தேவையான பொருட்கள்:

1.  பச்சரிசி.......................1/2 லி
2. வெல்லம்.....................1/4கிலோ
3. ஏலம்.............................4
4. கசகசா(தேவையானால்)..........1/2 தேக்கரண்டி
5. சுக்கு..........................சிறு துண்டு
6. பொரிக்க எண்ணெய்......1 /4 லி

செய்முறை:

பச்சரியை நீர் ஊற்றி கழுவ வேண்டும். அதனை அப்படியே ஒரு 5 நிமிடம் வைத்திருக்க வேண்டும். ஏலத்தைப் பொடி செய்து கொள்ளவும். பின்னர் அரிசியை நீரின்றி மிக்சியில் போட்டு அரைத்து சலிக்க வேண்டும். சலித்த மாவு உலர்ந்து போகாமல் இருக்க ஒரு பாத்திரத்தில் போட்டு, அதனை கையால் அமுக்கி வைத்து, மூடி வைக்க வேண்டும். பிறகு ஒரு கனமான பாத்திரத்தில் வெல்லத்தை உடைத்துப் போட்டு, அது மூழ்கும் வரை, மிகக் குறைவாகவே (கால் டம்ளர் போதும்) நீர் ஊற்றி, அதனை அடுப்பில் வைத்து வெல்லப் பாகு காய்ச்ச வேண்டும்.

athirasam_370பாகு காய்ச்சும்போது, ஒரு சின்ன தட்டில் கொஞ்சம் நீர் வைக்க வேண்டும். இதில் வெல்லப் பாகை அவ்வப்போது ஒரு சொட்டு விட்டு கரைகிறதா என பார்க்க வேண்டும். வெல்லப் பாகு நீரில் கரையாமல் உருண்டு வரும்போது, பாகை இறக்கி வைத்து அதில் மாவை கொஞ்சம் கொஞ்சமாக கொட்டி கிளற வேண்டும். மாவு முழுவதும் கொட்டி கிளறியதும், அதில் கசகசா + ஏலப் பொடி போட்டு நன்கு கலக்கவும். இந்த மாவை ஓரிரு நாட்கள் அப்படியே எறும்பு வராமல் பாதுகாப்பாக வைக்கவும். பின்னர் உங்களுக்கு வேண்டும்போது, அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.

கையில் சிறிது எண்ணெய் தொட்டுக்கொண்டு ஒரு சின்ன கொய்யாப் பழம் அளவு அதிரச மாவை எடுத்து உருட்டவும். பின் அதனை ஒரு பாலிதீன் பேப்பரில் வைத்து மெலிதாக வடைபோல அதிரசம் தட்டவும். (மாவு ஒட்டாமல் எடுக்கவே பாலிதீன் பேப்பர் ). அதில் மூன்று விரல்களால் சிறு ஓட்டை போடவும். இது அதிரசம் எளிதில் வேகவும், பார்க்க அழகாகவும் இருக்க உதவும். தட்டிய அதிரசத்தை உடையாமல் எடுத்து காய்ந்த எண்ணெயில் போடவும். தீயை சீராக எரிய விடவும். இல்லை எனில் அதிரசம் கருகி விடும். ஒரு பக்கம் சிவந்து வெந்ததும், அதிரசத்தைத் திருப்பி விடவும்.

இரு பக்கமும் வெந்ததும் அதிரசத்தை எடுத்து அதிலுள்ள எண்ணெய் வடிய ஒரு பாத்திரத்தில் சாய்வாகவும், கீழே பேப்பரும் போட்டு வைத்தால், அதிகப்படியான எண்ணெய் வடிந்து விடும். எப்படி இருந்தாலும், அதிரசம் கொஞ்சம் எண்ணெய் குடித்திருந்தால் மட்டுமே, மெதுவாக, சுவையாக இருக்கும். மாவை ஒரு வாரம் கூட வைத்திருந்து சுடலாம், இன்னும் மெதுவாக, சுவை மிகுந்து இருக்கும். ஆனால் அதனை குளிர் பதனப் பெட்டியில் தான் வைக்க வேண்டும். அப்போதுதான் மாவு புளிக்காமல் இருக்கும்...!

சுட்ட அதிரசத்தை சூட்டோடு சாப்பிட்டுப் பாருங்களேன். சுவையும், ருசியும் கலக்கலாக இருக்கும்...! இனிப்பு பிடிக்காதவர்களும் கூட கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்.

- பேரா.சோ.மோகனா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)