உலகிலேயே மிக உயரமான மனிதர் யார் என்பது பற்றிப் பலர் கூறப்பட்டு வந்தாலும் மிகவும் உயரம் கொண்ட மனிதன் என்று தெளிவாகப் பதிவுச் சான்றோடு கொள்ளத்தக்கவர் அமெரிக்காவில் இல்லினாயிசிலி (IIlinois) ஆல்டனில் (Alton) 12.2.1918-இல் பிறந்த ராபர்ட் பெர்சிங் வாட்லோ (Robert Pershing Wadlow) என்பவராவர்.

இளமையாய் இருக்கும்போது வாட்லோ இயல்பு கடந்த வேகத்தில் வளரத் தொடங்கினார். தன் ஐந்தாவது வயதில் 5 அடி 4 அங்குலம் இருந்தார். 9 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் 7 அடி 5 அங்குல உயரம் உள்ளவரானார்.

செயிண்ட லூயிஸ் மிஸ்ஸோரியில் (St Louis Missouri) வாஷிங்டன் பல்கலைக்கழகத்திலுள்ள மருத்துவப் பள்ளியில் (Washington University’s School of Medicine) உடலுறுப்பியல் இணைப்பேராசிரியராய் (Associate Professor of Anatomy) டாக்டர் சி.எம். சார்லஸ் (Dr. C.M. Charles) என்பவர் வாட்லோவை 27.6.1940 ஆம் ஆண்டு அளந்தார். அந்நேரத்தில் வாட்லோ 8 அடி 11.1 அங்குலம் இருந்தார்.

அவர் தம் இருபத்திரண்டாவது வயதில் இன்னும் வளர்ந்து கொண்டிருந்த நேரத்தில் 15.7.1940 ஆம் நாளில் உயிர் நீத்தார்.

அவருடைய சாவுக்குக் காரணம் காலில் கடுமையான வீக்கம் ஆகும். காலில் புறத்தோலுக்கு அடுத்துக் கீழுள்ள இழைமத்தின் அழற்சியை cellulitis எனச் சொல்லி இந்த வீக்கத்திற்குப் பெயர் தந்து காரணம் கூறுகின்றனர். தாங்கிக்காக அணிந்திருந்த உறுப்புகளின் இறுக்கக்கட்டு இந்தக் கொடுமையான வீக்கத்தைச் செய்தது.

வாட்லோ இறக்கும்போது 439 பவுண்ட் (Pounds) எடையும் கால் அணி (Shoes) 18.5 அங்குல நீளமும் கைகள் மணிக்கட்டிலிருந்து நடுவிரல் நுனிவரை 12.25 அங்குல நீளமும் கொண்டவராய் இருந்தார்.