இந்தியக் கிறித்துவத் திருச்சபை வரலாற்றில், தமிழர்களால் குறிப்பாக தலித்துகளால் நினைவு கூரப்பட வேண்டியவர் பர்தலோமேயு சீகன் பால்கு (1682 - 1719). டென்மார்க் நாட்டு வணிகக் குழுக்களும், அய்ரோப்பிய நிறுவனங்களும் தமிழ் மண்ணில் ஆட்சி புரிந்த காலத்தில், கிறித்துவத்தைப் பரப்புவதற்காக சீகன் பால்கு, 1706 சூலை 9 இல் தரங்கம்பாடிக்கு வந்தார். இவர், அடிப்படையில் ஜெர்மனியின் ஹல்லே பல்கலைக் கழக இறையியல் மாணவர். இவரைப் போலவே போர்ச்சுக்கல், ஸ்பெயின், இத்தாலி, பிரான்ஸ் போன்ற நாடுகளில் இருந்தும் பல அருட்தொண்டர்கள், இந்தியாவின் சில பகுதிகளில் நற்செய்திப் பணியைப் பரப்பி வந்து கொண்டிருந்தனர். சீகனும் தரங்கைச் சேரியில் அவர் தொடங்கிய பணிகளும், தற்பொழுது 300 ஆண்டுகளை எட்டி நிற்கிறது.

Seagan Palgu
தமிழ்த் திருச்சபையின் தொடக்கம், தமிழிசை வழிபாடு, தமிழ் இறையியல் கல்வி, தமிழ் ஆசிரியப் பயிற்சி, தமிழ் மொழி ஆய்வு, சைவ இலக்கிய ஆய்வு, வைதீகக் கடவுளர் ஆய்வு, அச்சுக் கலையின் அடித்தளம், காகிதத் தொழிற்சாலையின் முன்னோடி, தமிழ்ப் பதிப்பாளர், மொழிபெயர்ப்பாளர் என நீண்டு கொண்டே செல்கின்ற இவரின் பன்முக அடையாளங்களை நினைவு கூறும் வகையில், சீர்திருத்த திருச்சபைகள் ஒன்றுகூடி 9.7.2006 அன்று அவரது வருகையின் 300ஆவது ஆண்டு நிறைவு விழாவைக் கொண்டாடினார்கள். தரங்கம்பாடியில் அவர் எழுப்பிய புதிய எருசலேம் தேவாலயத்தில் நடைபெற்ற இவ்விழாவில் பேராயர்கள், இறையியல் பேராசிரியர்கள் பங்கேற்று, சீகனின் வரலாற்று நினைவுகளைப் பதிவு செய்தார்கள்.

திருச்சபைகள் மட்டுமல்ல, பல பத்திரிகைகளும் அவரைப் பற்றி பல்வேறு கோணங்களில் கட்டுரைகள் எழுதின. சீகனின் தமிழ் உபாத்தியாயத்தையும், அச்சுப் பணியின் நிறுவன வரலாற்றையும் இங்கிருக்கின்ற அச்சு ஊடகங்கள், தங்களின் வணிக அடையாளத்துக்காக எழுதுகின்ற சூழலுக்குத் தள்ளப்பட்டது, வருந்தத்தக்கதே.

