மொழியைப் பிழையின்றியும், தவறின்றியும் பேசுவதற்கும், எழுதுவதற்கும் கருவியாக இருப்பதுவே இலக்கணம். பிறர் தவறின்றிப் புரிந்து கொள்வதற்கும், பிழையின்றிக் கருத்தைத் தெளிவாக வெளியிடுவதற்கும் துணைபுரிவது இலக்கணம். தமிழ் இலக்கணம் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்ற ஐந்து பிரிவுகளைக் கொண்டதாகும்.

எழுத்துகளின் எண், பெயர், முறை, பிறப்பு ஆகியவற்றின்தன்மைகளைக் கூறுவது எழுத்து இலக்கணமாகும். சொல் இலக்கணம் என்பது பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் ஆகியவற்றின் தன்மைகளைக் கூறுவதாகும். பொருள் இலக்கணம் அகப்பொருள், புறப்பொருள் என இரண்டு வகைப்படும்.

அகப்பொருள் பிரிவுகள்

அகப்பொருள் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்து திணைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

குறிஞ்சி : மலையும் மலை சார்ந்த இடமும்

முல்லை : காடும் காடு சார்ந்த இடமும்

மருதம் : வயலும் வயல் சார்ந்த இடமும்

நெய்தல் : கடலும் கடல் சார்ந்த இடமும்

பாலை : குறிஞ்சியும், முல்லையும் தம் இயல்பில் திரிந்திருத்தல்.

யாப்பிலக்கணம்

(யாப்பு - செய்யுள்)

எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை என்பன செய்யுளின் உறுப்புகளாகும்

அணி இலக்கணம்

செய்யுள், உரைநடை ஆகிய இரண்டிலும் காணப்படுகின்ற சொல், பொருள்களின் அழகினை வகைப்படுத்திக் கூறுவது அணி இலக்கணம் எனப்படும்.

தமிழ் எழுத்துகள் முதல் எழுத்துகள், சார்பெழுத்துகள் என இருவகைப்படும். மொத்தம் 247 எழுத்துகள்.

உயிரெழுத்து - 12

மெய்யெழுத்து - 18

உயிர்மெய் எழுத்து - 12 X 18 = 216

ஆய்த எழுத்து - 1

மொத்தம் - 247

மாத்திரை

ஒவ்வோர் எழுத்தையும் ஒலிக்கும் கால அளவிற்கு மாத்திரை என்பது பெயராகும். இயல்பாகக் கண் இமைப்பதும், கை நொடிப்பதும் ஒரு மாத்திரை எனக் கூறுவர்.

உயிர்க் குறில் - 1 மாத்திரை

உயிர்மெய்க் குறில் - 1 மாத்திரை

உயிர் நெடில் - 2 மாத்திரை

உயிர்மெய் நெடில் - 2 மாத்திரை

மெய் எழுத்து - 1/2 மாத்திரை

குற்றியலுகரம் - 1/2 மாத்திரை

குற்றியலிகரம் - 1/2 மாத்திரை

ஆய்த எழுத்து - 1/2 மாத்திரை

உயிரளபெடை - 3 மாத்திரை

ஐகாரக் குறுக்கம் - 1 மாத்திரை

ஒளகாரக் குறுக்கம் - 1 மாத்திரை

ஒற்றளபெடை - 1 மாத்திரை

மகரக் குறுக்கம் - 1/4 மாத்திரை

ஆய்தக் குறுக்கம் - 1/4 மாத்திரை

உயிரெழுத்து

மொழிக்கு உயிராகத் திகழ்பவை. ‘அ’ முதல் ‘ஒள’ முடிய 12 எழுத்துகள். அ, இ, உ, எ, ஒ ஆகிய ஐந்தும் குறுகி ஒலிப்பதனால் குற்றெழுத்து எனப்படும். ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள ஆகிய ஏழும் நீண்டு ஒலிப்பதனால் நெட்டெழுத்து எனப்படும்.

சுட்டெழுத்து

அ, இ, உ என்னும் மூன்று எழுத்துகளும் ஒரு பொருளைச் சுட்டிக் காட்டும் வகையில் சொல்லின் முதலில் வந்தால், அவை சுட்டெழுத்துகள் எனப்படும்.

மெய்யெழுத்து

இவை 18 ஆகும். வல்லினம், மெல்லினம், இடையினம் என மெய்யெழுத்து மூன்று வகைப்படும்.

