தேவையான பொருட்கள்:

Omapodiகடலை மாவு - அரைக் கிலோ
அரிசி மாவு - கால் கிலோ
ஓமத்தண்ணீர் - கால் லிட்டர்
லெமன் கலர் - கால் தேக்கரண்டி
உப்பு - ஒன்றரை மேசைக்கரண்டி
பெருங்காயத்தண்ணீர் - 25 மில்லி

செய்முறை:

கடலை மாவை சலித்து எடுத்து ஒரு பாத்திரத்தில் கொட்ட வேண்டும். அத்துடன் சலித்த அரிசி மாவினையும் சேர்க்க வேண்டும். மாவின் மத்தியில் குழி போன்று செய்து கொண்டு அதில் வண்ணப் பொடியைப் போட வேண்டும். அத்துடன் உப்பையும் சேர்க்க வேண்டும். பின்னர் பெருங்காயத்தண்ணீர் ஊற்ற வேண்டும். பிறகு ஓமநீரை ஊற்றி அனைத்தையும் ஒன்று சேர பிசைய வேண்டும். சிறிது சிறிதாக சாதாரண நீர் சேர்த்து மாவினை மிகவும் இளக்கமாக இல்லாதவாறு பிசைந்து கொள்ள வேண்டும். பிசைந்த மாவினை ஓமப்பொடி அச்சில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

வாணலியில் எண்ணெய் விட்டு கொதித்ததும், அதனுள் அச்சினை விட்டு திருகி, ஓமப்பொடியினை பிழிய வேண்டும். கடைகளுக்கு செய்யும்போது சற்று பெரிய வகை அச்சினை பயன்படுத்துவார்கள். வீடுகளுக்கு முறுக்கு அச்சினை பயன்படுத்திக் கொள்ளலாம். உள்ளே இடும் அச்சு மாத்திரம் மெல்லிய துளைகள் கொண்ட (ஓமப்பொடி) அச்சாக இருக்கவேண்டும்.

வாணலி முழுவதும் ஓமப்பொடி படரும் அளவிற்கு பிழிந்து விட வேண்டும். பிழிந்த மாவு உடனேயே வெந்து மேலே வலை போன்று மிதக்க ஆரம்பிக்கும். மிகவும் மெல்லியதாக இருப்பதால் விரைவிலேயே வெந்து விடும். சாரணி கொண்டு அதனை மடித்து எண்ணெய்யில் இருந்து எடுக்க வேண்டும். சிறிது நேரம் எண்ணெய்க்கு நேராக சாரணியைப் பிடித்து எண்ணெய் வடியவிட வேண்டும். பின்னர் எண்ணெய் வடிகட்டியில் போட்டு மீதமுள்ள எண்ணெய்யையும் வடியவிட வேண்டும். இப்போது ஓமப்பொடி தயார்.