இருபத்தி நான்கு வயதில் ஒரு சராசரி இளைஞராக இந்தியாவிற்கு வந்து 13 ஆண்டுகள் மட்டுமே பணி செய்து, 36 வயதில் மரணத்தை எய்திய சீகன் பால்கின் பணி, சோழ மண்டலக் கரையில் வீசிய மநுநீதிக் காற்றுக்கு எதிரான ஒரு பணி. அன்றைக்கு அவரைப் போல் யாரும் இப்பணியை ஒரு சவாலாக எற்கவில்லை. ஏனெனில், இந்தியாவில் நிலவுகிற சாதிய முரண்பாட்டைப் பல அருட்தொண்டர்கள் புரிந்து கொள்வதில் சிக்கல் இருந்தது. மலபார் திருவிதாங்கூர் பகுதிகளிலும், தமிழகக் கடற்கரைப் பகுதியிலும் கிறித்துவ நற்செய்திப் பணியைத் தொடங்கிய எல்லா நாட்டு அருட்தொண்டர்களுக்கும் இதே பிரச்சனைதான் நீடித்தது. சிலர் சாதியத்தை ஏற்றுக் கொண்டார்கள், சிலர் வழிமறித்தார்கள். ஆனால், சீகன் பால்கு, தரங்கம்பாடி பகுதியில் நிலவிய சாதிய முரண்பாடுகளை எதிர்கொண்டு, தன்னுடைய சமய உள்நோக்கத்திற்காக சேரியில் தமிழ் கற்க ஆர்வம் காட்டினார்.

டென்மார்க் இளவரசன் நான்காம் பிரடெரிக் முத்திரை இட்டுக் கொடுத்த கடிதத்துடன் வந்த சீகன், வரவேற்க ஆள் இல்லாமல் கடற்கரையில் காக்க வைக்கப்பட்டு, எந்த ஒரு அங்கீகாரமும் வழங்கப்படாமல் தரங்கம்பாடி கடலோர சேரிப்பகுதியில் தங்க வைக்கப்பட்டார். அன்றைக்கு அவரை வரவேற்று மகிழ்ந்தவர்கள் ‘‘ஏழைகளும், இந்திய அடிமைகளும், அய்ரோப்பியர்களால் புறக்கணிக்கப்பட்டவர்களும், இனக்கலப்பு செய்தவர்களும், அதிகாரத்தால் புறக்கணிக்கப்பட்டவர்களும் வாழ்ந்த அடிப்படை வசதி இல்லாத ஒரு சேரிப் பகுதி'' என அவர் தங்க வைக்கப்பட்ட இடத்தைப் பற்றி பேராசிரியர் லாரன்ஸ் (‘இந்தியாவின் விடிவெள்ளி சீகன் பால்கு') குறிப்பிடுகிறார். அங்கு அவர் பலருடனும் தன்னுடைய நட்புறவை வளர்த்துக் கொண்டார். முதலியப்பன் என்கிற இளைஞனின் நட்பைப் பெற்றார். இவர் தமிழ் மட்டுமே பேசக் கூடியவராக இருந்ததால், கொஞ்சம் போர்ச்சுக்கீசிய மொழி பேசுகின்ற அழகப்பனுடன் பழகி தமிழ் கற்றார். இரண்டு ஆண்டுகளில் 20,000 வார்த்தைகள் அடங்கிய தமிழ் அகராதியை உருவாக்கினார். அவ்வப்போது திண்ணைப் பள்ளிக்கூடத்துக்குச் சென்று தமிழைக் கற்கும் முயற்சியிலும் ஈடுபட்டார்.

பெயர் குறிப்பிடப்படாத ஓர் ஆசிரியரும், ஒரு கவிஞரும் சீகனின் தமிழறிவு வளர்ச்சிக்குப் பெரிதும் உழைத்துள்ளனர். திருவள்ளுவருரை, காரிகை, நன்னூல், அரிச்சந்திர புராணம், ஞானப் பொஸ்தகம், பஞ்ச தந்திரக் கதை, சிதம்பர மாலை, கீழ்வளூர்க் கலம்பகம், நீதிசாரம், நளன் கதை, தேவாரம் போன்ற முப்பதுக்கும் மேற்பட்ட தமிழ்ச் சுவடிகளை 2 ஆண்டுகளில் சேகரித்து, படித்து 40,000 சொற்கள் அடங்கிய மற்றொரு தமிழ் அகராதியை தொகுத்தார். முறைப்படி தமிழை திண்ணைப் பள்ளிக்கூடங்களில் கற்றுக் கொடுத்த யாராவது இரண்டு அகராதியை உருவாக்குகின்ற அளவுக்கு, சீகனுக்கோ அல்லது யாரோ ஒரு வெள்ளைக்காரனுக்கோ தமிழைக் கற்றுக் கொடுப்பார்களா? அல்லது கற்றுக் கொடுக்க வேண்டிய அவசியம் அவர்களுக்கு என்ன இருக்கிறது? அவர்களுக்கு ஊழியம் செய்யவா சீகன் சேரியில் குடியேறினார் என்கிற சந்தேகத்தை எழுப்பிப் பார்த்தால், அன்றைக்கு சாதியக் கட்டுப்பாடுகள் நிறைந்த திண்ணையிலிருந்து 2 தமிழ் அகராதிகள் உருவாகி இருக்க வாய்ப்பே இல்லை.

