தமிழ்ப் பண்பாட்டு வெளியில் மட்டுமின்றி, உலக இனக்குழு மக்களான சமூக அமைப்பில் கூட, ஏதோ ஒரு விதத்தில் தங்கள் உடல் உறுப்புகளைச் சிதைத்து கொள்ளுவதும். தாங்களின் வாழ்க்கைச் சடங்குகளாக நம்பிக்கையுடன் ஏற்றுக் கொண்டவர்களாக விளங்குகின்றனர். பல்லைக் கூராக்குவது, பச்சை குத்திக் கொள்வது, சூடு போட்டுக் கொள்வது, தீ மிதிப்பது, உடல் உறுப்பை சிதைப்பது அல்லது கத்தியால் குத்திக் கொள்ளுவது, மகள் திருமணத்திற்காக ஆட்காட்டி விரலை வெட்டிக் கொள்வது, மகள் திருமணத்தில் தாலி ஏறும் போது பார்க்க கூடாது, காதை நீளமாக வளர்த்துக் கொள்ளுவது இது போன்ற பல நம்பிக்கைகளைக் கொண்டவர்களாக உள்ளனர். இதில் ஒன்றான காது மடல்களைக் கீறி நீளமாக்குவது, அதாவது காது வளர்த்தல் அல்லது காது வடித்தல் என்ற வழக்கில் இதை கூறுகின்றனர். இது திருநெல்வேலி பக்கம் காது வளர்த்தல் என்ற பொருள் பதத்திலும் நாகர்கோவில், சாத்தான்குளம், திருச்செந்தூர் போன்ற பகுதிகளில் பெரும் வழக்காக காது வடித்தல் என்ற பெயரிலே புரிந்து கொள்ளப்படுகிறது.

old woman with paambadam காது வளர்த்தல் அதாவது காதை கீழ்ப்புறமாக நீளமாக வளர்த்துக் கொள்ளுதல் ஆகும். மேற்புறமாக வளர்வதைத் தான் வளர்தல் என்ற பொருள் பதம் உண்டு என்றாலும், காதைக் கீழ்ப்புறமாக நீளமாக வளர்த்து வடித்தல் என்ற நிலையை காது வளர்த்தல் என்ற பதத்தின் இங்குள்ளவர்கள் கூறுவதை அப்படியே பயன்படுத்தி உள்ளேன். இந்தக் காது வளர்த்தல் என்ற நிலை முழுக்க முழுக்க பெண்கள் மட்டுமே செய்து வருகின்ற ஒரு பண்பாட்டு அடையாளமாகக் காணப்படுகிறது. அதில் முடிச்சு, பாம்படம் மற்றும் இதர பிற தங்கத்திலான உலோக அணிகலன்களை அணியும் சமூக வழக்கம் இருந்துள்ளது. தற்போது இவை அரிதாகி வருகின்ற காலமாக மாறி வருகிறது. காது வளர்த்தல் என்ற நிலை பெண்களுக்கு மட்டும்தான் உரியதா? ஏன் காது வளர்க்கப்படுகிறது? சமூகத்தில் இதற்கான மதிப்பீடு என்ன? பரவலாக ஒரு பண்பாட்டு அடையாளமாக இருந்த காது வளர்த்தல் அதே பண்பாட்டு மனிதர்களால் அழிந்தோழிக்கப்படுகிறதேன்?. ஆண்களுக்கும் இருந்த காது வளர்த்தல் என்ற நிலை கால ஓட்டத்தில் மறைந்தோழிக்கப்பட்டு விட்டிருக்கின்றது. மேலும், காது குத்துவதற்கான நோக்கங்களும் அதன் அணிகலன்களைப் பற்றிய ஆய்வாக இக்கட்டுரை அமைகின்றது.

 காது குத்துதல் என்பது காதுகளில் கீழ்ப்புற சதையான காதுமடலில் துளையிட்டு கொள்ளுவதாகும். கம்மல், தோடு, தொங்கட்டான், ஜிமிக்கி (மராட்டியர்கள் வருகையால் வந்த அணிகலன்) போன்றவற்றில் ஏதாவது ஒன்றை பெண்ணின் தாய் வீட்டு கட்டாக, தாய் மாமன் சீராக, உறவினர் முன்னிலையில் காதணி விழாவாக எடுத்து, தாய்மாமன் மடியில் உட்கார வைத்து இரு காது மடல்களிலும் காது குத்துவதாகும். காது குத்துவதற்கு என்று பிரத்தியோகமாக கம்மாளர்களின் பொற்கொல்லர்கள் கம்மலில் உள்ள சுரை என்ற சிறிய குழல் போன்ற பகுதியை செம்பினால் ஆன இருமுனை ஊசி போன்ற சிறு ஊசியை (இவ்வூசியை இவர்களே தயாரித்து வைத்துள்ளனர்) அவற்றோடு இணைந்து, காது மடலில் (சோனை) மத்திய பகுதியைச் சுண்ணாம்பினால் சிறு அடையாளமிட்டு காது குத்துகின்றனர்.

