்தையும் தின்றுவிடுகின்றன. இவற்றை மாடுகள் அளவுக்கதிமாகத் தின்பதால் சரியாகச் சீரணமாகாமல் மறுநாள் சாணத்துடன் தானியமும் சேர்ந்து வெளியாகிறது. இந்தச் சாணத்தை வடிகட்டி அதிலிருந்து தானியம் பிரித்தெடுக்கப்படுகிறது. இந்தத் தானியம் தீண்டாதவர்களான தொழிலாளர்களுக்கு ஊதியமாகக் கொடுக்கப்படுகிறது. இதைத்தான் அவர்கள் மாவாக்கி ரொட்டி செய்து உண்கிறார்கள்.

விவசாயப் பருவம் முடிந்தபின் தீண்டாதவர்களுக்கு வேலை கிடையாது; அதனால் வருமானமும் கிடையாது. அந்தக் காலங்களில் அவர்கள் காடுகளில் புல்வெட்டியும் விறகு வெட்டியும் அவற்றைப் பக்கத்து நகர்களில் கொண்டு சென்று விற்கிறார்கள். அரசு காட்டிலிருந்து இவற்றை வெட்டிக் கொண்டு செல்வதற்கு வனக்காவலரின் தயவு வேண்டும். அவருக்கு லஞ்சம் கொடுத்தால் தான் கொண்டு செல்ல முடியும். நகருக்குக் கொண்டு சென்றபின், வாங்குவோர் கேட்கும் விலைக்குத்தான் விற்க முடியும். வாங்குவோர் பெரும்பாலும் இந்துக்கள்தான். அவர்கள் சதி செய்து விலைகளைக் குறைத்தே வைப்பார்கள். தீண்டாதவர்கள் தங்கள் பொருள்களை விற்காமல் நிறுத்திவைக்க முடியாதாகையால், கிடைக்கும் விலைக்கு விற்றுவிடவேண்டியுள்ளது. பல சமயங்களில் அவர்கள் இவற்றை விற்பதற்குத் தங்கள் கிராமத்திலிருந்து 10 மைல் தூரத்தில் உள்ள நகருக்கு நடந்துபோய் வரவேண்டியுள்ளது.

இவர்கள் பொருள் ஈட்டுவதற்கு எந்தவொரு வியாபாரமும் செய்ய முடியாது. அதற்கு வேண்டிய முதல் இவர்களிடம் இல்லை. அப்படியே இருந்தாலும், இவர்களிடமிருந்து யாரும் வாங்கமாட்டார்கள்.

இவர்களுடைய வருமான ஆதாரங்களெல்லாம் நிச்சயமில்லாதவை; சிறிது காலம் மட்டும் கிடைத்து மறைந்துவிடுபவை. நாட்டின் சில பகுதிகளில் இவர்களுக்கு நிச்சயமான ஒரேயொரு வாழ்க்கை வழி இருப்பதைத்தான் நான் அறிவேன். கிராமத்தின் இந்து விவசாயிகளின் வீடுகளில் பிச்சை கேட்கும் உரிமைதான் அந்த வழி. ஒவ்வொரு கிராமத்துக்கும் ஒரு நிர்வாக யந்திரம் உள்ளது. இந்த நிர்வாகத்தில், தீண்டாதவர்கள் பரம்பரையாகத் தாழ்ந்த வேலைகளில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். இதற்காக இவர்களுக்கு அளிக்கப்படும் ஊதியத்தின் ஒரு பகுதியாகத் தீண்டாதவர்கள் அனைவருக்குமாகச் சேர்த்து ஓரளவு நிலம் பண்டைக் காலத்திலிருந்தே ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிலத்தின் அளவு ஒரு போதும் அதிகரிக்கப்படாது. இந்த நிலமும் மிகப்பல துண்டுகளாகச் சிதறி அமைந்திருப்பதால், தீண்டாதவர்கள் அதைப் பயிர் செய்யாமல் விட்டுவிடுகிறார்கள். இதனுடன் சேர்ந்ததாகப் பிச்சை எடுக்கும் உரிமையும் கொடுக்கப்பட்டுள்ளது.

இது ஓர் அதிர்ச்சி தரும் உண்மை என்றாலும், இது தீண்டாதவர்களின் வழக்க முறையான உரிமையாகிவிட்டது. தீண்டாதவர் ஒருவர் அரசு வேலையில் அமர்த்தப்பட்டால் அவருக்கு ஊதியம் நிர்ணயிக்கும் போது பிச்சையெடுப்பதன் மூலம் அவர் பெறக்கூடிய உணவின் மதிப்பையும் அரசு கணக்கிலெடுத்துக் கொள்கிறது.