சேரியில் வசித்துக் கொண்டு சைவ இலக்கியங்களையும், ஆசீவக இலக்கியங்களையும் படித்து தமிழில் எழுதுகிற அளவுக்கு தன்னைப் பக்குவப்படுத்திக் கொண்டதை, வைதீக இந்துக்களும், அய்ரோப்பியர்களும் கூட கடுமையாக எதிர்த்தார்கள். தமிழையும், சைவ சமய இலக்கிய உண்மைகளையும் கற்றுக் கொடுத்த பெயர் குறிப்பிடப்படாத தனது தமிழ் ஆசிரியரை (கனபாடி உபாத்தியாயரின் தந்தை) சேரியை விட்டு வெளியேற்றினார்கள். காரணம், அவர் படித்த சைவப் புரட்டுகளை சீகன் மக்கள் முன் தர்க்கம் செய்தபோது, அது வைதீக இந்துக்களிடம் கொந்தளிப்பை உருவாக்கியது. தொடர்ந்து வைதீக மதத்தைப் பற்றியும் அதன் கடவுளர்களைப் பற்றியும் அறிந்து கொள்ள அவர் முயன்றார்.

சேரியில் தமிழ் கற்பதே பிரச்சனையாக இருக்கும்போது, கிறித்துவத்துக்கு எதிரான ஒரு வைதீக மதத்தைப் பற்றி கற்க நேர்ந்தால் கலவரமே மூளும் என்பதை உணர்ந்த சீகன், அதனைப் பார்ப்பனர்களிடமே கற்க முடிவு செய்தார். அதன் விளைவுதான் அவர் எழுதிய ‘தென்னிந்தியக் கடவுளர்களின் மூலாம்பரம்' (Geneology of the South Indian Gods) - 1714. இந்நூலில் சூத்திரர்களின் தெய்வங்களை பேய்க் கடவுளர்களாகப் பதிவு செய்துள்ளார். இந்தப் பிழை வைதீகப் பார்ப்பனர்களால் திணிக்கப்பட்டது என்பதை, அந்நூலை வாசிக்கும்போது உணர முடியும்.

தமிழ் எழுத்து விதிகளையும், மக்களின் சமூக வாழ்க்கைக்குரிய நீதி நெறி விளக்கங்களையும், இறைபணிக்குத் தேவையான மனோதத்துவ இறையியல் முயற்சிகளையும் தன்னுடைய எழுத்தில் ஆழமாக வெளிப்படுத்தினார். ஒரு கிறித்துவனுக்கும், தமிழனுக்குமிடையே நடந்த உரையாடல், சிறிய பள்ளி நூல், அறநெறி இறையியல், தமிழ் அகராதி, நீதிவெண்பா, கொன்றைவேந்தன் போன்ற பதினான்குக்கும் மேற்பட்ட நூல்களை எழுதினார். பின்நாளில் தமிழ் எழுத்துப் பணியில் இவரது முயற்சிதான் அச்சு வரலாறாகத் தொடங்கியது. எழுத்துப்பணி மட்டுமல்லாமல் சமூகப் பிரச்சனைகளில் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு, பாதிக்கப்படுவோர் சார்பாக நின்று போராடுகின்றவராகவும் வெளிப்பட்டார்.