க் ச் ட் த் ப் ற் - வல்லின மெய்

ங் ஞ் ண் ந் ம் ன் - மெல்லின மெய்

ய் ர் ல் வ் ழ் ள் - இடையின மெய்

உயிர்மெய் எழுத்து

உயிரெழுத்தும் மெய்யெழுத்தும் சேர்ந்து பிறப்பது உயிர்மெய் எழுத்தாகும். இவ்வாறு 18 மெய்யெழுத்துகளும், 12 உயிரெழுத்துகளுடன் சேர்ந்து 216 உயிர்மெய் எழுத்துகள் தோன்றுகின்றன.

குற்றியலுகரம்

வன்தொடர்க் குற்றியலுகரம்

எடுத்துக்காட்டு (எ. கா.) - விளக்கு, தச்சு, பட்டு, முத்து, உப்பு, காற்று ஆகியன வன்தொடர்க் குற்றியலுகரம் ஆகும்.

குரங்கு, மஞ்சு, கூண்டு, மருந்து, இரும்பு, கன்று இவையனைத்தும் மென்தொடர்க் குற்றியலுகரங்களே!

எய்து, சார்பு, சால்பு, போழ்து ஆகியன இடைத்தொடர்க் குற்றியலுகரங்கள்.

முற்றியலுகரம்

குற்றியலுகரங்கள் தவிர்த்த அனைத்தையும் முற்றியலுகரங்கள் என்று கூறிடலாம்.

புணர்ச்சி

ஒரு சொல்லோடு இன்னொரு சொல்லோ உருபோ வந்து சேரும்பொழுது, இடையில் ஏற்படும் மாற்றங்களை ‘புணர்ச்சி’என்கிறோம். முதலில் நிற்கும் சொல்லை ‘நிலைமொழி’ என்றும், வந்து இணையும் சொல்லை ‘வருமொழி’ என்றும் கூறுவர்.

சொல்

ஓர் எழுத்து தனித்து நின்றோ இரண்டு முதலாகத் தொடர்ந்து நின்றோ பொருளை உணர்த்துவது சொல். சொற்களைப் பெயர்ச் சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் என்று நான்காகப் பிரிக்கலாம்.

பெயர்ச் சொல்

ஒரு பொருளின் பெயரைக் குறிக்கும் சொல் பெயர்ச்சொல் எனப்படும். அது திணை, பால், எண், இடம், காலம், வேற்றுமைகளை ஏற்று வரும்.

திணை : இரண்டு பிரிவுகள் - உயர்திணை, அஃறிணை

பால் : இது 5 வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

ஆண்பால், பெண்பால், பலர்பால் (உயர்திணை) ஒன்றன்பால், பலவின்பால் (அஃறிணை)

எண் : இது ஒருமை, பன்மை என இருவகைப்படும்.

இடம் : இது தன்மை, முன்னிலை, படர்க்கை என மூன்று வகைப்படும்.

தன்மை - நான், யான், நாங்கள், யாம்

முன்னிலை - நீ, நீர், நீங்கள்

படர்க்கை - அவன், அவள், அவர், அது, அவை

இவை அனைத்துக்கும் பொதுப்பெயர்கள் தான், தாம், எல்லாம்.

காலம் : இறந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் எனக் காலம் மூன்றாகும்.

வேற்றுமை

பெயர்ச்சொல்லின் பொருளை வேறுபடுத்திக் காட்டுவது வேற்றுமை எனப்படும். வேற்றுமை எட்டு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

முதல் வேற்றுமை - எழுவாய். இதற்கு உருபு இல்லை. பெயரே உருபு.

இரண்டாம் வேற்றுமை - உருபு : ஐ

மூன்றாம் வேற்றுமை - உருபுகள் : ஆல், ஆன், ஒடு, ஓடு, உடன், கொண்டு

நான்காம் வேற்றுமை - உருபு : கு

ஐந்தாம் வேற்றுமை - உருபுகள் : இல், இன்.

ஆறாம் வேற்றுமை - உருபுகள் : அது, உடைய

ஏழாம் வேற்றுமை - உருபு : கண்

எட்டாம் வேற்றுமை - விளிப் பொருளில் வருவது. உருபு இல்லை.

வாக்கியங்களில் வேற்றுமை உருபு விரிந்து அல்லது மறைந்து வரும். வேற்றுமை உருபு விரிந்து வருதல் வேற்றுமை விரியாகும். வேற்றுமை உருபு மறைந்து வருதல் வேற்றுமைத் தொகையாகும்.

வேற்றுமை விரி - பாலைக் குடி

வேற்றுமைத் தொகை - பால் குடி

வினைச்சொல்

ஒரு பொருளின் தொழில் நிகழ்ச்சியை உணர்த்தும் சொல்வினைச்சொல் ஆகும். அது காலத்தைக் காட்டும். ஆனால் வேற்றுமை உருபை ஏற்காது. இது தெரிநிலை வினை, குறிப்பு வினை என இருவகைப்படும்.

