கடந்த இரு தேர்தல்களிலும் தலித் மக்களின் அரசியல் இயக்கங்கள் பெற்றிருக்கும் வாக்குகள், சற்றேறக்குறைய நிலையானதாகவே உள்ளன. புதிய தமிழகத்தின் வாக்கு விகிதம் மட்டும் 0.51 சதவிகிதம் குறைந்திருக்கிறது. ஆனால், கடந்த தேர்தலில் பத்து இடங்களில் போட்டியிட்ட அவ்வியக்கம், இந்த முறை 168 இடங்களில் நின்றிருக்கிறது. அதனால், குறைந்த வாக்கு விகிதம், முந்தைய தேர்தலுக்குச் சமமானது எனக்கருதலாம். லோக் ஜன சக்தி போன்ற சில கட்சிகள் இன்னமும் குறைவாக, தாம் நின்ற 19 தொகுதிகளுக்கு சராசரியாக 427 வாக்குகள் வீதம் மொத்தம் 8,114 வாக்குகளைப் பெற்றுள்ளன! இந்த வாக்கு விகிதங்கள், தலித் அரசியல் இயக்கங்களின் தொய்வைக் காட்டுவதாக உள்ளன. இம்முடிவுகளின் மீது தலித் இயக்கங்கள் கண்டிப்பாக கவனம் செலுத்தி, திறந்த மனதுடன் ஆராய்ந்து பார்க்க வேண்டும். இந்த ஆய்வு, தலித் அரசியலின் புதிய அத்தியாயத்தைத் தொடங்க பயன் அளிக்கும்.

Tamilarasan
1952 இல் தொடங்கப்பட்ட பட்டியல் சாதியினர் கூட்டமைப்பு, இந்திய குடியரசுக் கட்சி எனும் பெயரில், தமிழகத்தில் தொடர்ந்து தேர்தலில் போட்டியிடுகிறது. முதல் நான்கு தேர்தல்களில் தனித்தும், அடுத்த இரு தேர்தல்களில் இரு கட்சிகளுடன் இணைந்தும் போட்டியிட்ட இக்கட்சி, 1980 ஆம் ஆண்டு தொடங்கி, அ.இ.அ.தி.மு.க.வுடன் தனது தேர்தல் உறவை வைத்துக் கொண்டு தேர்தலை சந்தித்தது. சுமார் இருபத்தைந்து ஆண்டுகால கூட்டணி! இந்திய அரசியல் வரலாற்றில் இது ஒரு சாதனை என்ற பெருமிதத்துடன் இதைக் கருதிக்கொள்ளும் அக்கட்சி, ஒன்றிரண்டு இடங்களுக்கு மேல் தேர்தலில் வென்றதில்லை!

நடந்து முடிந்த தேர்தலில் இந்திய குடியரசுக் கட்சி, அ.இ.அ.தி.மு.க.வின் கூட்டணியின்றி 25 இடங்களில் நின்றது. பெற்ற வாக்குகள் குறித்துப் புள்ளிவிவரம் கிடைக்கவில்லை. தொகுதிக்கு ஆயிரம் வாக்குகள் என்று வாங்கியிருக்கலாம். அய்ம்பது ஆண்டுகளுக்கும் மேலாக அரசியல் தளத்தில் இருக்கும் மூத்த தலித் கட்சிக்கு ஏன் இந்த நிலை? இது போன்ற பின்னடைவை மாற்றுவது போல்
களம் புகுந்த புதிய தமிழகம், விடுதலைச் சிறுத்தைகளும் ஒப்பீட்டளவில் கொஞ்சம் முன்னேறியிருக்கின்றன.