பெயர் குறிப்பிடப்படாத, கணவரை இழந்த ஒரு பெண்ணின் வழக்கைத் தானே பொறுப்பேற்று நடத்தினார். அதற்காக 1708 இல் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். டென்மார்க் ஆட்சியாளர்களின் துன்புறுத்தலுக்கு எதிராகத் துணிந்து குரல் கொடுத்தார். இதனை உணர்ந்த தரங்கை ஆளுநர் கசியஸ், பறையடித்து ‘இனி எவரும் ஜெர்மானிய நற்செய்தித் தொண்டர்களுடன் தொடர்பு வைப்பதோ, ஆலயத்திற்குப் போவதோ கூடாது' என அறிவிப்புச் செய்தான். ஆனாலும் 128 நாள் சிறை வாசத்தில் விவிலியத்தின் ‘புதிய ஏற்பாட்டின்' சில பகுதிகளை தமிழில் மொழியாக்கம் செய்து முடித்தார். சிறையில் இருந்து வெளியே வந்ததும் அய்ரோப்பியத் தந்தைகளுக்கும், தமிழகத் தாயார்களுக்கும் பிறந்து, ஆதரிக்க எவரும் இல்லாமல் அனாதைகளாக்கப்பட்ட சேரிக் குழந்தைகளுக்கு ஒரு காப்பகத்தைத் தொடங்கினார். அவர்கள் கல்வி கற்கவும் வாய்ப்புகளை உருவாக்கினார்.

சேரி மக்களுடன் கருத்தியல் சார்ந்து பேசவும், பிரசங்கிக்கவும் ஓர் இடம் தேவை என உணர்ந்தார். அதற்கு ஒரு தளமாக வழிபாட்டுக் கூடத்தைத் தேர்ந்தெடுத்தார். ஒரு சிறிய கட்டடமாக அதனைக் கட்டி, எருசலேம் தேவாலயம் எனப் பெயரிட்டு 1707 ஆகஸ்டு 14 இல் சேரி மக்களின் விடுதலைக்காகத் திறந்து வைத்தார். அப்போது 15 பேர் இதில் உறுப்பினர்களாக இருந்தார்கள். யார் இந்த 15 பேர் என்கிற முதல் பட்டியல் கிடைக்கவில்லை என்றாலும், இவர்கள் யாராக இருக்க முடியும் என்பதை மீளும் வரலாற்றில் உணர முடிகின்றது. அதன் பின்னர் பலரும் கிறித்துவத்தை ஏற்று ஆலயம் வரத் தொடங்கினர்.

இதே ஆலயத்தை 1717 இல் மீண்டும் பெரிதாகக் கட்டி புதிய எருசலேம் எனப் பெயர் சூட்டினார். அதைக் கட்டுவதற்கு யாரும் உதவ முன்வரவில்லை என்கிற வேதனையைத் தனது குறிப்பில் பதிவு செய்கிறார். ‘ஆண்டிகள் சேர்ந்து மடம் கட்டுகின்றார்கள்' என்று வைதீக இந்துக்கள் விமர்சித்தார்கள். ஆனால், இப்புதிய ஆலயத்தின் கட்டுமான வடிவமைப்பில் சீகனுக்கு பிரச்சனை உருவானது. ஆலயத்தை சிலுவை வடிவில் கட்ட வேண்டும் என சாதிக் கிறித்துவர்கள் போர்க்கொடி பிடித்தார்கள். சாதிக் கிறித்துவர்களும், தீண்டத்தகாதவர்களும், பெண்களும் மற்றும் பிற மக்களும் தனித்தனியாக உட்காருவதற்கு வசதியாக ஆலயம் சிலுவை வடிவில் கட்டப்பட்டது. சாதிக் கிறித்துவர்களின் உதவியாலும் இந்த ஆலயம் கட்டப்பட வேண்டிய சூழலை சீகனால் தவிர்க்க முமுடியவில்லை.