இது பழைய வழக்கமாக உள்ளதால், இது பரவலாக எல்லா சமுதாயத்திலும் பிறந்த ஆண், பெண் குழந்தைகளுக்கு (இசுலாமிய சமுதாயத்தில் ஆண்களுக்கு காது குத்துவதில்லை) ஒரு ஆண்டுகள் முடிந்த நிலையில் தங்களது குல தெய்வத்திற்குச் கூட்டிச்சென்று (எல்லா சமூகத்தினரும் வணங்குவர்) அல்லது தங்களது தாய் தெய்வங்களான சமூக தெய்வங்களான கோயில்களுக்குச் கூட்டிச்சென்று (ஒரு சாதியினர் மட்டும் வணங்குவர்) அல்லது பெருந்தெய்வங்களான கோயில்களுக்கு கூட்டிச் சென்று இன்றும் காது குத்தும் மரபு தொடர்ந்து இருப்பதை அறிவீர். இதனை, “குழந்தைக்கு ஆறு அல்லது ஏழு மாதம் நடக்கும் போது காது குத்தும் சடங்கு நடத்தப்படுகிறது. இதற்காக அழைக்கப்படும் வல்லோன் ஒரு கூரிய ஊசிக்கொண்டு காதில் துளையிடுவான்”1 என்கிறார் எட்கர் தர்ஸ்டன். பிறந்த சில நாட்கள் ஆன நிலையிலும் காது குத்தி உள்ளனர். இதனை, ‘மராட்டியர் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு செல்லும் போது தங்கள் கைக்குழந்தைகளுக்கும் காது குத்துகின்றனர், நான் மும்பாயில் இருக்கும் போது நானே அப்படி சில குழந்தைகளுக்கு காது குத்தியுள்ளேன் என்கிறார்’ (தகவல் பொ.பாலசுப்பிரமணியன்.) காது குத்துதல் பொற்கொல்லரைத் தவிர குறவர்களும் பச்சை குத்துதல் செயலோடு காது குத்தியும் விட்டிருக்கின்றார்கள். (இவர்கள் நரிக்குறவர்கள் அல்ல தமிழ் நாட்டு வேட்டுவ இனம் சார்ந்த குறவர்) மேலும், 1806களில் பிராமண சமுதாயத்தினரிடம் குழந்தைகளுக்கு இரண்டு அல்லது மூன்று வயதில் இச்சடங்கு செய்கின்றனர் என்று துபுவா கூறுகிறார்.

 காது குத்து மரபுசடங்கு, ஏன்? சமூக அமைப்பில் முக்கியத்துவம் பெறுவதுடன் விழாவாக நடத்துவதையும் ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் காணமுடிகிறது. இது பழைய சமூக அடையாளமாக ஏற்றுக்கொள்ளப்பட்டு தொடர்ந்து வழி நடத்தப்படுகிறது. இதனை,’ பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சிகள் மிக பழமையான பழக்கம் என்கிறது.. மேலும், இது பேறு கால நம்பிக்கைக்குரிய சமயச் சடங்காகும். வெவ்வேறு வகையான நம்பிக்கைகள் தமிழ்ச் சமூக அமைப்பில் இடம் பெறுகின்றன. அவற்றில் பிள்ளைப் பேறு நோன்பு, பருவமடைதல் பற்றிய நம்பிக்கை, (இது பற்றிய ருதுசாஸ்திரம் என்ற ஒரு நூலே உள்ளது,பெண் எந்த இடத்தில் எந்த காலத்தில் எந்த நேரத்தில் எந்த நிமிடத்தில் யார் பார்க்க பூப்படைத்தல் என்பதைக் கூறுகிறது,மேலும் பூப்புச் சடங்குகளும் நம்பிக்கைகளும் என்ற தலைப்பில் ஆ.சிவசுப்பிரமணியன் அடித்தள மக்கள் வரலாறு என்ற பனுவலில் ஒரு கட்டுரையே தந்துள்ளார்.) சகுனம் சார்ந்த நம்பிக்கை, தீட்டு சார்ந்த நம்பிக்கை, திருமணம் பற்றிய நம்பிக்கை, வேளாண்மைப் பற்றிய நம்பிக்கை, மழை பற்றிய நம்பிக்கை, விலங்கு பற்றிய நம்பிக்கை இப்படித் தொடர்ந்து ஏராளமான சடங்குகளின் நம்பிக்கைகளால் கோர்க்கப்பட்டவையாகவே உள்ளனர்.

 நம்பிக்கை என்பது “காரண காரிய தொடர்புகளுக்கு உட்பட்டு சான்றுகளின் வாயிலாக நிறுவ முடிவதை நம்பிக்கை (Belief) என்றும், சான்றுகளின் அடிப்படையிலோ, காரணகாரிய தொடர்பின் வாயிலாகவோ, விளக்கம் முடியாதவற்றை மூடநம்பிக்கை(superstition) என்று வகைப்படுத்துவர்”2 என்கிறார் சு.சக்திவேல், தொன்றுதொட்டு வரும் இந்த நம்பிக்கைகளின் வாயிலாகவே பிறந்த குழந்தைக்குக் காது குத்துவதன் மூலம் ரணப்படுத்துவதாக எண்ணுவது கிடையாது. ஏன் இவ்வாறு செய்கின்றோம் என்பதையும் காரண காரியத்தோடு ஒருமுகப்படுத்துகின்றனர். காது குத்துவதன் மூலம் பிறந்த குழந்தையைக் குறையுள்ள பிள்ளையாக அல்லது ஒரு சொட்டு குருதியின் மூலம் பூமியில் வாழத் தகுதியை நிலைத்து நிற்பதற்கான சடங்காகவும் ஏற்றுக் கொள்ளுகின்றனர். பிறந்த குழந்தைகளுக்கு காது குத்துவதன் மூலம் துர்தேவதைகள் பிள்ளைகளின் உயிரை எடுத்துச் செல்வதைத் தடுப்பதாக அமைகிறது.