விடுதலைச் சிறுத்தைகளின் அரசியல் நுழைவு 1999 இல் நிகழ்ந்தது. இக்குறுகிய காலத்தில் அதன் பலம் சொல்லிக் கொள்ளும்படியாக அதிகரித்து இருக்கிறது. சாதிய ஒடுக்குமுறையையும், அதிகார பலத்தையும் எதிர்த்து சிதம்பரம் நாடாளுமன்றத் தேர்தலில் தொல். திருமாவளவன் 2,25,768 வாக்குகளைப் பெற்றார். 2005 இல் கும்மிடிப்பூண்டியிலும், காஞ்சிபுரத்திலும் தனித்து நின்று முறையே 1.51, 0.83 சதவிகித வாக்குகளை அவ்வியக்கம் பெற்றது. இந்தத் தேர்தலின் மூலம் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களுடன் இருக்கும் விடுதலைச் சிறுத்தைகள், 1.29 சதவிகித வாக்குகளைப் பெற்றிருக்கிறார்கள். இது, கடந்த தேர்தலை விடவும் கொஞ்சம் அதிகமான வாக்கு விகிதம். புதிய தமிழகம், கடந்த தேர்தலை விடவும் 94,171 வாக்குகள் குறைவாகப் பெற்றிருக்கிறது. அவ்வியக்கம் முந்தைய காலத்தில் சட்டமன்றத்தில் ஓடத்தைப் பெற்றிருந்தது.

இப்படியான பலவீனமான புள்ளி விவரங்கள் தலித் மக்களை வருத்தத்திலும், ஏமாற்றத்திலும் ஆழ்த்துகின்றன. இவர்களும் அவர்களுமாக 12 அரசுகள் நம்மை ஆண்டுவிட்டன. இதுவரையிலும் நமக்கான வலியுடனும் வேதனையுடனும்; நமக்கான அக்கறையுடனும் ஆதங்கத்துடனும்; நமக்கான கோபத்துடனும், குறலுடனும் சட்ட மன்றத்தில் குரல்கள் ஒலித்திருக்கிறதா? ஒலித்த குரல்கள் எல்லாமே நமக்கானதல்ல. மாற்று அரசியல் வழியற்ற சனநாயக நாட்டில், தலித் மக்களின் குரல்கள் சட்டம் இயற்றப்படும் இடத்தில் இல்லாதபடி ஏன் முடக்கப்படுகின்றன? அல்லது குரல் எழுப்பத் திராணியற்று நாம் போனது ஏன்?

இருபது சதவிகிதத்துக்கும் மேலான மக்கள் திரள் கொண்ட ஒரு சமூகம், தன்னை ஏன் ஒன்றிணைத்துக் கொள்ளவில்லை? தலித் வங்கி ஏன் உருவாகவில்லை? சாதிய அரசியலுக்கு இனி இடமில்லை. தீர்ப்புகள் மாற்றி எழுதப்படுகின்றன என்று சொல்லப்பட்டாலும், சாதிய அரசியல் தான் இங்கே நடக்கிறது என்பதை யாராலும் மறுக்கவே முடியாது. பிற சமூகங்கள் சாதியாக ஒன்றிணைந்து, தமது அரசியல் பலத்தை உருவாக்கிப் பயனை அனுபவித்துக் கொண்டிருக்கையில் தலித்துகளிடம் மட்டுமே அது நிகழவில்லை. சாதியத்தின் கூர்மையான நகங்கள் இன்னும் வெட்டப்படவில்லை என்பதால், அவர்கள் அதிலிருந்து தப்பித்துக் கொள்ளவும் போராட வேண்டியிருக்கிறது. எனவே, ஒரு தலித் வாக்கு வங்கி உருவாவதற்கான வெற்றிடம், இன்னும் நிரப்பப்படாமலேயே தான் இருக்கிறது. தலித் வாக்கு வங்கி உருவாவதற்கான தடைகளாகப் பல்வேறு காரணிகள் இருக்கின்றன.

திராவிட அரசியலை சிலர் இதற்கு குற்றம் சாட்டுகிறார்கள். அது உண்மையும் தான். திராவிட அரசியல் கட்சிகளின் கிளைமட்ட பொறுப்பிலிருந்து உயர்மட்டப் பொறுப்பு வரை, பலம் பொருந்தியவர்களாக இருப்பது தலித்துகள் அல்ல. ஒதுக்கப்படுகின்ற தனித் தொகுதிகளில் அந்தக் கட்சிகள் நிறுத்தும் தலித் வேட்பாளர்கள், தன்னிச்சையாகத் தேர்வாகிறதும் இல்லை. ஒன்றிய அளவிலும், மாவட்ட அளவிலும் கட்சியின் அதிகாரத்தைத் தமது கைகளில் வைத்துள்ள ஆதிக்கச் சாதியினராலேயே அவர்கள் முன்னிறுத்தப்படுகிறார்கள். தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டால், ஆட்சி முடியும் வரை அவர்களின் கைப்பாவைகளாகவே இருந்து விடுகிறார்கள். ஆனால், அக்கட்சிகளில் இருக்கும் தலித் வாக்குகளை ஈர்ப்பதற்கான "மரப்பசு'க்களாக இவர்கள் தான் விளங்குகிறார்கள்! தலித் வாக்கு வங்கித் திரட்சி இங்கிருந்தே நீர்த்துப் போகத் தொடங்கிவிடுகிறது.

