கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

 

நீண்ட நெடுங்காலமாகப் பெண்ணைவிட ஆணின் கையே மேலோங்கி இருந்து வருகிறது. ஒவ்வொரு குழுவிலும் பெண்ணைவிட ஆணே ஆதிக்கமுள்ளவனாக இருக்கிறான். வழிவழியாகப் பெண்ணைவிட ஆணுக்கு அளிக்கப்பட்டு வருகிற இந்த உயர்வினால் பெண்களுக்கு சமூகப் பங்களிப்பு மறுக்கப்பட்டு, ஆணின் விருப்பங்களே ஆலோசனைக்கு உரியதாக இருந்து வருகிறது. சமய, சமுதாய, பொருளாதாரம், அரசியல் தொடர்பான அனைத்து வகையான அநீதியான தடை ஆணைகளை ஆக்கித் தருபவன் என்ற வகையில் ஆண் இந்த ஆணைகளுக்கு அப்பாற்பட்டவனாக இருக்கிறான். இந்த ஆணாதிக்க சமூக நிலைமையில், ஒரு சாதியில் உள்ள ஒரு பெண்ணை நடத்தும் அதே முறையில் ஆணை நீங்கள் நடத்த முடியாது.

budha
ஒரு காலத்தில் மனிதர்கள் கும்பலாக, குழுவாக, குலமாக வாழ்ந்த காலத்தில் வர்க்கப் போராட்டங்களில்லாத பேரின்ப சாம்ராச்சியத்தின் முன்மாதிரிகளாகவே பெண்களும் ஆண்களும் இருந்தனர். அக்காலத்தில் ஒட்டுமொத்த உழைப்பு, ஒட்டுமொத்தப் பங்கீடு, ஒட்டுமொத்த மகிழ்ச்சி என்பது, தாய் தலைமையின் ஆளுமைக்குள் அடக்கம் பெற்றுத் திளைத்தது. அப்போது தனிச் சொத்துரிமை என்பது இல்லை. தனி உரிமை என்பதும் இல்லை.

மானுடத்தில் இச்சுவடுகள் பதிந்து யுகங்களைத் தாண்டி வரும் வேளையில், இந்த மனோரம்யமான பாதையில் தனியுடைமை முட்கள் முளைத்தன. அது, "சொத்தே இனி மனிதர்களை ஆளும்' என்று மானுடத்தில் பிரகடனப்படுத்தியது. தாய் உரிமையின் நிலையை ஆணாதிக்க தந்தை உரிமை வெற்றி கொண்ட பிறகே, கும்பல்கள் - குழுக்கள் - குலங்கள் சிதறடிக்கப்பட்டு, குடும்பமாகச் சிறுத்துப் போன பிறகே தனிச் சொத்துரிமைக்குடி நாட்டப்பட்டது. வழி வழிச் சொத்துமையை நிலைநாட்ட ஆணுக்கு வாரிசைப் பெற்றுத்தரும் எந்திரமாக ஆக்கப்பட்ட பெண், ஆணால் ஆளத்தக்க ஒரு கருவியாகவும் ஆக்கப்பட்டாள்.

ஆண் "மகா புருசர்கள்' பெண்கள் மீதான அடக்குமுறைக்குத் "தெய்வீக உரிமை' கொண்டாடினார்கள். எல்லா கடவுளர்களும், கடவுளர்களின் கதைகளும் கட்டளைகளும் ஆண்களுக்கே துணையாயின. பெண்களுக்கு வரலாறு இல்லை என்பதை ஒவ்வோர் ஆணின் தத்துவம் பகிரங்கமாகவே நடைமுறைக்கு வந்தது.
ஆண்களுக்குள் எவ்வித முரண்பாடுகள் இருந்தாலும் எஜமான ஆண், அடிமை ஆண் என அவர்கள் பிரிந்து நின்றாலும், இந்தப் பெண் அடிமைகளை யார் ஆளுவது என்ற அதிகாரப் போட்டியில் ஆண்கள் அனைவரும் ஒருமித்து ஓரணியிலேயே நின்றனர்.