இந்த சாதியப் பாகுபாடு தரங்கம்பாடியில் மட்டுமல்ல, புதுச்சேரியிலும் தொடர்ந்தது. அங்கு கட்டப்பட்ட ஆலயத்தின் உட்புறத்தில் குறுக்குச் சுவர்களை எழுப்பினார்கள். வழிபாட்டில் தலித்துகளுக்கு திருவிருந்து மறுக்கப்பட்டது என்கிற உண்மைகளை, புதுச்சேரியில் வாழ்ந்த அனந்தரங்கம் பிள்ளை என்கிற பவுத்த அறிஞர், தன் நாள் குறிப்பில் பதிவு செய்கிறார் (ஆ. சிவசுப்ரமணியன் ‘கிறித்துவமும் சாதியும்' பக் : 24). வைதீக சனாதனப் பிடியில் இருந்து எப்படியாவது தப்பிக்க வேண்டும் என கும்பல் கும்பலாக வெளியேறிய தீண்டத் தகாதவர்கள், கிறித்துவத் திருச்சபைகளிலும் நிரந்தர தீண்டத் தகாதவர்களாகவே நடத்தப்பட்டார்கள் என்பதற்கு இது ஒரு சான்று.

திருச்சபையில் ஊடுறுவிய இந்த சாதியத் தொற்று, தெற்கே வடக்கன் குளத்தையும் தாண்டிச் சென்று, திருச்சபைக் கலவரங்களுக்கு முதல் தகவல் அறிக்கையாகப் பதிவானது. சிலுவை என்கிற வீர மரண அடையாளத்தை, தீண்டாமைக் குறியீடாகப் பார்க்கின்ற தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியவர்கள் கிறித்துவ வெள்ளாளர்கள் மற்றும் பிள்ளைமார்கள் என்பதை திருச்சபை வரலாறு சுட்டிக்காட்டத் தவறிவிட்டது.

ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையினர், இந்த ‘மநுநீதி'யை தங்கள் திருச்சபைக்குள்ளும் ஏற்றுக் கொண்டார்கள். சீகன் பால்கு பணி செய்தபோது, கத்தோலிக்க மறைப் பணி செய்து வந்த பெஸ்கி என்கிற வீரமாமுனிவர், வைதீக மதத்தின் அசல் நகலாக வாழ்ந்த ஒரு கிறித்துவப் பார்ப்பனர். டிநொபிலியைப் போன்று சாதிய மேலாண்மையையும், தீண்டாமை வன்கொடுமைகளையும் திருச்சபைக்குள் கட்டவிழ்த்து விட்டவர். தலித் மக்களுக்கு எதிராக இவர் செயல்பட்டார் என்பதற்காக, தஞ்சை மறை மாவட்டத்தில் இவர் மீது கொலை வழக்குப் போடப்பட்டுள்ளது என்பதை, தற்போது கொலம்பியாவில் முனைவர் பட்ட ஆய்வு செய்யும் கஜேந்திரன், விவாதத்திற்கு உட்படுத்துகின்றார்.