திராவிட அரசியல் மாயையிலிருந்து தப்பிக்கின்ற கொஞ்சம் தலித்துகளும் தங்களை ஒன்றிணைத்துக் கொள்ள ஒரே அரசியல் அமைப்பு இல்லை. தலித்துகளிடையே உருவாகி இருக்கும் அதிக அளவிலான எண்ணிக்கையினைக் கொண்ட அரசியல் அமைப்புகள், அம்மக்களைக் குழப்புகின்றவையாகவும், சிதறடிக்கின்றவையாகவும், அடகு வைக்கின்றவையாகவும் உள்ளன. பட்டியல் சாதியினர் கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கையில் இந்த அம்சத்தைக் குறித்து அம்பேத்கர் பேசியிருக்கிறார்.

"பல அரசியல் கட்சிகள் உருவாவதை பட்டியல் சாதியினர் கூட்டமைப்பு எதிர்க்கிறது. பட்டியல் சாதியினர் கூட்டமைப்பின் திட்டம், இரு கட்சிகள் அமைப்பே'' என்கிறார் அவர். இது, சனநாயகத்தின் குரலை நெரிப்பதாகக் கருதலாம். ஆனால், இதை அதிகபட்ச சனநாயகத்தின் அம்சமாகக் கருதுகிறார் அம்பேத்கர். இதற்கான மிகச் சிறப்பானதொரு யோசனையை அவர் சொல்கிறார்.

"கூட்டதிகாரக் கட்சி' எனும் அமைப்பே அவர் சொல்லும் யோசனை. "ஒரே விதமான அடிப்படை அரசியல் கொள்கைகளைக் கொண்ட, பொதுவான அரசியல் நெறிமுறைகளைக் கொண்ட, ஆனால் தனது உள்ளாட்சியில் சுயாட்சியுடைய பல அரசியல் கட்சிகளை உறுப்பினர்களாகக் கொண்ட ஓர் அகில இந்திய கட்சியை அமைத்து...'' அதன் மூலம் வேட்பாளர் தேர்வு, தேர்தல் சந்திப்பு என இருக்கலாம் என்பது அம்பேத்கரின் திட்டம். இந்திய அளவில் பொதுவான கட்சிகளின் ஒன்றிணைவுக்கான திட்டமாக அம்பேத்கர் இதைச் சொன்னாலும், தலித் அரசியல் கட்சிகளின் கூட்டமைவுக்கு நாம் இதை பொருத்திப் பார்க்கலாம்.

தனித்தும், தேசிய அளவிலும் இயங்குகின்ற பல தலித் அரசியல் கட்சிகள் இங்குள்ளன. தமிழகத்தின் ஒரே ஒரு மாவட்டத்தினுடைய சில பகுதிகளில் மட்டும் செல்வாக்குப் பெற்ற கட்சிகளிலிருந்து, வட மாவட்டங்களிலும், தென் மாவட்டங்களிலுமாக செல்வாக்குப் பெற்ற தலித் கட்சிகளும் இங்குள்ளன. இவைகளை ஒரு கூட்டதிகாரக் கட்சியாக மாற்றுவது பொருத்தமானதாக இருக்குமா என்று நாம் ஆராய வேண்டியுள்ளது. நேரடி அரசியலில் பங்கேற்காத இயக்கங்களின் எண்ணிக்கை குறித்து கவலை இல்லை. ஆனால், அவைகளையும் ஒன்றிணைத்து ஒரு வலைப் பின்னலை உருவாக்க வேண்டும்.