பெண்ணை ஆணுக்குள் அடக்கிப் பார்த்த சிந்தனை செயலே தந்தை, தமையன், ஆசிரியன், தலைவன் போன்றோர் வழிபாட்டுக்குரியவர்கள் என்ற நிலையை இயல்பாக ஏற்படுத்தியது. மானுடம் முதலில் பிளவுண்டு போனது, ஆண் எஜமானன்; பெண் அடிமை என்ற முறைமையில்தான். மானுட உலகில் ஏனைய ஆதிக்கச் சமூக அமைப்பு போலவே, இந்தியத் துணைக்கண்ட பார்ப்பனியச் சமூக அமைப்பிலும் பெண்கள் ஆண்களுக்கு அடிமைப்படுத்தப்பட்டனர். சுதந்திரமான எண்ணங்களோ, அறிவுஜீவித்தனமோ, ஆக்கப்பூர்வமான மனித வாழ்க்கையோ இவை எதுவுமே பெண்ணுக்கு இல்லை என்பதே பார்ப்பனியச் சமூக அமைப்பின் முடிந்த முடிவாகும்.

"பெண் அதீதப் பாலியல் உணர்ச்சி உடையவள். அவளுடைய இயற்கையே அதுதான்; அது எப்போதும் மீறவே பார்க்கும்; அதனால் அவளை எப்போதும் ஓய்வு ஒழிவின்றி வீட்டு வேலைகளில் போட்டு நசுக்க வேண்டும்' என்ற ஆணாதிக்கப் பண்பாட்டு சனாதனம், பார்ப்பனியத்தின் கருத்தியல் கேடயமான மநு தர்மத்தினால் செயல்பாட்டிற்கு வந்தது. ஆணாதிக்கப் பண்பாட்டில் பெண், ஆணின் உடைமை ஆனாள். உடைமையை மறு உற்பத்தி செய்பவள்; உடைமைக்கு உரியவர்களை பெற்றுத் தருகிறவள் எனச் செயற்கையான பொறுப்புகளில் திணிக்கப்பட்டாள்.

மனிதம் இயற்கையின் உச்சபட்ச விரிவு. அதில் பெண்ணோ, ஆணோ தங்களுக்குள் அடிமையுறாமலும், எவ்விதத்திலும் அடிமைப்படுத்தப்படாமலும் வாழ்வதே சிறந்தது. இவற்றை உணர்ந்ததினால்தான் வரலாற்றுக் காலந்தொட்டு, அவரவர் வாழ்ந்த காலகட்டங்களில் நிலவிய அடக்குமுறைகளை எதிர்த்துச் செங்களமாடி, மாந்தக் குல வரலாற்றில் பேசப்படும் கருப்பொருள் ஆனவர்களே மாமனிதர்கள். இந்த மாமனிதர் வரிசையில் முதல் மனிதரானவர் புத்தர்.

பார்ப்பனியச் சமூக நிகழ்வின் மிக மிக வெறுப்பூட்டும் உண்மை என்னவெனில் தத்துவம், அரசியல், சமூகம், பொருளாதாரம் எல்லாமே ஆண்களின் தனிப்பட்ட உரிமை என்பதுதான். பார்ப்பனியமே ஆணாதிக்க சுயமோகிகளின் கற்பிதம்தான். புத்தர், தம் சிந்தனையிலும் செயற்பாட்டிலும் ஆண், பெண்ணையும்; பெண், ஆணையும் அரவணைக்கும் திறனுக்கே தன்மை அளித்தார். ஆணாதிக்க ஆழங்காணலின் மூச்சு சுவாசமாக, பெண் மொழியை யோசித்து யோசித்துப் புதியதாக தேடியடைகிற காய ஓட்டத்திற்கு முன் நகர்ந்தார். பெண்கள் தங்களை ஆண்களின் அடிமைகளாகவே பாவித்து வந்த சூழலமைவில் பெண்கள்தான் மானுடத்தின் மூலப்பிரதி என்று பிரகடனம் செய்தார். புத்தருக்கு முன் அறிவு, ஒழுக்கம், நீதிமுறைமை எல்லாமே ஆண் நோக்குடைய அடர்த்தியைக் கொண்டிருந்தது. மறுபாதி மனித இனத்தை சமவாய்ப்புடன் இணைத்துக் கொள்வதற்கான தேடல், புத்தரால்தான் தொடங்கி வைக்கப்பட்டது.