 மேலும் இதுபோன்ற வேறு நம்பிக்கைகளின் ஒன்று, காதுகளில் உலோக அணிகலன்களை அணிவிப்பது. இதனை, “காது குத்தும் போது ஏதேனும் உலோகத்தையும் அணிவிப்பர். தீமை தரும் ஆவிகள் தலை, வாய், மூக்கு, காது ஆகிய உறுப்புக்கள் வழியாக எளிதில் புகுந்து விடும் என்ற நம்பிக்கையில் காதில் துளையிட்டுத் தீய ஆவிகளை விரட்டும் சக்தியாக காதில் ஏதேனும் ஓர் உலோகத்தை அணிவித்தால் காது வழியாகத் தீய ஆவி நுழைவதைத் தடுத்து விடலாம் என்ற நம்பிக்கையில் இப்பழக்கம் ஏற்பட்டிருக்கலாம்”3 வில்லியம் க்ரூக் (William Crooke) என்பவர் கூறியதை சு.சக்திவேல் எடுத்துரைக்கிறார்.

 இதைப் போல தான் மூக்கு வாளி போடும் வழக்கமும் அமைந்துள்ளது. பெண்கள் மூக்கு குத்துவது தனிநிலையானாலும் ஆண்களுக்கு மூக்கு குத்தி மூக்கில் வளையம் போடுவது என்பது மூச்சை அடைக்கும் துர்தேவதைகளிடமிருந்து குழந்தைகளைக் காப்பாற்றுவதாகும். மூக்கின் வழியாக உயிர் மூச்சு தொடர்ந்து செயல்பட இச்சடங்கு அமைகிறது. அதாவது ஏதேனும் ஒரு வகையான உலோகத்தில் மூலம் துர்தேவதைகள் உயிர் மூச்சை எடுப்பதைத் தடுத்திடலாம் என்ற நம்பிக்கையே ஆகும். மூக்குவாளி என்பது மிகச்சிறிய அளவிலான தங்க கம்பியில் சிறிய தங்கத்திலான அரும்பு கோர்க்கப்பட்டு மூக்கில் ஒரு பகுதியில் மாட்டிவிடப்பட்டிருக்கும். இதுபோல காதிலும் அந்தோணியார் கோவிலுக்கு வேண்டிக் கொண்டு காதுவாளி மாட்டி விடப்பட்டிருக்கும். இதில் தங்க அரும்புக்கு பதிலாக சிவப்பு வண்ணத்தில் பாசி கோர்க்கப்பட்டிருக்கும். உயிர் பயத்தினால் வேண்டுதல் என்பது எல்லா மதம் சார்ந்த நிலையிலும் இருந்துள்ளதை உணர முடிகிறது. அரேபியர்கள் இயற்கையான இறப்பை மூச்சு மரணம் என்ற பெயரை வைத்து அழைக்கின்றனர். இதனை, “அரபுகளை பொறுத்தவரை காயப்பட்டு யுத்தத்தளத்தில் இறப்பது தான் கௌரவமான மரணம். ஆன்மா மூக்கின் வழியாக அன்றி காயத்தின் வழியாக வெளியேறியது என்ற இறப்புச்செய்திக்கே அவர்கள் மதிப்பளித்தனர். நோயுற்று இயற்கையாய் மரணிப்பதை, தொன்மை அரேபியன் இழிவுச் சாவெனக் கருதினான். இதனை அவர்கள் மூக்கு மரணம் என்றனர்”4 என்கிறார் ஆ. சுப்பிரமணியம்.

 இவ்வாறான பல்வேறு நம்பிக்கைக் குறித்தான மனித சமூக வாழ்க்கை இருந்துள்ளது. காது மடலில் பெரியதாக கீறி விடும் வழக்கமும் நம்பிக்கையின் அடிப்படையில் உருவாகி இருக்கக்கூடும், என்று சொல்லிக் கொள்ள மனம் உவந்தாலும், வரலாற்றுப் பக்கங்களில் இதனை வேறு ஒரு அடையாளத்தையும் பிரித்து காட்டுகிறது. தங்கத்தின் மேல் ஆசையுள்ளதாகவும் ஒருபக்கத்தில் காட்டிகிறார். இதனை துபுவா கூறும் போது, “காலப்போக்கில் இந்தத் துளை சிறிய பெரிய குச்சிகளை நுழைப்பதால் பெரியதாகும். பெண்களுக்கு இத்துளைகள் சற்று பெரியதாக இருக்கு வேண்டும். அப்போது தான் பல நகைகளை காதுகளில் போட்டுக்கொள்ள முடியும். இந்தியாவில், குறிப்பாக தென்னிந்தியாவில் , இத்துளைகள் ஒரு ஸ்பெயின் நாட்டு டாலரளவு கூட இருக்கும்”5 என்கிறார். மேலும் இதனை இன்னொரு வடிவில் வைத்து காணும் போது, “பாம்படம் எனப்படும் தமிழ்நாட்டு சூத்திரர் பிரிவைச் சேர்ந்த பெண்கள் அணிந்து கொள்ளும் காதணியினையே அவள் அணிந்து கொள்ள வேண்டும்”6 என்கிறார் எட்கர். இந்த மேற்கோள் தேவதாசிகள் வயது முதிர்வு அல்லது நோய் காரணமாக பணியிலிருந்த விலகும் போது, தங்கள் காதுகளில் போட்டிருந்த தோடைக் கழட்டிக் கொடுத்து விடுவதுடன் பின் இது போன்ற காது வளர்த்து பாம்படம் போட்டுக் கொள்ள செய்யப்படுகிறார்கள். ஆனால் அவர்கள் அப்படி செய்யப்பட்டதாக தகவல் இல்லை. இதன் மூலம் பாம்படம் போட்டுக் கொள்ளுவது எல்லா பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட வழக்கு அல்ல என்பதை உணர முடிகின்றது.