அரசியல் அமைப்புகள் என்கிற அளவிலேனும், இந்த தலித் கூட்டதிகார அரசியல் அமைப்பின் சாத்தியக் கூற்றினை நாம் பரிசீலித்தே ஆகவேண்டும். வடக்கு, தெற்கு என்ற பகுதிவாரியான பிரிவுகளையும், உட்சாதிப் பிரிவுகளையும் ஒழிப்பதற்கான சாதக அம்சங்கள், இந்தக் கூட்டதிகார அமைப்பினால் எளிதாக எட்டப்படலாம். மிக அரிதாகவே தமிழக அரசியலில் தலித் அமைப்புகளின் ஒன்றிணைவு நேர்ந்திருக்கிறது. 1994 இல் பஞ்சமி நில மீட்புப் போராட்டப் படுகொலைகளைக் கண்டித்து, சுமார் 127 தலித் அமைப்புகள் ஒன்றிணைந்து போராட்டத்தில் இறங்கின. லட்சக்கணக்கான மக்கள் திரண்ட ஊர்வலம் சென்னையில் நடந்தது.

S.V.Rajadurai's book
தனித்தனி அமைப்புகளாகப் பிரிந்து நிற்கும் போது, அரசியல் எனும் சதுரங்க ஆட்டத்தில் தலித் அரசியல் இயக்கங்களின் பலம் சிதறடிக்கப்படுவதுடன், வாக்குகள் வீணாகவும் நேர்கின்றன. கூட்டணி வைத்துக் கொள்ள முடியாதபடி, பல அரசியல் காரணங்களைக் கொண்ட பிறகட்சிகள் ஒன்றிணையும் போது, கூட்டணி வைத்துக் கொள்ள பல அரசியல் காரணங்களையுடைய தலித் கட்சிகள் ஏன் ஒன்றிணைவதில்லை என்று சிந்திக்க வேண்டும். தலித் வாக்கு வங்கியின் சிதறலை இத் தேர்தலையொட்டி கணித்திருக்கிறார், செ.கு. தமிழரசன்.

"தலித் வாக்கு வங்கி அலைக்கழிக்கப்பட்டது. தலித் மக்கள் தான் தேர்தலில் 90 சதவிகிதம் பங்கேற்பவர்கள். முக்கிய கட்சிகள் உதாசீனப்படுத்தியதால், தலித் வாக்கு வங்கி ஒரே சீரான நிலைப்பாட்டில் இல்லை. அதனால், அலை எழவில்லை. எனவேதான் சென்னையில் உள்ள தலித்துகள், அ.தி.மு.க. விற்கு வாக்களித்தார்கள். டாக்டர் ராமதாஸ் அவர்களை எதிர்க்கும் வேகத்தைக் குறைத்த திருமாவளவனுக்கு, வட மாவட்டங்களில் வாக்குவங்கியில் சரிவு ஏற்பட்டது. அதன் பலனை விஜயகாந்த் அனுபவித்தார். கோவை, ஈரோடு, சேலம் போன்ற மாவட்டங்களில் கூட மொழி மற்றும் சமூக ரீதியாக அருந்ததியின மக்கள், விஜயகாந்த் பக்கம் அணி சேர்ந்தார்கள். மதுரை மற்றும் அதற்கு தெற்கே டாக்டர் கிருஷ்ணசாமியின் வாக்கு வங்கி இரு கூரானது. ஒரு பாதி அவருக்கும்”, இன்னொரு பாதி தி.மு.க.விற்கும் போய்விட்டது. இப்படியெல்லாம் பிரியாமல் ஒரு முகமாக தலித் வாக்கு வங்கி இருந்திருந்தால், நடைபெற்ற தேர்தலில் மிகப் பெரிய அலை வீசியிருக்கும்'' ("தமிழன் எக்ஸ்பிரஸ்' 25.5.2006).