புத்தர், பார்ப்பனிய ஆணாதிக்க முறைமையின் பின்னால் ஒளிந்துள்ள சாதுரியங்களைக் கண்டறிந்து, கவனம் கொண்டவர். பெண்கள் மீதான நியாயம் என்று படும் தளத்துக்கான பரிமாணங்களுக்குள் சென்றவர். ஆண்களிடம் மாட்டிக் கொண்டு பிம்பச் சிதைவுகளாகிப் போன பெண்களை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தவர். பெண்களின் நியாய ஆவேசங்களை அப்படியே அங்கீகரித்தவர். இழுபறியாகிப் போன பெண் இருப்பு பற்றிய முறைகேடான கற்பிதங்களைப் போட்டுடைத்தவர். பார்ப்பனியச் சமூக அமைப்பில் ஆண் ஆண்டைகளுக்கு மட்டுமல்ல, ஆண் அடிமைகளுக்கும் பெண்கள் அடிமைகளாக்கப்பட்டதை எதிர்த்து சமரானவர். பார்ப்பனர்களின், பார்ப்பனியர்களின் ஆண் என்கிற மிதப்பும், மேட்டிமையும், பெண்களை துச்சப்படுத்தும் அலட்டலும் புத்தருக்கு சமூகத்தில் உச்சக்கட்ட அருவருப்பானது. எதிர்கொண்ட பெண்ணடிமைத்தனங்களே அவர் பெண்ணியமாய் வெடித்தெழக் காரணமானது. புத்தரால் தான் அக்காலத்தில் பெண்கள் ஆணாதிக்கமான பார்ப்பனியத்தை எதிர்த்து புதிய மன விப்பிற்கான உடைவுகளாகவும், எதிர்வினைக்கான புதிர் அவிழ்ப்புமாக பன்முகப் பரிமாணங்களை வென்றெடுத்தார்கள்.

புத்தர், சித்தார்த்தராக இருந்த காலத்தில் தன் துணைவியிடம், “நான் துறவறம் மேற்கொள்வதைப் பற்றி உன்னுடைய கருத்து என்ன?’ என்று கேட்டார். யசோதரை சற்றும் கலக்கமடையாமல், உலக மக்களின் நன்மைக்காக நீங்கள் துறவறம் மேற்கொள்கிறீர்கள். நானும் ஒரு துறவியாக விரும்புகிறேன். ஆனால், மகன் ராகுலனையும் வயது முதிர்ந்த தங்களின் தாய் தந்தையரையும் அன்புடன் கவனித்துக் கொள்ள, நான் சில ஆண்டுகள் குடும்ப வாழ்க்கையை மேற்கொள்ள விரும்புகிறேன். நீங்கள் சிறிதும் வருத்தப்படாமல் நிம்மதியாகச் செல்லுங்கள்’ என்றார். யசோதரை நிலைகுலைந்து போவார் என அஞ்சிய சித்தார்த்தருக்கு, யசோதரையின் மனோதிடம் வியப்பையும், மகிழ்ச்சியையும் அளித்தது.

சித்தார்த்தர் தனது துணைவியாரிடம் இவ்வாறு கூறினார் : “நான் மக்களுக்காக சமூக வெளிக்குள் செல்கிறேன். நீ விரும்பினால் மறுமணம் செய்துகொள்.’ இதை யசோதரை ஏற்கவில்லை (அந்த அம்மையாரும் பின்னர் துறவியாகி விடுகிறார்). தனது துணைவியை மறுமணம் செய்து கொள்ளக் கேட்டுக் கொண்ட அளவிற்கு மனோதிடம், தெளிந்த சிந்தனை, பெண் வாழ்வியல் உரிமை மீதான தாக்கம் கொண்ட முற்போக்கான மாமனிதராக சித்தார்த்தர் இருந்தே பின் புத்தரானார்.