மேலும் பாம்படம் போட்டுக் கொள்ளுவதற்கான காது வளர்த்தலைப் பற்றிக் கூறும்போது, தமிழ்ச் சமூகத்தில் உயர்ந்த மதிப்பீடாகவும் நாகரீகமாகவும் கருதியதாக எ.மார்கோச்சிஸ் கூறுகிறார். இதில், “நீண்டு தொங்கும் காதுகளை உடையவர்களாக இருப்பது ஒரு காலத்தில் நாகரிகமாகவும் மதிப்புக்கு உரியதாகும் கருதப்பட்டது. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை கூட ஒரு பெண்ணின் காது நீண்டு தொங்கவில்லையானால் அவளைப் பார்த்துத் தேவதாசியா எனக் கேட்பர்”7 என்கிறார். இது திருநெல்வேலி பகுதியில் சூட்டுவதாக உள்ளது. மேலும், டையோசிஸ் மற்றும் பாதிரிமார்களின் குறிப்புகளில் பள்ளிகளுக்கு வந்த பல பெண்கள் தங்கள் பெண்பிள்ளைகளுக்கு காது வளர்க்கப்பட்டு இருப்பதாகவும் சிலர் அறுவை சிகிச்சை செய்துகொண்டு மாற்றிக் கொண்டதாகவும் கூறுகின்றனர். முத்தாலங்குறிச்சி காமராசு என்பவர் தன் தாயின் திருமணம் நடக்கும் போது காது வளர்த்து இருந்ததாகவும் தந்தைக்கு பிடிக்காததினால் பின்னர் அறுவை சிகிச்சை செய்து கொண்டதாகக் கூறுகிறார்.

 இதன் மூலம் ஒரு சமூக மேல்நிலையாக்கம் பெற்றுள்ளதை உணரமுடியும். காது வளர்த்தல் சாதாரணமாக ஏற்றுக்கொள்ள முடியாது, அதற்காக அவர்கள் பல சிரம்மங்களை சந்திக்க வேண்டியதுள்ளது. பக்குவம் பார்த்து, சீர் செய்து செப்பமுடன் கவனித்து வலியையும் வேதனையையும் தாங்கிக் கொண்டு. தங்கள் காதுகளை வளர்த்து இருக்கின்றனர். காது குத்துவது போல் அல்ல காது வளர்த்தல். குத்தப்பட்ட காதை சிறுவயதிலேயே கீழ்ப்பகுதியைக் கீறி விடுவதுடன் பஞ்சு வைத்து அது இணையாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். பனை ஓலைசுருள் கொண்டு பெரிதாக்கி அந்த துளையில் கனமான ஈயம், பித்தளை அல்லது இரும்பிலான உலோகத்தை வளையம் போல பயன்படுத்தி பெரிய அளவுடையதாக நீளமாக வளர்ப்பதாகும். இதனை, “காது வளர்ப்பது குறவன்; பச்சை குத்துவது கட்டுவச்சி (ஓலைக்கட்டு பிரித்துக் குறி சொல்பவள்) பிஞ்சு வயதிலேயே காதில் ஓட்டைப் போட்டு, பஞ்சு திணித்து, சிறுகச் சிறுக பஞ்சின் கனம் கூட்டி துவாரத்தைப் பெரிசுபடுத்தி ‘காது வளர்த்து கொடுக்கும்’ பொறுப்பு குறவனுக்கு"8 என்றுகூறுகிறார் இயக்குனர் சகி.கணேசன். இது மதுரை மாவட்டத்தின் செயலாக உள்ளது.