Seagan's offset machine
தற்காலத் தமிழ் வரிவடிவின் தந்தை எனச் சொல்லப்படுகின்ற இந்த வீரமாமுனிவர், வேதத்தை சூத்திரர்கள் படிக்கக் கூடாது என்று மநுநீதி சொன்னதற்காக, திருமறையை தமிழில் மொழிபெயர்க்கவில்லை என சீகன் பால்கு குற்றம் சாட்டுகிறார். மேலும், தமிழை இழிவாகப் பழித்து, ஓலைச் சுவடிகளில் நற்செய்திக்குப் புறம்பாக எழுதியதை சீகன் தன்னுடைய கடிதத்தில் குறிப்பிடுகிறார். தொடர்ந்து தமிழக மக்களின் சமூக அமைப்பைப் புரிந்து கொள்வதற்காக 1710, சூன் மாதத்தில் ஒரு பல்லக்குப் பயணத்தை சீகன் மேற்கொண்டார். கடலூர், புதுச்சேரி வழியாக சென்னை வரை செல்கிறார். அப்போது அவரைக் கொல்ல பார்ப்பனர்கள் சதி செய்கிறார்கள். திருப்பதிக்கு அருகே நடந்த இந்த சதியில் இருந்து, தன் பாதுகாவலர்களுடன் தப்பித்து தரங்கை வந்து சேர்ந்தார். சீகனுக்கு தமிழ் சொல்லிக் கொடுத்த ஆசிரியரின் மகன் கனபாடி உபாத்தியாயரின் உதவியால், தன்னுடைய மொழிபெயர்ப்புகளை மீண்டும் தொடர்ந்தார். 1711 இல் ‘புதிய ஏற்பாட்டை' முழுவதுமாக மொழிபெயர்த்து முடித்தார். தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட புதிய ஏற்பாட்டையும், பிற நூல்களையும் ஓலைச்சுவடியில் எழுதுவது கடினமானப் பணியாக இருந்ததால், அதனை அச்சில் நூலாக வெளியிட விரும்பினார்.

1712 இல் இங்கிலாந்தில் உள்ள கிறித்துவ அறிவு வளர்ச்சிக் கழகத்தினரிடம் புதிய அச்சு எந்திரம் ஒன்றைக் கேட்டுப் பெற்றார். தமிழ் எழுத்துகளை அச்சில் வார்த்து 1714 இல் புதிய ஏற்பாட்டையும், ‘அப்போஸ்தல நடபடிகள்' நூலையும் வெளியிட்டார். தமிழகத்தில் முதல் அச்சுக்கூடத்தை நிறுவி, முதல் தமிழ் நூலை வெளியிட்டவர் சீகன் பால்கு. அச்சிடுவதற்குத் தேவையான காகிதத்தைப் பெறுவதற்கு பொறையாறில் ஒரு காகிதப் பட்டறையை உருவாக்கினார். இன்றைக்கு இந்தியாவில் உள்ள அச்சு ஊடகத்துறைகள், சீகன் பால்கு தொடங்கி வைத்த தமிழ் அச்சுப்பணியை, தங்களின் வியாபாரத்துக்காக கலைக் கண்ணோக்கில் பார்க்கின்றன. சீகன்கூட ஓர் அச்சுக் கலைஞராகத்தான் அவர்களுக்குத் தெரிகிறார். ஆனால், தீண்டத்தகாதவர்களுக்கு அவர் அறிமுகப்படுத்திய அச்சுப் பணி, அவர்களின் மறைக்கப்பட்ட வரலாற்றுக்கான அடையாளமாக இன்று எழுந்து நிற்கிறது.

1714 இல் மீண்டும் அவர் தனது தாயகம் சென்று, தன் திருமணத்தை முடித்து 1715 இல் தரங்கை திரும்பினார். கிறித்துவர்களாக மாறுகின்றவர்களை திசை நெறிப்படுத்துவதற்காக ஆயர்களை உருவாக்க வேண்டும் என்று 1718 இல் ஓர் இறையியல் கல்லூரியை நிறுவினார். அன்று அவர் நிறுவிய தரங்கை இறையியல் கல்லூரியையும், தூத்துக்குடி மாவட்ட திருமறையூர் இறையியல் கல்லூரியையும் இணைத்து, 1969 இல் மதுரை அரசரடியில் உருவாக்கப்பட்ட கல்லூரிதான் ‘தமிழ் நாடு இறையியல் கல்லூரி'! தனது போராட்ட ஓட்டத்தின் உடல் வலிமை குன்றி 1719 பிப்ரவரி 23 இல் சீகன் பால்கு மரணமடைந்தார். சீகன் தொடங்கிய தமிழ் ஏற்பும், சாதிய வேரறுப்பும் - ஓர் அமைதிப் புரட்சியாகவே நடந்தேறியது. உலக அளவில் பொதுவுடைமைப் புரட்சிகளும், திருச்சபை சீர்திருத்தங்களும், சமய மறுமலர்ச்சிகளும் உண்டான பதினாறாம் நூற்றாண்டில், தரங்கைச் சேரியின் தமிழ் வரலாற்றை கிறித்துவ பரப்பலுக்கு ஆதாரமாக்கியவர் சீகன் பால்கு.

