whatsapp webவாட்சப்பினால் கை பேசியின் நினைவகம் குறைந்து எப்போதும் “clear chat” கொடுப்பவரா நீங்கள்? அப்படியானால் இக்கட்டுரை உங்களுக்கானதுதான்.

நண்பர்கள், உறவினர்களுடனான வாட்சப் உரையாடல்கள் பின்னர் எப்போது படித்தாலும் மகிழ்ச்சியைத் தரும். எனவே clear chat கொடுக்காமல் நினைவகத்தை மேலாண்மை செய்ய சில எளிய வழிகளைத் தருகிறேன்.

நினைவகத்தை மிகவும் ஆக்கிரமிப்பது காணொளிகள்தான். இந்த வரிசையில் பின்னர் வருவன நிழற்படங்கள், மற்றும் ஆவணங்கள் (documents). ஆனால் நமது எழுத்து வடிவ உரையாடல்கள் மிக மிகக் குறைந்த அளவு நினைவகத்தையே எடுத்துக் கொள்கிறது. எனவே clear chat கொடுத்து அனைத்தையும் அழிக்கவேண்டிய அவசியமில்லை.

முதலில் காணொளி தானாக பதிவிறக்கம் செய்யும் வசதியை நீக்கி விடுங்கள். நிழற்படங்களும், ஆவணங்களும் வேண்டுமானால் தானாக பதிவிறக்கம் செய்து கொள்ளட்டும். இதற்கு வாட்சப்பில் settings > storage and data > media auto download என்பதில் photos, documents என்பதை மட்டும் தேர்வு செய்து கொள்ளுங்கள்.

இப்போது உங்களுக்கு வரும் காணொளிகளை விரும்பினால் மட்டும் பதிவிறக்கம் செய்து பாருங்கள். அனைத்து காணொளிகளையும் பார்ப்பதால் நேரமும் விரயமாகும். நினைவகமும் அதிகம் பிடிக்கும்.

இரண்டாவதாக நினைவகம் நிரம்பியிருக்கிறது என்று கருதும் போது, நீங்கள் இருக்கும் குழுமங்களுக்கு சென்று, வலது மேற்புறம் உள்ள மூன்று புள்ளிகளை தேர்வுசெய்து, group media விற்கு செல்லுங்கள். இதில் உங்களுக்கு தேவையில்லாத நிழற்படங்களையும், காணொளிகளையும் மட்டும் நீக்கி விடுங்கள். இதை தனிநபருடனான உரையாடல்களிலும் செய்யலாம்.

மூன்றாவதாக வாட்சப்பில் உள்ள தேவையில்லாத கோப்புகளை நீக்குவதெற்கென்றே இலவச செயலிகள் கிடைக்கின்றன. நான் பயன்படுத்தும் Whatsapp cleaner என்னும் செயலியின் இணைப்பினை இதோ தருகிறேன். https://play.google.com/store/apps/details?id=br.com.tattobr.android.wcleaner

இந்த செயலி முதலில் உங்களது வாட்சப் கணக்கில் உள்ள நிழற்படங்கள், காணொளிகள், ஆவணங்கள், ஒலிப்பதிவுகள் ஆகியவற்றின் எண்ணிக்கையையும், அவை ஆக்கிரமித்திருக்கும் நினைவக அளவையும் காண்பிக்கும், அதில் உள்நுழைந்து பார்த்தால் தனிப்பட்ட கோப்புகளை காண்பிக்கும்.

அதில் தேவையற்றவற்றை நீக்கி விட்டு தேவையானவற்றை மட்டும் தெரிவு செய்து வேறொரு கோப்பில் சேமித்து வைத்துக் கொள்ளலாம். பின்னாளில் அதுவும் அதிகமாக சேரும் நிலை வரும்போது கணிணிக்கு மாற்றிக்கொள்ளலாம்.

இத்தகைய வழிமுறைகளை பின்பற்றி நண்பர்கள் மற்றும் உறவினர்களின் விலைமதிப்பற்ற உரையாடல்களை பாதுகாத்து வைத்துக் கொள்ளுங்கள்.

- இரா.ஆறுமுகம்