 மதுரையில் குறவர்கள் இதனைச் செய்வது போன்று திருநெல்வேலியில் கொல்லர்கள் இதனைச் செய்கின்றனர் இதற்கு தட்சணையாக தேங்காய் பழத்தோடு நெல் பருப்பு மற்றும் ரூபாய்ப் பெற்றுக்கொள்கின்றனர். தொடர்ந்து நாற்பது நாட்கள் கண்காணித்து மேற்பார்வைச் செய்வதாகவும் கூறுகிறார். மேலும் ஆசாரி கீறி விட்ட பின் தாங்களே பக்குவம் பார்த்துக் கொள்வதாகவும் சிலர் கூறுகின்றனர். பாம்படம் இருந்தால் ஆயுளுக்கு சாப்பாடு கிடைக்கும் என்பார். தங்கத்திற்கு ஆசைப்பட்டு மருமகளால் சாப்பாடு கிடைப்பதாக நகைச்சுவையோடு சமுதாயத்தில் மொழிந்து அழைக்கப்படுகின்றது. மேலும், “நெட்டி, மரச்சிம்பு, பனை ஓலைச்சுருள் ஆகியவற்றைத் துளையிலிட்டுத் துளையைப் படிப்படியே பெரிதாக்குவர்”9 என்று கூறும் எட்கர் தகவல் மேலும் வலு சேர்ப்பதாக அமைகின்றது. தமிழகத்தில் இஸ்லாமியர்களைத் தவிர்த்து பல்வேறு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் காதுகளை வளர்க்கின்றனர். நாடோடி சமூகம் சேர்ந்தவர்களைத் தவிர பரவலாக (பொருளாதாரத்தில் உயர்ந்தவர்கள்) அனைவரும் தங்கள் முன்னோர்கள் (பாட்டிமார்கள்) காது வளர்த்து பாம்படம் போட்டிருந்திருப்பதாகக் கூறுகின்றனர். முன்பு தங்கம், வெள்ளி, பித்தளை, வெண்கலம், இரும்பு போன்ற ஏதாவது ஒரு உலோகத்திலான காதணிகளைப் பயன்படுத்தி இருக்கின்றனர்.

 செறுமான் என்ற சாதியைப் பற்றிய குறிப்பில், “சுருளான ஈயக் காதணிகளை அணிவதால் காதுத் துளைகள் மிக விரிந்து போயிருக்கும்”10 என்கிறார் எட்கர். மேலும், “காதுகளில் மடிப்பில் ,மெல்லிய பித்தளை வளையங்கள்; ‘அலந்தோடி’ எனப்படும் எழுபது மெல்லிய பித்தளை வளையங்களும் ‘அடிக்கய’ எனப்படும் ஒரு கெட்டியான பித்தளை அணியும் தொளைகள் பெருத்த இரு காதுகளிலும் தொங்கும்”11 என்கிறார். அதைப்போல கொங்கு மண்டலத்தில் காதில் பெரிதாக்கும் படியாக மக்கள் செய்வதாக உள்ளது. இதனை, “காதை நீள இழுத்துப் பெரிதாக்கல் மதுரை, இராமநாதபுரம் மாவட்டங்களில் காணப்படுகிறது. கொங்கு நாட்டில் அந்த அளவு நீட்டல் இல்லை. ஆயினும் காதுத் துளை பலவகை நகைகளையும் அணிவதற்கேற்பப் பெரிதாக்கப்படுவதுண்டு”12 என்கிறார் கா.மீனாட்சிசுந்தரம். இதன் மூலம் தென் மாவட்டங்களில் காது வளர்த்தல் அளவுபோல கொங்கு மண்டலத்தில் இல்லை என்று கூறினாலும், காது துளையைப் பெரிதாக்குவதை உணர முடிகிறது.

தற்போது பல்வேறு கிராமங்களில் ஆய்வுக்குச் சென்ற ஊர்களில் தென்காசி மாவட்டத்தில் ஆய்க்குடி, சாம்பவர்வடகரை, சுரண்டை, வீரகேரளம் புதூர் போன்ற இடங்களில் இன்றும் மிக சிலர் மட்டுமே பாம்படம் போட்டுள்ளவர்களைப் பார்க்க முடிகிறது. மதுரையில் தங்க வேலை செய்யும் மாரியப்பன்(வயது45) என்பவர் சாத்தான் குலத்தைச் சேர்ந்தவர். பாம்படம் செய்யக்கூடியவர்களில் ஒருவராகத் திகழ்கிறார். ‘எப்போதாவது பாம்படம் செய்ய வருகிறது என்றும், குறைந்தது இருபது கிராமில் செய்வதாகவும், காது வளர்ப்பதை இப்போது செய்வதில்லை என்றும், பாம்படத்தில் கணக்கு வடிவியல் பெட்டி (cheamentory box )யில் உள்ள அனைத்தும் பாம்படத்தில் இடம்பெற்றிருக்கும் மேலும், காது கர்ப்பபைக் குறியீடாக குறிப்பதால் கர்ப்பபையை வலு சேர்க்க செய்வதாக இச்செயல் உள்ளது என்கின்றார்’. திருநெல்வேலியில் கூலக்கடை பஜாரில் பாம்படம் செய்யக்கூடியவர்கள் இருவருமே இறந்து விட்டார்கள்.