இந்தக் கணிப்புகள் ஏற்புடையதாக இருப்பது போல் தோற்றமளிக்கின்றன. ஆனால், பெரிய கட்சிகளின் கூட்டணி கிடைக்காததைக் காரணமாக்குவதும், பிற கட்சிகள் தலித் மக்களின் வாக்குகளைத் தட்டிப் பறித்தன என்பதும், ஒருபோதும் உண்மைக் காரணங்களாய் இருக்க முடியாது; இருக்கவும் அவசியமில்லை. தலித் அரசியல் இயக்கங்களின் வலுவான வாக்கு வங்கி, பெரிய கட்சிகளை நெருக்கடிக்குள்ளாக்கக் கூடியது. தலித் இயக்கங்களின் செல்வாக்கு இல்லாத இடங்களில் போக்கிடமின்றியே கவர்ச்சியின் வலையில் தலித் வாக்குகள் சென்று விழுகின்றன. இவைகளின் ஊடே பெரிய அலையை உருவாக்க வேண்டுமெனில், பெரும் கொந்தளிப்பு தேவை. ஆனால், தலித் அரசியலின் வேகம், இந்திய அளவிலேயே இன்று கொந்தளிப்பின்றி உள்ளது. கொந்தளிப்பற்ற நிலையைப் புரிந்து கொள்ள இந்திய அளவிலும், குறிப்பாக தமிழகத்தைக் கருத்தில் கொண்டும் தலித் அரசியல் இயக்கங்களின் செயல்பாட்டினை நாம் அலசிப்பார்க்க வேண்டியிருக்கிறது. இது குறித்து அடுத்த இதழில் விவாதிப்போம்.

தொலை தூரத்துக் கானகமொன்றிலிருந்து புறப்பட்டு வந்து, நம்முகம் தழுவும் காற்றென அனேக நேரங்களில் மொழிபெயர்ப்புப் படைப்புகள் இருந்து விடுகின்றன. எஸ்.வி.ஆர். மற்றும் வ. கீதா மொழிபெயர்த்து "அடையாளம்' வெளியீடாய் வந்துள்ள "மண்ணும் சொல்லும்' கவிதை நூலில் உள்ள கவிதைகளைப் படித்த போது, அவ்வித உணர்வே அலையாடியது. மண்ணின் நிறம், தன்மையும், அமைப்பும் வேறு வேறாக இருந்தாலும், அங்கிருந்து கிளம்பும் சொல் ஒரே மாதியாகத் தான் இருக்கிறது என்பதை சொல்கின்றன, இந்தக் கவிதைகள்.

ஈராக்கிலுள்ள குர்து இன மக்களின் விடுதலை உணர்வைப் பாடும் நபில் ஜனாபியின் கவிதையைப் போல

"சில ஆட்சியாளர்களோ சொல்லைச் சிறையில்
அடைக்கின்றனர்
பெண்களுக்கான சிறையில்.
அவளது கால்களில் விலங்கு பூட்டுகின்றனர்
அவளது வாயை அடைக்கின்றனர்
புகைப்பதற்குச் சிகரெட்டோ
படிக்கப் பத்திரிகையோ புத்தகமோ
ஏன், தனது உயிலை எழுத ஒரு ஏட்டையோ
பென்சிலையோகூட அவளுக்குத் தருவதில்லை
ஆனால் ஆட்சியாளர்களையும் அவர்களது அதிகாரத்தையும்
கவிதை வானத்தை மூடி மறைக்க முயலும்
ராடார்களையும் ஏவுகணைகளையும் மீறி
உலகெங்கும் சொல் தொடர்ந்து பறக்கும்
எந்த ஒரு விமானத் தளத்திலும் அது வந்து
இறங்குவதை எந்தச் சக்தியாலும் தடை செய்ய
முடியாது, தடுக்க முடியாது
ஏனெனில் சொல் என்பது ஒரு பறவை
சுதந்திரத்துக்கோ ஜனநாயகத்துக்கோ
நுழைவுச் சீட்டுத் தேவையில்லை அதற்கு''

கவிதையைப் புனையும் ஒரு கூடுபோல அதைக் கட்டும் சொல்லெனும் பறவை, எந்தெந்தக் கிளைகளிலிருந்தோ எழும்பிப் பறந்து வேறு கிளைகளுக்குப் போய்ச் சேர்ந்து விடுகிறது.