ஆணானவன் பெண்களை உரிய முறையில் மதித்து நடக்க வேண்டும். பெண்களை அலட்சியப்படுத்தி அடிமைப்படுத்தக் கூடாது. பெண்கள் குடும்பத்தில், வீதியில், ஒட்டுமொத்த சமூகத்தில் முழு உரிமையுள்ளவர்களாக ஆக்கப்பட வேண்டும் என்றார் புத்தர். கல்வி பெறும் உரிமை பெண்களுக்கு இல்லை என்பதே பார்ப்பனியக் கோட்பாடாகும். பார்ப்பனர்கள் அறிவைப் பெறும் உரிமையை தங்களின் முழு உரிமையாகப் பாவித்துக் கொண்டனர். அறிவுப் பாதை அனைவருக்கும் திறக்கப்பட வேண்டும் என்ற கொள்கை கொண்ட புத்தர், பெண்களுக்கும் ஆண்களுக்கும் கல்வி வேண்டும் என்பதை வலியுறுத்தினார். பெண்களுக்கு அறியாமையை ஏற்படுத்துவதைவிட, உலகில் தீங்கான குற்றம் வேறொன்றும் இருக்க முடியாது என்றார்.

“பெண் வாழ்வது ஆணுக்காகவும்; அவனுடன் படுக்கையைப் பகிர்ந்து கொள்வதற்காகவும் இல்லை. பெண்ணுக்குத் தேவை அனுதாபமில்லை; விடுதலை! தனது வீட்டுக்கு வெளியேயும் உலகம் இருக்கிறது என்கிற சிந்தனை வேண்டும். இந்தச் சிந்தனை மட்டும் வந்து விட்டால், பெண் என்பவள் தாயாகவும், தாரமாகவும், சகோதரியாகவும் மட்டுமே இருந்து ஆணின் நிழலிலும் தயவிலும் வாழும் ஓர் அடிமையாக இருக்க மாட்டாள். தேசத்திற்கே வழிகாட்டும் தலைமைத்துவமாக உயர்ந்து நிற்பாள்’ என்கிற பிளிறலோடு, பெண் விடுதலைக்கான கொடியை முதன் முதலில் பறக்க விட்டவர் புத்தர்.

புத்தர் ஆண்களுக்கு மட்டும் தலைவரல்ல; பெண்களுக்கும் வாய்த்த தலைவர். ஒரு தேடலும், பிடிப்பும் பெண் ஆண் உறவில் இரு சாரருக்குமே தேவை. இதில், உறவுகளைப் பற்றுதல் போலவே அவரவர் சுயத்திற்கு விடுதலும் முக்கியமானது. ஆனால், ஆண்கள் பெண்களைத் தன்னில் தொடர்ச்சியாக்குவதிலுமே, அவர்களின் தொங்குதசையாக வளர்வதிலுமே கண்ணும் கருத்துமாக இருந்தார்கள். ஆண் மய்ய ஒற்றை இலக்கையே பெண்கள் தங்கள் வாழ்க்கையின் சாரமாகக் கொள்ள கற்பிக்கப்பட்டார்கள். தமக்கான விருப்பமான வாழ்வின் சிறகுகளை பெண்களை வருடவிடாமல் பார்ப்பனிய ஆண்கள், தங்களுக்கு ஏற்ற குடும்ப அடைகாப்புக்குள்ளேயே பெண்களைத் திணித்தார்கள்.

வரலாற்றில் புத்தரால்தான் பெண்கள் குடும்பச் சிறையிலிருந்து சமூக வெளிக்கு வந்தார்கள். பெண்களில் தலைவர்கள், துறவியாளர்கள், சிந்தனையாளர்கள், அறிஞர் பெருமக்கள் அரசின் தூதுவர்கள், புரட்சியாளர்கள் ஆகத் தோற்றம் பெற்றனர். மன்னர்களில் பவுத்தத்தால் மனிதரான சாம்ராட் அசோகன் மகள் சங்கமித்திரை, மனித மாண்பினை நிலைநாட்ட இலங்கைக்குச் சென்றது, பெண்கள் வரலாற்றில் குறிப்பிடத்தகுந்த நிகழ்வாகும். அவ்வையார், ஓதலாந்தையார், காக்கைப் பாடினியார் போன்ற அறிஞர் பெருமக்கள், சமூக வாழ்வை ஏற்று விழிப்புணர்வை ஏற்படுத்தினர். அவ்வை பாரிக்கும் அதியமானுக்கும் இடையே அரசாங்கத் தூதுவராகச் செயல்பட்டார். அவ்வையாரின் நயமான அறிவுரையை ஏற்றதால், அதியமான் போர் புரியும் தனது எண்ணத்தைக் கைவிட்டது குறிப்பிடத்தக்கது.