 காதணி காதில் அணியும் அணிகலன், காதுக்கு மட்டும் பல்வேறு விதமான காதணிகளைப் பயன்படுத்தியுள்ளனர். காதணி பொருத்தவரை ஆண், பெண் ஆகிய இருவரும் உண்டு. ஆண்களுக்கான கடுக்கன், குண்டலம்,தோடு, குழை போன்ற ஆபரணங்களை கனத்த வடிவத்தில் காதுகளில் மாட்டியிருக்கின்றனர். காது தொய்யும் படியாகவும் இருந்திருக்கின்றனர். புத்தர் மற்றும் சமண தீர்த்தங்கரர்கள் திகம்பரர், பாகுபலி, ஆழ்வார், நாயன்மார் போன்றோர் காதுகளை வளர்ந்த நிலையில் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளதை இன்றும் காணமுடிகிறது. இவ்வாறான ஒரு சமூகம் சார்ந்த மரபு ஆண்களானவர்களுக்கும் காது வளர்த்தல் என்ற நிலை இருந்துள்ளது. எல்.ரைஸ் என்பவர் சமணர் பற்றிய குறிப்பிடும்போது, “காதுகளில் மடல்கள் நீண்ட சதுரத் துளைகளையுடையவையாக நீண்டு கீழே தொங்கும் அமைப்புடையன”13 என்கிறார்.

நாம் இது குறித்து நோக்க வேண்டும் சமணம் பௌத்தம் அடையாளங்களில் காதுகளை வளர்த்துக் கொள்வதை. இது அந்தக் காலத்திலிருந்த வழக்கமாக கொள்ள முடிகின்றது. மேலும் ‘தோடுடைய சிவனே’ என்பதன் மூலம் தோடு அணியும் பழக்கம் ஆண்களுக்கும் இருந்துள்ளதை அறிய முடிகிறது. இராமானுஜர், மேலும் பல அரச சிலைகளில் காதுமடல்கள் பெரிய காதுகளோடு அணிகலன்களை அணிவிக்கப்பட்டு காதைப் பெரிதாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. காது துளைகளை பெரிதாக்க ‘கடிப்பிகு காதிற் கனங்குழை பெய்ர” என்கிறது பரிபாடல்1:34 “வயிரக் கடிப்பிட்டு வார் காது தாழ்ப் பெருக்கி” (நா.திவ்.பிர.142:1) என்கிறார் ஆழ்வார். இதைப் போல காது குழையைக் கழட்டி எறிந்த சங்கப்பாடல் நினைத்து கொள்ளலாம். பொது வழக்காக இருந்த காது வளர்த்தல் பிற்காலத்தில் பெண்களிடம் மட்டும் ஒப்படக்கப்பட்டுள்ளதா அல்லது கட்டாயப்படுத்தி ஒதுக்கப்பட்டதா பிராமண குலப்பெண்கள், தாசிமார்கள் காது வளர்த்து பாம்படம் அணிவதில்லை.

 பெண்களுக்கென்று பல்வேறு விதமான அணிகலன்கள் உள்ளதை பார்க்கலாம். இதில் காதணி மட்டும் இங்கே குறிப்பிடப்படுகிறது. “தோடு கொப்பு, ஓலை, குழை, இலை, குவளை, கொந்திளவோலை, கன்னப்பூ, முருகு, விசிறி முருகு, சின்னப்பூ, வல்லிகை, செவிப்பூ, மடல்”14 என்பதாகக் கூறுவதுடன் பல்வேறு விதமான அணிகலன்களை அட்டவணைப் படுத்துகிறார்கள். இதனை, “1.அட்டிகை 2. இட்டடிக்கை 3. ஓலை: (1)பொன் ஓலை (2) மாணிக்க ஓலை 4. கடிப்பினை (சந்திரபாணி அல்லது வைர ஓலை) 5. கடுக்கன்: (1)மணிக் கடுக்கன் (2) குவளைக் கடுக்கன் (3) சிந்திப்பூக் கடுக்கன் 6.கம்பி 7.கன்னப்பூ 8.குண்டலம்: (1) இரத்தினக் குண்டலம் (மணிக்குண்டலம்) (2) சர்ப்பக் குண்டலம் (பாம்புக் குண்டலம்) (3)சிம்மக் குண்டலம் (சிங்கக் குண்டலம்) (4)பத்திரக் குண்டலம் (5) மகரக் குண்டலம் (6)யானைக் குண்டலம் 9.குணுக்கு 10. குதம்பை: (1)நீலமணிக் குதம்பை (2) மாணிக்க மணிக் குதம்பை 11. குறடு காதின் வெளிப்புறமுள்ள குறடு என்னும் உறுப்பில் அணியும் அணிகலனாகும் 12.குழை: (1)ஒண்குழை (2) கனங்குழை (3)பூங்குழை (4)பொற்குழை (5) மகரக்குழை 13. குவளை: (1) பொற்குவளை (2) மணிக்குவளை (3) வட்டக்குவளை 14.கொப்பு 15.சன்னாவதஞ்சம் 16.சின்னப்பூ 17.செவிப்பூ 18.தடுப்பு 19.தண்டட்டி 20.தாளுருவி 21.தரிசரி 22.தோடு: (1)பூந்தோடு (2)பொற்றோடு (3)மணித் தோடு 23.நவசரி 24.நவகண்டிகை 25.நாகபடம் 26. பஞ்சசரி 27.பாம்படம் 28.பாம்பணி 29.புகடி 30.பூடி 31.மகரி 32.மஞ்சிகை 33.மடல் 34.மாத்திரை 35.முடிச்சு 36.முருகு: (1) மொன் முருகு (2)விசிறி முருகு (3) மணிமுருகு 37.மேலீடு 38.வல்லிகை 39.வாளி”15 இப்படிப் பெரிய பட்டியலைக் கொடுக்கிறார் அ.இராகவன்.