இவருக்குப் பின்வந்த எல்லீஸ், கால்டுவெல், கர்னல் ஆல்காட், ஜி.யு. போப், ஓக்ஸ் போன்ற அருட்தொண்டர்கள் குறைந்தபட்ச நேர்மையோடு நற்செய்திப் பரப்பலுக்காக தமிழை அணுகினார்கள் என்றால், அந்த எச்சரிக்கை தரங்கைச் சேரியில் இருந்து உருவானது என்பதை தமிழ்த் திருச்சபைகள் உணர்ந்து பதிவு செய்ய வேண்டும்.

ஒடுக்கப்பட்ட மக்களின் சமய விடுதலைக்காக களமிறங்கிய சீகனுக்கு - மொழியையும், மொழியின் அவசியத்தையும் சேரி மக்கள் கற்றுக் கொடுத்தனர். தலித் கிறித்துவர்களின் விடுதலைக்காக சேரி மக்கள் வழங்கிய மொழிக்கொடை, திருச்சபை வரலாற்றில் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளதை நேர் செய்ய வேண்டிய தேவை உள்ளது. ‘தமிழுக்கான வரி வடிவத்தை உருவாக்கியவர்கள் பவுத்த சமணர்கள்' என்று பண்டிதர் அயோத்திதாசர் குறிப்பிடுகிறார். கல்வெட்டுகளும் இதனை உறுதிப்படுத்துகின்றன. மொழியைக் காத்த பூர்வ பவுத்தர்கள்தான் - இந்து மதத்தின் சாதியக் கொடுமைகளால் தாழ்த்தப்பட்டு ஒடுக்கப்பட்டார்கள் என்று அம்பேத்கர் குறிப்பிடுகிறார். அந்தப் பூர்வ பவுத்தர்களிடம் உள்ள மொழிப் பண்பாட்டைக் கற்றுக் கொள்ள முயன்றதன் விளைவாக அவர்களிடம் ஒரு சீகன் பால்கு முளைத்தெழுந்தார்.

சீகனின் சமூகப் போராட்டத்தில் குறுக்கும் - நெடுக்குமாகப் பயணம் செய்த பலரின் பெயர் குறிப்பிடப்படாமல் மறைக்கப்பட்டுள்ளதை வரலாற்றில் கேள்வி எழுப்பிப் பார்க்க வேண்டியுள்ளது. திருவிதாங்கூர் திருச்சபை வரலாற்றின் மகுடத்தை அழகுபடுத்திய மகராசன் வேதமாணிக்கம், தஞ்சை எஸ்.பி.ஜி. மிஷன் இசைக் கருவூலத்தைக் கட்டியெழுப்பிய ஆபிரகாம் பண்டிதர் போன்றோரின் வரலாற்று அகழாய்வுகளை தலித்துகள் தனி முத்திரையாகப் பதிவு செய்ததைப் போல, இந்தியத் திருச்சபை வரலாற்றை இன்னும் ஆழமாக அகழாய்வு செய்ய வேண்டிய தேவையை சீகன் உருவாக்கிக் கொடுத்துள்ளார்.

சீகன் பால்கு - தமிழின் அடையாளம். எதிர்ப்பின் குறியீடு. சேரித் தமிழர்களின் வரலாறு. இந்தியத் திருச்சபைகளுக்கு ஓர் எழுத்தின் எச்சரிக்கை.

-அன்பு செல்வம்
Pin It