தீண்டத்தக்கவர்களிடமிருந்து உணவைப் பிச்சை எடுப்பதற்கான உரிமைதான் இப்போது இந்தியாவின் 6 கோடி தீண்டாத மக்களின் முதன்மையான வாழ்க்கை ஆதாராமாகும். கிராமத்தில் வழக்கமான உணவு நேரத்திற்குப் பின் போய்ப்பார்த்தால் தீண்டாதவர்கள், கூட்டம் கூட்டமாகச் சென்று இதைச் சொல்லிக் கொண்டு பிச்சை கேட்பதைக் காணலாம்.

தீண்டாதவர்களுக்கு வாழ்க்கை ஆதாரமாகக் கொடுக்கப்பட்ட இந்தப் பிச்சையெடுக்கும் உரிமை, ஒரு முறைமையாகவே ஆக்கப்பட்டுவிட்டது. மத்தியகால ஐரோப்பாவில் குறுநிலப் பகுதிகளின் பிரபுக்களின் கீழ், பரம்பரை நிலத் தொண்டூழியக்காரர்கள் இணைக்கப்பட்டிருந்தது போலத் தீண்டாதவர் குடும்பங்கள் கிராமத்திலுள்ள தீண்டத்தக்கவர்களின் பல்வேறு குடும்பங்களுடன் இணைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு இணைக்கப்பட்ட தீண்டாதார் குடும்பங்கள், அந்தந்த தீண்டத்தக்க குடும்பங்களின் கட்டளைப்படி நடக்கக் கடமைப்பட்டுள்ளன. இந்தத் தொடர்பு தனிப்பட்ட மனிதர்களுக்கிடையிலான தொடர்பாக மாற்றப்பட்டுவிட்டது. தீண்டத்தக்கவர் ஒருவர் தீண்டாதவர் ஒருவரை ‘என்னுடைய ஆள்’ என்று – அவர் தமது அடிமை என்பது போலக் குறிப்பிட்டுப் பேசுவதைக் கேட்கிறோம். இந்தத் தொடர்பு, தீண்டாதவர்கள் தீண்டத்தக்க குடும்பங்களிடம் பிச்சை கேட்பதை ஒரு முறைமையாக உருவாக்க உதவியுள்ளது.

இதுதான், இந்துக்கள் மிகப் பெருமையாகப் பேசுகின்ற கிராமக் குடியரசு. இந்தக் குடியரசில் தீண்டாதவர்களின் நிலைமை என்ன? அவர்களின் இடம் கடைசியானது மட்டுமல்ல, அதன் முக்கியத்துவமும் குறைந்தது. அவர்மீது தாழ்ந்தவர் என்ற முத்திரை குத்தப்பட்டு, ஒரு பெரும்பான்மையினருக்கு எத்தனை வழிகள் கிடைக்கின்றனவோ அத்தனை வழிகளிலும், அவர் அந்தத் தாழ்ந்த நிலையில் அமுக்கிவைக்கப்படுகிறார். இந்தத் தாழ்ந்த நிலையில் வாழ்வது ஒரு தனிப்பட்டவருக்கு மட்டும் அன்றி, ஒரு வகுப்பு முழுவதற்கும் விதித்த விதியாக உள்ளது. வயது, தகுதி என்ற எதையுமே கருதாமல் தீண்டாதவர்கள் எல்லோருமே தீண்டத்தக்கவர்களைவிடத் தாழ்ந்தவர்களாக வைக்கப்பட்டுள்ளனர். தீண்டத்தக்க இளைஞர் ஒருவர் தீண்டாதவரான முதியவரைவிட உயர்ந்தவராகக் கருதப்படுகிறார்; அதேபோலக் கல்விகற்ற தீண்டாதவர் ஒருவர் எழுத்து வாசனையே இல்லாத தீண்டத்தக்கவரை விடத் தாழ்ந்தவராகக் கருதப்படுகிறார்.

இப்போதுள்ள நிறுவப்பட்ட அமைப்பு முறை தீண்டத்தக்கவர்களால் செய்யப்பட்ட சட்டமாகும். தீண்டாதவர் அதை மதித்துக், கீழ்ப்படிந்து நடப்பதைத் தவிர அதில் வேறெந்தப் பங்கும் அவர்களுக்கு இல்லை.