இவை முழுவதும் தங்கத்தால் செய்யப்படும் உலோகம் அணிகலன்களாகும். இவற்றில் சில அணிகலங்களை ஆண்களும் அணிந்திருந்துள்ளனர், காதணி மட்டும் இவ்வளவு தமிழர்களிடம் இருந்துள்ளதா என்று எண்ணும்போது வியப்பைத் தருகிறது. “காஞ்சிபுரம், மல்லப்பாடி, குடிகாடு, உறையூர், திருக்கம் புலியூர் மற்றும் அப்புக்கல்லு ஆகிய இடங்களில் அகழ்வாராச்சியில் சேகரிக்கப்பட்ட டெர்ராகோட்ட காது ஆபரணங்களைப் பற்றி கூறும்போது, சிறிய, நடுத்தர, கனமான என்ற மூன்று வகையான காதணிகளை பயன்படுத்தியுள்ளனர். சிறிய அளவான 1 செ.மீ மற்றும் 1.3 செ.மீ உடையதாகவும், நடுத்தர அளவிலான சராசரி 2.8 செ.மீ 3.25 செ.மீ, கனமான காதணிகளான 3.5 செ.மீ தடிமனம் 4 செ.மீ 5 செ.மீ உடையதாகவும் இருந்ததை கூறிப்பிடுகிறார் பாலாஜி.”16 இடைக்காலத்தில் தமிழக வரலாற்றில் மட்டும் பெரும் நிலக்கிழார்களாக மிராசுதாரர்கள் வாழ்ந்திருக்கின்றனர். இதனை தஞ்சை மராட்டியர் ஆட்சியில், “1807 இல் தஞ்சை அரசாட்சியில் 62048 மிராசுதார்கள் இருந்தனர்”17 என்கிறார் கே.எம்.வேங்கடராமையா.

இதன் மூலம் புதிய அணிகலன்கள் உருவாகி இருக்க வாய்ப்பும் உள்ளது. மேலும் மேட்டிமை தாண்டிய பொருளாதார இழந்த விளிம்பு நிலைக்கு தள்ளப்பட்ட வர்க்கத்திடம் தங்கம் அணிய உரிமை மறுக்கப்பட்டுள்ளதையும் உணரவேண்டும். ஒரே நேர்கோட்டில் சமூகம் இல்லை என்பதையும் காணலாம். செல்வ வளம் உள்ளவர்களுக்கு மட்டுமே செழித்து வாழ்ந்து இருந்திருப்பதைக் காணமுடிகிறது. இருந்த போதும் காதுகளில் தங்கமல்லாத வேறு உலோகங்களை அணிந்து இருக்கின்றனர்.

 காதுகள் வளர்வதற்கான வழிமுறையில் உடனடியாக காது வளர்வதில்லை. அதற்கான அவர்கள் ஒவ்வொரு அணிகலன்களாக (காதணி) போட்டு பெருகி விடுகின்றனர். ஒன்றுக்கு மேற்பட்ட அணிகலன்களைப் பயன்படுத்தி காதை வளர்த்தனர். காது வளர்ப்பதில் முதலில் கனத்த உலோகம் பயன்படுத்தி பின்னர் தண்டட்டி போட்டு காதை தொய்ய விடுவர். பின்னர் பாம்படம், முடிச்சி என்பதாக விரிந்து சாதாரணமாக 100 கிராம் அல்லது அதற்கு மேலும் உள்ள அளவுள்ள எடையை தங்கள் காதுகளில் தொங்க விட்டுக் கொள்கின்றனர். இதனால் தான் அந்தக் காதுத் துளை அளவைக் கூறும் போது, “பொதுவாக இவை முட்டை வடிவத்தில் இருக்கும். கை நுழையும் அளவிற்குக் கூட பெரிய துளைக் கொண்டதாக தொங்கும் இவை இருப்பது உண்டு”18 என்கிறார் துபுவா.

 தண்டட்டி பற்றிக் கூறும்போது க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி, “காதில் அணியும் ஒரு வகை வளையம்” என்கிறது. தண்டொட்டி என்பதுதான் தண்டட்டியாக வழங்கப்படுகிறதா என யோசிக்க வைக்கிறது. செந்தமிழ் அகராதி தண்டொட்டி எது என விளக்கும் போது, இதனை, “பெண்கள் காதணி வகை” என்கிறது. வேறுபல அகராதிகளாக சதுரகராதி, கழகத் தமிழ் அகராதி, அபிதான சிந்தாமணி, தமிழ் இலக்கிய அகராதி, நர்மதாவின் தமிழ் அகராதி, இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்ப் பெயரகராதி, போன்றவற்றில் பாம்படம் மற்றும் தண்டட்டி பற்றிய எந்தக் குறிப்பும் இல்லை. இதன் மூலம் அன்றைய காலத்தில் இவை உருவாக்கமில்லை என யோசிக்க வைக்கிறது. மேலும் இதைப் போல தரங்கம்பாடி அகராதி என்ற பெப்ரிசியஸ் அகராதி “ஒரு காதணி” என்றே இதனைக் குறிப்பிடுகிறது.