இந்தச் சொற்கள் சும்மாயிருப்பதில்லை. விசையூக்கம் கொண்டவை என்பதால், பெரும் சலனங்களை உருவாக்கி விடுகின்றன. தமிழ் நாவல் உலகுக்கும், சிறுகதைகளுக்கும், முற்போக்கு இலக்கியங்களுக்கும், பெண்ணிய, தலித்தியப் படைப்புகளுக்கும் மொழி பெயர்ப்புகளின் வழியே கிடைத்த புதிய பார்வையும், அனுபவம் உத்வேகமாக இருந்ததை யாராலும் மறுக்க முடியாது. இத்தொகுப்பின் கவிதைகள், அப்படியான உத்வேகத்தைக் கொண்டுள்ளன.

காலனி ஆதிக்கத்துக்கும், இன ஒடுக்குமுறைக்கும், சுரண்டலுக்கும், தீண்டாமைக் கொடுமைகளுக்கும், ஆண் ஆதிக்கத்துக்கும் ஆட்பட்டுப் போராடிக் கொண்டிருக்கின்ற மூன்றாம் உலக நாடுகளின் இக்கவிதைகள், கனலும் நெருப்புக் கட்டிகளைப் போன்ற கோபத்தையும், விடுதலையுணர்வினையும், நம்பிக்கையையும் அடிப்படையாகக் கொண்டுள்ளன.

தமது பலம் குறித்தோ, போரிடும் திறன் குறித்தோ, மரபுகள், குறித்தோ, அடையாளங்கள் குறித்தோ, நம்பிக்கைகள் குறித்தோ இக்கவிஞர்கள் அய்யம் கொள்ளவில்லை. அவர்களின் குறி விடுதலை. மனதின் ஆழம்வரை நிறைந்து பெருகிடும் அறச் சீற்றத்தின் துணை கொண்டு, அநீதிகளுக்கு எதிராகப் பெரும் நம்பிக்கையோடு குரல் எழுப்புகின்றார்கள் அவர்கள். இன அடையாளத்தையும், தொன்மங்களையும், தமக்கு ஏற்றதாகப் புனரமைப்பு செய்கின்றனர்.

"எழுது
நான் ஒரு அராபியன்
எனது அடையாள அட்டை எண் 50000
எனக்கு எட்டுக் குழந்தைகள்
அடுத்த கோடையில் ஒன்பதாவது
இதில் உனக்கென்ன கோபம்?''

என்று தொடங்குகிற மஹ்மூத் தார்விஷின் நீண்ட கவிதையில் தூக்கலாகத் தெரியும் இன அடையாளம், பரந்த மானுட சமூகத்தில் தன்னை ஒரு தனித்துவம் கொண்ட மனிதனாக அங்கீகரித்திடக்கோரும் உறுதியுடன் பேசுகிறது.

"பத்து மாதங்கள் பத்து நாட்கள்
நகரட்டும்
நான் மீண்டும் பிறப்பேன் அம்மா,
என் சிற்றன்னையின் வீட்டில்.
என்னை உன்னால்
அடையாளம் கண்டுபிடிக்க முடியாவிடில்
அம்மா,
என் கழுத்தில் இருந்த தூக்குக் கயிற்றின்
அடையாளத்தைத் தேடு''

புரட்சியாளன் ஒருவன் தூக்கிலிடப்பட்ட போது, பெயர் தெரியாத கிராமியப் பாடகர் ஒருவரால் பாடப்பட்ட இப்பாடல், மறுபிறப்பு பற்றிய நம்பிக்கையைக் கொண்டிருந்தாலும், அதைப் புதிய நம்பிக்கைக்கு ஏற்ப புனரமைக்கிறது.

"அழாதே, ஓ மனமே
அழுவது உனக்கு இயல்பாகிவிட்டது.
உனது கண்ணீரைச் சிறிது சிக்கச் செய்!
அதுதான் இப்பூமியில் நடக்கும் வாழ்விற்குச்
சிறிது சுவையூட்டுகிறது.''

பாஹினபாய் சவுதரியின் கவிதை, அழுகையையும் புன்னகையாக மாற்றும் மனநிலையைக் கோருகிறது! துளிர்க்கும் கண்ணீர்த் துளியின் வலியைக் காட்டிலும், அதன் மேல் பட்டு வைரமென மின்னச் செய்யும் ஒளியை ரசிப்பது ஏலாத காரியம்தான். ஆனால், பல நேரங்களில் அம்மனநிலை நமக்குத் தேவைப்படுகிறது. கண்ணீராகவே தொடரும் வாழ்வில் ஓர் இடை நிறுத்தம் அது.