தீண்டத்தக்கவர்களுக்கெதிராகத் தீண்டாதவர்களுக்கு எந்த உரிமையும் கிடையாது. அவர்களுக்குச் சமஉரிமை என்பது கிடையாது. தீண்டாதவர்களுக்கு உரிமையானதை அனுமதிக்க வழிசெய்யும் நீதி எதுவும் கிடையாது. தீண்டத்தக்கவர்கள் என்ன கொடுக்க மனம். இசைகிறார்களோ அதைத் தவிரத், தீண்டாதவர்களுக்கு உரிமையானது என்று எதுவும் இல்லை. தீண்டாதவர்கள் உரிமைகளை வலியுறுத்தக்கூடாது. தங்களுக்கு இரக்கமும் சலுகையும் காட்டவேண்டுமென்று அவர்கள் கும்பிட்டுக் கேட்டுக்கொள்ள வேண்டும்; என்ன கொடுக்கப்படுகிறதோ அதைப் பெற்றுத் திருப்தியடைய வேண்டும்.

இப்போதுள்ள இந்த அமைப்பு முறையில் அந்தஸ்தும் பணிகளும் பரம்பரை வழியாக வருகின்றன. தீண்டத்தக்கவர் என்றால் எப்போதுமே தீண்டத்தக்கவர்; தீண்டாதவர் என்றால் எப்போதுமே தீண்டாதவர்தான். பிராமணர் என்றுமே பிராமணர்தான், தோட்டி என்றுமே தோட்டிதான். இந்த அமைப்பில் உயர்ந்த பிறப்பைப் பெற்றவர்கள் உயர்ந்தவர்களாகவே உள்ளனர். தாழ்ந்த பிறப்பைப் பெற்றவர்கள் தாழ்ந்த நிலையிலேயே உள்ளனர். வேறு விதமாகச் சொன்னால், இந்த அமைப்பு முறை மாற்றமுடியாத கர்ம விதியை அல்லது நிரந்தரமாக நிர்ணயிக்கப்பட்ட தலைவிதியை அடிப்படையாகக் கொண்டுள்ளது. இந்தத் தலைவிதிக்கும் இதற்கு உட்பட்ட தனிநபரின் தகுதிகளுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது.

தீண்டாதவர் ஒருவர் அறிவிலும் ஒழுக்கத்திலும் எவ்வளவு உயர்ந்தவராக இருந்தாலும், அறிவிலும் ஒழுக்கத்திலும் தாழ்ந்தவரான தீண்டத்தக்கவர் ஒருவரைவிட, அந்தஸ்தில் குறைந்தவராகவே வைக்கப்படுகிறார். எவ்வளவுதான் ஏழையாக இருந்தாலும் தீண்டத்தக்கவர் ஒருவரின் அந்தஸ்து, எவ்வளவுதான் செல்வராக இருந்தாலும் தீண்டாதவர் ஒருவரின் அந்தஸ்தைவிட உயர்ந்ததே ஆகும்.

இதுதான், இந்தியக் கிராமத்தின் உட்புற வாழ்க்கையின் சித்திரம். இந்தக் குடியரசில் ஜனநாயகத்துக்கு இடமேயில்லை. இதில், சமத்துவத்துக்கு இடமே கிடையாது. இதில், சுதந்திரத்துக்கோ சகோதரத்துவத்துக்கோ இடம் இல்லவே இல்லை. இந்தியக் கிராமம், குடியரசின் தத்துவங்கள் எல்லாவற்றையும் மறுப்பதாக உள்ளது. இது ஒரு குடியரசு என்றால், தீண்டத்தக்கவர்களால் தீண்டத்தக்கவர்களுக்காக நடத்தப்படும் தீண்டத்தக்கவர்களின் குடியரசாகும்.

இது தீண்டாதவர்க்ளைச் சுரண்டி வாழ்வதற்காக இந்துக்களால் உருவாக்கப்பட்ட ஒரு வகைக் காலனி ஆதிக்கமாகும். தீண்டாதவர்களுக்கு உரிமைகள் எதுவும் இல்லை. அவர்கள் வாழ்வதெல்லாம் காத்திருக்கவும், பணி செய்யவும் பணிந்து நடக்கவுமே. செய்வதற்கு அல்லது செத்து மடிவதற்கே அவர்கள் உள்ளனர். அவர்கள் கிராமக் குடியரசுக்கு வெளியே உள்ளவர்கள் என்பதால், அவர்களுக்கு உரிமைகள் இல்லை. குடியரசு என்று கூறப்படுகின்ற அதற்கு வெளியே உள்ளதால் அவர்கள் இந்து சமூகத்துக்கு வெளியே உள்ளனர். இது ஒரு விஷச் சக்கரம். ஆனால் இது மறுக்கமுடியாத உண்மை.

(டாக்டர் அம்பேத்கர் பேச்சும் எழுத்தும் - தொகுதி 9, இயல் 4)