 காதிலிருக்கும் பாம்படத்திற்கு ஆசைப்பட்டு கள்ளர்கள் காதுகளை அறுத்து விடுவதாகக் கூறுகின்றனர். அதற்காக பெண்கள் வெளியூர் பயணத்தில் தங்கள் காதுகளில் பாம்படம் போன்ற அணிகலன்களைக் கழற்றி விட்டு பூட்டு அணிந்து சென்றதாகக் கூறுவதும் உண்டு. ஷோலே திரைப்படத்தில் வரும் கப்பர்சிங் காது மூக்கு வெட்டுவதை உண்மை சம்பவத்தின் அடிப்படையில் வந்தவைத் தான் . பெரும் வழக்கமாக இருந்த காது வளர்த்தல் சிறுகச் சிறுக நாகரிகம் காரணமாக சமூக நிலை மாற்றத்தினாலும் காது வளர்த்தலை வெறுத்து ஒதுக்கும் நிலையை அமைந்துள்ளது. இதனை, “இன்று தமிழகத்தில் பொதுமை உணர்ச்சி பெரிதும் பொங்கி வருகிறது. தமிழ்ப் பெண்கள் காதைக் கிழித்து பழக்குலை போல் பல காதணிகளான பாம்படம், முடிச்சு, தண்டட்டி, இட்டடிக்கை போன்றவைகளை அகற்றிக் காதில் ஒரு சிறிய தோடு மட்டும் அணிய முன் வந்து விட்டார்கள். முஸ்லிம் பெண் காதில் 10-க்கு மேற்பட்ட தொளைகளை இட்டு அதில் அணிந்துள்ள அலுக்குத்து என்னும் காதணியை அகற்றிக் காதில் ஒரு சிறு தோட்டை அணிய முன் வந்து விட்டார்”19 என்கிறார் அ.இராகவன். இதன் மூலம் இஸ்லாமிய பெண்களிடம் காது வளர்த்தல் இல்லை அதற்கு பதிலாக பல்வேறு காதணிகளான அலுகுத் என்ற வகையிலான காதணிகளை காதுகளில் மேற்புறப் பகுதி எங்கும் பார்க்க முடிகிறது. இது தற்போது இல்லாமல் போனது.

 காது வளர்த்து பாம்படம் போட்டுக் கொள்ளுவது கூட கிராமப்புறங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாக மட்டுமே உள்ளது. இப்போது காது வளர்த்து போட்டிருக்கும் முதிய பெண்டிர்கள் அரிதாக வருகின்றனர். ஒரு காலத்தில் சமூகத்தின் அடையாளமாக மதிப்பீட்டில் உயர்வாக இருந்த காது வளர்த்தல் இன்னும் சில தலைமுறைகள் கடந்தால் பாடத்தில் மட்டுமே படிக்க வேண்டிய நிலை வரும். சமூகம் எப்போதும் தங்களின் இருப்பை மாற்றியப்படி பயணிப்பதால் காலத்தின் முன் மறைந்து கிடக்கும் காது வளர்த்தல் அல்லது காது வடித்தல் நவ நாகரிக வாழ்வாள் மறைந்து கொண்டே உள்ளது..

குறிப்புகள்

  1. எட்கர் தர்ஸ்டன், தென்னிந்தியக் குலங்களும் குடிகளும்,தொ.2,ப.97
  2. சு.சக்திவேல், நாட்டுப்புற இயல் ஆய்வு,ப.189
  3. மேலது., ப.195
  4. மேற்கோள்; ஆ.சிவசுப்பிரமணியன், பண்டையத் தமிழ்ச் சமூகத்தில் இறந்தோர் வழிபாடும் முன்னோர் வழிபாடும், ப.38
  5. அபே ஜெ.எ.துபுவா, இந்திய மக்கள் பழக்க வழக்கங்கள்- சடங்குகள்-நிறுவனங்கள், ப.109
  6. எட்கர், மேற்கூறிய நூல்., ப.182
  7. மேலது.,ப.168
  8. சுகி.கணேசன், வாக்கப்பட்ட பூமி, ப.139
  9. எட்கர், மேற்கூறிய நூல்.,ப.97
  10. மேலது., ப.83
  11. மேலது., பக்கமும் இடமும்
  12. கா,மீனாட்சிசுந்தரம், கொங்கு நாட்டில் உடலில் வரைதல் கலை-குறிப்பாக பச்சை குத்தல், ப.36
  13. எட்கர், மேற்கூறிய நூல்.,ப.546
  14. அ.இராகவன், தமிழ் நாட்டு அணிகலங்கள், ப.166
  15. மேலது., பக். 193-204
  16. P.D.Balaji, A Study of Ear Ornaments in Ancient Tamilnadu, ( கல்வெட்டு காலாண்டிதழ்:65 ஜனவரி 2005)
  17. கே.எம்.வேங்கட்ராமையா, தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும், ப. 397
  18. அபே ஜெ.எ.துபுவா, மேற்கூறிய நூல்.,ப. 202
  19. அ.இராகவன், மேற்கூறிய நூல், ப.17

முனைவர் மா.ச.இளங்கோமணி,

உதவிப் பேராசிரியர்,

தூய சவேரியார் தன்னாட்சிக் கல்லூரி,

பாளையங்கோட்டை