ஆணாதிக்க பார்ப்பனியச் சமூக அமைப்பில் ஒழுக்கம், பண்பு போன்ற வரம்புகளால் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டு, மானுட அந்தஸ்து மறுக்கப்பட்டு அவமானத்திலும், துன்பத்திலும், உடலுழைப்பிலும், ஆணுக்கான உடல் வேட்கையிலும் வசமாகிப்போன பெண்களுக்கான சுதந்திர வெளியே பவுத்தர்களின் கசனமாக இருந்தது. புத்தரைத் தொடர்ந்து அவரின் சிற்றன்னையார் கோதமி, துணைவியார் யசோதரையும் சமூகப் பொதுவெளிக்கு வந்து சமூக மனிதரானார்கள். வரலாற்றில் குடும்பமே பெயர்ந்து பொதுவாழ்க்கையில் நிரப்பிக் கொண்டது புத்தரின் குடும்பமாகும். பெண் அல்லது பெண்ணியம் என்னும் கருத்தோட்டங்களும், பெண் விடுதலைக்கான இயக்கங்களும் வரலாற்றில் புத்தரின் யுகத்தில்தான் ஏற்பட்டது.

புத்தர், பெண்களுக்கான சிந்தனையில் செயல்பாட்டில் இச்சையாகவோ, அனிச்சையாகவோ ஆணாதிக்க உணர்வுகள் தனக்குள் புகுந்துவிடக் கூடாது என்பதில் மிகக் கவனமாக இருந்தார். பெண்களுக்கு ஆண்கள் தலைமை தாங்க முடியாது; இயக்கத்தைக் கட்டமைக்க முடியாது; பெண்களுக்குப் பெண்கள்தான் தலைமை தாங்க முடியும்; இயக்கத்தைக் கட்டமைக்க முடியும் என்று அறுதியிட்டுக் கூறினார். பெண்களின் விடுதலையை பெண்கள்தான் ஏற்படுத்த முடியும் என்றார். தாம் ஏற்படுத்திய சங்கத்திற்கான விதியில் ஆண் - பெண் பாகுபாடு அடிப்படையில் ஏற்றத்தாழ்வு பாராட்டுவது கூடாது என்று வழிவகுத்திருந்தும் பெண்களை தம் சங்கத்தில் சேர்க்க மறுத்துவிட்டார். பெண்களுக்கான நியாயங்களை தம் அறங்களால் பட்டியலிட, அவருக்கு சகல தகுதிகளும் இருப்பதாகப் பெண்களின் நம்பிக்கை கூடிப் பெருகியதாலேயே, பின்னர் பெண்களைக் கொண்ட "பிக்குனிகளின் சங்கம்' தொடங்கப்பட்டது.

புத்தர், ஓர் ஆணின் பார்வையில் நிகழ்த்தப்படும் எந்தவோர் ஒழுக்கத் தத்துவம், பொதுத் தத்துவத்தின் ஒரு பகுதியாகவே இருக்க முடியும் என்றார். நான் பிறப்பால் ஆணாக இருப்பதால், இந்த உலகின் சரிபாதி மனிதர்களின் உணர்வு, ஒழுக்கம் ஆகியவற்றின் தரப்பிலிருந்து சமூகத்தில் ஓர் அசைவு, பெண்கள் தரப்பிலிருந்தும் வெளிப்படும் போதுதான் ஒட்டுமொத்த மானுடம் வெற்றியடையும் என்றார். மேலும், அவர் இந்த சமூகத்தின் சரிபாதியான பெண்கள் தரப்பிலிருந்து ஆண்களுக்கான பெண்களுக்கான ஒழுக்கத்தையும் ஆண்களுக்கான பெண்களுக்கான சமூக உறவையும் முன்னெடுக்கும்போதுதான் எனது கொள்கைகளும் முழுமை பெறும் என்றார். ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் புத்தர் இன்னும் மானுடத்திற்கு உயிர்ப்பாய் இருப்பவர். ஆணோ, பெண்ணோ அவர்கள் உயிர்கள், உணர்வுகள், ஆற்றல்கள் செழிக்க இன்னும் உதவுபவர். புத்தர் தன்னை எப்படி பின்னிக் கொண்டாலும், எப்படிச் சுற்றி வந்தாலும் அவருடைய அச்சு மானுடக் காதலே ஆகும்.

 

-ஏ.பி.வள்ளிநாயகம்