வினைச்சொல் வகைகள்

வினைச் சொல் முற்றுவினை, எச்சவினை என இருவகைப்படும். பொருள் முற்றி நிற்பது முற்று வினையாகும்.

(எ-டு) மரம் சாய்ந்தது - தெரிநிலை வினைமுற்று

மரம் பெரியது - குறிப்பு வினை முற்று

பொருள் முழுமை பெறாமல் எஞ்சியிருப்பது எச்ச வினையாகும். எச்சம் பெயரெச்சம், வினையெச்சம் என இருவகைப்படும்.

(எ-டு) சென்ற மனிதன் - இதில் ‘சென்ற’ என்பது முற்றுப் பெறாத எச்சச் சொல். மனிதன் என்னும் பெயர்ச்சொல்லைத் தழுவி நிற்பதால் பெயரெச்சம். இவை முக்காலங்களிலும் வரும்.

 (எ-டு) சென்று வந்தேன் - இதில் ‘சென்று’ என்பது எச்சச் சொல். வந்தேன் என்னும் வினைமுற்றைத் தழுவுவதனால் இது வினையெச்சம்.

எதிர்மறைப் பெயரெச்சம்

(எ-டு)

விளையாத பயிர்

வரம் வேண்டாத தவம்

படிக்காத மேதை

வாடாத செடி

இந்தத் தொடர்களிலுள்ள ‘விளையாத, வேண்டாத, படிக்காத, வாடாத’ என்னும் சொற்கள் பெயரெச்சங்கள். இருப்பினும் அவை எதிர்மறைப் பொருளைத் தருவதனால் அவற்றை‘எதிர்மறைப் பெயரெச்சங்கள்’ எனக் கூறுவர்.

ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

(எ-டு)

விளையாப் பயிர்

வரம் வேண்டாத் தவம்

படிக்கா மேதை

வாடாச் செடி

இங்கு நிலை மொழிகளில் ‘த’ என்ற ஈற்றெழுத்து இன்றி அமைந்துள்ளது. இவ்வாறு ஈற்று எழுத்து ‘த’ இல்லாமல் வரும் எதிர்மறைப் பெயரெச்சங்களை ‘ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சங்கள்’ என்று வழங்குவர்.

வியங்கோள் வினைமுற்று

மரியாதையுடன் ஏவுதல் வியங்கோள் வினைமுற்று ஆகும்.

(எ-டு) வாழ்க.

இடைச்சொல் தனித்து வராமல் பெயர்ச் சொல், வினைச் சொல் ஆகியவற்றைச் சார்ந்து வருவது இடைச்சொல் ஆகும்.

அவை யாவன :

வேற்றுமை உருபுகள், விகுதிகள், இடைநிலைகள், சாரியைகள், உவம உருபுகள், ஏ, ஓ, என, என்று, உம், மற்று, மற்றை, கொல், மா, யா, கா, பிற, அந்தோ, ஐயோ.

உரிச்சொல்

பெயர்ச்சொல்லையும், வினைச்சொல்லையும் விட்டு நீங்காமல் செய்யுளுக்கு உரிமை பூண்டு வரும் சொல் உரிச்சொல்லாகும்.

(எ-டு.) சால, நனி, கழி, தவ, கூர் - இவை ‘மிகுதி’ என்னும் ஒரு குணம் தழுவிய பல உரிச்சொற்கள். இவை அனைத்தும் ‘மிகுதி’என்ற ஒரே பொருளைத்தான் தருகின்றன.

(எ-டு.) சாலவும் நன்று

நனி நாகரிகர்

அருள் கூர்ந்து

கழி நகை

பல குணம் தழுவிய ஓர் உரிச் சொல்

‘கடி’ என்ற ஒரே சொல் இடத்திற்கேற்றவாறு வெவ்வேறு பொருளில் வருவதனால், இது பல குணம் தழுவிய ஓர் உரிச் சொல் எனப் பெயர் பெற்றது.

கடி மலர் - வாசனை உள்ள மலர்

கடி வாள் - கூர்மை உள்ள வாள்

கடி நகர் - காவல் பொருந்திய நகர்

கடி முரசு - ஒலிக்கும் முரசு

கடி மிளகு - காரமான மிளகு

(முனைவர் மணிமேகலை புஷ்பராஜ் எழுதிய 'தமிழில் ஒற்றுப் பிழையின்றி எழுத மிக எளிய விதிகள்' என்ற புத்தகத்திலிருந்து)