இத்தொகுப்பின் பல்வேறு கவிதைகளிலும் நிறைந்திருக்கும் எதிர்ப்புணர்வும் கலகக்குரலும், நம்மை சட்டையைப் பிடித்து இழுத்து நிறுத்துபவை. அவ்வுணர்வுகளே இவைகளை இரண்டு மொழிகள் தாண்டியும் கவிதைகளாக்குகின்றன. இவைகளோடு இயல்பாகக் கவியுணர்வும், அழகுணர்ச்சியும் இணைந்து கொள்கின்றன.

"என்னை நீங்கள் சக்கிலியன் என்றழைக்கும்போது
என் மனம் புண்படுகிறது
உங்கள் வயிற்றில் உதைக்க விரும்புகிறேன்''

என்கிறார் குஜராத் தலித் கவிஞர் நீரவ் படேல். இதே எதிர்ப்புணர்வு, பெர்னார்ட்டாடீ என்கிற கருப்பினக் கவிஞனிடம் வேறு மாதியாக வெளிப்படுகிறது.

"வெள்ளை நிறம் விசேட நாட்களுக்குரியது
கறுப்பு நிறமோ ஒவ்வொரு நாளுக்கும்''

மனதை விட்டகலாதபடியான அழகினைக் கொண்ட வரிகளோடு பல கவிதைகள் இத்தொகுப்பில் உள்ளன. கவுதமனின் பிரிவுக்குப் பின் யசோதரையின் அழகை ஹீரா பன்சோடெ,

"என் இதயம் உடைகிறது
அந்தி மாலைப் பொழுதைப் போல மங்கிக் கொண்டிருக்கும்
ஒப்புயர்வற்ற உன் அழகைக் கண்டு...''

என்று எழுதி அபாரமான ஒரு காட்சியுலகத்துக்கு நம்மைக் கொண்டு போய் விடுகிறார்.

"ஆற்றின் இடையே ஒரு நாடோடிப் பெண் போல
வளைகிறது''
- சுதாங்ஷீ பங்களாதேஷ்

"தெருவில் நான் சம்மணம் போட்டு உட்காருவேன்
ஒரு போதும் எழ மாட்டேன்
உலகின் சிறைக் கம்பிகளும்
கைதிகளின் அடையாளச் சீட்டுகளும்
என் முன்னால் குவிக்கப்பட்டு
அவற்றை நான் தெருவில் உள்ள ஒட்டகம் போல்
மென்று அசை போடும் வரை
போலிஸ்காரர் கையிலுள்ள குண்டாந்தடிகளும்
ஆர்ப்பாட்டக்காரர்களின் தடிகளும்
அவர்களின் கைகளைவிட்டு நழுவி
மீண்டும் பூத்துக் குலுங்கும் மரங்களாகும் வரை
நான் எழமாட்டேன்''
- மொஹம்மத் எல் மகூத் சியா

என்று பலரின் பல வரிகளை இங்கே சொல்லிச் செல்லலாம். எதிர்ப்புணர்வின் கவிதைகள், எப்படி அழகுணர்ச்சியைப் பூண்டு கொள்கின்றன என்பதன் ரகசியத்தை இக்கவிதைகள் கொண்டுள்ளன. தமது கவிதைகளுக்குள் தீயை வைக்க நினைப்பவருக்கும்; மரித்துப்போன தமது கவிதைகளை உயிரூட்ட வழி தெரியாமல் திகைத்துக் கொண்டிருப்பவருக்கும் உடனடியாகப் படிக்க உகந்த தொகுப்பு இது.

நூல் : மண்ணும் சொல்லும் - மூன்றாம் உலகக் கவிதைகள்
தமிழாக்கம் : வ. கீதா, எஸ்.வி. ராஜதுரை; வெளியீடு : அடையாளம், 1205/1, கருப்பூர் சாலை, புத்தாநித்தம் - 621 310 பக்கங்கள் : 220
விலை : ரூ.115; பேசி : 04332 - 273444
Pin It